Friday, 23 December 2016

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 1/2)

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 1/2)

காலம்: 1800 களின் நடுப்பகுதி
இடம்: கெடா, மலேயா.

இரண்டு ஆங்கிலேயர்கள் பேசிக்கொண்டனர்.

"கரும்பை நிறுத்திவிட்டு தேயிலையையும் காபியையும் விளைவிக்க உத்தரவு போட்டாலும் போட்டார்கள்.
இங்கே விளையவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
மலாய்காரன் எவனுக்கும் உழைக்கும் உடலோ புரிந்துகொள்ளும் மூளையோ இல்லை.
இந்த அழகில் ரப்பருக்கான தேவை பெருகிவருவதால் இங்கே அதனை விளைவிக்க திட்டம் போடப்பட்டுள்ளது"

"சீனர்களைப் பயன்படுத்தலாமே"

"சீனர்கள் மூளையுள்ளவர்கள்தான். ஆனால் அதிகம் மூளையுள்ளவர்கள்.
துணிச்சல்காரர்கள் அதே நேரத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
டச்சுக்காரர்கள் வரும் முன்பே இங்கு குடியேறி சுரங்கத்தொழிலில் இறங்கி முன்னேறிய நிலையில் உள்ளனர்"

"மண்ணின் மைந்தர்களான மலாய்களை விடவா முன்னேறியவர்கள்?"

"ஆம். என்னது மலாய் இம்மண்ணின் மைந்தனா?
நாசமா போச்சு.
அவர்கள் வந்தேறிகள்.
இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஓரங் அஸ்லி இனத்தவர்.
அவர்களை காட்டுக்கு விரட்டிவிட்டு நாட்டையே கைப்பற்றிவிட்டனர் மலாய்கள்.
பர்மா-தாய்லாந்து கலப்பினத்தோடு இந்தோனியாவின் ஆர்ச்சிபெலாகோ இனமும் கலந்து உருவான கலப்பினத்தவரே மலாய் இனத்தோர்.
இங்கே அராபியரும் சோழர்களும் கூட ஆட்சி செய்துள்ளனர்.
மலாய்கள் எத்தனை இனம் கலந்து உருவாகினர் என்று கூறுவது மிகக் கடினம்"

"சிலோனில் தமிழர்களை கண்டி மலைப்பகுதிகளில் குடியேற்றி வேலைவாங்கும் திட்டம் வெற்றியடைந்துள்ளதே!
அதைப் போல இங்கே செய்யமுடியாதா?"

"ஆம், நானும் அதைத்தான் யோசிக்கிறேன். மெட்ராஸ் மாகாணத்தில் பஞ்சம் நிலவுகிறது. இங்கே அழைத்துவருவது கடினமில்லை.
இருந்தாலும் இந்திய வைசிராய்க்கு அங்கே விளையும் உணவை மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்யச்சொல்கிறேன்.
மக்கள் பட்டினி கிடக்கட்டும்.
உணவை நமக்காகப் போர்செய்யும் போர்வீரர்களுக்காக ஆப்கானிஸ்தானுக்கோ பர்மாவுக்கோ அனுப்பச் சொல்கிறேன்"
_____________________
காலம்: 1800களின் இறுதி
இடம்: தமிழகம்

ஆங்கிலேய அரசாங்க அதிகாரி ஊர் மக்களை கூட்டியிருந்தார்.

"மக்களே! உங்களுக்கு என்ன குறை என்று கேட்டு தீர்த்துவைக்க அரசு என்னை அனுப்பியுள்ளது"

"இன்னும் என்னையா குறை வரும்? ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்தே பல ஆண்டு ஆகிவிட்டது.
இரவில் கேழ்வரகு மாவில் கூழ்காய்ச்சி ஒரு கை வழித்து சாப்பிட்டு மீதியை உருட்டி தண்ணீரில் போட்டு காலையில் அதை கரைத்து கால்வயிறு குடிக்கிறோம்.
நாள்முழுவதும் பட்டினி கிடக்கிறோம்
விளைச்சலை கொண்டுபோகும் அரசாங்கம் எங்களுக்கு அதில் பாதியாவது தருவதில்லை"

"நாட்டில் பஞ்சம் விளைச்சலை அரசாங்கம் பகிர்ந்து கொடுக்க திட்டமிட்டுள்ளது.
உங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்துள்ளது.
மலேயா போய் கரும்பு தோட்டங்களில் வேலை.
பயணச்செலவு அனைத்தும் அரசு ஏற்கும். சம்பளம் 12 காசுதான். ஆனால் போகப்போகக் கூடும்.
மீதியை அரசு நியமித்துள்ள ஒப்பந்த கண்கானிகள் உங்களுக்கு விபரமாகக் கூறுவார்"
_____________________
காலம்: 1911
இடம்: கிள்ளான் நகரம், சிலாங்கூர், மலாயா.

