`300 பேரில் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள் நியமனம்!'- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிர்ச்சி
- கு. ராமகிருஷ்ணன்
ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, 90 முதல் 100 சதவிகிதம் வெளிமாநிலத்தவர்களுக்கே பணி நியமனம் வழங்கப்படுவதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட 300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை.
இதைக் கண்டித்து இவர்கள் நடத்திய போராட்டமும், தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், மாநில அரசின்கீழ் வரும் தமிழ்நாடு மின் வாரியத்திலும் உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களுக்கு தற்பொழுது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்,
``தமிழ்நாடு அரசே இந்திக்காரர்களையும், வெளி மாநிலத்தவர்களையும் அரசு வேலையில் அமர்த்தியிருக்கும் தமிழினத்துரோகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 300 உதவிப் பொறியாளர் பணிக்குத் தேர்வானவர்கள் பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இதில் 39 பேர் ஆந்திரா, கேரளா, உ.பி., பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
பணியமர்த்தல் ஆணையில் அவர்களது முகவரியும் இருக்கிறது.
இதில் 25 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை வடசென்னை, குந்தா (நீலகிரி), காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் அமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மாத ஊதியம் 50,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வானோரின் பட்டியலை வெளியிட்டுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அசோக் குமார், தேர்வானோரில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாகத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராக வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் எனத் தெரிந்தே இவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
கடந்த 2016-ம் ஆண்டு (1.9.2016), தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்டத்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே அரசு மற்றும் தனியார் வேலைகள் என சட்டங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலோ வெளிநாட்டவர் கூட அரசுப் பணியில் சேரலாம் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.
இச்சட்டம் காரணமாகவே, தமிழ்நாடு அரசுப் பணியில் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டவர் சேர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து பல்வேறு துறைகளின் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி பேர்.
இங்கு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை நியமிப்பது தமிழ். மக்களுக்கு இழைக்கும் இனத்துரோகமாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள மொழிவழி மாநிலமாகிய தமிழ்நாட்டில், தமிழர்களைப் புறக்கணித்து சகட்டுமேனிக்கு வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டவர்களையும் வேலைக்குச் சேர்ப்பது சட்டவிரோதச் செயலாகும்.
மற்ற மாநிலங்களில் மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் 100-க்கு 100 மண்ணின் மக்களுக்கே வேலை எனச் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தி வருகிறார்கள்.
அதுபோன்ற சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட வேண்டும்” என்றார்.
Published: 31 May 2019
vikatan .com
படம்: மின்வாரியத்தில் பணி அமர்த்தப்பட்ட வெளிமாநிலத்தவர்கள் இரண்டு ஆண்டுகளில் கட்டாயம் தமிழ் கற்கவேண்டும் என அமைச்சர் தங்கமணி பேட்டி (12.06.2020)
அவர்கள் பணியமர்ந்து ஓராண்டு ஆகியும் தமிழ் கற்கவில்லை என்பதே முக்கியமான குற்றச்சாட்டு.
கற்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறவில்லை
No comments:
Post a Comment