Saturday, 10 October 2020

விஜயனுக்கு முந்தைய அரசன் சேந்தன் மாறன்

 

சேந்தன் மாறன் காசு



ஈழத்தை விஜயனுக்கு முன்னரே ஆண்ட சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பற்றிய தென்காசி ராஜசுப்பிரமணியன் அவர்களின்  கட்டுரை அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னதழில் சூலை வெளியீட்டில் வந்துள்ளது.
இக்கருத்து உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழர்கள் ஆட்சி விஜயன் ஈழத்துக்கு வருவதற்கு முன்பே ஈழம் தமிழர் நிலமாக இருந்தது என்பதற்கு மேலும் நல்லதொரு சான்றாய் அமையும்.

இந்த வேந்தன் தன் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட ஒரு காசும் சிங்கள வரலாற்று ஆர்வலர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அக்காசில் எழுதியுள்ளது ராணா சிநதி நாமா (Rana Cinathi Nama) என்ற பாகத எழுத்துக்கள் என அவர் தவறாக படித்துள்ளார்.
ஆனால் திரு. ராஜசுப்பிரமணியன் இதை சேந்தன் மாறன் என படிக்கிறார்.
இந்த காசின் காலம் எனது கணிப்பில் கி.மு. ஏழாம் ஆறாம் நூற்றாண்டாகும்.
காசின் பின்புறம் கிளர் கெண்டை மீன் பொறிக்கப்பட்டுள்ளதாலும் காசில் உள்ள எழுத்துக்களில் தமிழுக்கு மட்டுமே உரிய எழுத்துக்களும் பாகதங்களில் இல்லாத எழுத்துக்களுமான றகரமும் னகரமும் உள்ளதாலும் மாறன் என்ற பெயர் சங்ககாலத்தில் பாண்டிய வேந்தருக்கே இருந்ததாலும் இதில் எழுதப்பட்டிருப்பது சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பெயரே என உறுதியாக கூற முடியும் என்கிறார்.

மகாவம்சத்தில் சேந்தனின் போர்:- மகாவம்சத்தின் பதினைந்தாம் நிகழ்வான மகாவிகாரை பற்றிய பாடல்களில் ஜெயந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் நடக்க இருந்த போர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஜெயந்தன் ஈழத்தை ஆண்ட காலத்தில் ஈழம் மண்டதீபா எனப்பெயர் பெற்றிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது.
இது இன்றைய யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவாக இருக்கலாம். மண்டைத்தீவின் அரசனான சேந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் போர் மூண்டது. இதனால் பெரும் கேடு விளையும் என்று கணித்த காசிபன் சுபகூட மலையில் எழுந்தருளி நடக்கவிருந்த பெரும்போரை தடுத்தான் என்கிறது மகாவம்சம்.

“ஜெயந்தோ நாமநாமேன தத்த ராஜா தடாஅகு நாமேன மண்டதீபோ திஅயம் தீபோ தடா அகு தடா ஜெயந்தராண்ணோசராண்ணோ கணித்தபடுச யுத்தம் உபத்திடம் ஆசிபீம்சனம் ஸட்டஹிம்சனம் கஸ்ஸபோ ஸொதாஸ பலொதென யுத்தேண பாணிணம் மகந்தம் பியசணம் திஸ்வமஹா காருணிகொமுனி தம்ஹண்ட்வா ஸட்டவிநயம் பவத்திம் ஸாஸணஸ்ஸ ஸகாடும் இமஸ்மிம் திபஸ்மிம் கருணாபலசொதிடொ விஸடிய ஸஹஸெஹி தாடிகி பரிவாரிடொ நாபஸாகம்ம அட்டஹாஸி சுபகூடம்ஹி பப்படெ”
[ மகாவம்சம் 15:127-131 ]

மணிமேகலையில் கூறப்படும் நாக நாட்டரசர்களின் போர்:-
மகாவம்சம் குறிக்கும் அதே போரை மணிமேகலையும் குறிக்கிறது. இரு நாகர் படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் பிறவிப்பிணி மருத்துவன் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் மருத்துவன் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் மருத்துவனை வணங்கி போருக்குக் காரணமான மணியாசனத்தில் மருத்துவனையே அமரச்செய்தனர் என்கிறது மணிமேகலை.
அப்பாடலில் மருத்துவன் என்று கூறப்படுவது மணிமேகலை ஆசிரியர் பார்வையில் காசிபபுத்தராக இருக்கலாம்.
மணிமேகலையில் எந்த புத்தர் என்றும் நாகநாட்டரசர்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.
வேகவெந்திறல் நாகநாட்டரசர் சினமா சொழித்து
மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து
மறச்செவியடைத்து பிறவிப்பிணி மருத்துவன்
இருந்தறம் உரைக்கும் திருத்தாளி ஆசனம்
[ மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 – 61 ]

பாண்டிய மெய்க்கீர்த்திகளில் சேந்தன் பெயர்:-
கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் செழியன் சேந்தன் என்னும் பாண்டிய வேந்தன் மதுரையை ஆண்டான்.
அவனது பெயர் வேளவிக்குடி செப்பேட்டில் 'சேந்தன்' என்றும் சின்னமனூர் சிறியச்செப்பேடுகளில் 'ஜயந்தவர்மன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாவம்சம் தொகுக்க தொடங்கியதன் காலம் கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளாகும்.
வேள்விக்குடி சின்னமனூர் செப்பேடுகள் வெளியிடப்பட்ட காலம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளாகும்.
தமிழில் சேந்தன் என்று இருந்த பெயர் சங்கதத்தில் ஜயந்த என அழைக்கப்பட்டிருப்பது அக்கால மொழிமாற்ற வழக்கு என்பதற்கு கீழுள்ள செப்பேடுகளின் வரிகளே சான்று.

சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன்
[ வேள்விக்குடிச்செப்பேடு வரி 30 ]

ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகி
[ சின்னமனூர் சிறிய செப்பேடு வரிகள் 10-11 ]

ஆகவே மகாவம்சத்தில் ஜயந்தன் என பாலியில் குறிக்கப்பட்ட அதே அரசனே காசில் காணப்படும் சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் என்பது ஆய்வின் முடிவு.

இதன் மூலம் விஜயனுக்கு முன்னரே இந்த பாண்டியன் ஈழம் ஆண்டதால் ஈழம் தமிழரின் பூர்விக பூமி என்பது மேலும் தெளிவாகிறது.

Friday, 21 August 2020

அஜித்தா வீரப்பனா

அஜித்தா? வீரப்பனா?

 எனக்கு ஏன் தலைவரை விட வீரப்பனாரை அதிகம் பிடிக்கும்  என்றால்...