பெரிய ஊர்வலம் சென்றதைப் பார்த்து வீதியில் கடைக்காரர்கள் பேசிக்கொண்டனர்.

"இந்தியாவிலிருந்து வந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களை விட மிகவும் கொடுமைப்படுத்தப் படுகின்றனராம்.
அதனால் இன்று வேலையை நிறுத்திவிட்டு ஊர்வலம் செல்கிறார்கள்"

"ஏ அப்பா! என்ன ஆக்ரோசமான கோசங்கள். நான்கு ஆண்டுகள் முன்பு ஒப்பந்தக்கூலி முறையை போராட்டம் செய்து ரத்து செய்யவைத்தார்களே!
இந்த முறையும் அரசாங்கம் பணிந்துவிடும் போலிருக்கிறதே!"

"ஆங்கிலேயனாவது பணிவதாவது?!
கங்காணிகள் அழைத்துவரும் செலவை செய்தார்கள்.
இங்கே வந்ததும் கிடைக்கும் நாள்கூலி சம்பளம் வயிற்றுக்கே போய்விடும்.
50 காசில் அவனால் எப்படி மிச்சம்பிடிக்க முடியும்?
ஊர்திரும்ப பணம் இருக்காது.
அதைத்தான் போராடி பெற்றுள்ளனர்.
மற்றபடி எதுவும் மாறவில்லை"

" இங்கே அடிக்கடி வருவானே மதுரா, அவன் கங்காணிதான். ஒரு ஆளை கப்பலில் ஏற்றிவிட்டால் இவ்வளவு என பணம் கொடுப்பார்கள்.
முதலில் வரும்போது பரதேசி மாதிரி இருந்தான்.
இப்போது அவன் கழுத்தில் நான்கைந்து தடிச்சங்கிலிகள் மினுங்குகின்றன"

"ஏன்தான் இவர்களை இறக்குமதி செய்துகொண்டே போகிறார்களோ?!

வந்த அன்றே கொசுக்கடியில் மலேரியா வந்து பாதிபேர் செத்துவிடுகிறான்"
________________________

காலம்: 1930கள்
இடம்: மலேயா தோட்டம்

காலை 5:30 மணிக்கே கள்ளுக்கடை வாசலில் காத்திருந்த இரண்டு தமிழர்கள் பேசிக்கொண்டனர்.

"என்னப்பா? புதுசா நீ?"

"இல்லண்ணே ஏற்கனவே வேறொரு தோட்டத்துல 10வருசம் வேல செஞ்சேன். அஞ்சு வருசம் முன்னாடி திருப்பி அனுப்புனாங்க.
இப்ப மறுபடி வந்திருக்கேன்"

"ஆமா உலக சந்தை விழுந்துட்டுனு பாதிப்பேரை திருப்பி அனுப்பினாங்க. ஆனா உண்மையான காரணம் இங்கே நடந்த போராட்டம்தான்.
அதான் புது ஆட்களை எறக்கிருக்கான்"

"ஆமாண்ணே வந்து எறங்குனதும் ஒரே ஊர் ஒரே குடும்பத்து ஆட்களை தனித் தனியா பிரிச்சுதான் நம்பர் போட்டான்.
என் தங்கச்சி பக்கத்து தோட்டத்துல வேலைல சேந்திருக்கு"

"தோள்பட்டையும் உள்ளங்கையும் இப்பவும் காய்ச்சு போய் இருக்கேப்பா?! திரும்பி வர எப்டி மனசு வந்தது?"

"நான் நாடகத்துல ராஜபார்ட். நாடகம் நலிஞ்சுபோச்சு. தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிவைக்க இங்க வந்தேன்.
அது நடக்கல.
பெத்தவங்க பசில செத்துட்டாங்க.
மறுபடி நடிக்க போனப்ப நோஞ்சிபோன கிழவன ராஜபார்ட்டா போடமுடியாது சொல்லிட்டாங்க.
தங்கச்சிக்கு வேற யாருமில்ல.
வேற வழி தெரியாம இங்கயே வந்துட்டோம்"

"அடடா! பொம்பளைங்களும் வர ஆரம்பிச்சிட்டாங்களா?!
மூணு ஆம்பளைங்க வந்தா ரெண்டு பொம்பளைங்க வரணும்னு சட்டம் போட்டதா சொன்னாங்க.
நடு காட்டுல பொம்பளைஙகளுக்கு பாதுகாப்பே இருக்காதப்பா?!
கவலைப்படாத! இங்க ரொம்பநாளா வட்டித்தொழில் பாக்குற செட்டியாருங்க உண்டு.
நான் ஒன்ன கூட்டிட்டு போறேன்.
கடன் வாங்கி ஓ தங்கச்சிக்கு கல்யாணத்த பண்ணு"

