தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு
20.06.2013 அன்றைய பதிவு
நன்றாக ஆராய்ந்து சிந்தித்து தனிநாடு மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று நான் முடிவு செய்தபோது எழுதிய முதல் பதிவு
**தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு**
(பின்னூட்டங்கள் வரை முழுமையாகப் படியுங்கள்)
1)ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகம்:
1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி.
2)தமிழீழம்:
2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி.
3)தமிழ்நாடு:
1956க்குப் பிறகு பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டுவரும் பகுதி.
4)அந்தமான்-நிகோபர் தீவுகள்:
1947ல் இந்தியப் போலி விடுதலையின்போது பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டுவரும் அந்தமான்-நிகோபர் 532தீவுகள்.
இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும்.
இது மிகத்துல்லியமானதென்று கூறிவிடமுடியாது, ஆனால் இதில் மிகச்சிறிய திருத்தங்களே ஏற்படும் என்று உறுதிகொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, இதில் திருவனந்தபுரம் சேர்க்கப்படவில்லை; ஆனால், திருவனந்தபுரம் தமிழர் பெரும்பான்மைப் பூர்விக மண்ணே ஆகும்.
தமிழ்க் குடியரசு கோரிக்கை:
தனிநாடு கோரும் அத்தனைத் தகுதியும் நமக்கு உள்ளது.
புரியும்படி கூறினால் தமிழருக்குத் தனிநாடு கோரும் தகுதி இல்லையென்றால் இவ்வுலகில் எந்த மக்களுக்கும் அத்தகுதி இல்லை.
அத்தகுதிகளாவன,
*வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அதில் நீண்ட நெடிய இனவரலாறு மற்றும் வரலாற்றுச் சான்றுகள்.
*தனித்தன்மையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள்.
*திருமணச் சடங்குகள், ஈமக்கடன்கள், பழமொழிகள்,சொலவடைகள்,செவிவழிக் கதைகள்.
*பண்டைய நிர்வாகமுறை, நகர்க்கட்டமைப்பு, பண்டிகைகள், கேளிக்கைகள்.
*உடற்கூறு,தோற்றம், உறவுமுறைகள்,சமூகக்கட்டமைப்பு.
*தொழில்முறைகள் ஆபரணங்கள் மற்றும் உடையமைப்பு
*தனித்தன்மையுடைய இசை, கலை, நடனம், இலக்கியம், காப்பியங்கள்.
*தற்காப்புக் கலைகள், பாரம்பரிய மருத்துவம், உடல் மற்றும் மனவளக்கலைகள்.
*கணித,வானியல்,அறிவியல், அரசாட்சி, இல்லறம் பற்றிய பண்டைய ஆராய்ச்சி நூல்கள்
*கனிசமான எண்ணிக்கை.
*சுற்றிலும் கலாச்சார, மொழி, தோற்ற ஒற்றுமைகொண்ட வேற்றின மக்கள்
ஈழம்:
ஒரு முன்னோட்டம்;
ஒட்டு மொத்தத் தமிழருக்கும் ஒரு முக்கியமான பாடம்;
ஈழ மக்கள் அடக்குமுறைக்கு அடிபணியாது போராடிவரும் வீரமறவர்கள்.தமிழினத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நம் முன்னே வாழும் முன்மாதிரிகள்.
தமிழினம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது, வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம், அழிவுகளைத் தாங்கியபடி முன்னகரும் விடாமுயற்சி, சரியானத் தலைவனைத் தேர்ந்தெடுப்பது அவன் பின்னிற்பது, உலகம் முழுவதும் பரவிய தமது சொந்தங்களை ஒன்று திரட்டுவது,உலகையே வியக்கவைக்கும் சாதனைகள் மற்றும் தாய்மொழித் தமிழ் மீதான பற்று ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்.
ஆயிரம் இன்னல்கள், பிரிவினைகளை மீறி இனவுணர்வுடன் உறுதியாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களிடம் உலகத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம் உள்ளது.
ஈழத்தில் நடந்த அத்தனையும் தமிழ்நாட்டிலும் நடந்தே தீரும்.
இது உறுதி.
