Monday, 10 February 2020

மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி தினமணி


மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி தினமணி
-------
ஏற்கனவே தமிழ்மொழி மீதுள்ள வெறுப்பினால் கன்னடர் மற்றும் ஹிந்தியர் மைசூர் தலைமை கல்வெட்டியல் அலுவலகத்தில் உள்ள 70,000 தமிழ் கல்வெட்டுகளை அழியவிடுவது பற்றி ஜூனியர் விகடன் (18.06.2006), விகடன் (02.05.2013), மற்றும் தினமலர் (04.02.2018) ஆகிய பத்திரிக்கைகள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
இதேபோல தினமணி 27.08.2019 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
இக்கட்டுரையில் முக்கியமானவை,

* மைசூரில் ஒரு லட்சம் கல்வெட்டு படிகள் உள்ளன; அவற்றில் 65 ஆயிரம் தமிழ்க் கல்வெட்டுகள்.
* 1908 க்குப் பிறகு படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சில் கூட வெளிவரவில்லை.
* 1920 க்குப் பிறகு கல்வெட்டுகள் அச்சில் வருவது ஏறத்தாழ நின்றுவிட்டது
* 1961 இல் தமிழக அரசு முயற்சி செய்தும் எதுவும் நடக்கவில்லை
*கல்வெட்டு எண்ணிக்கையில் தமிழே பெரும்பான்மை மற்றும் முதலிடம்.
* 1966 லேயே தமிழ்க் கல்வெட்டுகள் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டிவிட்டது.
இரண்டாவது இடம் கன்னடம் என்றாலும் 1993 இல் தான் கன்னட கல்வெட்டுகள் 10,500  ஐத் தாண்டின.
* 1967 இல் சேகரிக்கப்பட்ட 70,000 படிகள் அழியும் தருவாயில் உள்ளன
* 1997 வரை கல்வெட்டுகள் பற்றி சிறு குறிப்புகளுடன் வெளிவந்த கல்வெட்டியல் துறை ஆண்டறிக்கை கூட நின்றுபோனது 
* 2010 இல் தஞ்சை பல்கலை கல்வெட்டுகளை டிஜிட்டல் ஆக்கும் பணிக்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் மைசூர் நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை.
எதையுமே செய்யாமல் கொடுக்கப்பட்ட 22 லட்சத்தில் 20 லட்சத்தை திருப்பித் தந்துள்ளனர்.
* தமிழகத்தில் இருந்து யார் சென்று எதைக் கேட்டாலும் இல்லை என்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர்.
*பாதுகாக்கப் பட்டிருந்த 50% தமிழ் கல்வெட்டுப் படிகள் அழிந்துவிட்டன.
  இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மொத்தமாக அழிந்துவிடும் நிலை.

--------
மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?
நம்நாட்டின் தொன்மை வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் தொல்லியல் சான்றுகளில் ஒன்று கல்வெட்டுகள் ஆகும்.
கோவில் முதலிய பொதுக் கட்டடங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
இக்கல்வெட்டு எழுத்துக்களை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும்.
நம்நாட்டில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து, வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கிய பெருமை மேலைநாட்டவரையே சாரும்.
அவர்களில் முக்கியமானவர்கள்.
ஜேம்ஸ் பிரின்செப் - 1837 இந்தியாவில் கல்வெட்டாய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இவரே முக்கிய காரணம் ஆவார்.
அலெக்சாந்தர் கன்னிங்காம் 1871 முதல் 1885 வரை அசோகர் காலத்து கல்வெட்டுகள் என்ற தனித் தொகுப்பை வெளியிட்டார்.
டாக்டர் யூஜின் ஹால்ட்ஸ் (1857 - 1906) தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுப்பினை 1903 ல் வெளியிட்டார்.