"ஆமாண்ணே எப்படியாவது இங்கயிருந்து போயிரணும்.
6 மணிக்கு வேலைக்கு போகணும். இருட்டின பெறகும் வேலை பார்த்துட்டு வீட்டுக்கு போய் தூங்கவே நடுராத்திரி ஆயிடுது.
குறுக்கு ஒடிய வேலை இருக்குது.
வெளிச்சமில்ல. பாதை இல்ல.
பத்து பத்து வீடா நடுக்காட்டுல இருக்குற குடியிருப்புல வாழணும்.
கரண்ட் இல்ல. கொசுக்கடி. பூச்சிக்கடி. ஒரே ஒரு கழிப்பறைதான்.
முன்னயாவது பால்மரம் சீவிட்டு இருந்தேன்.
இரண்டு வாளிய காண்டா கம்புல கோர்த்து தோள்ல தூக்கிட்டு மூணுமைல் நடக்கறது மட்டும்தான் கஷ்டம்.
இப்ப புதுசுங்கறதால வெளிக்காட்டு வேலைல போட்டுட்டாங்க.
செடி கொடி வெட்டுறது சுத்தப்படுத்துறது மருந்து அடிக்கிறதுன்னு. மூணு ஏக்கர் நான் வேலை செய்யணும்"

"அடடா! குனிஞ்ச முதுகு நிமிரமுடியாதே! வேலை வாங்குற கங்காணியாவது அனுசரனயா நடந்துக்கிறானா?"

"எங்கண்ணே! அந்த சீனாக்கார கங்காணி நம்மள மனுசனா கூட மதிக்கறதில்ல. அவனுஙகளுக்கு நம்ம கிட்ட வேலை வாங்கிற விட நம்மள கொடுமபடுத்துறதுதான் முதல் குறி. போனதடவ வேல செஞ்ச கங்காணி நம்ம ஊரான்.
அவன் இவன விட மோசம். அவனுகள அப்டி பழக்கிவச்சிருக்கான் வெள்ளைக்காரன்.
நமக்கு ஒரே ஆறுதல்  வெள்ளக்காரன் நமக்குன்னே நடத்துற  இந்த கள்ளுக்கடைதான்"

"ஆமாப்பா பொறந்தா சீனாக்காரனாவோ வெள்ளக்காரனாவோ மலாயாவோ பொறக்கணும். தமிழனா மட்டும் பொறந்திடக்கூடாது"
____________________
1940, 1941ல் மீண்டும் போராட்டம் மலேயா எஸ்.ஏ.கணபதி என்ற இளைஞர் தலைமையில் உச்சநிலையை அடைந்தது.

இந்த நிலையில்தான் ஜப்பானிய இராணுவம் மலேயாவில் கால்பதித்தது.

1942ல் ஜப்பானிய ராணுவம் ஆங்கிலேயரைத் தோற்கடித்து முழுமையாக மலேயாவைக் கைப்பற்றியது.

ஜப்பானியர்கள் நேர்மையான ஒழுக்கமான இனம் என்று தெரிந்திருந்த மலேயா மக்கள் அவர்களை "ஜப்பான் சூடா டாத்தங்" என்று மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

ஆனால் "ஆசியா ஆசியர்களுக்கே" என்ற முழக்கத்துடன் இரண்டாம் உலகப்போரில் குதித்த ஜப்பானியர்களின் நேர்மையும் ஒழுக்கமும் ஆசிய பாசமும் காணாமல் போய் போர்வெறி அவர்களை பீடித்திருந்தது.

ஆங்கிலேயரை விட மோசமாக அமைந்தது ஜப்பானியரின் காலம்.
__________________
காலம்: 1942
இடம்:  ஒரு ரப்பர் தோட்டம்

"வெள்ளக்காரன் கொடுத்த அரிசி தீந்துபோச்சு. பிள்ள பசில அழுவுறான். சுண்ணாம்பு அரிசிய புள்ளைக்கு எப்பிடி குடுக்கிறது.
எதாவது பண்ணுங்களே!"

