Showing posts with label கோசர். Show all posts
Showing posts with label கோசர். Show all posts

Saturday, 28 September 2024

மூவேந்தர் மற்றும் பாரி மோதல் பற்றி

 மூவேந்தர் மற்றும் பாரி மோதல் பற்றி

 மூவேந்தர் தமக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு தண்ணீரை எல்லையாகக் கொண்ட தமிழகத்தை ஆண்டதை "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு"  என்கிறது தொல்காப்பியம்.
 இது இலங்கை சேர்ந்த, மூன்று பக்கம் கடல் மற்றும் வடக்கே கரும்பெண்ணாறு (கிருஷ்ணா நதி) கொண்ட நிலமாக இருக்கலாம்.

 உலகிலேயே முதலில் மொழியின் பெயரால் இனத்தையும் நாட்டையும் குறித்தவர் தமிழரே! முதன்முதலாக மொழியின் பெயரால் அரசியல் கூட்டணி அமைத்தவரும் தமிழரே! 
 வரலாற்றுப்படி 1900 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது  கிபி ஒன்றாம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டமே மௌரிய பேரரசின் கீழ் வருகிறது. தமிழகம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. 
அப்போது கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி தலைமையில் மூவேந்தர் கூட்டணி இருக்கிறது.
 இதன் பெயர் "தமிழ் கூட்டணி" இதையே '1300 ஆண்டுகள் தொடர்ந்த தமிழர் கூட்டணி (தமிர் சங்காந்த்)' என்று காரவேலன் கல்வெட்டு கூறுகிறது. 
 முழு பலத்துடன் தமிழகத்தைத் தாக்கிய (அன்றைய இந்தியாவான) மௌரியப் பேரரசை தோற்கடித்து தமிழகத்தைக் காக்கிறது இக்கூட்டணிப் படை.
 இதில் மௌரியர் (மோரியர்) சார்பாக முதலில் வந்தது வடுகர் படை. முதல் போர் மோகூர் போர். இதில் மூவேந்தர் சார்பாக கோசர் படை வடுகரை தோற்கடித்து (அகநானூறு 251) மோகூரை மீட்கிறது.
 (அதாவது கோசரை வடுகர் என்பதும் தவறான கருத்து).

 அதாவது anglo saxon, wales, irish, scotish என நான்கு இனத்தார் சேர்ந்து உருவாக்கிய இந்த உலகையே ஆண்ட பிரிட்டிஷ் கூட்டணி போன்றது இது.
 அதன் union jack கொடி போல வில், புலி, மீன் பொறித்த கொடியும் இந்த கூட்டணிக்கு உண்டு.

இந்த மூவேந்தர் கொடியை முத்திரையாக இராஜேந்திர சோழனும் பிறகு சுந்தர பாண்டியனும் பயன்படுத்தி யுள்ளனர்.

 இந்த கூட்டணி தற்போதைய பித்துண்டா அதாவது பாதி ஆந்திரா தாண்டி ஆண்டது.
 இதுவே மாமூலனார் கூறும் 'தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேயம்' ஆகும்.

 அவ்வப்போது தமிழகத்தில் இருந்த சில சிற்றரசர்கள் இந்த கூட்டணிக்கு ஒத்துழைக்க மறுத்து கிளர்ச்சி செய்துள்ளனர். 
 ஒப்பந்தப்படி தமிழ்மண்ணில் உள்ள சிற்றரசர்கள் இந்த கூட்டணிக்கு பணிந்து நடக்காத பட்சத்தில் கூட்டணி அவர்கள் மீது படையெடுத்துள்ளது.

 இதில் பாரி கொஞ்சம் பெரிய சிற்றரசர்.
 கரிகாலன் காலத்திற்கு சற்று பிந்தையவர்.
 இவர் அக்கூட்டணிக்கு பணிந்து பின்னர் ஏதோ காரணத்தினால் கிளர்ச்சி செய்ய முடிவெடுத்து அதனால் மூவேந்தர் கூட்டணிப் படை அவர் மீது படையெடுத்து வெல்கிறது. அவருக்கு ஆண் வாரிசு இல்லாததாலும் அவரது மகள்கள் மூவேந்தரை மணமுடிக்க விரும்பாததாலும் அவரது அரசு நிலைக்கவில்லை.

