ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!
நீங்கள் ஒரு நொடி சிந்திப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான துன்பங்கள் தீரும் என்பதை அறிவீர்களா?!
உங்கள் வாழ்வில் பெரும்பாலான துன்பங்கள் தவறான வேட்பாளருக்கு வாக்களித்ததினால் மட்டுமே வந்தடைந்தன என்பது தெரியுமா?
நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கடந்த பல ஆண்டுகளாக மக்களை ஆண்டு வரும் கட்சிகள் மாறி மாறி கொள்ளையடித்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை குழந்தை கூட அறியும்!
ஜனநாயக மணிமகுடம் ஆள்பவர் தலையிலிருந்து தேர்தல் காலத்தில் சில நாட்கள் மட்டும் வாக்காளர் தலைக்கு மாறிவிடுகிறது.
இப்போது கிரீடம் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் தலையில் அமர்ந்துள்ளது.
நீங்கள் வாக்களித்த மறுநொடி அதுவும் அதன் சக்தியும் கைமாறிவிடும்.
பிறகு தலைக்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆள்பவன் செருப்பு உங்கள் தலையை அழுத்தியபடி இருக்கும்.
எனவே வாக்களிக்கும் முன் ஒரு நொடி சிந்தியுங்கள்!
உங்களுடைய மற்றும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அதாவது கல்வி, வருமானம், வாழ்க்கைத் தரம், பிற வசதிகள் என அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான முடிவு இது!
அதுவரை நீங்கள் ஜனநாயக குடிமகனாக பல தவறுகள் செய்திருக்கலாம்! லஞ்சம் கொடுத்திருக்கலாம், வரி ஏய்ப்பு செய்திருக்கலாம், சாலை விதிகளை மீறியிருக்கலாம், ஓட்டுக்குப் பணம் வாங்கியிருக்கலாம்!
பரவாயில்லை! போனது போகட்டும்!
வேட்பாளர் பட்டியலைப் பாருங்கள்! அதில் நல்லவர் அல்லது குறைந்தபட்ச கெட்டவரைத் தேர்ந்தெடுங்கள்! அவர் கண்டிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேட்பாளராக நிச்சயம் இருக்கமாட்டார்! ஒன்று சுயேட்சையாக இருப்பார்! அல்லது நாதக போன்ற சிறிய கட்சி வேட்பாளராக இருப்பார்.
உங்களுக்கு முதல்வன் அர்ஜுன் போன்றோ, சர்கார் விஜய் போன்றோ, ஆய்த எழுத்து சூர்யா மாதிரியோ எவரும் வரப்போவதில்லை. இருப்பதில் சிறந்தவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பரவாயில்லை.
100% திருடன் என்று தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை விட இவன் திருடனா இல்லையா என்று சந்தேகம் இருக்கும் ஒருவருக்கு வாக்களியுங்கள்.
ஓட்டு வீணாகும் என்று நினைக்க வேண்டாம். இந்த ஒரு தவறான சிந்தனைதான் நாடே நாசமாக காரணம். எல்லாரும் இப்படி நினைத்துதான் நாட்டை வீணாக்கி வைத்துள்ளாம். நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு ஓட்டு வீணாவது பெரிய இழப்பில்லை.
ஒரு உண்மையைக் கூறவா? மக்கள் மாற்று சக்திகளுக்கு வாக்களித்தே வந்துள்ளனர்! ஆனால் அது குறைத்து காட்டப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் எது நேர்மையாக நடக்கிறது? தேர்தல் முடிவுகள் மட்டும் நேர்மையாக வெளிவருமா? இருந்தாலும் பெரும்பாலான வாக்குகள் கட்சிமாறினால் அதை மறைக்க முடியாது.
நான் நா.த.க அடிப்படை உறுப்பினர். நாம் தமிழர் வந்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறமாட்டேன். அவர்கள் வந்தால் இந்த அளவுக்கு மோசமாக இருக்கமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. நீங்களும் அப்படியே நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நான் சீமான் அவர்களுக்கு வாக்களிக்கத் தொடங்கியதில் இருந்து நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டால் 'இதற்கு நான் காரணமில்லை' என்கிற ஆறுதல் கிடைத்துவிட்டது. நீங்கள் வாக்களித்தால் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கலாம் என்று கருதுகிறேன். வேட்பாளர் நல்லவர் ஆனால் கட்சித் தலைமை சரியில்லை என்றாலும் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனால் நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்ப்பது சரியாக இருக்கும் என்பது என் பரிந்துரை. இதை யோசித்துப் பார்ப்பது உங்கள் விருப்பம்.
வாக்களிக்கும் முன் நீங்கள் மதம், சாதி, இனம், கட்சி, பாலினம், பொருளாதாரம் என எந்த பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அந்த நொடி உங்கள் தலையில் ஜனநாயக கிரீடம் இருக்கும் போதே உடனடியாக உங்கள் மனசாட்சியை செயல்பட விடுங்கள்! உங்கள் முடிவு பல லட்சம் பேர் வருங்காலத்தை ஏன் பல ஆயிரம் உயிர்களை பாதிக்கும் முடிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
கொள்கை, கோட்பாடு என்று கூட சிந்திக்க வேண்டாம். இதுவரை பிரதான கட்சிகள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பாருங்கள். வேட்பாளர் பட்டியலில் உள்ளவரில் கெட்டவர் என்று நன்கு தெரிந்தவரை விட்டுவிட்டு பிறருக்கு வாக்களியுங்கள்.
