Monday, 16 April 2018

கிருஷ்ணதேவ ராயரின் மொழிப்பற்று

கிருஷ்தேவ ராயரின் மொழிப்பற்று

தெலுங்கு மொழியானது சாளுவ நரசிம்மர் காலத்தில் மறுமலர்ச்சி அடையத் தொடங்கி கிருஷ்ணதேவராயர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டது.
ராயரின் காலமே தெலுங்கின் பொற்காலம்.

அதனால் கிருஷ்ண தேவராயர் 'ஆந்திரபோஜர்' என்றும் அழைக்கப்பெற்றார்.

அவரது ஆட்சிமொழியாகத் தெலுங்கே இருந்தது.

அவரது அரசவையில் 'அஷ்ட திக் கஜங்கள்' எனப்பட்ட எட்டு தெலுங்கு மொழிக் கவிஞர்கள் இருந்தனர். அவர்கள்,
அல்லசானி பெத்தண்ணா,
நந்தி திம்மண்ணா,
தூர்ஜதி,
மாதயகாரி மல்லண்ணா,
அய்யராஜு ராம்பத்ரா,
ராமராஜ பூஷணா,
பிங்கலி சூரண்ணா
மற்றும் தெனாலி ராமன் (ராமகிருஷ்ணா)
ஆகியோர் ஆவர்.

இவர்களில் அல்லசானி பெத்தண்ணா என்பவர் தலைமைப்புலவர்.
இவர் தெலுங்கு மொழிக்கு செய்த தொண்டினால் 'ஆந்திரகவிதா பிதாமஹா' என்று புகழப்பட்டவர்.

இவர் மநு சரித்திரம் (மனு தர்மத்தை எழுதிய மநு இல்லை.
அவருக்கு அடுத்து வந்த இரண்டாம் மநு வரலாறு) என்ற நூலை எழுதியதற்காக பட்டத்து யானை மீது அமர்த்தி ஊர்வலம் எடுத்தார் ராயர்.

சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் புலமை பெற்றவர் ராயர்.
ஆனால் தாய்மொழியான தெலுங்கின் மீது தனி பற்று வைத்திருந்தார்.

இவர் எழுதிய 'ஆமுக்த மால்யதா' என்ற தெலுங்கு காவியம் தெலுங்கு இலக்கியத்தில் தலைசிறந்த 5 படைப்புகளில் ஒன்றாகும்.

  அந்நூலின் முன்னுரையில் தாம் கலிங்க நாட்டின் மீது படையெடுத்த காலகட்டத்தில் விசயவாடியில் (விஜயவாடா) இருந்து ஸ்ரீகாகுளம் சென்று 'ஆந்திர மதுசூதனா' என்ற பெயருடைய இறைவனை வழிபட்ட அன்று இரவில் மகாவிஷ்ணு தன் கனவில் வந்து ஆண்டாள் பற்றி ஒரு காவியம் எழுதுமாறு கட்டளை இட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் சமஸ்கிருதததில் எழுதிய மாதலாச சரிதம், சகல கலா சார சங்கிரகம், ரசமஞ்சரி ஆகிய நூல்களை மகாவிஷ்ணு பாராட்டியதாகவும்
ஆனால் ஆண்டாள் வரலாற்றை தெலுங்கிலேயே எழுதுமாறு கூறியதாகவும் குறித்துள்ளார்.

ஏனென்றால் எல்லா மொழிகளையும் விட தெலுங்கு தலைசிறந்த மொழி என்றும்
இந்த உண்மையை அரசவைப் புலவர்கள் அனைவரும் விரைவில் புரிந்துகொள்வர் என்றும் கனவில் விஷ்ணு கூறியதாக எழுதியுள்ளார்.

(நூல்: கிருஷ்ணதேவராயர்
ஆசிரியர்: ஆர்.சி.சம்பத்)

No comments:

Post a Comment