Sunday, 29 May 2022

அண்ணே நீங்க பாயா

அண்ணே நீங்க பாயா?

 சலீம், ரகுமான், இர்ஷாத் மூவரும் பள்ளிவாசல் நண்பர்கள்.

 சலீம் ஒரு வங்கியில் கலெக்சன் ஏஜென்ட்டாக இருக்கிறான்.
 ரகுமான் பெட்டிகடை வைத்திருக்கிறான். 
இர்ஷாத் ஒரு வெட்டி ஆபிசர். அவனது அப்பா டவுனில் பெரிய கடை வைத்திருக்கிறார்.

 அன்று இந்த நண்பர் குலாம் நகர விலக்கு முக்கில் ஒரு மலையாளி திறந்திருந்த பேக்கரியுடன் கூடிய தேநீர் கடைக்குப் போனார்கள்.
 சலீம் முதலில் நுழைய இர்ஷாதும் ரகுமானும் சுவாரசியமாகப் பேசியபடி அடுத்ததாக நுழைந்தனர்.

 "வாங்க அண்ணே"

 இந்த குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான் ரகுமான்.

 அங்கே வாசலில் ஒருவனை நிறுத்தி அனைவரையும் வரவேற்குமாறு செய்திருந்தனர். 

 அவன்தான் சலீமை அவ்வாறு வரவேற்றிருந்தான்.
 இவர்கள் நுழையவும் "வாங்க பாய்" "வாங்க பாய்" என்று வரவேற்றான் அந்த பையன்.

 சலீம் தாடி வைத்திருக்க மாட்டான். பேன்ட், சட்டை, வாட்ச், பெல்ட் என வங்கி ஊழியர் தோரணையில் எப்பவும் இருப்பான். தொப்பியும் தொழுகையின்போது மட்டுமே அணிவான். அவன் முசுலீம் என்று தெரியாததால் சலீமை அண்ணே என்றும் இவர்களை பாய் என்றும் அழைத்து வரவேற்றுள்ளான் அந்த பையன்.

 ரகுமானுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன தன் தம்பியின் நினைவு வந்தது. அவனுக்கு அந்த வரவேற்பாளன் வயதுதான். அவனைப் போன்ற குரல்தான்.
 ரகுமான் சவுதியில் சில ஆண்டுகள் வேலை பார்த்தான். ஊருக்கு வந்திருந்தபோது தன் தம்பியின் பிறந்தநாளுக்கு விலையுயரந்த பைக் ஒன்றை பரிசளித்தான். ஒரு வாரத்திற்குள்ளாகவே அதில் அதிவேகமாக சென்ற அவனது தம்பி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் ரகுமான் மடியில்தான் உயிரை விட்டான்.
அவன் கடைசியாகக் கூறிய வார்த்தை "அண்ணே...".

 அவன் இறந்த பிறகு யாராவது தன்னை அண்ணன் என்று கூப்பிட்டார்களா என்று யோசித்து யோசித்து பார்த்தான்.
யாரோ ஒருவர் எப்போதோ பின்புறமிருந்து அண்ணே என்று கூப்பிட்டு தான் திரும்பியதும் பாய் என்று மாற்றி கூப்பிட்டது நினைவுக்கு வந்தது.

  தேநீரைக் கையில் எடுக்காமல் ரகுமான் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டதை பார்த்துக்கொண்டிருந்த சலீம் "என்னாச்சு பாய் ஏதோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க?" என்று கேட்டார்.