மறைக்கப்பட்ட அந்தமான்-நிகோபர் தீவுகள்:
இதுவும் தமிழரிடமிருந்து மறைக்கப்பட்ட பிடுங்கப்பட்ட பூர்வீக மண் ஆகும்;
இத்தீவில் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் ஆங்கில ஆட்சியிலும் அதன்பிறகும் குடியேறியவர்கள்.ஆனால், அங்கேயே வாழுந்துவரும் தமிழரும் உண்டு, தவிர அத்தீவுகளின் ஆதிவாசிக்குடிகள் மொழி மற்றும்உடற்கூறு ரீதியில் தமிழினத்தவர் என்பது நிறுவப்பட்டுள்ளது.
இன்று தமிழரை விஞ்சுமளவுக்கு வங்காளியர் குடியேற்றப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு தமிழும் தமிழரும் கிட்டத் தட்ட அடிமையாக ஆக்கப்பட்டுவிட்டனர்.
ஆனாலும், தம் சுயமுயற்சியால் தமிழையும் தமிழ்மக்களையும் ஒருங்கிணைத்து ஓரளவு பலமான நிலையில் தமிழர் தம் இருப்பைத் தக்கவைத்துள்ளனர்.
தற்போதைய தமிழ்நாடு:
தமிழரின் பூர்வீக நிலப்பரப்பில் ஓரளவுத் தமிழரின் கட்டுப்பாட்டில்
உள்ள நிலப்பகுதி ஆகும்;
தமிழரல்லாதோர் பற்றித் துல்லியமான விபரங்கள் இல்லை. இதற்குக் காரணம் 400, 500 வருடங்களாக தமிழரோடு தமிழராக வாழ்ந்து வரும் வேற்றினத்தவர் கலந்து வாழ்ந்துவருவதே ஆகும்.இவர்களைத் தமிழராக ஒத்துக்கொள்வது இயலாத ஒன்றாகும்.
இவர்கள் பல வருடங்களாகத் தாய்நிலத்தின் தொடர்பற்றுப் போனதால் தாய்மொழியை வேகமாக மறந்துவருகின்றனர். வியாபார நிமித்தமாக இந்தோனேசியா, கம்போடியா தாய்லாந்து போன்ற தெற்காசிய தீவுகளுக்கும் நாடுகளுக்கும், நமீபியா, அங்கோலா, ட்ரினாட் டொபகோ, சூரினாம், கயானா போன்ற ஆப்பிரிக்க தென்னமெரிக்க நாடுகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் 1000 வருடங்களுக்குமுன் குடிபெயர்ந்த தமிழர்கள் தாய்நிலத் தொடர்பறுந்துத் தாய்மொழியையே மறந்து தம் இன அடையாளத்தை இழந்து நாடோடிகளாகவும் ஏதிலிகளாவும் அரைகுறை வாழ்வு வாழ்ந்துவரும் நாதியற்றத் தமிழர்களாக உள்ளனர்.
அவர்களையும் தாய்நிலத்தில் குடியேற்றவோ அல்லது அவர்கள் வாழும் நாட்டில் சமவுரிமை பெற்றுக் கொடுக்கவோ வேண்டிய தலையாயக் கடைமையும் தமிழருக்கு உள்ளது. அவர்கள் எப்படி தமிழர்களாக என்றும் ஏற்கப்படுவார்களோ அதேபோல தமிழ்மண்ணில் வாழும் வேறுமொழியினரைத் தமிழராக ஏற்பது இயலாத ஒன்று.
அதற்காக ஏற்கப்படாததின் பொருள் ஒதுக்கப்படுவது என்று கொள்ளக்கூடாது. பிறமொழி பேசும் மக்களில் பலர் தமிழ்வழிக் கல்வி கற்கின்றனர். தாயிடமும் உறவினரிடமும் தாய்மொழியிலும் தந்தையிடமும் உடன்பிறந்தவரிடமும் தமிழிலும் பேசும் வேற்றினத்தவரும் உள்ளனர்.
அவர்களுக்கு தமிழினம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
தமிழராகத் தன்னை முன்னிறுத்தும் இத்தகைய பிறமொழியினருக்கு தமிழருக்குச் சமமான மதிப்பும் உரிமையும் வழங்கும் கடைமை தமிழருக்கு உள்ளது.
தாய்மொழியை மறந்தாலும் சாதிய விழுமியங்கள், கலாச்சாரம், வழிபாட்டுமுறை, இறுதிச் சடங்குகள், திருமணமுறை என தமது அடையாளங்களை அவர்கள் துறந்துவிடவில்லை.