மேலும் ராபர்ட் சிவல் (1868 - 1894) டாக்டர் கில்ஹார்ன், டாக்டர் ஜார்ஜ் பூலர் (1837 - 1898), ஜான் பிளீட் (1874 - 1917), ஜேம்ஸ் பர்கஸ் ( 1822 - 1917), டாக்டர் ப்ர்னல், காலின் போன்றோர்களின் ஊக்கமும் உழைப்பும் ஆர்வமும் இல்லை எனில் நமது வரலாற்றினை அறிந்திருக்க வாய்ப்புகள் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவர்கள் தவிர கோபிநாத்ராவ், வெங்கையா, சுப்ரமணிய ஐயர், கிருஸ்ணசாஸ்திரி இந்திய கல்வெட்டாய்வுக்கு பெரும் துணை புரிந்துள்ளனர்.
1861 முதல் இதுவரையில் சுமார் எழுபத்தைந்தாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன.
படி எடுத்தல் (Estampage):-
நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் செதுக்கி வைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு ‘படி எடுத்தல்‘ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது.
இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது ASI.
இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், நம் நாடு முழுவதிலும் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், 1860 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் எனும் ஆங்கிலேயரால் ASI உருவாக்கப்பட்டது.
மைசூரு அலுவலக பின்னணி:-
இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகம் சார்பில் காகித நகல்களாக 1889-ம் ஆண்டு முதல் படி எடுக்கப்படுகிறது.
இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் இந்திய தொல்லியல் ஆய்வகம் அவ்வப்போது பதிப்பித்து வெளியிடுகிறது.
இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்து பதிப்பிப்பதற்கும் தொல்லியல் ஆய்வகத்தின் மைசூரு அலுவலகத்தில் தனியாக கல்வெட்டு தலைமையகம் ஒன்று இயங்குகிறது.
ஆரம்பத்தில் சென்னையில் இருந்த அந்த அலுவலகம், தட்பவெட்பநிலை காரணமாக எடுத்தபடிகள் வீணாகப் போய் விடும் என ஊட்டிக்கு மாற்றப்பட்டது.
அதன் இயக்குநராக பொறுப்பேற்ற மைசூரை சேர்ந்த ஒரு அதிகாரி அதை தம் சொந்த ஊருக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆங்கிலேயர் நமக்கு அளித்த பொக்கிஷம் இக்கல்வெட்டுகளின் படிகள் (copies).
தமிழ்நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் பராமரிக்கவும், கல்வெட்டுப் படிகளைப் பாதுகாக்கவும், படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுதுவடிவமாக்கவும், பதிப்பிக்கவும் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் அரசு நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பதிவு கடந்த 1890 ஆம் ஆண்டு முதல் அரும்பாடுபட்டு படியெடுத்து சேகரித்து, படித்து, தமிழ் எழுதுவடிவமாக்கி, ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 75,000 தமிழக் கல்வெட்டுகளின் நிலை பற்றியது.
இதற்கென பிரத்யேகமாக மைசூரில் செயல்படும் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளை அலுவலகம் இந்த தரவுகளை முறையாகப் பராமரிக்கிறதா?
சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இத்தரவுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா?
1909 ஆம் ஆண்டு முதல் இவை ஏன் நூலாக பதிப்பிக்கப்படவில்லை?
1908 ஆம் ஆண்டுவரை பதிப்பிக்கப்பட்ட நூல்களும் பிற கல்வெட்டு படி பிரதிகளும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் மின்தரவாக (digital document) கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதா?
இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் சொல்லும் தீர்வு என்ன?

இந்திய கல்வெட்டியல் பேரவையின் (Epigraphical Society of India-ESI) இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India), மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பு.
இவ்வமைப்பு நிர்வாக வசதிக்காகவும் தொல்லியல் சின்னங்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பதற்காக இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது.
தமிழ்நாடு சென்னை வட்டத்தின் (Chennai Circle) கீழ் வருகிறது.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கியது.
இந்தியாவில் 1887 முதல் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டன.
இந்திய தொல்லியல் துறையின் (Archaeological Survey of India) கல்வெட்டியல் பிரிவு (Epigraphy Branch) கி.பி. 1886 ஆம் ஆண்டு பெங்களூரில் டாக்டர். ஹுல்ஷ் (Dr.E. Hultzsch) தலைமையில் துவங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் கல்வெட்டியலாளரும் (Epigraphist) இவரே.
