Wednesday 26 June 2024

இனக் காவல்

 இனக் காவல்

 அன்று ஒப்பந்தத் தொழிலாளி முருகேசனை அந்த ஹிந்திக்கார மேலாளர் பலர் முன்னிலையில் அவமானப் படுத்தினார்.
 தலை கவிழ்ந்தபடி சக தொழிலாளி கிருஷ்ணனிடம் வந்தார்.
 "நீ சொன்னதுதான் சரி! நாம நம்ம நாட்டுக்கே திரும்பிரலாம்!"
"என்ன முருகேசா! இப்ப என்ன நடந்துபோச்சுனு உன் முடிவ மாத்திட்ட?!"
"நம்ம நாட்டுல விடுதலைப் போராட்டம் நடக்குது! தலைவர் எல்லா தமிழர்களையும் நாடுதிரும்ப சொன்னாரு! நாம போயிரலாம்னு நீதானே கூப்ட்ட?!"
"ஆமா! நீ என்னமோ இங்க வந்து மூணு தலைமுறை ஆச்சு! இங்க இருக்குற மக்கள் நல்லவங்க! குடும்பம் குட்டியோட எப்படி போறதுனு சொன்ன?!"
"ஆமாப்பா! ஆனா இந்த மேனேஜர் மாதிரி சிலர் இருக்காங்க! இனவெறி! வெளியாள் எவனும் இங்க வந்து பொழைக்க கூடாதுனு நெனைக்கிறான்! பாத்தீல்ல?! நமக்கு அளவுக்கதிகமா வேல குடுக்குறான்! எவ்வளவு செஞ்சாலும் குற கண்டுபிடிச்சு அவமானப் படுத்துறான்!"
"சரி நாம போகலாம்! நீதான் என்ன இங்க கூட்டிட்டு வந்த! இப்ப நா ஒன்ன அங்க கூட்டிட்டு போறேன்!"
-----------------------
 அன்று மீண்டும் முருகேசன் அவமானப்பட்டான்! இனத்தைச் சொல்லியே திட்டினான் மேனேஜர்!
வீட்டுக்கு வந்த முருகேசன் குடும்பத்தோட காலி செய்ய வேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பித்தான்!
 அப்போது அங்கே கிருஷ்ணன் வந்தான்!
"நடந்ததெல்லாம் கேள்விப் பட்டேன்! இதை இப்டியே விடக்கூடாது!"
"நம்மளால என்ன பண்ணமுடியும் கிருஸ்ணா?!"
"நீ வா! நாம ஒருத்தர பாத்துட்டு வரலாம்!"
"யாரு?!"
"அவர பாத்தா நம்ம பிரச்சனை தீரும்"
-----------------------
இருவரும் அருகில் இருந்த மைய நகரத்தில் கடைக்கோடியில் அந்த நெரிசலான சந்துக்குள் நுழைந்தனர்!
 அங்கே ஒட்டுக் குடுத்தனங்கள் பல இருந்தன!
ஆங்காங்கே தமிழ் வார்த்தைகள் கேட்டன!
ஒரு இடத்தில் ஒரு பெரியவர் வாசலில் நின்று கொண்டிருக்க ஒரு ஹிந்திக்கார முதலாளி அவரை வாடகை பாக்கி கேட்டி திட்டிக்கொண்டிருந்தார்.
கூட்டம் வழியை அடைத்தபடி நின்றுகொண்டிருந்தது.
"வழிவிடுங்க நாங்க போகணும்" என்று முருகேசன் இந்தியில் சொல்ல கிருஷ்ணன் அவனை சைகையால் தடுத்தான்.
"என்ன கிருஷ்ணா நாம யார பாக்கணும்?"
"அதோ அந்த பெரியவரைத் தான்"
"என்னடா நீ! இவரா நம்ம பிரச்சனைய தீத்து வைக்க போறாரு?"
"ஆமா! கொஞ்சம் பொறுமையா இரு!"
வீட்டுக்காரர் கத்திவிட்டு போனதும் கூட்டம் கலைந்தது.
இருவரும் அந்த பெரியவரிடம் போனார்கள்.
"ஐயா! வணக்கம்!" என்று கும்பிட்டு விட்டு முட்டியை முறுக்கி தளர்த்தினான்.
பெரியவர் கண்ணில் மின்னல் வெட்டி மறைந்தது.
"வாங்க உறவே! உள்ள வாங்க!"
அவர்கள் வீட்டிற்குள் நுழைய அவரது மனைவி "ஊரானுக்கே ஓடுங்க! வீடுன்னு ஒன்னு எதுக்கு?" என்று முணுமுணுத்தபடி பாத்திரங்களை உருட்டினார்.
"வாங்க நாம வெளிய போய் பேசுவோம்!" என்று அழைத்து வந்த பெரியவர் தெருமுனையில் தேநீர் கடைக்கு வந்து தேநீர் சொல்லிவிட்டு அருகே பூட்டியிருந்த கடையின் நடையில் அமர்ந்தனர்.