தவிர,தாய்நிலத்தோடு தொடர்பிலுள்ள பிறமொழியினர் இன்றும்
தமிழ்மண்ணில் தொடர்ந்து குடிபுகுந்து வருகின்றனர்.
தமிழர்நிலத்தில் உள்ள பிறமொழியினரில் இவர்கள் எண்ணிக்கையே இன்று அதிகமாகும்.தவிர இது கூடிக் கொண்டே போகிறது.
வேற்றுமொழியினர் ஒருவேளை வேறொரு தமிழர்த் தொடர்பில்லாத நாட்டில் குடியேறினால் இரண்டு தலைமுறைகளுக்குப்பிறகு அவர்கள் தம்மைத் தமிழராக முன்னிறுத்த முடியுமா?
முடியாதுதானே.
தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் கலாச்சாரத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது அவ்வளவே. வேற்றினத்தவர் மத்தியில் வாழும் தமிழர் மீது வன்முறையும் கலவரமும் ஏவப்பட்டபோதும் தமிழர் தம்மிடையே வாழும் பிறமொழியினரைத் தமக்கே உரிய மாண்போடு கையாண்டு
வந்துள்ளனர்.இது அனைவரும் அறிந்த உண்மை.அதேபோல் நாளை அமையப்போகும் தமிழ்க் குடியரசிலும் பிறமொழியினர் சமவுரிமை பெற்று வாழ்வர் என்பது உறுதி.
ஒரே இனம் மட்டும் உள்ள ஒரு நாடு கிடையாது என்பதே உண்மை.
தமிழகத்தில் எப்படியும் 65% சதவீதத்திற்குக் குறையாமல் தமிழர் உள்ளனர்.
ஆனால், பெரும்பான்மைப் பூர்விக நிலத்திலேயே வேற்றினத்தவரால் ஆளப்பட்டு வருகின்றனர்.
அன்று ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகம்:
1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.
தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கொள்ளப்பட்டது.
வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது. அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.
எந்த உரிமையும் கிடைக்காமல் தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்;
வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.
மபொசி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை,திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது;
இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்;
( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.
தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)
அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்;
ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன;(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும் மட்டுமே பெரும்பாலும் வெளிக்கொணரப்பட்டவை)
எனவே இந்த மண்ணை நாம் கோருவதில் தவறில்லை;
தடயங்களின் அடிப்படையில் நாம் முழுஇந்தியாவையும் கோரலாம்தான்; ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்;
அதேபோல எண்ணிக்கைபடி தமிழர் மியான்மர்(பர்மா), மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், இலங்கை மற்றும் பல நாடுகளில் சிலபகுதிகளில் அப்பகுதி பூர்விக குடிகளைவிட அதிகம் வாழ்கின்றனர்;
அவை தமிழரின் பூர்வீக மண் இல்லை; எனவே அவற்றை நாம் கோரவியலாது.
ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறியவேண்டியது நிறைய உள்ளது;