"இரு தாயி. பக்கத்து தோட்டத்துல ரப்பர் மரங்களுக்கு நடுவுல மரவள்ளிக்கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு போட்டுருக்காங்களாம்.
நா போய் கொஞ்சம் வாங்கிட்டு வரேன்.
நாம கேப்பையும் சோளமும் போட்ருக்கோம். வெளஞ்சதும் கொடுத்திரலாம்"

"ஊர்ல கூழாவது கால் வயிறு கிடைச்சது. இங்க வந்தும் நெலம மாறலயே. எதாவது பெரியவங்க கிட்ட கூழ்கிண்டுறது எப்பிடினு கேட்டு வாங்க"

"ஐயா! நான் முருகேசன். பக்கத்து தோட்டத்துல இருந்து வந்துருக்கேன். பிள்ள பசியில அழுவுது. கெழங்கு தந்தீங்கன்னா உதவியா இருக்கும்"

"போப்பா! இங்க கிழங்கு எங்களுக்கு பத்தல. பச்சையா கேப்பை கருதை வாட்டி கருப்பட்டி கலந்து சாப்பிட்டு இருக்கோம். ஆடுமாடு திங்கிற தளைய பறிச்சு அவிச்சு திங்கறோம்.
பக்கத்து தோட்டத்துல போய் பாரு"

"நாங்களே நத்தை, ஊமச்சி, ஒத்தக்கால் நண்டுனு எதை எதையோ பிடிச்சி தின்னுட்ருக்கோம்.
அணில், எலி, உடும்பு னு எதையாவது பிடிச்சு சாப்டு.
நகரத்துக்குள்ள போகாத.
ஜப்பான்காரன் தலைய வெட்டிட்டு அம்மணமாக்கி நடுத்தெருவுல போட்டுருவான்"

"சீனாவுக்கே திரும்ப முடியாம முழிக்கிறோம்.
பாதி சீனாவ ஜப்பான் புடிச்சிருச்சு.
பன்னிக்கு வச்சிருந்த கஞ்சிய நாங்க குடிக்கிறோம்.
சாக்குதான் உடுத்தறோம்.
எங்க பசி கொடும பொறுக்காம எங்க மகன் ஜப்பான்காரன் கிட்டயே எடுபடியா சேந்திட்டான்.
சயாம் வரை நீளமான தண்டவாளம் போடுறாங்களாம்"
____________________
காலம்: 1942 ஜூன்
இடம்: கெடா நகரம்

நகரத்தின் முக்கிய வீதியில் பல தலைகள் வெட்டி வைக்கபட்டிருந்தன.
அதில் அதிகம் தமிழர்களின் தலைகள்.
அருகே அமர்ந்து ஒரு ஜப்பானிய சிப்பாய் அந்த தலைகளின் முடியை சீப்பால் படிய வாரி சீவிக்கொண்டிருந்தான்.
கீழே "இதுதான் கடையில் திருடுவோருக்கு மகாஜப்பான் அளிக்கும் தண்டனை" என்று எழுதியிருந்தது.

இளைஞர்கள் பலர் பிடித்து இழுத்துவரப்பட்டு அங்கே ஒரு மைதானத்தில் நிறுத்தப்பட்டனர்.
பெண் வேடமிட்டு நடமாடிய சில மலாய் இளைஞர்கள் மட்டுமே தப்பினர்.
அந்த கூட்டத்தில் 60% தமிழர்கள்.

"சயாம் நீங்கள் 3 மாதம் வேலை செய்யவேண்டும்.
நாட்டில் உள்ள அத்தனை இளைஞர்களும் எங்களுக்கு வேண்டும்.
இல்லையென்றால் பசியால் சாவுங்கள்"

ஒரு ஜப்பானிய அதிகாரி கூறியதை அவருக்கு கங்காணியாகிவிட்டோர் மொழிபெயர்த்துக் கூறினர்.
___________________
1942 ஜூனிலிருந்து இளைஞர்களும் போர்க்கைதிகளும் கப்பலிலோ அல்லது ரயிலிலோ அனுப்பப்பட்டனர்.
சயாமில் பான் போங் சென்றடைய 7 நாட்கள் பயணம்.
இடையில் வண்டி எங்கும் நிற்காது.
வழியில் யாருக்கும் அவசர தேவை வரக்கூடாது என்பதற்காக பட்டினி போட்டபிறகே அழைத்து செல்லப்பட்டனர்.
மலவாயில் ஒரு மருத்தை திணித்து அடைத்துவிடுவார்கள்.
இதனால் பயணம் முடிந்த பிறகும் மலம் கழிக்கமுடியாமல் மரணவலி அனுபவித்தோர் பலர்.

பயணம் முடிந்து 160.கி.மீ கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிறகு எண் வழங்கபட்டு ஐந்தைந்தாக பிரிக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
____________________
மலேசியத் தமிழர்களின் வலி நிறைந்த வரலாறின் இரண்டாவது பகுதி விரைவில்..

No comments:

Post a Comment