 சுயநினைவுக்கு வந்த ரகுமான் "இல்ல பாய் அடுத்த வெள்ளிக்கிழமை தொழுகைல நான் உரையாற்றணும். அதான் எதைப்பற்றி பேசலாம் னு யோசிச்சிட்டு இருக்கேன்" 

 அதற்கு சலீம் "இது என்ன பிரமாதம் !?பக்கத்து ஊர் கோவிலில் கொடை நடக்குது. பெற்றோரைப் பேணுவோம் ங்கற தலைப்பில் ஒருத்தர் உரையாற்றுறார். அதைக் கேட்டு அப்படியே இங்கே பேசிவிடுங்கள். இடையிடையே அரபி வார்த்தைகளைப் போட்டு குரானிலிருந்து ஓரிரு வசனத்தை செருகினால் முடிந்தது"

 இர்ஷாத் உடனே "நீங்களும் உப்புசப்பில்லாம எதையோ பேசிவைக்காதீங்க பாய். உலகத்தில் முஸ்லீம்களுக்கு எத்தனையோ பிரச்சனை இருக்கு. அதை இங்கே பேசி விழிப்புணர்வு கொண்டுவரலாம்"

 ரகுமான் "எந்த நாட்டுல அப்படி பிரச்சனை இருக்குனு சொல்லுங்க விசயம் சேகரிச்சு பேசிடறேன்"

 சலீம் சிரித்தபடி "முஸ்லீம்கள் பெரும்பான்மையா இருக்குற நாடுகள்லதான் பிரச்சனை. சிறுபான்மையா இருக்கிற நாடுகள்ல அவங்க நிம்மதியா இருக்காங்க" 

 இர்ஷாத் கடுப்பாகி முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
பரந்த அறிவு பெற்ற சலீமுடன் வாதம் செய்து வெல்லமுடியாது என்பது அவனுக்குத் தெரியும்.

 சலீம் ரகுமானைப் பார்த்து "நீங்க ஏன் சம்பந்தமில்லாத நாடுகள் பற்றி இங்க பேசணும் நம்ம ஊர்ல நமக்கு இருக்குற பிரச்சனை எதாவது பற்றி பேசுங்க"

 அவர்கள் கிளம்பி சென்றனர்.

 ரகுமான் வீட்டுக்கு யோசித்துக்கொண்டே பைக்கில் வந்துகொண்டிருந்தான்.
 இங்கே நமக்குதான் எந்த பிரச்சனையுமே இல்லையே எதைப் பேசுவது என்று எண்ணிக்கொண்டே வந்தான்.
அப்போது எதிரில் பர்தா போட்டுக்கொண்டு ஒரு பள்ளி மாணவி எதிரில் வந்தாள்.
 ரகுமான் மனதில் கர்நாடகாவில் நடந்த புர்கா பிரச்சனை பற்றி பேசலாம் என்று முடிவெடுத்து வீட்டிற்கு வந்தான்.
 
 அவன் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது.
பக்கத்து வீட்டு செல்வம் அங்கே நின்றிருந்தான்.
 அவன் ரகுமானைப் பார்த்து "அக்கா பக்கத்துல போயிருக்காங்க பாய்! இந்தாங்க சாவி" என்று கொடுத்தான். 

 அவனுக்கு ஏதோ உறுத்தியது. என்னவென்று புரியவில்லை. தொழுகையின் போது மாட்டிய தொப்பியை கழற்ற மறந்திருந்தான். அதை கழற்றி பையில் வைத்துக்கொண்டான்.

அன்று மாலை ஒரு நிச்சதார்த்த நிகழ்விற்கு அவனும் அவனது மனைவியும் சென்றனர்.
 அவன் வெள்ளை ஜிப்பா வேட்டி அணிந்துகொண்டான்.
அவன் மனைவி பட்டு சேலை உடுத்தி அதன் மேல் பர்தா போட்டுக்கொண்டாள்.
 தன் மகள் மற்றும் கைக்குழந்தையுடன் அவன் சென்று இறங்கினான்.
 வாசலில் பன்னீர் தெளித்து வரவேற்ற அக்குடும்ப பெண் "பாய் வாங்க! அக்கா வாங்க!" என்று வரவேற்றாள்.
 அப்போதுதான் இவனுக்கு உரைத்தது பர்தா போட்டாலும் அவள் மட்டும் 'அக்கா' கொஞ்சம் அடர்த்தியாக திருத்திய தாடிவைத்தால் நான் மட்டும் 'பாய்'. இது என்ன நியாயம்?