 பதிற்றுப் பத்து (6.1 பலாஅம் பழுத்த..) இல் பாரி இறப்பிற்கு பின் சேரனைக் காணச் சென்ற கபிலர் அவனையும் பாரியையும் ஒப்பிட்டு ஒரு பாடல் பாடியுள்ளார். இதில் சேரனை அவர் குற்றம் சாட்டவில்லை.
 பாரி மகளிரை மணக்க சிற்றரசர்களான விச்சிக்கோன், இருங்கோவேள் ஆகியோரும் மறுத்துவிட்டனர். 
இது மூவேந்தர் மீதான பயத்தால் அல்ல. 
அது எப்படி என்று பார்ப்போமேயானால்,
 பாரிமகளிரை இறுதியில் மலையன் எனும் குறுநில மன்னன் மணந்துகொண்டான். 
 ஆனால் மலையன் மீது மூவேந்தர் படையெடுக்கவில்லை.
 மாறாக,  பாரி மகளிரை மணக்க மறுத்த விச்சிக்கோ மூவேந்தரோடு மோதியிருக்கிறான் (குறுந்தொகை 328) இருங்கோவேளும் சோழனுடன் மோதி தோற்றான் (பட்டினப்பாலை 282).
 இன்னொரு வியப்பு இந்த பாரி மகளிரை மணந்த மலையமான்கள் வழிவந்த தாய்க்குப் பிறந்தவனே இராசராசன். இதற்கு பத்தாம் நூற்றாண்டு கபிலர் குன்று கல்வெட்டு சான்றும் திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு சான்றும் உள்ளன.

 ஆக மூவேந்தர் பாரி மீது படையெடுத்தது தமிழகத்தை ஒற்றையாட்சியில் வைத்திருக்க வேண்டும் என்கிற அரசியல் நிலைப்பாடு காரணமாகத்தானே அன்றி வேறு தனிப்பட்ட விரோதம் அல்ல. 
 மூவேந்தர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் வெளியிலிருந்து தமிழகத்திற்கு ஆபத்து வந்தால் அப்போது தமிழர்களாக ஒன்றுபட ஏற்படுத்தியதே 'தமிழ்க் கூட்டணி' என்று கருதலாம்.
 இதில் ஆங்காங்கே சிற்றரசர்கள் தனியரசு செலுத்திக் கொண்டிருந்தால் தமிழகத்தின் பாதுகாப்பு பாதிக்கும் என்பதாக அந்த கூட்டணி இத்தகைய படையெடுப்புகளை செய்திருக்கும் என்றும் கூறலாம். 

 வேள்பாரி நாவல் எழுதிய சு.வெங்கடேசன் நாயுடு மீதான விமர்சனப் பதிவின் ஒரு பகுதி... மெருகேற்றபட்டு மீண்டும்.

Wednesday, 22 March 2023

நான் சோழப் பாண்டியர்

நான் சோழப் பாண்டியர்

 பாண்டிய நாட்டிலிருந்து சேரநாட்டுக்கு போகும் செங்கோட்டைக் கணவாயில் இருந்து சேனைத்தலைவர் குடியைச் சேர்ந்த நான் எழுதும் பதிவு.

 நான் தோற்றத்தால் சேர நாட்டான். பூர்வீகத்தால் சோழ நாட்டான். பிறப்பால் பாண்டிநாட்டான்.

 பாவாணர் கூற்றுப்படி சேனைத்தலைவர் சங்ககால கோசர் வழிவந்த தமிழ்க்குடி (இது தெரியாமல் நன்னன் - கோசர் பங்காளிச் சண்டையை வைத்து கோசர்களை வடுகர் என்று நானே பதிவு இட்டுள்ளேன்).
 கோசர் ஆண்ட குறுநிலம் சேர நாட்டின் பகுதியான கொங்குக்கும் சேரநாட்டுக்கு அடுத்த வடக்கு கடற்கரையை ஆண்ட பாழி (bhatkal - karnataka) நன்னனுக்கும் துளுநாட்டுக்கும் கொங்கின் வடபகுதியான கொங்காணத்துக்கும் இடையில் இருந்தது. அதாவது தற்போதைய கேரள கர்நாடக எல்லைக் கோட்டின் மத்தியில் என்று சொல்லலாம்.

 சங்க இலக்கியம் கோசர் பற்றி பல இடங்களில் பேசுகிறது.
 ஆரம்பத்தில் கோசர்கள் குதிரைமலை (Gudremukh - Karnataka) பிட்டங்கொற்றன் மீது போர் தொடுத்துள்ளனர்.
 கோசர் சக வேளிர் குடியான ஏழில்குன்றம் (Ezhimala - Kerala) நன்னர்களுடன் பங்காளி சண்டை போட்டு தோற்று பிறகு சூழ்ச்சியால் நன்னனை கொன்றுவிட்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது.
அதன்பிறகு இவர்கள் கொங்கு வந்து சேரர் படையில் சேர்ந்து பிறகு சோழநாட்டு வடக்கு எல்லைக்கு போர்த்தொழில் செய்யச் சென்றுள்ளதாக ஊகிக்கலாம் (திருநெல்வேலி முதல் தஞ்சாவூர் வரை தொடர்ச்சியாக வாழும் சேனைத்தலைவர் அதன் பிறகு திருவண்ணாமலை அருகே மட்டும் காணக் கிடைக்கின்றனர்).