 பிரபாகரனார் பிறப்பிலேயே நல்லவர், இறுதிவரை நல்லவராகவே இருந்தார்.

 ஆனால் வீரப்பனார் அப்படியில்லை.

 அவர் முரடனாக பிறந்து கொலைசெய்யும் வேட்டைக்காரனாக வளர்ந்து கடத்தல் செய்யும் கொள்ளைக்காரனாக ஆனவர்.

 20 ஆண்டுகளாக வெற்றி மேல் வெற்றி, புகழ் மேல் புகழ் என அவருக்கு அலுத்துவிட்டது.

 யானை வேட்டை, சந்தனக் கடத்தல் என்று பெரும் பொருளீட்டிய வீரப்பனார் ஒரு கட்டத்தில் இதில் அர்த்தமேயில்லை என்று உணர்கிறார்.

 சில ஆண்டுகள் இந்த சிந்தனையிலேயே அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்திருந்தார்.

 "வீரப்பன் இறந்துவிட்டானோ?" என்று நினைக்கும் அளவு அமைதியாக இருந்த வீரப்பனார் புதிய மனிதனாக மாறி மீண்டும் நடவடிக்கையில் இறங்கினார்.

 வீரப்பனார்  தன் இயல்பான முரட்டு குணத்தை அடக்கி தன்னைத்தானே வென்றது எவ்வளவு கஷ்டம் என்பது
 தன் இயல்பான மிருக குணத்தை அடக்கி அதன் மேல் அமைதியாக உட்கார்ந்திருக்கும் சிலருக்கு மட்டுமே புரியும்.

 அதன் பிறகு அந்த காட்டில் ஒரு விலங்குகூட கொல்லப்படவில்லை.
 ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை.
தன்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்பை விட அதிகமாக உதவிகள் செய்தார்.

 வல்லவனாக மட்டுமில்லாமல் நல்லவனாகவும் மாறி மக்களுக்கு நன்மை செய்கிறார்.

 தன் தவறுகள் அனைத்தையும் சரிசெய்து அதுவும் போதாதென்று மேற்கொண்டும் நன்மைகளைச் செய்கிறார்.

 அரசாங்க ஊழியர் என்று யார் காட்டில் கால்வைத்தாலும் கடத்திக் கொண்டு போய் வைத்துக்கொண்டு அரசை மிரட்டி பணம் பறித்து அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

 ஆம். அவர் ஒரு தமிழ் ராபின் ஹுட் ஆகிவிட்டார்.

 தமிழர்களுக்குத் தலைவன் ஆக "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை இனப்பற்று இருந்தால் போதும் என்று நிரூபித்தார் அந்த படிக்காத மாவீரன்.

 ஆனாலும் அவர் மனம் ஆறுதல் அடையவில்லை.
தன் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்துவிடவேண்டும் என்று எண்ணிய அவரை சரியான நேரத்தில் சந்தித்த தமிழர் தனிநாடு கேட்கும் ஆயுதப் போராளிகள் திட்டமிட்டு கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி வரச் செய்தனர்.

 வீரப்பனார் நூறு நாட்களுக்கு மேல் அன்று கிளப்பிய பரபரப்புக்கு அளவேயில்லை.
 ஊடகங்கள் செய்தி பரப்பியே மாய்ந்துபோயின.

 அவர் காவிரி நதியை விடுவித்துக் காட்டினார்.

 அதிகாரமும் பணமும் பதவியும் படைத்தவர்கள், பெரிய பெரிய போஸ்டர்களில் ஈ என்று பல்லைக் காட்டுபவர்கள் என எத்தனையோ பெரிய மனிதர்களால் முடியாததை அவர் சாதித்தார்.

 காவிரி உரிமைக்காக புத்தகம் எழுதியவர்கள், வழக்கு போட்டவர்கள், தீர்மானம் நிறைவேற்றியவர்கள், சட்டம் போட்டவர்கள், போராட்டம் செய்தவர்கள், தீர்ப்பு சொன்னவர்கள் என எவராலும் சாதிக்க முடியாததை வீரப்பன் சாதித்து காட்டினார்.

 ஏட்டில் இனிக்கும் ஜனநாயகமும் சட்டமும் அந்த மாமனிதனின் வீரத்திற்கு முன் மண்டியிட்டு தோல்வியை ஒத்துக்கொண்டன.

 இது எவ்வளவு பெரிய விஷயம் என்றால்...
 2012 இல் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம்.

 மன்மோகன் சிங் எதிரே ஜெயலலிதாவும் ஜெகதீஷ் ஷட்டரும் இருக்கிறார்கள்.
 கன்னட முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் "தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமுடியாது" என்று ஆணவமாகக் கூறுகிறார்.
 மன்மோகன் சிங் "வினாடிக்கு 9000 கன அடியாவது கொடுங்கள்" என்று கெஞ்சுகிறார்.
 "ஒரு சொட்டு கூட தரமுடியாது" என்று ஆணவமாகக் கூறிவிட்டு வெளியே போய்விடுகிறார்.
 இதுதான் அன்று நடந்த கடைசிகட்ட பேச்சுவார்த்தை.

 (இந்த மீட்டிங் 6 தடவை பிரதமரால் கேன்சல் செய்யப்பட்டு ஏழாவது முயற்சியில் நடந்தது என்பது வேறு கதை.
 இந்த அவமானத்துக்குப் பிறகுதான் ஜெயலலிதா காவிரி தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
 ஆனால் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை)

 ஆக ஒரு பிரதமரால் வாங்கித்தர முடியாததை வீரப்பன் வாங்கித் தந்துள்ளார் என்றுதானே அர்த்தம்?!

 வீரப்பனாரின் சாதனை ஒவ்வொரு கன்னடனுக்கும் விழுந்த செருப்படி!

 ஒவ்வொரு தமிழனுக்கும் கற்றுத் தந்த பாடம்!

 அவர் ஹீரோ இல்லை என்றால் இங்கே வேறு எவன்டா ஹீரோ?!

 மேக்கப் போடுறதோ சீன் போடுறதோ மேட்டரே இல்லை.
 கடுகளவாவது சாதிக்க வேண்டும்.

 திரையில் எந்த சொங்கியும் சிங்கமாகலாம்.
 தனுஷ் கூட அர்னால்டைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாம்.
 நீங்களோ நானோ கூட க்ராபிக்சில் நூறு யானைகளை பந்தாடலாம்.

 அத்தகைய போலியான வீரர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற கூத்தாடி நடிகர்களின் படத்தை நெற்றியில் ஒட்டிக்கொண்டு திரிகிறார்கள் மத்தியான தூக்கத்தில் கண்ட கனவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம்  தெரியாத முட்டாள் இளைஞர்கள்.