 அன்றிலிருந்து இவன் சுற்றிலும் கவனிக்கத் தொடங்கினான். அனைவருமே அனைவரையுமே அண்ணே, தம்பி, மச்சான், தங்கச்சி, மாமா என்று முறைவைத்து வாய்நிறைய மகிழ்ச்சி பொங்க உரிமையுடன் கூப்பிடுகிறார்கள். தன்னை மட்டும் இந்த சமூகம் அந்நியனாக ஒதுக்கிவிட்டதாக உணர்ந்தான்.

 சவுதியில் யாராவது தமிழில் பேசமாட்டார்களா என ஏங்கிய காதுகள் இப்போது அண்ணன் என்ற சொல்லுக்கு ஏங்கியது.

 ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மதியம் சாப்பிட்டு விட்டு நாற்காலியில் அமர்ந்து சுகர் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டான். அப்படியே கண்ணயர்ந்தான். எதிரில் கொலுசு சத்தம் கேட்டது. தன் மகள்தான் என்று கண்ணைத் திறந்தான். அவனது பத்து வயது மகள் பர்தா போட்டுக்கொண்டு நின்றாள் "பாய் எந்திரிங்க" என்றாள். சட்டென்று விழித்து எழுந்தான். நல்லவேளை கனவு.

 அவனது குழந்தை ஒருநாள் "ப..." "ப்ப..." என்று குரல் எழுப்பியது. அவன் மிக அருகில் சென்று ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். முதல் வார்த்தையாக அப்பா என்று சொல்லப்போகிறது என்று நினைத்தான். ஆனால் அது "ப்ப...", "ப்ப...இ", " ப....இ" என்று சொன்னது. அவன் பாய் என்று கூறிவிடுமோ என்று பதறிவிட்டான்.

 சலீமை சந்தித்து பேசினால் தெளிவு கிடைக்கும் என்று தோன்றியது. அப்படியே செய்தான். அதன்படியே தெளிவும் கிடைத்தது. 

 தானும் சலீம் போல தாடியை மழித்துவிட்டு நன்றாக மீசை வைத்துக்கொண்டான். இர்ஷாத் "குரானில் தாடிவைக்க சொல்லிருக்கு" என்று இதைக் கண்டித்ததற்கு "வேணும்னா வெச்சிக்கோங்க னுதா குரான் சொல்லுது. அரபு மன்னர்களும் இளவரசர்களும் இப்படித்தான் இருக்கிறாங்க. நீதா மீசையில்லாம கொத்துத்தாடியோட அல் கொய்தா தீவிரவாதி மாதிரி அலையிற " என்று கூறிவிட்டான். அன்றிலிருந்து இர்ஷாத் இவனிடம் பேசுவதில்லை.
 
 பக்கத்து ஊருக்கு போய் ஒவ்வொரு கடையாக போய் எதாவது பேச்சு கொடுப்பான். அவனை முன்பின் தெரியாத யாராவது அவனை அண்ணன் என்று கூப்பிட்டால் மகிழ்ச்சி அடைவான்.

 அவனது பத்து வயது மகளுக்கு தலையை மறைக்கும் துப்பட்டி போட ஜமாத் வற்புறுத்தியபோது மறுத்துவிட்டான். தன் மனைவியையும் "நாகரீகமாக உடை உடுத்தத்தான் குரான் சொல்லுது" என்று பர்தா போடவேண்டாம் என்று கூறிவிட்டான்.

 ஜமாத் இவன் குடும்பத்தை தள்ளிவைத்தது.
'போங்கடா நீங்களும் உங்க ஜமாத்தும்! இது தமிழ்நாடு! நா இருக்கிறது இந்துக்கள் ஏரியா!" என்று கூறிவிட்டு வந்துவிட்டான்.

