Wednesday 24 January 2024

தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை

தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை

 முதலில் இயல்பிலேயே தனி நாடான தமிழகத்திற்கும் அயோத்தி பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை கூறிவிடுகிறேன்.

 ஆனால் கரிகாலன் காலத்தில் இருந்து வள்ளலார் காலம் வரை தமிழ் இலக்கியத்தில் இராமன் பற்றி உயர்வான வகையில் குறிப்புகள் இருக்கின்றன என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

 இங்கே நாம் பேசப்போவது வடயிந்திய ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையேயான மோதல் பற்றி மட்டுமே!
 இந்த பிரச்சனையில் ஹிந்தி மொழிக்குடும்ப ஹிந்து மற்றும் முஸ்லிம்களுக்கும் தமிழக இந்து மற்றும் இசுலாமியருக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்கிற வகையில் வெளியில் நின்று (தமிழனாக) மூன்றாவது நபரின் பார்வையில் இதை அலசுகிறேன்.

 குழப்பத்தைத் தவிர்க்க இங்கே அயோத்தி என்றே தற்போதைய அயோத்தியைக் குறிக்கிறேன். அதன் பழைய பெயர் வேறு.

 அயோத்தி என்கிற பெயர் சிலப்பதிகாரத்தில் வருகிறது. இமயமலை அடிவாரத்தில் இருந்து கங்கை வரை ஔத் அல்லது அவத் எனும் பகுதி இருந்துள்ளது. ஔதி அல்லது அவதி வட்டார மொழி பேசப்பட்டது. இதுவே புராணங்களில் வரும் அயோத்தி நகரம் (இந்தியில் அயோத்யா) என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. 

 பாபர் மசூதிக்கும் பாபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.
 இப்ராஹிம் லோடியை தோற்கடித்து பாபர் ஆட்சிக்கு வருகிறார். கிபி 1526 - 1530 என நான்கு ஆண்டுகள்தான் இவர் ஆட்சியே செய்கிறார். பாபர்நாமா என்று இவரது சுயசரிதை கூட இருக்கிறது. இவர் கோவிலை இடித்ததாக எந்த சான்றும் இல்லை. பொ.மு. 1528 இல் இவர் கோவிலை இடித்ததாக ஆங்கிலேயர் தமது அரசிதழில் தவறான கருத்தை பதிவு செய்ததே குழப்பத்திற்கு காரணம்!
 இது அவர்கள் ஆரம்பத்தில் சிதைந்து போன கல்வெட்டுகளை அரைகுறையாக ஆய்ந்து மொழிபெயர்த்தபோது ஏற்பட்ட தவறு.

 william foaster என்பவர்  'early travels of india' (1583-1619) எனும் புத்தகம் வெளியிட்டுள்ளார். இது அக்பர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த 7 ஆங்கிலப் பயணிகளின் குறிப்புகளின் தொகுப்பு ஆகும். இதில் அயோத்தி வருகிறது ஆனால் ராமர் கோவில் பற்றியோ அல்லது மசூதி பற்றியோ குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் இந்த 7பேரில் 2 பேர் இங்கே அழிந்து போன பழமையான ராணிச்சந்த் எனும் கோட்டையின் சிதிலங்கள் இருந்ததாக பதிவு செய்துள்ளனர். இதில் பிராமணர்கள் பானைகளை வைத்துக்கொண்டு வரும் பக்தர்களின் பெயரைக் கேட்டு ஏதோ சடங்கு செய்ததாகவும் பதிவு செய்கின்றனர்.
 அருகில் ஆறும் ஓடுவதால் இது இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது போன்ற சடங்காக இருக்கலாம்.
 மேலும் thomas coryat என்பவர் "உலகிலேயே முகலாயர் ஆட்சியில்தான் ஒரு கிறித்துவனாகிய நான் மதங்கள் பற்றி சுதந்திரமாக பேச முடிகிறது. இங்கு போல நான் முகமது (நபி) பற்றி பாரசீகத்திலோ(ஈரான்) துருக்கியிலோ பேசியிருந்தால் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள்" என்று 1620 களில் பதிவு செய்துள்ளார்.