பல நூறு வருடங்களாக வேற்றினத்தவர் தமிழர் எல்லைப்பகுதியில் தொடர்ந்து குடியேறியதும்; தமிழர் அவர்களை ஆதரித்ததும், பின் தமது சொந்த மண்ணிலேயே தமிழர் சிறுபான்மையினராகும் அளவுக்கு வேற்றினத்தவர் குடிபுகுந்ததையும்; வேற்றினத்தவர் ஆட்சியில் (விசயநகர மற்றும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி) இவ்வகைக் குடியேற்றம் தமிழரின் பூர்விக நிலத்தின் மூலைமுடுக்குவரை ஒரு இடம் விடாமல் புகுத்தப்பட்டதும்; தமிழரின் பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் திரிக்கப்படுவதும் காலம்காலமாக தொடர்வதும்; வேற்றினத்தவர் ஆட்சியில்(நாய்க்கர் ஆட்சி) தமிழர் கூட்டம் கூட்டமாகத் தமது மண்ணைவிட்டு வெளியேற வேண்டிவந்ததும்(மும்பை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு);
தமிழர் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டதும்(இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற இடங்களுக்கு வெள்ளையர்களால்) ; உலகம் முழுவதும் பரவியுள்ளத்தமிழரின் பிரச்சனைகள் மற்ற பகுதித் தமிழருக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதும்(ஈழப்பிரச்சனை, மலேசியத் தமிழர் பிரச்சனை, அந்தமான் நிகோபர் தமிழர் பிரச்சனை, மற்றும் உலகம் முழுவதும் இரண்டாந்தரக் குடிகளாக தமிழர் நடத்தப்படுவது); தமிழரின் தகவல் தொடர்பு ஊடகங்கள்(தொலைக்காட்சி ,நாளிதழ்) வேற்றினத்தவர் பிடியிலேயே எப்போதும் இருப்பதும்; தமிழுணர்வு எழுச்சி பெறவிடாமல் தமிழரை ஆண்டாண்டு காலமாக வேற்றினத்தவரே(தமிழகத் திராவிட , ஈழத்தில் சிங்கள மற்றும் தீவுகளில் வங்காளிய ஆட்சி) அடிமைப்படுத்தி வருவதும்; தமிழ்மொழி ஆராய்ச்சிக்குப்(தமிழக, ஈழ நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சி) போதிய முயற்சிகள் எடுக்கப்படாததும், வெளிநாட்டினரால் வெளிக்கொண்டு வரப்பட்ட தமிழரின் வரலாறும் (சிந்து சமவெளி, குமரிக்கண்ட ஆராய்ச்சிகள்) ஆதாரங்களும் மறைக்கப்படுவதும் தடைவிதிக்கப்படுவதும்; தமிழரின் பாரம்பரியம் ,கலாச்சாரம் ,பண்பாடு மற்றும் நாகரீகம் காணாமல் அடிக்கப்பட்டதும்; தமிழுடன் பிற மொழிக்கலப்பும் எழுத்துருக்கலப்பும் பிறமொழிக்கல்வியும் ஊக்குவிக்கப்படுவதும்; தமிழ்ப் பயிற்சிக்கூடங்கள் , பல்கலைக்கழகங்கள் போதிய அளவு இல்லாததும்;
ஆங்கில இந்தி மொழித்திணிப்பும்;
தமிழ் கலைகள் , மருத்துவம் அறிவியல் தொடர்ந்து தமிழருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளப்படுவதும்; தமிழ் ஓலைச்சுவடிகள் பொருள் அறிந்து அச்சேற்றுவதில் மந்தப்போக்கும், ஆதித்தமிழ் எழுத்துக்களும் வார்த்தைகளும் எண்களும் கைவிடப்படுவதும்;
தமிழரின் உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து மறுக்கப்படுவதும், தமிழர் போராட்டங்கள்
(1940களில் நேதாசி தலைமையில் விடுதலைப் போராட்டம், 1950களில் மண்மீட்பு, 1960களில் மொழிப் போராட்டம், 1957 முதல் 1978 வரையான ஈழ மலையக அறவழிப் போராட்டம், 1980 களிலிருந்து ஈழ ஆயுதப்போராட்டம், அதே காலத்தில் தமிழக விடுதலைக்கான தமிழரசன் தலைமையிலான ஆயுதப்போராட்டம், 1995க்குப் பிறகான நதிநீர்ப் போராட்டங்கள், 2006க்குப்பின் மலேசியத் தமிழர் போராட்டம், தற்போதைய அணுவுலைப் போராட்டம், மாணவர்ப் போராட்டம், புலம்பெயர்த் தமிழர் ஈழப் போராட்டங்கள்)
புறக்கணிக்கப்படுவதும்,ஒடுக்கப்படுவதும், மறக்கடிக்கப் படுவதும்;மறைக்கப்படுவதும்;
தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தமிழ்மண் மீட்கவும் போராடியத் தலைவர்கள் (மபொசி, பெருஞ்சித்திரனார், மார்சல் நேசமணி, தொண்டமான், தந்தை செல்வா, பொன்னம்பலம், தமிழரசன், வீரப்பன், சீதையின் மைந்தன்) காணாமல் அடிக்கப்பட்டு வேற்றினத் தலைவர்கள் ,மன்னர்கள் முன்னிறுத்தப்படுவதும், தமிழர் உயிர் மிகவும் மலிவாகக் கருதப்படுவதும், தமிழருக்கெதிரானக் கலவரங்கள்(கர்நாடகா, கேரளா,இலங்கை, மலேசியா மற்றும் ஆந்திரா) இனப்படுகொலைகள் ,இனக்கலப்பு(ஈழம், மலையகம், பர்மா, தமிழக மீனவர்) தொடர்கதையாகி வருவதும்,
பேரழிவை ஏற்படுத்தும் அணுவுலைகள் மற்றும் ஆலைகள் தமிழர் தலையில் கட்டப்படுவதும்;
முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டல்களும்;
திரைப்படம், மது, மட்டைப் பந்து என தேவையே இல்லாத விடயங்கள் மூளையில் புகுத்தப்பட்டு இளந்தலைமுறையினர் காயடிக்கப்படுவதும்;
தமிழரை சாதி ரீதியாக மதரீதியாகப் பிரித்து அவர்களுக்குள் மோதல்கள் ஏற்படுவதும்;
சாதியுணர்வு அரசியலும், மறைந்த தலைவர்களுக்கும் தமிழினத் தலைவர்களுக்கு சாதிரீதியான அடையாளங்கள் கொடுக்கப்படுவதும்; மனிதநேய அடிப்படையிலான உதவிகள் கூடத் தமிழருக்குக் கிடைக்காததும்(ஈழம், மலையகம், வெளிநாட்டுவாழ் தமிழருக்கு இந்தியத் தூதரகம்,தமிழக ஈழ ஏதிலிகள்); உலக மக்கள் தமிழருக்கு எதிராகத் திருப்பப்படுவதும்(இந்தியா உலகநாடுகளை புலிகளைத் தடைசெய்ய வைத்தது, இலங்கை லிபியஅதிபர் மூலம் இசுலாமிய நாடுகளை தமிழருக்கு எதிராகத் திருப்பியது, இந்திய மக்களிடம் தமிழரை மொழிவெறியர்களாகத் தீவிரவாதிகளாகக் காட்டுவது);
தமிழரின் அறிவும் திறமையும் சுரண்டப்படுவதும்; தமிழக நீர், மண்வளங்கள் சுரண்டப்படுவதும் நாம் அறிந்து வைக்கவேண்டிய நினைவில் கொள்ளவேண்டிய இன்னும் இன்னும் எண்ணிலடங்கா பிரச்சனைகள் தமிழர்மீது திணிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்திலும் பெரும்பாலான பிரச்சனைகள் இனரீதியாகத் திணிக்கப்படுவது.
நம்மைச் சுற்றி வாழும் மக்களை விட நமது பிரச்னைகள் வேறுவிதமானவை.
இவற்றிற்கான தீர்வு தனிநாடு அமைவதே ஆகும்.
இந்தத் தீர்வு நாம் விரும்பும் ஒன்று இல்லை நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.
நமக்கென்றொரு நாடும் வலிமையான படையும் இருந்தாலொழிய நாம் தப்பிப்பிழைப்பது நடவாத ஒன்று;
நாம் ஒரு முடிவிற்கு வராவிட்டால், நமது பிள்ளைகள் இன்னும் ஐந்தே தலைமுறைகளில் பிச்சைக்காரர்களாகவும்,கூலிகளாகவும், வேசிகளாகவும், நோஞ்சான்களாகவும், தெருவில் வாழ்க்கை நடத்தும் இழிநிலை மக்களாக இருப்பர்.
இருபது தலைமுறைக்குப் பிறகு அருங்காட்சியத்தில் நம் இனம் வாழ்ந்த தடையங்கள் மட்டும் கிடைக்கும். அழிந்த இனங்களின் பட்டியலில் நம் பெயர் இருக்கும்.
இதற்கு விடுதலை அடைந்த பல நாடுகளும் விடுதலைக்காக முழுமையாகப் போராடாமல் மடிந்த இனங்களும் உதாரணம்.
ஐந்துகோடி தமிழரின் குடிநீரை மறுக்கும் கொடுமை, தொடர்ச்சியான கொலைகள், கலவரங்கள், இனப்படுகொலை, அரசியல் அடக்குமுறை, மொழியுரிமை மறுப்பு போன்ற தலையாயப் பிரச்சனைகளில்கூடத் தமிழருக்கு மனிதநேய அடிப்படையில்கூட உதவாத இந்தியா உட்பட சுயநல சர்வதேச நாடுகள் நம்பிப் பலனில்லை இனி.
ஏற்கனவே நமது நிலத்தையும் விடுதலையையும் பெரும்பாலும் இழந்துவிட்ட நாம் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் நம் முன்னோர்களால் தள்ளபட்டுள்ளோம்;
இப்போதும் போராடவில்லை என்றால் வரலாற்றில் அழிந்த இனமாகக் கூட நம் பெயர்வராமல் மறைக்கப்படலாம்.
தமிழரே !