 அவனது சித்தப்பா மகள் ஒரு இந்துவை காதலித்து திருமணம் செய்து பக்கத்து ஊரில் வாழ்ந்து வந்தது நினைவுக்கு வந்தது. 
 அவளையும் இந்த ஜாதி சங்கம் அதாவது ஜமாத் ஊரைவிட்டு தள்ளிவைத்தது. அவள் தன்னை அண்ணன் என்று அழைப்பாள் என்பதற்காக அந்த ஊருக்குப் போய் அவர்கள் வீட்டைத் தேடி கண்டுபிடித்து போய்ப் பார்த்தான். சொந்தங்கள் எல்லாமே விட்டுப்போயிருந்த அந்த பெண் இவனைப் பார்த்ததும் "அண்ணே வாங்கண்ணே! அண்ணே இருங்கண்ணே! அண்ணே சாப்பிடுங்கண்ணே!" என்று  இவன் காதுகள் குளிர கண்ணெல்லாம் கலங்க பாசமழை பொழிந்தாள். அவளை கட்டியணைத்து கண்ணீர் விடலாம் என்று தோன்றியது.

 அவளது கணவரும் மச்சான் என்று அழைத்தது அவனுக்கு பேரின்பமாக இருந்தது. விடைபெறும்போது அவரை கட்டித் தழுவினான். "தங்கச்சிக்கு யாருமில்ல மாப்ள! நீங்க நல்லா பாத்துக்கிறீங்க! ரொம்ப சந்தோசம் மாப்ள! உங்க பிள்ளைகளுக்கு தாய்மாமன் நா இருக்கேன் மாப்ள! நேரம் கெடைக்கும்போது குடும்பத்தோட வீட்டுக்கு வாங்க மாப்ள!" என்று கூறிவிட்டு வந்தான்.
 