 இதிலிருந்து பாபர் கோவிலை இடித்து மசூதி கட்டவில்லை என்பதும் அக்பர், ஜஹாங்கிர் காலம் வரை மதவெறியுடன் இல்லாமல் அரசாட்சி நடந்ததும் புலனாகிறது.

 கி.பி. 1660 இல் 15 கோவில்களை இடிக்கச் செய்தவர் அவுரங்கசீப். அயோத்தியில் மசூதி கட்டியவரும் இவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு உறுதியான சான்றுகள் இல்லை.

 கி்பி 1672 இல் லால் தாஸ் என்பவர் 'அவத விலாசம் (awadh vilas)' எனும் புத்தகத்தில் இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று கூறுகிறார். இதிலும் கோவில் பற்றியோ மசூதி பற்றியோ குறிப்பு இல்லை. ஆனால் திடீரென்று அந்தப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒருவர் எழுதக் காரணம் அங்கே ஓரு மசூதி கட்டப்படப் போவதாக தகவல் பரவியதால் இருக்கலாம். 

ஔரங்கசீப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி செய்த ராஜபுத்திர மன்னர் ஸவாய் ஜெய் சிங் (ஜெய்ப்பூர் நகரை நிர்மணித்தவர்)  என்பவர் ஆதரவுடன் கிபி 1717 இல் இந்த மசூதியின் முன்பும் பக்கவாட்டிலும் ஹிந்துக்கள் இடம் வாங்கி (கோவில் என்றில்லாமல்) அங்கே ராமர் கோட்டம் எனும் திடல், சீதை சமையலறை எனும் மேடை, அனுமன் வாயில் எனும் நுழைவு வாசல் என மூன்று சிறிய கட்டமைப்புகளைக் கட்டி பூஜைகள் நடத்தினர் என்று கூறுகின்றனர். இதற்கு சான்றுகள் இல்லை. ஜெய் சிங் காலத்தில் வரைந்த பாபர் மசூதி போன்ற மூன்று கோபுரம் கொண்ட கோவில் வரைபடம் கூட இருக்கிறது. இது பாபர் மசூதி கட்டப்பட்டதும் அது போல ஹிந்துக் கோவில் ஒன்று கட்டப்பட போடப்பட்ட திட்ட வரைபடம் போலவே தெரிகிறது.

 ஐரோப்பிய ஏசு சபை (european jesuit missionary) சார்பாக இந்த வட்டாரத்தில்  தங்கியிருந்த Joseph Tiefenthaler "ஔரங்கசீப் ராமரின் பிறப்பிடம் என்று நம்பப்படும் ராம்கோட் கோட்டையை இடித்து மசூதி கட்டினார் ஆனால் சிலர் பாபர்தான் இதைச் செய்தார் என்று கூறுகின்றனர்"  என 1767 இல் முதன்முதலாக பதிவு செய்கிறார்.

 [என்னுடைய யூகம் முகலாயர் வருகைக்கு முன்பே கங்கைக் கரையில் ஒரு சிறிய குன்றின் மீது அழிந்துபோன பழமையான  கோட்டையின் அஸ்திவாரம்  இருக்கிறது. ஊருக்கு வெளியே இருந்த அந்த இடத்தில் பிராமணர்கள் சில சடங்குகளைச் செய்து வந்துள்ளனர்.
 அந்த அஸ்திவாரத்தின் மேலே ஒரு மசூதியை ஔரங்கசீப் காலத்தில் முஸ்லிம் அதிகாரி யாரோ கட்டியிருக்கிறார்.
 இது கட்டப்பட்ட காலம் 1690-1710.
 அதைப் பார்த்து அதுபோல தானும் கோவில் கட்ட ராஜஸ்தான் மன்னர் திட்டமிடுகிறார்.
மசூதி இருக்கும் குன்றின் பெயர் ராம் கோட் என்று இருந்தது முதல் குழப்பத்திற்கு காரணம்.
 அப்பகுதி அவ்த் என்கிற பெயரில் வழங்கப்பட்டதும் புராணங்களில் ராமர் பிறப்பிடம் அயோத்யா என்று இருந்ததும் அடுத்த குழப்பம்.
 இந்த 'ராமர் பிறந்த இடத்தில் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டினர்' எனும் கருத்து ஏசு சபையின் மதமோதலை ஏற்படுத்தி மதமாற்ற உள்நோக்கம் கொண்டதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாக தெரிகிறது.
 தாங்கள் சடங்குகள் செய்யும் காலி இடத்தில் மசூதி வந்ததால் பிராமணர்கள் மேற்படி கருத்தை ஆதரித்து பேசத் தொடங்கியுள்ளனர்.]