இந்த அலுவலகம் இந்தியாவில் பல பாகங்களில் பரவிக்கிடந்த கல்வெட்டுகளை அளவீடு செய்தது.
தொடக்க காலத்தில் இக்கல்வெட்டுகளை ஆங்கிலேய அரசு மட்டுமல்லாது சிற்றரசுகளும் (சமஸ்தானங்கள் உதாரணம்: புதுக்கோட்டை, திருவிதாங்கூர், மைசூர் ஆகியன) தொகுக்கும் பணியில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து செந்தமிழ், தமிழ்ப்பொழில் முதலான இதழ்களிலும் கல்வெட்டுகளைப் பற்றிய குறிப்பும் நிழற்படமும் வெளிவரலாயின.
இந்திய தொல்லியல் அளவீட்டு துறை அலுவலர்கள் இக்கல்வெட்டுகளை பிரத்யேக காகிதத்தில் மையொற்றி படிகளாக மாற்றி ஆய்வுக்குப் பயனுள்ள வகையில் ஆவணப்படுத்தும் பணியில் 1890 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு படி எடுக்கப்படும் பிரத்யேக காகிதங்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.

சேகரித்த கல்வெட்டுகளைப் படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுத்துவடிவமாகவும், பதிப்பிக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டன.
பல நூல்கள் கல்வெட்டியல் துறை தொடர் வெளியீடுகளாகவே (Publication Series) பிரசுரிக்கப்பட்டன.
இந்திய கல்வெட்டியல் ஆண்டு அறிக்கை (Annual Report on Indian Epigraphy):-
1887 முதல் 1995-1996 ஆம் ஆண்டு வரையிலான கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் பற்றிய அறிக்கை.
மிகச் சுருக்கமான செய்திகள் ஆங்கிலத்தில் உள்ளது.
எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica):-
1882 – 1977 ஆண்டுகளுக்கிடையே பதிப்பிக்கப்பட்ட ஆவணம்.
1892 முதல் 1920 வரை இது காலாண்டு இதழாக வெளி வந்தது.
எட்டு பாகங்கள் (parts) ஒரு தொகுதியாக்கபட்டன (volumes).
இதுவரை 42 தொகுதிகள் வெளிவந்துள்ளன.
கார்பஸ் இன்ஸ்கிருப்ஸ்னம் இண்டிகேரம் (Corpus Inscriptionum Indicarum):
பல வம்சங்களைப்பற்றிய கல்வெட்டுகள் இந்த பதிப்புத் தொடரில் வெளியிடப்பட்டன.
தென்னிந்திய கல்வெட்டுகள் (South Indian Inscriptions (S.I.I.):
தென்னிந்திய கல்வெட்டுகளின் ஆவணங்களுக்காக ஒரு தனி தொடர் பதிப்பு 1890 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (Department of Archaeology Government of Tamil Nadu) :-
1961 இல் ஆரம்பிக்கப்பட்டது. கல்வெட்டுகளை நகலெடுத்தல், கல்வெட்டுகளில் உள்ளவற்றை அச்சிடுதல், மற்றும் புத்தக வடிவில் அவற்றை வெளியிடுதல் என்பது இந்நிறுவனத்தின் பணிகளுள் ஒன்று.
1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டின் கல்வெட்டுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் மொழிவாரியாகவும், அகரவரிசைப்படியும், எண்ணிக்கையின்படியும் வகைப்படுத்தியதில் தமிழ் நாடு இந்திய மாநிலங்களுள் முதலிடத்தில் உள்ளது.
இந்திய மாநிலங்களிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ளன என்று இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாம் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
1966 ஆம் ஆன்டிலேயே தமிழில் 20000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மற்ற மொழிக் கல்வெட்டுகள்:-
கன்னடம் 10,600;
சம்ஸ்கிருதம் 7,500;
தெலுங்கு 4500.
(ஆதாரம்: Journal of the Epigraphical Society of India Volume 19 : 1993).