 அன்று வெள்ளிக்கிழமை. ரகுமான் மேடையில் ஏறி பேசத் தொடங்கினான் , "எனக்கு மேடையில் பேசி பழக்கமில்ல! மனசில பட்டதை பேசிடறேன்! நாம முசுலீம்கள் சிறுபான்மையா இங்க வாழுறோம்! யார் சிறுபான்மையோ அவங்க பாதுகாப்பா இருக்க ஒற்றுமையா சமுதாய உணர்வோட இருக்கிறது இயல்பு! அதுல தப்பில்ல! ஆனா நாம நம்மளை அறியாமலே மற்ற மக்கள்ட்ட இருந்து அந்நியம் ஆகிட்டு இருக்கோம்! இசுலாமைத் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கோம்! என்னோட சின்ன வயசுல ஒருத்தர் பேர வச்சுதான் முசுலீமா இல்லையா னு கண்டுபிடிக்க முடியும். ஆனா இப்ப அப்பிடி இல்ல! ஒரு கிலோமீட்டர் தூரத்துல பாத்தா கூட முஸ்லீம்கள் தனியா தெரியிறாங்க! ஒரு முசுலீம் பாக்க இப்படித்தான் தெரியணும்னு இசுலாம் எதையுமே சொல்லல! நாம நம்மளோட தோற்றத்தையும் பேரையும் மாத்திவைக்கிறதால இசுலாத்துக்கு எந்த நன்மையும் இல்ல. இதனால சக மனிதர்கள் கிட்ட இருந்து பிரிஞ்சு நிக்கிறோம். இப்ப நம்மள எல்லாரும் பாய் னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க! பாய் ங்கறது முஸ்லீம் வார்த்தை இல்ல! வடநாட்டுல எல்லா மதத்துகாரங்களும் அண்ணன் அல்லது தம்பினு கூப்ட சொல்ற வார்த்தை! மும்பை பக்கம் பாய் னா ரவுடி தாதா னு அர்த்தம்! 
கூடப் பொறந்த தங்கச்சிய பெஹன் னு இந்தில கூப்டுற மாதிரி இது பைத்தியக்காரத்தனம்! உருது முசுலீம்கள் அவங்க தாய்மொழில ஒருத்தர ஒருத்தர் பாய் னு கூப்பட்டுக்குவாங்க! அவங்கள பாத்து நாமளும் நமக்குள்ள பாய்னு கூப்பிட்டுக்க ஆரம்பிச்சோம்! இப்ப மத்த மதக்காரங்களும் நம்மள பாய்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்க! இது அவங்க தப்பில்ல! நாமளும் அத விரும்பறோம்! உருது முசுலீம் மாதிரி ஆக ட்ரை பண்றோம்! வணக்கம் னு சொல்லாம சலாமலைக்கும் சொல்றோம்! ஆனா அவங்களுக்கு முன்னாடியே இசுலாமைத் தழுவியது நாமதான். அவங்க முஸ்லீம்கள் அரசாண்டப்ப கட்டாயத்தாலயோ அல்லது சலுகைக்காகவோ மதம் மாறினவங்க! நாம கொள்கை பிடித்துப் போய் விருப்பப்பட்டு  மதம் மாறினவங்க! 
அப்பாவை அத்தா னு கூப்பிடற சில முஸ்லீம்கள் உண்டு! அத்தா அப்டின்னா அப்பானு அர்த்தம்! தமிழ் வார்த்தைதான்! சிவனை அத்தா னு பாடிருக்காங்க! ஆனாலும் அப்படி கூப்பிடறது பிற பொதுமக்கள்ட்ட இல்லை. அதனால அதையும் கைவிடணும்! நம்மளால மத்தவங்களோட ஒட்டமுடியாம இருக்க இன்னொரு காரணம் நம்ம பேரு! நாம மதம் சாராத பெயர்களை வைக்கலாம்! இன்னைக்கு நாம வைச்சுக்கிற பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் இல்ல! சாதாரண பெயர்களை அரபில வெச்சுக்கிறோம்! இப்படித்தான் பேரு வைக்கணும்னு குரான் எதுவும் சொல்லல! அப்படியே அரபி பேருதான் வைக்கணும்னா நம்ம தாத்தாக்கள் மாதிரி வாய்ல நுழைற பேரையாவது வைங்க! முசுலிம் பேரு இல்லனா மக்கா மதினா போகமுடியாதுனு சொல்றாங்க! அது உண்மையில்ல! அப்படி பாத்தா உலக முசுலீம்கள்ல முக்கால்வாசி