நடந்தவற்றை சுருக்கமாக கிருஷ்ணன் கூறினான்.
பெரியவர் முகம் மாறியது.
"சரி தம்பி நீங்க போங்க நாங்க பாத்துக்குறோம்!" என்று உறுதியான குரலில் கூறினார்.
கிருஷ்ணனும் முருகேசனும் கையிலிருந்த சிறிதளவு பணத்தைக் கொடுத்தனர். 
அதில் கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு "வழிச்செலவுக்கு" என்று கூறி பையில் போட்டுக்கொண்டார்.
திரும்பி வரும்போது முருகேசன் யோசித்தபடி வந்தான்.
 பெரிய மனிதர்கள் வாழும் பகுதில் பெரிய  பங்களா வீட்டிலிருந்து பருமனான காரில் வந்து இறங்கும் ஆறடி உயர காட்டான் அந்த மேலாளர்!
 நகருக்கு வெளியே ஒட்டுக் குடுத்தனத்தில் வாடகை பாக்கி வைத்திருக்கும் ஒரு பெரியவர்! 
 இது அவர்கள் நாடு! நாமோ பிழைக்க வந்தவர்கள்!  பணமும் வாங்கவில்லை! எப்படி இது நடக்கும்?!
----------------------
3 நாட்களாக அந்த மேனேஜர் வரவில்லை! நான்காவது நாள் வந்த அவர் முன்பு போல இல்லை! 
அடியோடு மாறிவிட்டார் என்று கூறமுடியாவிட்டாலும் ஓரளவு நியாயமாக நடந்துகொண்டார்.
 அவரது மகளுக்கு சிறிய விபத்து நடந்ததாகவும் அப்போது ஒரு தமிழர் உதவியதாகவும் அவர் யாரிடமோ கூறியதாக முருகேசன் கேள்விப் பட்டான்.
அதனால் இவர் திருந்திவிட்டார் என்று நினைத்துக் கொண்டான்.
------------------------
அன்று பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த ஒரு சிறுவன் மீது குறுக்கும் மறுக்குமாக வந்துகொண்டிருந்த ஒரு வாகனம் மோதி கீழ தள்ளிவிட்டு பறந்தது.
 பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஒரு தமிழன் அவனைத் தூக்கி வண்டியில் வைத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்.
தகவலறிந்து அவனது தந்தை ஓடி வந்தார்.
சிறுவனுக்கு உடலெங்கும் சிராய்ப்பு காலில் சிறிய முறிவு. 
அவர் அந்த தமிழனுக்கு இந்தியில் "நன்றி" என்று கூறினார்.
அதில் ஒரு அலட்சியம் தெரிந்தது.
அந்த இளைஞன் அவரது கண்களை நேருக்கு நேர் பார்த்தான் "நன்றியெல்லாம் வேண்டாம்! உங்கள் ஊழியர்களை பாரபட்சம் இல்லாமல் நடத்துங்கள்! பையன் பத்திரம்" என்று இந்தியில் கூறிவிட்டு திரும்பி வேகமாக நடந்தான்!
----------
 அந்த பெரியவர் பணத்தை பையில் போட்டதும் சிறிது தூரம் பயணம் செய்தார். ஒரு சாதாரண வீடு அங்கே ஒருவரைப் பார்த்து விசயத்தைச் சொன்னார்.
 விபரங்களைக் கேட்ட அவர் "சரி நம் இயக்க உறுப்பினர்கள் இதைப் பார்த்துக் கொள்வார்கள்! சிறிது காலம் கழித்து இந்த உதவியைப் பெற்றவர்கள் வேறு இடத்தில் நம் மக்களுக்கு உதவி தேவைப்படும்போது துணிந்து செய்யவேண்டும் என்று கூறிவிடுங்கள்"
 "சரி! தலைவரைக் கேட்டதாகச் சொல்லுங்கள்!" என்று கூறிவிட்டு விடைபெறும்போது 
"உங்களுக்கு கடன் பிரச்சனை இருப்பதாக கேள்விப் பட்டோம்" என்று அவர் ஏதோ கூறவர பெரியவர் தடுத்து "அது என் தனிப்பட்ட பிரச்சனை இனப் பிரச்சனை அல்ல" என்று கூறிவிட்டு விடைபெற்றார்.
-------------

"

No comments:

Post a Comment