 ஒருவன் நிஜ வாழ்க்கையில் என்ன சாதித்தான் என்பதுதான் மேட்டர்.
 நிஜ வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவன் கூத்தாடி பின்னால் ஓடமாட்டான்.

 நான் ஞாயிற்றுக் கிழமை ஷேவ் செய்ய போகும்போது மீசையை கொஞ்சம் முறுக்கிப் பார்க்கலாமா என்று யோசிக்கும் போதெல்லாம் கண்ணாடியில் வீரப்பனார் முகம்தான் வந்து போகும்.

 அவர் அத்தனை பெரிய மீசைக்கு ஒர்த்தான ஆம்பளையாக இருந்தார்.

 ஒரு கிழட்டு கான்ஸ்டபிள் லத்தியை நீட்டினாலே பல்லைக்காட்டும் நாமெல்லாம் மீசை வைக்கவே அருகதை அற்றவர்கள்.

 "அவர் அனுப்பிய பத்து ரூபாய் கேசட் காவிரியைக் கொண்டுவந்தது.
இன்று யாருக்காவது அந்த துப்பு இருக்கிறதா?" என்று
 மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லணையில் கூடிய பெரிய கூட்டத்தில்
வீரப்பனாரின் மனைவி கேட்ட கேள்வி என் காதில் ஒலித்து என்னை மேலும் கூனிக்குறுக வைக்கிறது.

 ஐயா!
எங்க சீயானே!
உங்க போட்டோவ ஒட்டுற தகுதியாவது எனக்கு இருக்கணும்.

[சீமான் ஹேட்டர்ஸ் சேதாரம் ஆகாம ஓரமா போகவும்
 இன்று சீமான் அண்ணன் இல்லை என்றால் வீரப்பன், பிரபாகரன் படங்களை வெளிப்படையாக வைத்துக் கொண்டு சுற்ற முடியாது.
வீட்டுக்குள் மாட்டிவைத்து சாமி வேணா கும்பிடலாம்.]


Thursday, 23 July 2020

பள்ளருக்கு ஏன் வெள்ளாளர் மீது ஆசை

பள்ளருக்கு ஏன் வெள்ளாளர் மீது ஆசை?!

இடையர் (கோனார்) தம்மை "யாதவர்" என்றாக்கக் கோரினால்...
கம்மாளர் (ஆசாரி) தம்மை "விஸ்வகர்மா" என்றாக்க க் கோரினால்...
  எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அத்தகையது பள்ளர் தம்மை "தேவேந்திரகுல வெள்ளாளர்" என்றாக்கக் கோருவது...

இது புதிதல்ல.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு தலைதூக்கிய சாதிய உணர்ச்சியின் விளைவாக  உருவான சங்கங்கள் தமது இயல்பான சாதிப் பெயரை மறைத்து அதைத் தழுவிய சமஸ்கிருதப் பெயர்களையே வைத்துக் கொண்டன.
(சமஸ்கிருதப் பெயர்கள் 1500 களிலேயே வேற்றின ஆட்சியால் அறிமுகப் படுத்தப் ப்பட்டன)

பல்வேறு சாதிகள் ஒரு பட்டத்தை பயன்படுத்திய காலத்தில் அப்பட்டத்தை அடிப்படையாக வைத்து அந்த அனைத்து சாதியினரையும் ஒரு குடையின் கீழ் திரட்டுவது 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசியல் ஆகும்.

இதை முதலில் வெற்றிகரமாகச் செய்துகாட்டியது நாடார் பட்டத்தைப் பயன்படுத்திய சாதிகள்.
(இன்று நாடன் என்கிற பட்டத்தை நாடார் ஆக்கிவிட்டனர்.
அதற்குள் எத்தனை சாதிகள் சமாதியாகி உள்ளன என்று கண்டுபிடிக்கவே முடியாது)
இவர்களே முதலில் தம்மை சத்திரியர் என்று அறிவித்து பூணூல் போட்டு
சத்திரிய மடங்களை நிறுவியவர்கள்.
இவர்களே பாண்டியன் என்று பெயர்வைத்துக் கொள்ள ஆரம்பித்தவர்கள்.

பட்டத்தை அடிப்படையாக வைத்து சாதியைத் திரட்டுவது,
தாங்கள் போர்க்குடி (சத்திரியர்) என்று அறிவிப்பது,
அப்படியே ஏதாவது ஒரு மன்னர் பரம்பரைக்கு உரிமை கோருவது.
இது அன்றைய நாடார்கள் காட்டிய வழி.

இதுதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக நடந்த அரசியல்.

அதாவது ஆங்கிலேயர் வெளியேறும் சூழல் வந்தபோது அதுவரை இருந்த தேசிய உணர்வு மங்கி மொழியுணர்வு தலைதூக்கியபோல
மொழி அடிப்படையில் மாநிலம் அமையப் போவதை அறிந்த மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற ஏதாவது ஒரு அடையாளத்தின் கீழ்  ஒன்றிணையத் தொடங்கினர்.

சாதியாக இணைவதை விட பட்டத்தின் அடிப்படையில் இணைவது அதிக எண்ணிக்கையை தருவதால் அதிக பலனைத் தந்தது.

இப்படி போலியாக உருவாக்கப்பட்ட சாதிகள்தான் கவுண்டர், தேவர், வன்னியர், நாடார், பிள்ளைமார், பார்கவர் போன்றவை.

(இதில் நேர்மையாக நின்றவர்கள் பறையர் மட்டுமே!
பிற்பாடு அவர்களையும் ஆதிதிராவிடர் ஆக்கிவிட்டனர்.
தற்போது அதை பரையர் ஆக்க முயற்சி நடக்கிறது)

அதாவது இந்த அரசியலின் படிநிலைகள்,

1) ஒரு சாதியின் இயல்பான பெயரை சமஸ்க்கிருதமாக குழப்புவது

2) பட்டத்தைப் பொதுவாக வைத்து வேறொரு சாதியுடன் குழப்புவது

3) சாதி வரலாற்றை புராணங்களில் வரும் கதாபாத்திரத்துடன் அல்லது இலக்கியங்களில் வரும் குறிப்பிட்ட மக்களுடன் குழப்புவது

4) சான்றிதழில் உள்ள பெயரை மாற்றிக் கொள்வது

5) ஏதேனுமொரு கடவுளுடன் தொடர்புபடுத்திக் கொள்வது.

6) ஏதாவதொரு கல்வெட்டின் சொற்களைத் திரித்து பயன்படுத்துக் கொள்வது.

7)  ஏதேனுமொரு மன்னர் பரம்பரை வாரிசுகளாக அறிவித்துக் கொள்வது

8) மொழிதாண்டி வேறொரு சாதியையும் துணைக்கு அழைத்துக் கொள்வது

செந்தில் மள்ளர் செய்வது இந்த அருதப்பழைய அரசியலைத்தான்.