நம் சந்ததியின் எதிர்காலம் நம் கையில்.
நம்மைக் காக்க நம்மைத் தவிர இவ்வுலகில் யாருமில்லை.
ஈழமக்களைப் போலப் போராடி, குருதி சிந்தி, சாதனைகள் புரிந்து , இனவுணர்வுடன் நமக்கென்று தனிநாடு அமைக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
தமிழினத்தின் வீரத்தையும் பெருமையையும் அறியுங்கள்.
ஆனால், அந்த வீரமும் பெருமையும் இல்லாத இனமாகவே நாம் இருந்தாலும் இப்போது போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
"நமது பிரச்சனைகளை மற்றொரு தமிழரிடம் மட்டும் கூறுங்கள்"
தமிழரை மட்டும் ஒன்றிணையுங்கள்;
தமிழராக இணையுங்கள்;
தமிழினத்திற்குள் எந்த வேறுபாடும் இருக்கவேகூடாது.
நல்லவர்களாக இருப்போமோ இல்லையோ வல்லவர்களாக இருப்போம்;
நமக்கென்று ஒரு நிலப்பரப்பு;
அதில் மலை,கடல், கனிமம், எண்ணெய், வேளாண்மை, வனங்கள், தீவுகள் என அத்தனை வளங்களும் உள்ளன.
உலகமே சுற்றிவளைத்துத் தனிமைப்படுத்தினாலும் நாம் தனித்தியங்க முடியும்;
நமக்கு வலிமையான வீரம் செறிந்த படையிருக்கும், நமக்குள் எந்த பாகுபாடும் இருக்காது;
சாதி,மதம் என அனைத்து பிரிவினைகளும் கலையப்பட்டிருக்கும்;
தமிழன்னைக்கு வான்முட்டும் கோவில்கள்;
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பண்டையகாலத் தமிழர் வழிபாட்டுமுறை நாத்திகத்திற்கும் முன்னோடியாக பின்பற்றப்படும்;
ஏற்கனவே இருக்கும் வேற்றினத்தவரும் இனி குடியேறும் வேற்றினத்தவரும் தமக்கான உரிமைகள் பெற்றுப் பெருமையுடன் வாழ்வர்;
வேற்றினத்தவர் எவர் எங்கு அடக்குமுறைக்கு உட்பட்டாலும் அங்கே தமிழ்க் குடியரசின் குரல் ஓங்கி ஒலிக்கும்;
வேற்றின விடுதலைப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டால் தமிழ்க்குடியரசின் வேட்டுச் சத்தங்கள் அங்கே ஓங்கி ஒலிக்கும்;
வேற்றினத்தவருக்கே அப்படியென்றால் உலகின் ஒரு மூலையில் ஒரு தமிழனைச் சீண்டினால் என்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
தமிழர் உரிமைக்குக் குறுக்கே நிற்கும் அத்தனை ஆற்றல்களும் வேரோடு கலைந்தெறியப்படும்;
தமிழர் அனைவரும் நிமிர்ந்து நடக்கும் காலம் வரும்;
இன்று நம்மை எதிர்க்கும் அத்தனைபேரும் நாளை வல்லரசாக இருக்கும் நமது நாட்டுக்கு வந்து சம்பாதிக்கத் துடிப்பார்கள்;
உலக மக்கள் தமிழனாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குவார்கள்;
2009 ல் இந்த உலகமே தமது கண்களை விரித்து பார்த்திருக்க, உலகமாந்தர் அனைவரையும் சுற்றி பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் சிங்களவெறியர் தமிழினத்தை சீரழித்த பிறகும் நாம் மற்றவரை நம்புவோமானால் நம்மைப்போன்ற மடையர்கள் யாரும் இருக்கமுடியாது.
வாருங்கள்.
இவ்வுலகின் எத்தனை பெரிய சாலை என்றாலும் என்றோ ஒரு மனிதன் தனது கால்களால் அடியெடுத்து வைத்துத் துவக்கிய ஒற்றையடிப் பாதைதான்.
நமது சந்ததிக்கான முதல் அடியாக இதைப் பகிருங்கள்.
தனிநாடு ஒன்றே நம் வருங்காலத் தமிழ்ப்பிள்ளைகளுக்கு நாம் சேர்த்துவைக்கும் விலைமதிப்பில்லா சொத்து.
அதற்கான பயணத்தைத் தொடங்கி வையுங்கள்
No comments:
Post a Comment