  பிற்காலத்தில் தோன்றிய மசூதிகள் நல்ல வளர்ச்சி அடைந்திருக்க இந்த முகலாயர் கால மசூதி அந்த வட்டாரத்தில் கூட பிரபலம் ஆகவில்லை. வட்டார முஸ்லிம்கள் இந்த மசூதியை பெரிதாக ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் அங்கே மிகச் சிறுபான்மை என்பதும் ஒரு காரணம். ஊருக்கு வெளியே இது இருப்பதும் இதை பொதுமக்கள் அவ்வளவாக பயன்படுத்தாமல் விட்டுவிடக் காரணமாக இருக்கலாம்.

மசூதியின் முதல் புகைப்படம் (ஓவியம்) பொ.மு 1783 இல் william hodges என்பவர் வரைந்தது. இதுவே மசூதி இருந்தது பற்றிய முதல் வலுவான சான்று.
 
 முகலாயர் வீழ்ந்து ஆங்கிலேயர் ஆட்சி வந்தபோது இப்பகுதியில் அகழ்வாய்வு செய்யப்பட்டது.
 1813 இல் பச்சனான் (buchanan) என்பவர் இப்பகுதியில் கல்வெட்டு ஆய்வுசெய்து பாதியில் விட்டுவிட்டார் (இதை பிற்காலத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தேடி எடுத்த எழுத்தாளர் கிஷோர் குணால் என்பவர் அது தொடர்பான செய்திகளை வெளியிட்டார். அதில் சிதைந்து கிடந்த கல்வெட்டுத் துண்டுகளில் பாபர் பெயரும் ஔரங்கசீப் பெயரும் இருப்பதை கண்டறிகிறார். ஆனால் காலத்தை கணிக்க முடியவில்லை.
 அப்போதே அந்த மசூதி பராமரிப்பின்றி கல்வெட்டுகள் சிதைந்து போய் இருந்துள்ளன).

 அகழ்வாராய்ச்சி முடிவுகளை எதிர்பார்த்திருந்த இரு தரப்பினரும் ஏமாற்றம் அடைந்து அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இதுவே ஹிந்து முஸ்லிம் என மதரீதியான சட்டரீதியான முதல் மோதல்.
  1838 இல் மான்ட்கோமரி மார்ட்டின் என்பவரை ஆங்கிலேயர் நியமித்து இது பற்றி அறிக்கை கேட்டனர்.
 இவர் விசாரித்து ஆராய்ந்து மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்தது உண்மைதான் ஆனால் அதை இடித்து மசூதி கட்டியதாக கூறமுடியாது என்று குழப்பமான அறிக்கையை வெளியிடுகிறார்.
அதாவது அஸ்திவாரம் பழமையானது மசூதி கொஞ்சம் புதியது என்பதால் இப்படி கூறியிருக்கலாம்.
 ஆனால் அயோத்தி ஒரு ஹிந்துக்கள் பெரும்பான்மைப் பகுதி என இவர் குறித்துள்ளார். 
 
 இதுவரை சட்டப்படி அமைதி வழியில் நடந்த பிரச்சனை 1853 இல் முதன்முதலாக மசூதியில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த அனுமன் கோவில் மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்முகி அகாடா எனும் அமைப்பு 'ராமர் கோவிலை மீட்போம்' என்று மசூதியை நோக்கி பேரணியாக சென்றனர். இப்போது முதல் மதமோதல் ஏற்படுகிறது.
 அதாவது முதல் அடாவடியான நடவடிக்கையை ஹிந்துக்கள்தான் தொடங்கியுள்ளனர்.