பேரு ஹஜ் பயணம் போறதில்ல! இசுலாத் சொல்ற கடமைகளை எதையுமே பின்பற்றாத நாம சக மனிதர்கள் கிட்ட இருந்து அந்நியப்படுத்தற அத்தனையையும் ஒண்ணுவிடாம செய்யிறோம்! நாம முஸ்லீம் னு வெளியில தம்பட்டம் அடிச்சு காட்டிக்கிறதுல குறியா இருக்கோம்! ஒரு சமுதாயம் தனித்தன்மையை வெளிக்காட்டுறது தப்பில்ல! ஆனா நாம காட்டுறது தனித்தன்மையா? ஆப்கானிஸ்தான் முஸ்லீம் மாதிரி இங்க திரியிறது எப்படி தனித்தன்மை ஆகும்?! பாபர் மசூதிக்காக நாம ஏன் பொங்கணும்?! அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அந்த பாழடைஞ்ச மசூதிய இடிச்சப்ப தமிழ்நாட்டில எங்க கலவரம் நடந்துச்சு?! காஷ்மீர் பிரச்சனைக்கு நாம ஏன் குரல் எழுப்பணும்?! இது தப்பு! நம்ம பிரச்சனை எதுக்காவது மாநிலம் தாண்டி ஆதரவு வந்திருக்கா?! உலக முஸ்லீம்கள் ஒரே சமுதாயம்னு எப்படி ஆகும்?! முஸ்லீம் நாடுகளோட பிரச்சனைகளை இங்க பேசுறதால நீங்க மார்க்கத்துக்கு எந்த நன்மையும் தேடித்தரல! பிறந்த மண்ணுக்கு சக மனிதர்களோட ஒத்து இருக்கிறது மார்க்கத்துக்கு செய்ற துரோகம் ஆகிடுமா? நான் உங்களை பட்டையும் கொட்டையும் போடச்சொல்லல. மற்றவர்கள் மாதிரி இருங்க. பாக்க டீசன்டா இருங்க! அளவா தாடி மீசை வச்சிக்கங்க! பேன்ட் சட்டை போட்டுக்கங்க! அல்லது வேட்டி சட்டை! பசங்கள யூனிபாம் போட விடுங்க! இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி நாகரீகமா உடைபோட விடுங்க! வீட்டில இருக்கும்போது பனியன், சாரம் போதும் எதுக்கு குல்லா?! பெண்கள் சேலை, சுடிதார், நைட்டி னு இயல்பா இருங்க! பர்தா போட குரான் சொல்லவே இல்ல! ஸ்கூல் பிள்ளைங்களுக்கு நடுவில எந்த வித்தியாசமும் இருக்ககூடாதுனுதா யூனிபாம் கொண்டுவந்தாங்க! அங்கயும் நம்ம பிள்ளைகளை தனியா பிரிக்கிறீங்க! போலீஸ் வேலைல சேந்தா காக்கி சட்டை போட்டுதான் தீரணும்! உயரதிகாரிக்கு சல்யூட் அடிச்சிதான் ஆகணும்! கடவுளைத் தவிர யாரையும் வணங்கமாட்டேன் னு வணக்கம் சொன்னா ஒரு கையால சலாம் சொல்றதுலாம் முட்டாள்த்தனம்! ஹலால் பண்ணாத கறி சாப்பிட மாட்டேன், பூஜைல வச்ச பிரசாதத்தை சாப்பிடமாட்டேன்னு சொல்றதுலாம் மதவெறி! சாப்பாட்டுல என்ன மதம்?! இசுலாத் அப்படி எதுவும் சொல்லல! தீபாவளி, பொங்கலுக்கு வீடு தேடி வர்ற பலகாரங்கள் இப்ப குறைஞ்சு போச்சு! கூடிய சீக்கிரம் ரம்ஜானுக்கு நம்மட்ட உரிமையோட பிரியாணி கேக்குற பழக்கமும் நின்னுடும் போல இருக்கு! ஒரு படத்துல பொணத்துக்கு ஆண்குறி முன்தோலை வெட்டி இசுலாத்துல சேக்கிறத காட்டுறாங்க! அந்த சுன்னத் அல்லது கத்னா சடங்கை இசுலாத் வற்புறுத்தல! யூதர்களும் அப்படி சுன்னத் பண்றாங்க! இசுலாம் தோன்றுரதுக்கு முன்னாடியே அரபிகள் கத்னா செய்யிற பழக்கம் இருந்திருக்கு! மாத நோன்பும் இருந்திருக்கு! வெயில் அதிகமாகுற காலத்தில் பகலில் சாப்பிடாம தூங்கிட்டு இரவு இயங்குற பாலைவன பழக்கத்தை நாம சம்பந்தமில்லாம இங்க கடைபிடிக்கிறோம்.  