சரி!

இதை தனித்தனியாக பகுத்து ஆராய்வோம்.
---------

தேவேந்திரன் :-

இந்திரன் தமிழ்க் கடவுள் இல்லை என்பது பாவாணர் கூறிய கருத்து.
அவரது பார்வையில் இந்திரன் பர்மாவை ஆண்ட அரசன்.
ஐராவதி ஆறும் வெள்ளை யானையும் அங்கேதான் காணப்படுகிறது.
திருக்குறளில் உள்ள வேற்றுமொழி சொற்களைப் பட்டியலிட்ட அவர் இந்திரன் என்பதை முதலில் வைத்துள்ளார்.

தெய்வம் + இந்திரன் = தெய்வயிந்திரன் என்றுதான் வரவேண்டும்.
தேவ + இந்திர = தேவேந்திர என்றால் இது சமஸ்கிருதம்.
அதாவது சமக்கிருதத்தில் இரண்டு உயிர் எழுத்துக்கள் புணர்ந்து ஒரு உயிரெழுத்தையே தரும்
(எ.கா: சூர்ய + உதயம் = சூர்யோதயம்).
-------

வேளாளர்:-

வேளாளர் - வெள்ளாளர் வேறுபாடு பற்றி பலருக்கு குழப்பம் இருக்கலாம்.
வேள் என்றால் விருப்பம் (வேட்கை).
வேளாளர் என்பவர் விருப்பத்தை அடிப்படையாக் கொண்டவர்.
இது போர்த் தொழிலை விரும்பி ஏற்றவரைக் குறிக்கப் பயன்பட்டது.
அதாவது வேட்டையாடுதலை அடிப்படையாக் கொண்டவர்கள்.
வேளிர், வேளாளர், வேணாட்டினர், வேட்டுவர் போன்ற சொற்கள் மன்னருக்கு அடங்கிய (அல்லது அடங்காத) சிற்றரசர்களைக் குறிக்கும்.
---------

வெள்ளாளர்:-

வெள் என்பது வெள்ளை நிறத்தைக் குறிக்கும்.
வெள்ளாளர் என்பவர் வெள்ளையாக இருக்கும் (அரிசி மற்றும் பருத்தி) வெள்ளாமையை அடிப்படையாக் கொண்டு வாழ்ந்தவர்கள்.
இவர்கள் உழவர்கள் கிடையாது.
------

மள்ளர்:-
இந்த சொல்லுக்கு வீரன் என்றே பொருள். செந்தில் மள்ளர் பேசும் திணை அரசியல் இந்த சொல்லாலேயே தகர்ந்து போகிறது.
ஆம்! மள்ளர் மருத நிலத்தில் மட்டுமல்லாமல் வேறு திணைகளிலும் வாழ்ந்துள்ளனர்.
"மள்ளர் மள்ள" என்று போற்றப்படுபவன் தொண்டைநாட்டு இளந்திரையன்.
மேலும் மள்ளர் எனும் சொல் வீரத்தைக் குறிப்பதாக கீழ்க்காணும் இலக்கியச் சான்றுகள் உள்ளன,

"மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் "
[ஐங்குறுநூறு 371]

“ஆயிரம் விரித்த மைம்மாய மள்ள”
[பரிபாடல் 3 – 41]

“திருவின் கணவ! பெருவிநல் மள்ள"
[பரிபாடல் 3 - 90]

"மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள"
[திருமுருகாற்றுப்படை]

பள்ளர் என்பதை மள்ளர் என்பதுடன் திரிக்க இவர்கள் காட்டும் சான்று மிகவும் பிற்காலத்தில் அதாவது நாயக்கர் காலத்தில் தோன்றிய பள்ளு சிற்றிலக்கியச் சான்றுகள்.
-------

பள்ளர்:-
பள்ளத்தை அடிப்படையாக் கொண்டு வாழ்வோர் பள்ளர்.
அதாவது நிலத்தை உழுது பள்ளமாக்கி தண்ணீர் தேக்கி செயற்கையான சேற்றினை உருவாக்கி அதில் உணவுப் பொருளை விளைவிப்பவர்கள்.
இவர்களே உண்மையான உழவர்கள்.
(பள்ளர் என்பதே சரியான பெயர்!
பள்ளி என்பாரும் பள்ளரே!)

அதாவது பள்ளர் விவசாயம் செய்து தருவார் வெள்ளாளர் அதை அறுவடை செய்து விற்று தமக்கொரு பங்கை எடுத்துக்கொண்டு மீதியை பள்ளருக்குத் தருவார்.

(காராளர் என்ற பிரிவு பிற்காலத்தில் தோன்றியது.
இவர்கள் மழைப்பொழிவை நம்பி விவசாயம் செய்பவர்கள்.
இவர்கள் பள்ளர் - வெள்ளாளர் களுக்கு இடைப்பட்டவர்கள்.
அதாவது சிறிய அளவிலான நிலம் வைத்திருப்பவர்.
தானே உழுது பயிரிட்டு தானே உண்டு மீதியை விற்பனை செய்து வாழ்பவர்)

நிலவுடைமை தோன்றும் முன் வரை நிலம் பள்ளர்களுக்குச் சொந்தமாகவே இருந்தது.

இதை மாற்றி நிலத்தை கோயில் நிர்வாகத்தின்  கீழ் கொண்டுவந்து வெள்ளாளருக்குக் குத்தகைக்குக் கொடுத்தது சோழர் ஆட்சி.

இந்த காலகட்டத்தில்தான் பல சாதியினரும் வெள்ளாளர்களாக மாறினர்.
அதாவது அக்காலகட்டத்தில் சாதி என்பது தொழிலின் அடிப்படையில் இருந்து பிறப்பின் அடிப்படையில் மாறத்தொடங்கிய காலகட்டம்.
சோழர் காலத்தில் இதனாலேயே அகம்படி மறவர், செட்டிச்சி பாப்பாத்தி, உழுப் பறையர் போன்ற இரட்டை சாதிப்பெயர்கள் இருந்தன.

சோழர் ஆட்சி பார்ப்பனர்களுக்கு ஆதரவானது என்று பலரும் கூறுவர் ஆனால் அது உண்மையில்லை.
சோழர் ஆட்சியில் செழிப்புடன் இருந்தவர்கள் வெள்ளாளர்கள்தான் என்று சோழர்கால நிலவுடைமை பற்றி ஆராய்ந்து எழுதி பட்டம்பெற்ற ஆய்வாளர் மே.து.ராசுகுமார் கூறுகிறார்.