நோட்டாவை அழுத்துவதால் பலன் எதுவும் இல்லை. எல்லா ஓட்டும் நோட்டாவுக்கு விழுந்து ஒரே ஒரு ஓட்டு ஒருவருக்கு விழுந்தாலும் அதைப் பெற்றவர் வெற்றி பெறுவார். அந்த முட்டாள்த் தனத்துக்கு வாக்களிக்காதீர்கள். அதற்கு பேசாமல் வீட்டிலியே இருக்கலாம்.
வாக்காளர் என்றில்லை வேட்பாளர்களுக்கும் இதைக் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கே வாக்களிக்கு முன் உங்கள் மனசாட்சியை ஒருமுறை கேளுங்கள். உங்களை விட சிறந்த வேட்பாளர் ஒருவர் இருந்தால் அவருக்கு ஓட்டு போடுங்கள்.
ஒரு வேட்பாளர் ஏற்கனவே பதவியில் இருந்தவர் என்றால் செய்த நன்மைகள் தீமைகளைப் பட்டியலிட்டு நன்மைகள் அதிகம் இருப்பவரைத் தேர்ந்தெடுங்கள். தீமைகள் அதிகம் என்றால் அவர் எவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் விட்டுவிடுங்கள்.
கெட்டவர்கள் செய்த சில நன்மைகளை நினைத்துப் பார்ப்பது அறிவாளித்தனம் இல்லை. சிலரது ஒப்பீடு மிகவும் தவறு. பீகாரை விட நாம் முன்னேறியிருக்கிறோம் என்றால் சோமாலியாவை விட பீகார் முன்னேறி இருக்கிறது!
இது எப்படி இருக்கிறது என்றால் "நான் நினைத்தால் உன்னை அதிகம் சீரழித்திருப்பேன். குறைவாக சீரழித்தமைக்காக எனக்கு மறுபடி வாய்ப்பு கொடு" என்று மிரட்டி கேட்பது போல இருக்கிறது.
வெள்ளைக்காரன் காலத்திலேயே நாம் அதிக வரி கட்டி வந்த முன்னேறிய மாநிலம். நாம் முன்னேறியிருக்க பொதுமக்களாகிய நாமே காரணம்.
காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என இதுவரை ஆண்ட அனைவரும் நாம் உழைத்து முன்னேறுவதைத் தடுத்து கொள்ளையடித்தே வந்துள்ளனர்.
எல்லா கட்சிகாரர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து விட்டனர். பத்து தலைமுறைக்கு சேர்த்துவிட்டு பதினொராவது தலைமுறைக்கு தற்போது வியாபாரத்தைத் தொடங்கிவிட்டனர்.
அவர்களிடமிருந்து ஒரு பைசாவை கூட நம்மால் திருப்பி வாங்க முடியாது என்பதே உண்மை.
எனவே அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட்டுவிட்டு மூன்றாவது நபருக்கு வாய்ப்பு கொடுக்கும் தருணத்தில் இருக்கிறோம்.
இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒருமுறை வாய்ப்பு கேட்டு அமர்ந்தவர்கள்தான். ஒருமுறை பதவியில் அமர்ந்தவர்களை நம்மால் அசைக்க முடியாது. ஒருமுறை தேர்ந்தெடுத்தவர் சரியில்லை என்றால் வேறொருவரை மாற்றுவதே புத்திசாலித்தனம். அப்படிப் பார்த்தால் திமுக, அதிமுக கட்சிகளை நாம் என்றைக்கோ மாற்றியிருக்க வேண்டும். அந்த வகையில் நாம் அடிமுட்டாள்களாக இருந்துள்ளோம். இனியாவது அறிவாளிகளாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்!
ஒருவருக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு தனிப்பட்ட நன்மை கிடைக்கலாம். ஆனால் வாக்களிக்கும் அந்த நொடி சுயநலத்தை விடுத்து மனசாட்சியை தட்டிக் கேளுங்கள்!
மேலே சொன்ன எல்லா கணக்குகளையும் மனசாட்சி ஒரு நொடியில் போட்டு விடையைக் கூறிவிடும்.
ஒரு நொடி உங்கள் மனசாட்சிக்கு அதிகாரம் கொடுங்கள். அது யாரைச் சொல்கிறதோ கண்ணை மூடிக்கொண்டு அழுத்திவிடுங்கள்! இதுவே புரட்சி! ஒவ்வொருவரும் தத்தமது கடமையை சரியாக செய்துவிட்டால் பெரிய புரட்சியெல்லாம் தேவைப்படாது என்பது தலைவர் பிரபாகரன் கூறியது! தவறான நபர்களைப் பதவியில் அமர்த்தி விட்டு பிறகு அதிகாரத்திற்கு எதிராக திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்யும் புரட்சியை ரசிப்பது வேடிக்கையானது! மாற்றி சிந்திப்பதே புரட்சி! இந்த தைரியமான முடிவு ஆயுதப் புரட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல! ஜனநாயக மாற்றம் வராதபோதுதானே ஆயுதப் புரட்சி அவசியம்! அதை முன்னரே அதாவது இப்போதே செய்துவிட்டால்...
முடிவை மாற்றுங்கள்!
மனசாட்சியைக் கேட்போம்!
மாற்றிப் பார்ப்போம்!
No comments:
Post a Comment