Wednesday 17 June 2020

தென்னக ரயில்வே பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள்

தென்னக ரயில்வே பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள்

தென்னக ரயில்வே துறை வேலை வாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிப்பு...
வலுக்கும் எதிர்ப்பு!
த.கதிரவன்

தென்னக ரயில்வே பணியிடங்களில் வட இந்தியருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், "தெற்கு ரயில்வே பணியில் தமிழருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்கிறார் வானதி சீனிவாசன்.

தென்னக ரயில்வே துறை வேலைவாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
தற்போது, தென்னக ரயில்வேயின் சரக்கு வண்டிகளின் பாதுகாவலர் பணியிடங்களுக்கு துறைசார்ந்த தேர்வு நடைபெற்றது.
96 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், தென்னக ரயில்வேயில் பணிபுரிந்துவரும் சுமார் 5,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் 3,000 பேர் தமிழர்கள்.
96 பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்தத் தேர்வில், வெற்றி ய பெற்றவர்களில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்.
மீதம் உள்ள 91 நபர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், தங்களது எதிர்ப்பை அறிக்கைகளாகப் பதிவு செய்துவருகின்றன.
பா.ம.க தரப்பில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"விடைத்தாள் முறையில் தேர்வை நடத்தாமல், ஆன் - லைனில் தேர்வு நடத்தியதால் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெற்கு ரயில்வே துறை தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் வட இந்திய அதிகாரிகளின் முயற்சியால் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, இந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு, விடை எழுதும் வகையில் மீண்டும் வெளிப்படையாக தேர்வு நடத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினரான ஹரிஹரன் பாபு,
"வட இந்தியர்களின் ஆதிக்கம், காலம் காலமாகவே தொடர்ந்து வருகிறதுதான்.
இதுகுறித்து நம்மூர் அரசியல் கட்சிகளும்கூட அறிக்கைகள் கொடுப்பதும் அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதுமாக முடித்துக்கொள்கிறார்கள்.
மற்றபடி மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சராக இருந்தபோது, `தமிழிலேயே ரயில்வே தேர்வை எழுதலாம்' என அறிவித்திருந்தார்.
ஆனாலும் அது நடைமுறையில் இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நடைபெறவேண்டிய தேர்வை எர்ணாகுளத்துக்கு மாற்றினார்கள்.

இப்படி நிறைய குளறுபடிகள் நடக்கின்றன.
இப்போதும், சரக்கு வண்டி பாதுகாவலர் பணித் தேர்விலும் வழக்கம்போல், வட இந்தியர் ஆதிக்கம்தான் அரங்கேறியிருக்கிறது.
ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற வகையில், இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.'' என்றார்.

மத்திய ரயில்வே துறையின் முன்னாள் இணை அமைச்சரும் பா.ம.க துணைப் பொதுச்செயலாளருமான ஏ.கே.மூர்த்தி, இது குறித்துப் பேசும்போது,
"இந்திய அளவில், தமிழ்நாடும் கேரளாவும்தான் கல்வியில் முதன்மையான மாநிலங்களாக இருந்துவருகின்றன.
ஆனால், ரயில்வே தேர்வு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் மட்டும் தமிழர்களின் தேர்ச்சி விகிதம் என்பது மிகமிகக் குறைவாகவே இருந்துவருகிறது.
இப்போது நடைபெற்றுள்ள இந்த ரயில்வே தேர்விலும்கூட 3,000 தமிழர்கள் கலந்துகொண்டு வெறும் 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்றால், நிச்சயம் இதில் முறைகேடு நடந்துள்ளது.
தெற்கு ரயில்வேயிலேயே தமிழர்கள் தேர்வு பெற முடியவில்லை என்றால், மேற்கு, வடக்கு என மற்ற ரயில்வேக்களில் நமக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்?
ரயில்வேயைப் பொறுத்தவரையில், அமைச்சரின் கவனத்துக்கு வராமல் அதிகாரிகளின் மட்டத்திலேயே இதுபோன்ற பாரபட்சங்கள் நடந்துவிடுகின்றன.
ஏற்கெனவே, வாரிசு அடிப்படையில் தந்தை, மகன், பேரன் என்று வழிவழியாக ரயில்வே வேலைவாய்ப்புகளில் வட இந்தியர்கள் இருந்துவந்த வரலாறெல்லாம் இந்திய ரயில்வேக்கு உண்டு.
அதாவது,
`இந்தியன் பாங்க்; இது உங்கள் பாங்க்'
என்ற விளம்பரத்தைப் போல்,
`இந்தியன் ரயில்வே; இது உங்கள் ரயில்வே'
என்று வட இந்தியர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை இருந்துவருகிறது.
இந்த வகையில், அதிகாரிகளே இதுபோன்று இனப்பாகுபாட்டோடு நடந்துகொள்வதால்தான், தமிழர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகின்றன.