பிற்பாடு நாயக்கர் ஆட்சியில் சாதி என்பது தனது முழுமையான கட்டமைப்பை அடைந்தது.
அதுவரை ஏதோ பெயருக்கு இருந்த சாதிய ஏற்றத்தாழ்வு நாயக்கர் ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்தது.
தீண்டாமையும் நடைமுறைக்கு வந்தது.

நாயக்கர்களால் பள்ளர்கள் குறிவைத்து சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.
[மேலும் அறிய தேடுக "நாயக்கர் ஆட்சியில் தமிழகம் வேட்டொலி" ]
இதற்கு அக்கால சிற்றிலக்கியங்களான பள்ளு மற்றும் சதகம் நூல்களில் பல சான்றுகள் உள்ளன.

பள்ளர் மட்டுமல்லாமல் எல்லா தமிழ்ச்சாதிகளும் ஒடுக்கப்பட்டன.
வந்தேறிகள் கைக்கு நிலவுடைமை மாறியது.
[தேடுக "நிலவுடைமை வரைபடம் வேட்டொலி" ]

பள்ளர்கள் தாழ்ந்துபோக தெலுங்கர்களான நாயக்கர்களின் ராணுவ ரீதியான ஆட்சியில் உற்பத்தியும் அதைச் செய்யும் தொழிலாளர்களும் அளவுக்கதிமாகச் சுரண்டபட்டதே காரணம்.

நாயக்கர் ஆட்சி நிலைபெறும் முன்பு கி.பி.1528-ம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்த செப்பேடு பள்ளர் சமூகத்தினருக்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினசரி ஆறுகால பூஜைகள் செய்வது, விழாக்காலங்களில் கோயிலில் கொடி ஏற்றுவது, பிராமணர்கள் நடத்தும் யாகசாலை பூஜை களுக்கு ஏற்பாடு செய்து தருவது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தருவது ஆகிய கடமைகள் வழங்கப்பட்டிருந்த செய்தியைக் கூறுகிறது.

(இன்றும் பள்ளர்களுக்கு பழநி முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில்,  மீனாட்சியம்மன் கோவில் போன்ற பெரிய கோவில்களில் பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்யப்படுகிறது)

நாயக்கர் காலத்தில் அவர்களுக்கு முழுமையாக அடங்காத மறவர் பாளையங்களில் பள்ளர்கள் அதிகம் தாழ்ந்துபோகவில்லை (இன்றும் கூட).
இதனாலேயே மறவர் - பள்ளர் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் திட்டமிட்டு திராவிட வாதிகளால் செய்யப்பட்டு வருகிறது

பள்ளர்கள் முதலில் செய்யவேண்டியது பட்டியல் வெளியேற்றம்.
அதாவது பட்டியல் சாதி (எஸ்.சி) முத்திரையை அழித்துவிட்டு பள்ளர் என்கிற பெயரிலேயே தமது மக்கட்தொகை சதவீதத்திற்கு ஏற்ப (அதாவது மக்கட்தொகையில் 4%) இடவொதுக்கீடு பெறுவது.

ஆனால் சமைத்தமொழியில் அல்லது வேற்றுசாதியினரின் ஒரு பெயரை தமது அடையாளமாக ஆக்க முயல்வது தவறு.
இதன்மூலம் சக தமிழ்ச்சாதியின் வெறுப்பை பெறுவது மொத்த தமிழினத்திற்கு கேடு தரும்.

ஆகையினால் "பள் எனும் வேர்ச்சொல்தான் பாண்டியர் என்று ஆயிற்று" என்று பாவாணர் கூறுவதாக பொய் கூறும் மள்ளரிய மடயர்களை (மடையர் அல்ல) புறந்தள்ளுங்கள் பள்ளர்களே!

பள்ளர் என்கிற பெயரில் அப்படி என்ன குறையிருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் யாரென்று கேட்டால் "பள்ளர்" என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுங்கள்.

நீங்கள்தான் ஆதி உழவர்.
நீங்கள் மருத நில நாகரீகத்தைத் தோற்றுவித்தவர்கள்.

தமிழர் அனைவரையும் போல நீங்களும் பாண்டியர்கள்தான்.

தேவேந்திரன், மள்ளர் போன்ற திரிபுகளை ஆதரிக்காதீர்கள்.
நாங்கள் மட்டும்தான் பாண்டியர் என்று எண்ணாதீர்கள்.

மற்றபடி....
வந்தேறி தெலுங்கன் கருணாநிதி தனது சின்னமேளம் சாதியை இசைவேளாளர் என்று மாற்றியபோதும்
அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) சலுகை கொடுத்தபோதும்
அவர்களுக்கு சாதி சங்கம் (முத்தமிழ் மன்றம்) அமைத்து பெரிய அளவு நிலத்தையும் கட்டிடத்தையும் நன்கொடையையும் வாரி வழங்கியபோதும்
அவர்களுக்கே முதன்முதலாக திருமண நிதி (மூவலூர் ராமாமிர்தம் திட்டம்) வழங்கிய போதும்
எதிர்க்காமல் விட்டது தமிழர் அனைவரின் மாபெரும் தவறுதான்!

தமிழர்கள் அனைவரும் பள்ளர்களை ஆதி உழவர் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
நெல் நாகரீக முன்னோடிகள் பள்ளர்களே என்றும் ஒத்துக் கொள்ளவேண்டும்.

அவர்களின் பட்டியல் வெளியேற்றத்திற்கு முழு ஆதரவு தந்து தாமும் அதே வழியில் நடக்கவேண்டும்.

இனியாவது தமிழ்ச் சாதியினர் அனைவரும் விழித்துக்கொண்டு ஒற்றுமையாக தத்தமது மக்கட்தொகை சதவீதத்திற்கு ஏற்ப தத்தமது இயல்பான பெயரிலேயே இடவொதுக்கீடு பெற உறுதியேற்க வேண்டும்!

Wednesday, 15 July 2020

தமிழகத்தில் பிறமொழியினர் பரவல்



தமிழகத்தில் பிறமொழியினர் பரவல்

1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு 1961 இல் வெளிவந்த மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆவணத்தில் [Census of india 1961 vol ix A] கொடுக்கப்பட்டுள்ள ஊரகப் பகுதி மொழி வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட வரைபடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எல்லைப் புறத்தில் வேற்றின மக்கள் இருப்பது இயல்புதான்.
அப்படிப் பார்த்தால் மலையாளிகள் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை (இன்றைய நிலை தெரியவில்லை).
  இதில் நாம் கவலைப்படவேண்டிய விடயம் எல்லையைத் தாண்டி உட்பகுதி வரை குடியேறியுள்ள கன்னடர் பற்றியும் ஊடுருவி மறுமுனை வரை செறிவாக குடியேறியுள்ள தெலுங்கர் பற்றியும்தான்.