 1855 இல் பதிலுக்கு 'அனுமன் கோவில் மசூதியை இடித்து கட்டியது' என்று ஷா குலாம் ஹுசைன் என்பவர் தலைமையில் 500 முஸ்லிம்கள் அனுமன் கோவிலை நோக்கி சென்றனர். அப்போது அங்கே 8000 ஹிந்து பைராகி சாமியார்கள் திரட்டப்பட்டு இருந்தனர். இருவரும் மோதிக்கொள்ள 75 முஸ்லிம்கள் இறக்கின்றனர். இதுவே முதல் ரத்தக் களரியான கலவரம் (இதற்குப் பிறகு முஸ்லிம்கள் ஏறத்தாழ கடைசிவரை களத்தில் இறங்கவே இல்லை).

 இதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் மசூதி நிலத்திற்கும் ஹிந்துக்கள் பூஜை செய்யும் இடத்திற்கும் இடையே தடுப்பு சுவர் கட்டுகின்றனர்.
 பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

 1858 இல் பஞ்சாபில் இருந்து 25 பேர் கொண்ட சீக்கியர் குழு ஒன்று மசூதியை முற்றுகை இட்டு மசூதி வளாகத்தில் நுழைந்து வேள்வி நடத்துகின்றனர். மசூதி சுவர்களில் ராம் ராம் என்று எழுதுகின்றனர்.
 ஹிந்து பகுதியை மணல் நிரப்பி உயர்த்தி பூஜைகள் செய்கின்றனர்.
 
 இது பற்றி மசூதி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்கிறது. பிறகு காவல்துறை வந்து சீக்கியர்களை அப்புறப்படுத்துகிறது.

 1885 இல் மகந்த் ரகுவர் தாஸ் எனும் ராமர் கோட்டத்து பூசாரி ராமருக்கு ஹிந்து இடத்தில் சிறிய கோவில் கட்ட அனுமதி கேட்டு வழக்கு போடுகிறார். 'அவர் நிலத்தின் முதலாளி இல்லை எனவே கோவில் கட்ட உரிமை இல்லை' என்று கூறி வழக்கு தள்ளுபடி ஆகிறது.

 வெகுகாலம் அமைதியாக இருந்த பின் 1934 இல் ஒரு பசு மாடு அயோத்தி அருகே ஷாஜகான்பூர் எனும் முஸ்லீம் பகுதியில் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடிக்கிறது.
 இப்போது ஹிந்துக்கள் திரண்டு வந்து மசூதியில் மதில் சுவரை உடைத்து மசூதியையும் இடிக்க முயற்சிக்கின்றனர். ஆங்கில அரசு கலவரக்காரர்களை அடித்து விரட்டி உடைந்த பகுதிகளை சரிசெய்து அளிக்கிறது.

 1949 இல் ஹிந்து அமைப்பு ஒன்று ராமர் கோட்டத்தில் ராமாயண கச்சேரி நடத்துகிறது இவர்கள் இரவோடு இரவாக பயன்பாட்டில் இல்லாத மசூதியின் உள்ளே திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு சிலை தானே தோன்றியதாக வதந்தி பரப்புகின்றனர்
(இந்த சிலை கடைசி வரை அகற்றப் படவில்லை).
 
 இப்போதும் சன்னி வக்பு வாரியம் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். மசூதி பூட்டப்படுகிறது. ராமர்சிலையை வெளியே எடுக்க நேரு மற்றும் வல்லபாய் படேல் உ.பி அரசுக்கு உத்தரவிட உ.பி மாநில அரசு கலெக்டருக்கு உத்தரவிட அதை நிறைவேற்ற மறுத்து அன்றைய வட்டார காவல்துறை தலைமை அதிகாரி மற்றும் கலெக்டர் ஆன கே.கே.நாயர் மறுக்கிறார். மக்கள் கூடும்வரை சிலையை எடுக்காமல் தாமதிக்கிறார். கடைசியில் ராஜினாமாவும் செய்கிறார். இதனால் சிறிது நாட்களில் ஹிந்துக்கள் பகுதியும் சேர்த்து பூட்டப் படுகிறது.

 ஆனாலும் பூசாரிகள் மட்டும் உள்ளே சென்று ராமர் கோட்டத்தில் பூஜை செய்ய அனுமதிக்கிறது. 