இந்தியாவில் இதுவரை 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1887 முதல், சுமார் நானூறு ஆண்டுகளாக, கண்டறியப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களின் படிகள் இந்த இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் உள்ளன.
இங்கு உள்ள ஒரு லட்சம் கல்வெட்டில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன.
இக்கல்வெட்டுகள் இந்திய வரலாற்றை, குறிப்பாக தமிழகத்தின் தொன்மை வரலாற்றை எடுத்துரைக்கும் முதன்மை சான்றாகும்.
இவற்றுள் 1908ம் ஆண்டு வரை கண்டறியப்பட்ட படிகள் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
1909ம் ஆண்டுக்கு பின் கண்டறியப்பட்ட கல்வெட்டுப்படிகள் இன்னும் முழுமையாக பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படவில்லை.
டாக்டர் எ. சுப்பராயலு அவர்கள் தம் ஆய்வில் தமிழ்க் கல்வெட்டுகளை காலநிரல்படி பகுப்பாய்வு செய்து ஒரு அட்டவணையினை வெளியிட்டுள்ளார்.
கி.மு. 300 – கி.பி. 500-க்கு இடைப்பட்டவை  = 400;
கி.பி. 501 – கி.பி. 850-க்கு இடைப்பட்டவை = 900;
கி.பி. 851 – கி.பி. 1300-க்கு இடைப்பட்டவை = 19,000;
கி.பி. 1300 – கி.பி. 1600-க்கு இடைப்பட்டவை = 6,000;
கி.பி. 1600 – கி.பி. 1900-க்கு இடைப்பட்டவை = 2,000;
வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகள் = 300.
இவற்றை ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மின்தரவாக்கம் (Digitize) செய்து கொள்வதற்கான முயற்சியை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மேற்கொண்டது.
2010 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள அனைத்து மொழிகளின் கல்வெட்டுகளையும் மின்தரவாக்கம் (டிஜிடைஸ்) செய்து ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய தொல்லியல் அளவீட்டு துறையுடன் (ஏ.எஸ்.ஐ.,) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் ராசேந்திரன், மைசூர் கல்வெட்டுப் பிரிவின் இயக்குனர் (பொறுப்பு) ரவிசங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழ் கல்வெட்டுக்கள் மட்டுமின்றி இந்நிறுவனத்தில் உள்ள அனைத்து மொழிக் கல்வெட்டுக்களையும் மின்தரவாக்கம் செய்யப்பட உள்ளன.
தமிழக அரசு இப்பணிக்காக தமிழ் பல்கலைக்கு 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ள கல்வெட்டுப்படிகள் இனி தஞ்சை தமிழ் பல்கலையிலும் இடம் பெறவும், அவற்றை ஆய்வாளர் கணினி தொழில் நுட்ப வசதியுடன் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதி செய்யும்.
சமீபத்தில் மைசூர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் 50 சதவீத கல்வெட்டுப் படிகள் பதிப்பிக்கப்படாமலேயே அழிந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2008- மார்ச்சில் மைசூர் தொல்லியல் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது, அங்கு படி எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பல நூறு தமிழ் கல்வெட்டுகள் வீணாகப் போய் விட்டன.
அவற்றை மீண்டும் படி எடுக்க வேண்டும் எனில் அதன் மூல ஆதாரங்கள் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளை கோயில், குளம் எனத் தேடித் திரட்ட வேண்டும்.
இது மிகச் சிரமமான ஒன்று.
கல்வெட்டுக்களில் படி எடுக்கப்பட்டு மைசூர் அலுவலகத்தில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள பலவும், நூறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படிகள் ஆகும்.
படி எடுக்கப்படும் தாள்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.
இப்போது அவையும் வீணாகப் போகும் நிலை உருவாகி உள்ளது.
கல்வெட்டுகளைப் படிக்க முறையான கல்வெட்டியலாளர்களின் பற்றாக்குறை அதிகமாகி விட்டது.
இதை முன்கூட்டியே அறிந்தும் மைசூர் அலுவலகம் குறிப்பிட்ட காலத்தில் அந்த குறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது.
இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும் பாலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவை.