நமது மாநிலம் அமைந்த போது நமது எல்லைப் பகுதிகள் பெரும்பாலானவற்றை இழந்தோம்.

அப்படி நாம் அறுதிப் பெரும்பான்மை யாக இருந்த பகுதி மட்டுமே தமிழகமாக ஆனது.
  அதிலும் உட்பகுதியில் குடியேற்றம் 1961 லேயே இந்த அளவு இருப்பது அப்போதே கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால் நாம் இழந்த பகுதிகள் அனைத்துமே அந்நியர் குடியேற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் இழந்தவைதான்.

குறிப்பாக சிங்களவர் இப்படி குடியேறித்தான் நமது நிலத்தை முழுதாக ஆக்கிரமித்தனர்.

வரைபடத்திற்கு நன்றி: பணகுடி தென்னவன் ராசா

Friday, 10 July 2020

ராஜபாளையத்தைக் கட்டியாளும் ராஜுக்கள்


ராஜபாளையத்தைக் கட்டியாளும் ராஜுக்கள்
விஜயநகர ஆட்சிக் காலத்தில் விஜயவாடா பகுதியை ஆண்டுவந்த பூசாபதி பரம்பரையினர் கிருஷ்ண தேவராயர் காலத்திலிருந்து விஜயநகர அரசை ஆதரிக்கும் சிற்றரசர்களாக இருந்து வந்தனர்.
தமிழகத்தில் விஜயநகர ஆட்சி பரவியபோது அதிகாரிகளாக செயல்பட ஆந்திராவிலிருந்து இந்த ராஜு குலத்தினர் கி.பி. 1600 - 1750 வரையான காலகட்டத்தில் தமிழகத்தில் குடியேறினர்.
இவர்களிடைய நான்கு "கோத்திரங்கள்" மற்றும் அதன் உட்பிரிவுகளாக "வீடு"களும் உள்ளன.
ஒவ்வொரு வீடுகளையும் ஒருங்கிணைக்கும் "சாவடி" என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஒரு சாவடி வசிக்கும் பகுதி "கோட்டை" என்கிற கட்டமைப்பின் கீழ் வருகிறது.
1650 களில் பழையபாளையம் கோட்டை பூசாப்பதி சின்னராஜா என்பவரால் நிறுவப்பட்டது.
1750 களில் திம்மராஜு என்பவரால் சிங்கராஜகோட்டை நிறுவப்பட்டது.
1790 களில் ஜக்காராஜு கோட்டை துரை திம்மராஜு என்பவரால் நிறுவப்பட்டது.
(சிங்கராஜ கோட்டையைச் சேர்ந்த சில சாவடியினர் மிகவும் பிற்பாடு 1951 இல் திருவந்தாபுரம் கோட்டை (பச்சைமடம்) யை நிறுவினர்)
கோட்டையை வைத்து வாழ்விடத்தையும் சாவடியை வைத்து பங்காளி முறையையும் அடையாளம் கண்டுகொள்வர்.
வீடு என்பதை வைத்து அவர் எந்த குடும்பத்தின் வாரிசு என்று கண்டறியமுடியும்.
வேறுபட்ட கோத்திரங்களில் திருமணத் தொடர்பு வைத்துக்கொள்வர்.
  மதுரையைச் சுற்றி சிதறியவாறு குடியிருந்த இவர்கள் சொக்கநாத நாயக்கர் ஆட்சியின்போது இராஜபாளையம் பகுதியில் மொத்தமாகக் குடியேறினர்.
இன்று ராஜபாளையமே இவர்கள் உள்ளங்கையில் என்றால் அது மிகையில்லை.
1923 இல் காக்கிநாடா வில் நடந்த அனைந்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராஜபாளையத்தில் இருந்து சென்றவர் இந்துக்கூரி அரங்கசாமி ராஜா என்பவர்.
இவரை அங்கே வந்திருந்த சிந்தலப்பட்டி பப்பி ராஜு என்பவர் சந்திக்கிறார்.
இதில் இருவரும் ஒரே சாதியினர் என்பதையும் 250 ஆண்டுகள் தாண்டியும் தாய்நிலத்தில் இருந்து 300 மைல்கள் அப்பால் தள்ளியிருந்தாலும் ராஜபாளையம் ராஜு சமுதாயம் தமது தெலுங்கு இன, மொழி, குலம், கோத்திரம், பழக்கவழக்கம் ஆகியனவற்றை அப்படியே பேணிவருவதையும் அறிந்து ஆச்சரியமடைகிறார் பப்பி ராஜு.
இவ்விருவரும் சேர்ந்து மீண்டும் இருதரப்புக்கும் இடையே தொடர்புகளைப் புதுப்பித்துக் கொள்ள முயன்றனர்.
சில திருமண உறவுகள் கூட ஏற்பட்டன.
ஆனால் இதில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் ராஜபாளைய ராஜுக்கள் தமக்குள் ஒருங்கிணைய இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
1927 இல் ஒரு கல்வி அறக்கட்டளை ஏ.கே.டி தர்மராஜா என்பவரால் நிறுவப்பட்டது.
1931-1932 இல் தேனி நகர முதல் பஞ்சாயத்து பிரசிடென்ட் ஆக என்.ஏ.கோண்டு ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1932 இல் ஸ்ரீ ஜெயராம் மோட்டார் என்கிற நிறுவனம் ரங்கசாமி ராஜா குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது.
1947-1948 ராஜபாளையம் சேர்மனாக என்.ஏ.பி. அழகிரிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1949 - 1952 மதராஸ் மாகாண முதலமைச்சராக பூசாப்பதி பி.எஸ்.குமாரசாமி ராஜா பதவி வகித்தார்.
மேலும் 1952-1954 ஓரிசா கவர்னராகவும் பதவி வகித்தார்.
பூசாப்பதி பி.ஏ.சி. ராமசாமி ராஜா ராஜபாளையத்தின் முதல் சேர்மன் (1941-1947) ஆக பதவிவகித்தார்.
[இதன்பிறகு ராஜபாளையம் சேர்மன் பதவி ராஜுக்களின் பரம்பரை சொத்து என்றே ஆகிவிட்டது]
இவரே ராம்கோ குழுமத்தை நிறுவியவர்.
இவரது மகன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா ராம்கோ நிறுவனத்தை பெரிய அளவில் வளர்த்தெடுத்தார்.
பேரன் வெங்கட்ராம ராஜா காலத்தில் இது 7000 தொழிலாளர்கள், 2500 கோடி சொத்துமதிப்பு என பெரிய நிறுவனமாக வளர்ந்தது.
பி.எல்.துரைசாமி ராஜா ராஜபாளையம் நகராட்சியின் இரண்டாவது சேர்மன் (1948-1952) ஆக பதவி வகித்தார்.
1952-1957 வரை ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ வாக டி.கே.ராஜு இருந்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகியான கே.எம். சங்கர ராஜா 1959-1964 வரை ராஜபாளையம் சேர்மனாக இருந்துள்ளார்.
கே.ஏ. ஐயாசாமி ராஜா வடகிழக்கு மாநிலங்கள் ஒன்றாக இருந்தபோது அதன் ராணுவ அதிகாரியாக 1966-1975 வரை இருந்துள்ளார்.
அருணாச்சல பிரதேசம் உருவானபோது அதன் லெப்டினல் கவர்னராக 1975-1977 வரை இருந்தார்.
இவரது சகோதரர் சிங்கப்ப ராஜாவும் இந்திய பாதுகாப்பு பணியில் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பங்களாதேஷ் விடுதலைப் போரில் தென்னிந்திய படையணிக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் இந்திய அமைதி காக்கும் படையில் (ஐநா சார்பில்) ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
1962-1967 வரை ராஜபாளையம் எம்.எல்.ஏ வாக ஏ.ஏ. சுப்பராஜா இருந்துள்ளார்.
இவர் ராஜபாளையம் சேர்மனாக தொடர்ந்து ஐந்துமுறை தேர்ந்தெடுப்பட்டவர்.
1970 இல் கோட்டைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சிந்தலப்பட்டி எஸ்.ஆர். நாராயண ராஜா தலைமையில் ராஜபாளைய சத்திரிய மகா சபை (தெலுங்கில் - நாலுகு கோட்ட கும்ப்பு)  தொடங்கப்பட்டது
(இவரது பெயரை வைத்து பார்க்கும்போது முதலில் பார்த்த பப்பிராஜு வாரிசு என்று தோன்றுகிறது).
இன்றுவரை ஒரு நல்ல சமூதாய நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது.
1980 இல் சத்திரிய சேவா சமிதி என்ற அமைப்பு  ஐ.பி.ஆர் ரகுபதி தலைமையில் தொடங்கப்பட்டு "கொத்தலு" எனும் பத்திரிக்கையும் தொடங்கப்பட்டது.
என்.ஆர். அழகராஜா தேனி யின் அல்லிநகரம் சேர்மேனாக 1986-1991 வரை இருந்தார்.
மேலும் தேனி தொகுதி எம்.எல்.ஏ வாக 1996-2001 இருந்துள்ளார்.
பூசாப்பதி கந்தசாமி ராஜா வின் மனைவியான தாயம்மாள் 2001 இல் கடையநல்லூர் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தகவல்களுக்கு நன்றி :-
நூல்: Rajapalayam Kshatriya Rajus - The originand nature of the Community.
ஆசிரியர்: I.B.R. Ragupathi Raja.
இந்நூலில் 2002 க்கு பிறகான தகவல்கள் இல்லை.
சிமென்ட் ஆலைகள், மில்கள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், அரசியல் என ராஜுக்கள் தமிழகத்தின் எந்த சாதியையும் விட பல படிகள் முன்னேறிய நிலையில் உள்ளனர்.