 இனி நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இப்படியே தொடரும் என்று அறிவிக்கிறது்

 1950 இல் எல்லா வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே வழக்காக நடக்கிறது. ஹிந்து தலைமையாக நிர்மூகி அகாடா முஸ்லிம் தலைமையாக சன்னி வக்பு வாரியம் என வழக்கு நடக்கிறது.

 1984 வரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ரத யாத்திரை தொடங்குகிறது.
 வெவ்வேறு நகரங்களில் இருந்து ராமர் தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் ஊர்வலமாக அயோத்தி நோக்கி செல்கின்றன.

 இந்த நேரத்தில் ஹிந்து பொதுமக்கள் உள்ளே சென்று தங்கள் இடத்தில் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பு வருகிறது. 

 இந்த நேரத்தில் முஸ்லிம்கள் 'பாபர் மசூதி செயல் குழு' என்று ஒன்றைத் தொடங்கினர் ஆனால் ராமர் சிலையை அகற்ற கோரிக்கை வைத்ததைத் தவிர அவர்கள் பெரிதாக செயல்படவில்லை.

 1989 இல் பகவான் இராமர் இந்த வழக்கில் பங்கேற்கிறார். அதாவது கோவில் தொடர்பான வழக்குகளில் தெய்வத்தின் சார்பாக ஒரு பக்தர் ஆஜராகி கோவில் தரப்பு நியாயங்களை அந்த தெய்வம் வாதிடுவது போலவே வாதிடலாம் என்ற சட்டத்தை பயன்படுத்தி தியோகி நந்தன் அகர்வால் எனும் முன்னாள் நீதிபதி ராமரை இந்த வழக்கில் சேர்க்கிறார் (இந்த ராமர்தான் வழக்கை வெற்றி பெற்றதாக இறுதி தீர்ப்பு வந்தது)

 1989 கும்ப மேளாவில் ஹிந்து அமைப்புகள் கூட்டாக ராமர் கோட்டத்தில் அஸ்திவாரக் கல் வைக்கும் போராட்டத்தை அறிவிக்கின்றன. இதன்பிறகு சாமி கும்பிட வரும் பக்தர்கள் ஒரு செங்கலில் ராம் என்று எழுதி ராமர் கோட்டத்தில் வைத்தனர். இப்படி மூன்றரை லட்சம் செங்கற்கள் சேர்ந்தன. இதை உள்துறை அமைச்சர் முன்னிலையில் அடித்தளமாக அடுக்கி பூஜை செய்தனர்.

 இப்போது வாஜ்பாய் நீக்கப்பட்டு அத்வானி தலைமையில் பாஜக இந்த விடயத்தில் குதிக்கிறது.
இதற்கு காரணம் அன்று இந்த விடயத்தில் ஹிந்துக்கள் காட்டிய பேராதரவு.
  அத்வானி தலைமையில் மோடி திட்டமிடலில் VHP செய்தது போலவே குஜராத்தில் இருந்து ஒரு  ரத யாத்திரை அயோத்தி நோக்கி தொடங்குகிறது. இது செல்லுமிடங்களில் கலவரங்கள் மூண்டன இதனால் 1990 இல் இது பீகாரில் நுழைந்த போது லாலு பிரசாத் யாதவ் தடுக்கிறார். அத்வானியை கைது செய்கிறார்.

 ஆனாலும் RSS தொண்டர்கள் யாத்திரை நின்ற இடத்தில் இருந்து தொடங்கி அயோத்தி நோக்கி வந்தனர். தடைகளை மீறி ராமர் கோட்டத்துக்குள் நுழைய முயன்ற அவர்கள் மீது முலாயம் சிங் உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதில் 30 பேர் உயிரிழக்கின்றனர்.

 2 தொகுதிகளை வென்றிருந்த பாஜக அடுத்த தேர்தலில் ஹிந்துக்களின் பேராதரவோடு நான்கு மாநிலங்களில் 85 தொகுதிகளில் வெல்கிறது. 