மற்றவை சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, உருது, தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் மலையாள மொழிகளில் எழுதப்பட்டவை.
இந்த மொழி கல்வெட்டுகள் பதிப்பிக்கும் கல்வெட்டாளர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் அதன் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதில், தமிழ் கல்வெட்டுகள் அதிகம் என்பதால் மற்ற மொழி கல்வெட்டுகளை விட, தமிழ் கல்வெட்டு படிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றும் கூட தமிழகத்தில் கல்வெட்டுகள் அவ்வப்போது கிடைத்து வருவதால், தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை கூடி வருகிறது.
இதனால், தமிழக வரலாறு மைசூரிலேயே முடங்கும் சூழல் நிலவுகிறது.
மைசூர் கல்வெட்டு ஆவணங்கள் மைசூருவில் உள்ள, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆவணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதால், தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளில், இது வரை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மைபடிகளாகவும், எழுத்துப்படிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசும் நியமிக்கவில்லை.
அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப்படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாச்சாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
மத்திய தொல்லியல் துறை சார்பில், மஹாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை, கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள், நேரடியான எழுத்துப்படிகளாகவும், மை படிகளாகவும் சேகரிக்கப்பட்டன.
அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர் 1967 இல், மைசூருவில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன.
அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல, தற்போது இல்லை.
தமிழகம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருவுக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.
மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கெனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர்.
தொல்லியல் துறை படியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நூலகத்தில் வைக்க வேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.
தமிழக அரசின் முயற்சிகள்:-
மைசூர் அலுவலகத்தில் ஏற்கெனவே படிகளாக எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை படித்து தொகுக்க உதவும்படி தமிழ்நாடு தொல்லியல் ஆய்வகத்திற்கு (Tamilnadu State Dept of Archaeology -TNSDA) உத்தரவிட்டு சில லட்சங்களை ஒதுக்கியது தமிழக அரசு.
அப்போது TNSDAயின் கமிஷனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரின் சொந்த முயற்சியினால் ஒரு வருடத்திற்கான கல்வெட்டுக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டது.
ஆனால், ஒரு வருடத்தில் தொகுக்கப்பட்டதை வெளியிட ASI, ஐந்து வருடம் எடுத்து கொண்டது.
இதுவும் முடியாமல் அடுத்த கட்டமாக, ஏற்கனவே படி எடுக்கப்பட்ட சுமார் 50,000 தமிழ் கல்வெட்டுகளை டிஜிட்டல் (Digitalistion) ஒளிப்பதிவு செய்து பாதுகாக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு வேறு வழியின்றி மைசூர் அலுவலகம் சம்மதித்தது.
இதற்காக தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துடன் மைசூர் கல்வெட்டியல் தலைமையகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
இதற்காக ஒதுக்கப்பட்ட ஒருவருட காலத்தில், கிழிந்து போன படிகளை ஒட்டுவதிலேயே எட்டு மாதமானது.
இதனால், தமிழக அரசு ஒதுக்கிய 25 லட்சத்தில் ரூபாய் 22 லட்சங்களை தமிழ் பல்கலைகழகம் திருப்பி அளிக்க வேண்டியதாயிற்று.
தொல்லியல் துறையின் இயக்குநர் உதயசந்திரன்:-
உதயசந்திரன் பள்ளிக்கல்வித் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத் துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார்.
கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார்.
புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார்.
பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவார்கள்.
அறிஞர் ஐராவதம் மகாதேவன் இல்லாவிட்டாலும், பூங்குன்றன், பேராசிரியர் வை.சுப்பறாயலு, பேராசிரியர் இராஜவேலு மற்றும் கலாநிதி இரகுபதி , பத்மாவதி, புலவர் ராசு என பல அறிஞர் பெருமக்கள் தமிழகத்தில் உள்ளனர்.
தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிற அவர் மைசூர் கல்வெட்டு ஆவண அழிப்பை, தடுத்து நிறுத்தி, தமிழகம் மீட்டு, பிரசுரம் செய்ய, தமிழக அரசின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



No comments:

Post a Comment