Friday, 26 June 2020

பெங்களூர் தமிழ்க் கல்வெட்டு (1868)



பெங்களூர் தமிழ்க் கல்வெட்டு (1868)
பெங்களூர், சிவாஜிநகர், செப்பிங்ஸ் ரோடு, முத்தாலம்மன் கோயில், ஓம்சக்தி கோயில் அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி சாலை, கால்வாய் சீரமைப்பு பணியின் போது கல்வெட்டு ஒன்றை உடைத்து எடுத்துள்ளார்கள்.
1868 ஆம் ஆண்டு கல்வெட்டு தமிழ், ஆங்கிலம், உருது மொழியில் இருக்கிறது.
இந்த கல்வெட்டு என்ன ஆனதென்றெ தெரியவில்லை.
தமிழர் வரலாறு சொல்லும் ஆவணங்களை காக்க தமிழக அரசு எங்களுக்கு உதவிசெய்யுமா?
பதிவர்: கோபி ஏகாம்பரம்
கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Wednesday, 17 June 2020

தென்னக ரயில்வே பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள்

தென்னக ரயில்வே பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள்

தென்னக ரயில்வே துறை வேலை வாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிப்பு...
வலுக்கும் எதிர்ப்பு!
த.கதிரவன்

தென்னக ரயில்வே பணியிடங்களில் வட இந்தியருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், "தெற்கு ரயில்வே பணியில் தமிழருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்கிறார் வானதி சீனிவாசன்.

தென்னக ரயில்வே துறை வேலைவாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
தற்போது, தென்னக ரயில்வேயின் சரக்கு வண்டிகளின் பாதுகாவலர் பணியிடங்களுக்கு துறைசார்ந்த தேர்வு நடைபெற்றது.
96 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், தென்னக ரயில்வேயில் பணிபுரிந்துவரும் சுமார் 5,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் 3,000 பேர் தமிழர்கள்.
96 பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்தத் தேர்வில், வெற்றி ய பெற்றவர்களில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்.
மீதம் உள்ள 91 நபர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், தங்களது எதிர்ப்பை அறிக்கைகளாகப் பதிவு செய்துவருகின்றன.
பா.ம.க தரப்பில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"விடைத்தாள் முறையில் தேர்வை நடத்தாமல், ஆன் - லைனில் தேர்வு நடத்தியதால் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெற்கு ரயில்வே துறை தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் வட இந்திய அதிகாரிகளின் முயற்சியால் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, இந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு, விடை எழுதும் வகையில் மீண்டும் வெளிப்படையாக தேர்வு நடத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினரான ஹரிஹரன் பாபு,
"வட இந்தியர்களின் ஆதிக்கம், காலம் காலமாகவே தொடர்ந்து வருகிறதுதான்.
இதுகுறித்து நம்மூர் அரசியல் கட்சிகளும்கூட அறிக்கைகள் கொடுப்பதும் அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதுமாக முடித்துக்கொள்கிறார்கள்.
மற்றபடி மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சராக இருந்தபோது, `தமிழிலேயே ரயில்வே தேர்வை எழுதலாம்' என அறிவித்திருந்தார்.
ஆனாலும் அது நடைமுறையில் இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நடைபெறவேண்டிய தேர்வை எர்ணாகுளத்துக்கு மாற்றினார்கள்.

இப்படி நிறைய குளறுபடிகள் நடக்கின்றன.
இப்போதும், சரக்கு வண்டி பாதுகாவலர் பணித் தேர்விலும் வழக்கம்போல், வட இந்தியர் ஆதிக்கம்தான் அரங்கேறியிருக்கிறது.
ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற வகையில், இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.'' என்றார்.