 1991 இல் உத்திர பிரதேச தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.
கல்யாண் சிங் முதலமைச்சர் ஆகிறார். இவர் பிரச்சனைக்குரிய மொத்த நிலத்தையும் அரசின் சுற்றுலா தளம் அமைப்பதாக கூறி கையகப்படுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் ஒரு அறக்கட்டளைக்கு வெறும் ஒரு ரூபாய் க்கு குத்தகைக்கு விடுகிறார். இங்கே சுற்றுலா தளமாக ராமாயணப் பூங்கா வரவுள்ளதாக அறிவிக்கிறார். 

 இப்போதும் முஸ்லிம்கள் வழக்கு போடுகின்றனர். நீதிமன்றம் கல்யாண் சிங் முயற்சிகளுக்கு தடை விதிக்கிறது.  
 
 கல்யாண் சிங் இப்பகுதியில் இருந்த தடுப்பு வேலிகளை அகற்றி பாதுகாப்பைக் குறைக்கிறார்.

 1992 பிப்ரவரியில் RSS, VHP, BJP, Bajrang dal ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் கூடி மசூதியை உடைக்க திட்டம் தீட்டுகின்றனர்.

 இதை உளவுத்துறை மத்திய அரசிடம் கூறுகிறது ஆனாலும் காங்கிரஸ் அரசு பேசாமல் இருந்து விடுகிறது.

 கல்யாண் சிங் "ஆட்சியே போனாலும் ராமர் கோவில் கட்டுவேன்" என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.

 1992 மத்தியில் VHP தலைவர் "மூன்று மாத காலத்திற்குள் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை என்றால் அடுத்த கட்டத்திற்கு செல்வோம்" என்று அறிவிக்கிறார்.

 VHP "மசூதி இருக்கும்வரை கோவில் கட்டமுடியாது" என்று பரப்புரை செய்கிறது.

 1992 நவம்பரில் டெல்லியில் கூடிய ஹிந்து அமைப்புகள் பாபர் மசூதியை டிசம்பர் 6 இல் இடிப்பதாக முடிவு செய்கின்றனர்.

 அந்த தேதியில் தொண்டர்களைத் திரட்டி அனைவரும் கைப்பிடி அளவு மணல்  அள்ளி குவிக்கும் போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு தொண்டர்கள் திரட்டப்படுகின்றனர்.

 இது தொடர்பான வழக்கில் கல்யாண் சிங் நீதிமன்றத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று உறுதியளிக்கிறார். இதை நிறுத்தினால் கலவரம் வரலாம் என்றும் கூறுகிறார்.

 டிசம்பர் 6 அன்று கல்யாண் சிங் காவல்துறைக்கு துப்பாக்கிச்சூடு மட்டும் நடத்தக் கூடாது என்று உத்தரவிடுகிறார். இதன் பொருள் 'வேடிக்கை மட்டும் பார்' என்பதாகும்.

அங்கே எல்லா ஹிந்து அமைப்புகளும் கூடி இருந்தன. மேடையில் பேசும்போது அத்வானி 'தொண்டர்கள் பலி கொடுக்கத் தயாராகுங்கள்' என்கிறார். வாஜ்பாய்  'இந்த நிலம் நாம் உட்கார முடியாமல் இருக்கிறது. இதை சம மட்டம் ஆக்குங்கள்' என்கிறார்.

 அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு கும்பல் எழுந்து மசூதியை உடைக்கத் தொடங்குகிறது. பிறகு மொத்த கூட்டமும் அப்படியே சென்று மசூதியை உடைக்கின்றனர். அனைவருக்கும் இடிக்கும் கருவிகள் வழங்கப்படுகின்றன.

 11:30 - 4:00 மணி வரை இடிக்கும் செயல் நடக்கிறது. மசூதி முழுவதுமாக இடிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டு ராமர் சிலை வைத்து பூஜை நடக்கிறது.

 பிறகு 6:00 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்படுகிறது. 
 ஆட்சியைக் கலைக்கும் முன் கல்யாண் சிங் தாமே ராஜினாமா செய்துவிடுகிறார்.
 பாஜக ஆளும் மூன்று மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்படுகிறது.