இந்த முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமானால், முதற்கட்டமாக, ஆன்லைன் வழியிலான தேர்வுகளை ரத்து செய்து, எப்போதும்போல் விடைத்தாளில் நேரடியாக தேர்வு எழுதுகிற நடைமுறையைக் கொண்டுவரவேண்டும்.

அடுத்ததாக, தமிழகத்திலிருக்கிற 39 எம்.பி-க்களும், நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சரிடம் இந்த முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.
வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எங்கள் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், நிச்சயம் இதுகுறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்புவார்'' என்றார் உறுதியாக.

இந்தப் பிரச்னையில், செய்தியாளர்களின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுவந்த மதுரை எம்.பி-யும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான சு.வெங்கடேசனிடம் பேசியபோது,
"ஆன்லைன் வழித் தேர்வு என்ற பெயரில், இப்போது நடைபெற்றிருக்கும் இந்த முறைகேடு பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.
அடுத்ததாக, ஆன்லைன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும், தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களையும் வெளியிடக் கோரி கேட்கவுள்ளேன்'' என்றார் சுருக்கமாக.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம், இப்பிரச்னை குறித்து மத்திய ரயில்வே அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்வியை முன்வைத்தோம்...
"பொதுவாக யு.பி.எஸ்.சி போன்ற அகில இந்தியத் தேர்வுகளில் மாநில வாரியான பாகுபாடுகள் பார்க்கப்படுவது இல்லை.
ஆனால், ரயில்வே துறைக்கான தேர்வு என்கிறபோது, எந்தப் பணிகளுக்காக தேர்வு நடைபெற்றது, தமிழ்நாட்டிலிருந்து எவ்வளவு பேர் தேர்வில் கலந்துகொண்டனர் என்பதுபோன்ற விவரங்களையெல்லாம் பார்க்க வேண்டியதிருக்கிறது.
ஏனெனில், திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் மல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயின்றுவருகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டிலிருந்து செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது.
காரணம், நம் மாணவர்கள், அதிகளவில் இந்தப் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே எனக்குக் கிடைத்த தகவலாக இருக்கிறது.
ரயில்வே, போஸ்டல் மற்றும் கஸ்டம்ஸ் போன்ற துறைகளில் அந்தந்த மொழிசார்ந்த நபர்களை பணியில் அமர்த்துகிறபோதுதான், நிர்வாகம் நல்லமுறையில் செயல்பட முடியும்.
உதாரணமாக, இன்கம்டாக்ஸ் ரெய்டு போகிற ஒரு சூழலில், உடனடியாக ஒரு ஸ்டேட்மென்ட்டை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்றால்கூட சம்பந்தப்பட்ட மொழியைத் தெரிந்த அதிகாரியாக இருக்கவேண்டியது மிக முக்கியம்.
அதுவும் அல்லாமல், இது ரொம்பவும் சென்சிபிளான விஷயம் என்பதால், மத்திய அரசுத் துறையில் எங்கெங்கு இதற்கான மாற்றங்கள் தேவைப்படுகிறது என்பது குறித்து உறுதியாக நாங்கள் கேட்கவிருக்கிறோம்.
ரயில்வே மட்டுமன்றி, பொதுமக்களோடு அன்றாடம் நேரடியாகக் கலந்து பழகுகிற எந்தத் துறையாக இருந்தாலும் அவற்றில் உள்ளூர் மக்களை பணியில் அமர்த்துவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.
ஏற்கெனவே கஸ்டம்ஸ் மற்றும் கர்நாடக மாநில வங்கித் தேர்வுகளில் இதுபோன்ற பிரச்னைகள் வந்தபோது, நிதி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம்.
உடனடியாக மாநில மொழிகளிலேயே சம்பந்தப்பட்டவர்கள் தேர்வெழுதலாம் என்ற அரசாணையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல், இந்த விஷயத்திலும் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பா.ஜ.க சார்பில், கேட்டுக்கொள்ளவிருக்கிறோம்.
அதேசமயம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு நாம் கொடுக்கும் அதே கவனத்தை, அகில இந்திய அளவிலான மற்ற போட்டித் தேர்வுகளுக்கும் கொடுக்க வேண்டும்.
அதற்கான பயிற்சியை மாநில அரசும் நம் மாணவர்களுக்கு கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்'' என்றார் கோரிக்கையாக.

Published:16 Jun 2020 4 PMUpdated:16 Jun 2020 4 PM
நன்றி: விகடன்

No comments:

Post a Comment