மத்திய ரயில்வே துறையின் முன்னாள் இணை அமைச்சரும் பா.ம.க துணைப் பொதுச்செயலாளருமான ஏ.கே.மூர்த்தி, இது குறித்துப் பேசும்போது,
"இந்திய அளவில், தமிழ்நாடும் கேரளாவும்தான் கல்வியில் முதன்மையான மாநிலங்களாக இருந்துவருகின்றன.
ஆனால், ரயில்வே தேர்வு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் மட்டும் தமிழர்களின் தேர்ச்சி விகிதம் என்பது மிகமிகக் குறைவாகவே இருந்துவருகிறது.
இப்போது நடைபெற்றுள்ள இந்த ரயில்வே தேர்விலும்கூட 3,000 தமிழர்கள் கலந்துகொண்டு வெறும் 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்றால், நிச்சயம் இதில் முறைகேடு நடந்துள்ளது.
தெற்கு ரயில்வேயிலேயே தமிழர்கள் தேர்வு பெற முடியவில்லை என்றால், மேற்கு, வடக்கு என மற்ற ரயில்வேக்களில் நமக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்?
ரயில்வேயைப் பொறுத்தவரையில், அமைச்சரின் கவனத்துக்கு வராமல் அதிகாரிகளின் மட்டத்திலேயே இதுபோன்ற பாரபட்சங்கள் நடந்துவிடுகின்றன.
ஏற்கெனவே, வாரிசு அடிப்படையில் தந்தை, மகன், பேரன் என்று வழிவழியாக ரயில்வே வேலைவாய்ப்புகளில் வட இந்தியர்கள் இருந்துவந்த வரலாறெல்லாம் இந்திய ரயில்வேக்கு உண்டு.
அதாவது,
`இந்தியன் பாங்க்; இது உங்கள் பாங்க்'
என்ற விளம்பரத்தைப் போல்,
`இந்தியன் ரயில்வே; இது உங்கள் ரயில்வே'
என்று வட இந்தியர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை இருந்துவருகிறது.
இந்த வகையில், அதிகாரிகளே இதுபோன்று இனப்பாகுபாட்டோடு நடந்துகொள்வதால்தான், தமிழர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகின்றன.

இந்த முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமானால், முதற்கட்டமாக, ஆன்லைன் வழியிலான தேர்வுகளை ரத்து செய்து, எப்போதும்போல் விடைத்தாளில் நேரடியாக தேர்வு எழுதுகிற நடைமுறையைக் கொண்டுவரவேண்டும்.

அடுத்ததாக, தமிழகத்திலிருக்கிற 39 எம்.பி-க்களும், நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சரிடம் இந்த முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.
வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எங்கள் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், நிச்சயம் இதுகுறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்புவார்'' என்றார் உறுதியாக.

இந்தப் பிரச்னையில், செய்தியாளர்களின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுவந்த மதுரை எம்.பி-யும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான சு.வெங்கடேசனிடம் பேசியபோது,
"ஆன்லைன் வழித் தேர்வு என்ற பெயரில், இப்போது நடைபெற்றிருக்கும் இந்த முறைகேடு பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.
அடுத்ததாக, ஆன்லைன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும், தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களையும் வெளியிடக் கோரி கேட்கவுள்ளேன்'' என்றார் சுருக்கமாக.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம், இப்பிரச்னை குறித்து மத்திய ரயில்வே அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்வியை முன்வைத்தோம்...
"பொதுவாக யு.பி.எஸ்.சி போன்ற அகில இந்தியத் தேர்வுகளில் மாநில வாரியான பாகுபாடுகள் பார்க்கப்படுவது இல்லை.
ஆனால், ரயில்வே துறைக்கான தேர்வு என்கிறபோது, எந்தப் பணிகளுக்காக தேர்வு நடைபெற்றது, தமிழ்நாட்டிலிருந்து எவ்வளவு பேர் தேர்வில் கலந்துகொண்டனர் என்பதுபோன்ற விவரங்களையெல்லாம் பார்க்க வேண்டியதிருக்கிறது.
ஏனெனில், திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் மல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயின்றுவருகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டிலிருந்து செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது.
காரணம், நம் மாணவர்கள், அதிகளவில் இந்தப் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே எனக்குக் கிடைத்த தகவலாக இருக்கிறது.
ரயில்வே, போஸ்டல் மற்றும் கஸ்டம்ஸ் போன்ற துறைகளில் அந்தந்த மொழிசார்ந்த நபர்களை பணியில் அமர்த்துகிறபோதுதான், நிர்வாகம் நல்லமுறையில் செயல்பட முடியும்.
உதாரணமாக, இன்கம்டாக்ஸ் ரெய்டு போகிற ஒரு சூழலில், உடனடியாக ஒரு ஸ்டேட்மென்ட்டை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்றால்கூட சம்பந்தப்பட்ட மொழியைத் தெரிந்த அதிகாரியாக இருக்கவேண்டியது மிக முக்கியம்.
அதுவும் அல்லாமல், இது ரொம்பவும் சென்சிபிளான விஷயம் என்பதால், மத்திய அரசுத் துறையில் எங்கெங்கு இதற்கான மாற்றங்கள் தேவைப்படுகிறது என்பது குறித்து உறுதியாக நாங்கள் கேட்கவிருக்கிறோம்.
ரயில்வே மட்டுமன்றி, பொதுமக்களோடு அன்றாடம் நேரடியாகக் கலந்து பழகுகிற எந்தத் துறையாக இருந்தாலும் அவற்றில் உள்ளூர் மக்களை பணியில் அமர்த்துவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.
ஏற்கெனவே கஸ்டம்ஸ் மற்றும் கர்நாடக மாநில வங்கித் தேர்வுகளில் இதுபோன்ற பிரச்னைகள் வந்தபோது, நிதி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம்.
உடனடியாக மாநில மொழிகளிலேயே சம்பந்தப்பட்டவர்கள் தேர்வெழுதலாம் என்ற அரசாணையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல், இந்த விஷயத்திலும் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பா.ஜ.க சார்பில், கேட்டுக்கொள்ளவிருக்கிறோம்.
அதேசமயம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு நாம் கொடுக்கும் அதே கவனத்தை, அகில இந்திய அளவிலான மற்ற போட்டித் தேர்வுகளுக்கும் கொடுக்க வேண்டும்.
அதற்கான பயிற்சியை மாநில அரசும் நம் மாணவர்களுக்கு கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்'' என்றார் கோரிக்கையாக.

Published:16 Jun 2020 4 PMUpdated:16 Jun 2020 4 PM
நன்றி: விகடன்