நீங்க சுன்னத் பண்ணாமலும், கொத்துதாடி வைக்காமலும், அரபியில் தொழாமலும், நோன்பு இருக்காமலும், யாரையும் மதம்மாத்த முயற்சி பண்ணாமலும், அரபி பெயர் வைக்காமலும், சாதாரண உடைகள் போட்டுக்கிட்டும் உண்மையான முசுலீமா இருக்க முடியும்! வரதட்சணை வாங்காம, ஏழைகளுக்கு ஜகாத் கொடை கொடுத்து, வட்டிக்கு விடாம, பொய்யோ பொய்சாட்சியோ சொல்லாம, மனசாட்சி உள்ள நல்ல மனுசனா இருந்தாலே இறைவன் அதாங்க அரபில அல்லா உங்களுக்கு சொர்க்கத்துல இடம் ஒதுக்கி வச்சிருப்பான்! அப்படி இறைவனே கைவிட்டாலும் நம்ம மக்கள் ரத்த சொந்தங்களான நம்மை எப்பவும்போல கைவிடமாட்டாங்க! இப்படிப்பட்ட மக்களுக்காக மதத்தையே தூக்கிப்போடலாம்! அப்டிங்கும்போது மதம் கட்டாயமாக்காத விசயங்கள விட்டுக் கொடுக்கிறதுல தப்பில்ல! என்னைப் பொருத்தவர மக்கள்தான் முதல்ல! மதம் அப்பறம்தான்! ஏன்னா நான் அல்லானு சொல்றதுக்கு முன்னாடி அம்மா னுதான் சொன்னேன்! பிறக்கும்போது மனுசனாத்தான் பொறந்தேன்! அப்பறம்தான் நான் முசுலீம்னு தெரிஞ்சது! நான் பேசினது யாரையாவது காயப்படுத்திருந்தா மன்னிச்சிருங்க! எனக்கு ஒண்ணுன்னா அந்த கடவுளுக்கு முன்னாடி என் மதக்காரனுக்கு முன்னாடி பக்கத்து வீட்டு செல்வம்தான் ஓடிவருவான்! நான் இந்த மண்ணோட மக்களோட நகமும் சதையுமா... இல்ல இல்ல ரத்தமும் நரம்புமா கலந்து இருக்கணும்னு ஆசைப்படறேன்! இசுலாத்தை ஏத்துக்கிட்டதால அது சொல்லாததைச் சொல்லி என்னைப் போன்ற சாமானியர்களை சமூகத்திட்ட இருந்து பிரிக்காதீங்க! நான் என் உண்மையான அடையாளத்தை தக்க வைக்க மத அடையாளத்தை தூக்கிபோட தயங்கமாட்டேன். நீங்களும் அப்படி இல்லைன்னாலும் மதம்தான் பெரிசு மனுசங்க அப்பறம் னு நெனைக்காம இருங்க! மதம் நாலு சுவத்துக்குள்ள இருந்தா போதும்! மிஞ்சிப்போனா விழாக்கள் கொண்டாடும்போது வெளிக்காட்டுங்க! மற்றபடி இந்துக்களோடயும் கிறித்தவர்களோடயும் இணக்கமா ஒண்ணுமண்ணா இருக்குறதுதா நம்ம வருங்கால சந்ததிக்கு நல்லது. இசுலாத்துக்கும் நல்லது. நா சொன்னது புரிஞ்சவங்க இனியாவது மாறுங்க.
முதல் கட்டமா யாராவது பாய்னு கூப்டா அப்டி கூப்டாம அண்ணன்னோ தம்பின்னோ கூப்ட சொல்லுங்க! இது என்னோட பணிவான வேண்டுகோள். நன்றி!"
 டிசம்பர் 6 அன்று பள்ளிவாசலுக்கு வெளியே கூடியிருந்த ஒரு சிறிய கூட்டத்தில் படபடவென்று பேசிவிட்டு ரகுமான் இறங்கியதும் சிறிது நேர அமைதிக்குப் பின் கைதட்டல் வானைப் பிளந்தது.

2 comments:

  1. இதெல்லாம் எழுதணும்னு நானும் நினைச்சிருக்கேன். எழுதல. நமக்கேன் வம்புன்னு இருந்துட்டேன்.

    நீங்க துணிச்சல்காரர். சொல்ல நினைத்ததையெல்லாம் தெளிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் சொல்லியிருக்கீங்க.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. Why should Muslims (or anyone) not talk about Kashmir. Kashmir is a human rights issue, not a muslims only issue.

    ReplyDelete