செய்தி பரவியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மதக் கலவரம் வெடிக்கிறது. 2000 பேர் இறக்கின்றனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

 இந்த இடிப்பு சம்பவம் பற்றி விசாரிக்க லிபரான் அயோத்தி கமிஷன் நியமிக்கப்பட்டு இது திட்டமிட்ட செயல் என்று அறிக்கை வருகிறது.

 பிறகு வழக்கு சிபிஐ வசம் போய் இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர்.

1993 இல் பிரச்சனைக்குரிய நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தி இந்திய அகழ்வாய்வுத் துறை மூலம் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு அதன்படி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. 

 ஆனாலும் 2003 இல் தான் அகழ்வாய்வு தொடங்குகிறது.
 இதில் அடித்தளம் ஆராயப்பட்டு அது முகலாயர் பாணியில் இல்லை என்பது அறிவிக்கப்படுகிறது.
ஆனால் முகலாயர் இதை இடித்துதான் மசூதி கட்டினர் என்று கூறமுடியாது என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
 
 2005 இல் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் இந்த தற்காலிக கோவிலைத் தாக்க முயல்கின்றனர். CRPF படை அவர்களைக் கொல்கிறது.

 2010 இல் உயர்நீதிமன்றம் பிரச்சனைக்குரிய நிலத்தை பிரித்து சன்னி வாரியம், ராமர், நிர்மூகி அகாடா ஆகிய மூவருக்கு வழங்குகிறது.
 
 மூவருமே மேல்முறையீடு செய்கின்றனர். ஆனால்
2017 இல் தான் மீண்டும் வழக்கு தொடங்குகிறது. 
 
 2019 இல் இறுதித் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாக வருகிறது.

இதற்கு மூன்று காரணங்கள் முக்கியமானவை
1) இந்திய பாணி அஸ்திவாரம் இருக்கிறது என அகழ்வாய்வுத் துறை தந்த அறிக்கை.
 இதன்மூலம் நிலம் ஹிந்துக்களுக்கு சொந்தம் என்று உறுதியானது.

2) அக்பர் கால ஆங்கிலேயப் பயணிகள் புற முஸ்லிம் தளங்களைக் குறித்தது போல அயோத்தியை முஸ்லிம் புனித தலமாக குறிக்காதது
அதேவேளை பிராமணர் இருந்ததைக் குறித்தமை.

3) பாபர் மசூதி பெரும்பாலும் இயக்கத்தில் இல்லாமலே இருந்தது.
ஆனால் ஹிந்துக்கள் அங்கே பூஜை செய்வதை எப்போதுமே நிறுத்தவில்லை.

 எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால் உத்திர பிரதேச முஸ்லிம்கள் இந்த பிரச்சனையில் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஹிந்துக்கள் ஒற்றுமையாக தீவிரமாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்ததே இங்கே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. 

 ராமர் சிலையை அகற்றாமல் விட்டது,  அகழ்வாராய்ச்சி நடத்தாமலே இருந்தது, 
மசூதியை இடிக்கும் வரை வேடிக்கை பார்த்தது என இந்த பிரச்சனையை காங்கிரஸ் கையாண்ட விதம் ஏற்கும் வகையில் இல்லை. இவ்வளவு நீண்டகாலம் இழுத்தடித்து வேறு பிரச்சனைகள் முற்றும் போது மக்களை மடைமாற்ற இந்த பிரச்சனையை பயன்படுத்தி வந்துள்ளது.

பாஜக இதை வைத்து எல்லா பிரச்சனைகளையும் மடைமாற்றம் செய்து அரசியல் செய்து வந்துள்ளது. 
 
 
  முடிவாக, 
ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பது முழுக்கப் பொய்!
மசூதியை இடித்தது கண்டிப்பாக குற்றச்செயல்!
தற்போது ராமர் கோவில் கட்டப்படுவது குறுக்குவழியில் கிடைத்த வெற்றி!

 
பி.கு: இணையத்தில் தேடி ஆராய்ந்து எனது யூகத்தை எழுதியுள்ளேன். 
 சான்றுகளைக் காட்டினால் எனது கருத்துகளை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நன்றி:-
Nitish rajput (yt)
இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு நகல்
விக்கிபீடியா

 

No comments:

Post a Comment