 இப்படி தமிழகம் வந்த கோசர் இளங்கோசர் என்றும் இவர்களது மூதாதையர் துளு எல்லையில் வாழ்ந்த செம்மல் கோசர் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.  
 கொங்கில் இவர்கள் ஏற்கனவே சிறிது பரவியிருந்ததால் பிரச்சனை வரவில்லை. கொங்கு தாண்டி வந்தபோது சோழநாட்டு சிற்றரசர்களுடன் பிரச்சனை வந்து அவர்களுடன் மோதிக்கொண்டு இருந்தனர். அவர்கள் சோழனிடம் முறையிடவே கிள்ளி வளவன் இவர்களைத் தோற்கடித்தான்.

 (சங்ககாலத்தில் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி எனும் சோழன் படையெடுத்தபோது அவனுக்கு பணிந்து தம் ஊரை காப்பாற்றிக்கொண்ட அஃதை எனும் கோசர் தலைவன் உண்டு. இவன் வழியினரே அகதா மறவர் என்பர். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் போரில் வென்ற பிறகு தோற்ற கோசர் படை அவனுக்கு பணிந்து பல வெற்றிகளை ஈட்டித் தந்தது)
பிறகு படைத்தலைவராகவும் ஊர்த்தலைவராகவும் சோழ நாட்டிலும் பாண்டிநாட்டிலும் சங்ககாலம் மருவும் முன்பே பரவிவிட்டனர். 
 பிற்பாடு பல போர்க்குடிகளுடன் கலப்புகள் ஏற்பட்டு கோயர் என்கிற பெயருடன் தமிழகம் முழுக்க பரவினர் எங்கள் முன்னோர்கள்.

 கோயம்பேடு, கோயம்புத்தூர், இளங்கோயக்குடி (அம்பாசமுத்திரம் - நான் பிறந்த ஊர் ) இப்படிப்பட்ட ஊர்கள் கோயர் உருவாக்கியவை என்பது பாவாணர் சொல்லாய்வு முடிவு.

 கோயர் பிற்பாடு பல கலப்பு நடந்து கோளர் என்றாகினர்.
 அவர்களே கைக்கோளர் எனும் படைப்பிரிவு ஆகி சோழருக்கு போர்த் தொழில் செய்துகொண்டு இருந்தனர்.
 மேலும் கலப்பு நடந்து பிற்கால சோழர் காலத்தில் எல்லைக்கு சற்று பின்னே நிலைகொண்டு இருக்கும் உள்நாட்டு ஈட்டிப் படையான (special force) செங்குந்தர்  என்றாகினர் என்கிறார் பாவாணர் (இவையெல்லாம் ராகவையங்கார் கோசர் பற்றி எழுதி அவர்கள் வெளியார் என்று கூறியபோது அதை மறுத்து கோசர் தமிழரே என்று பாவாணர் எழுதியவை).

 இந்த சிறப்புப் படையின் தலைவர்கள் உட்பட பல சாதிகளைச் சேர்ந்த படைத்தலைவர்கள் கொண்டு கொடுத்து தனிச் சாதியாகி சேனைக்குடையார் அல்லது சேனைத் தலைவர் என்றாகி இருக்கவேண்டும். 
கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் திவாரக நிகண்டு,
"செங்குந்தப் படையர் சேனைத் தலைவர்
தந்துவாயர் காருகர் கைக்கோளர்" என்று குறிக்கிறது. ஆனால் அது தொழில்வழி சாதி.

 16 ஆம் நூற்றாண்டில் தமிழர் ஆட்சி வீழ்ந்த பிறகு கைகோளர், செங்குந்தர், சேனைத்தலைவர் ஆகியோர் போர்த்தொழிலை விட்டுவிட்டனர். நெசவுத் தொழிலுக்கு மாறினர் (போத்தீஸ் - சேனைத்தலைவர் நிறுவனம்). பிறகு சேனைத்தலைவர் வெற்றிலை விவசாயம் போன்ற கொடி விவசாயத்திற்கு மாறினர். 

(பழநி) முருகனை முதன்மைத் தெய்வமாகக் கொண்ட இவர்கள் பிற்பாடு முருகன் படைத் தளபதி வீரபாகு வழிவந்தவராக கற்பனைப் புராணங்களை எழுதிக்கொண்டனர்.

 சேனைத்தலைவரில் பெரும்பான்மையானோர் செங்கோட்டை முதல் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடம் வரை வாழ்கின்றனர்.
தேனி, தஞ்சாவூர் வரை சிறுசிறு தொகையாக பரவி உள்ளனர் (நீயா நானா கோபிநாத்தை இங்கே குறிப்பிடலாம்). இதற்கு அடுத்து எந்த தொடர்பும் இல்லாமல் திருவண்ணாமலையில் காணக்கிடைக்கின்றனர். செங்குந்தர் அல்லது மறவர் மத்தியில்தான் பெரும்பாலும் சேனைத்தலைவர் வாழ்கின்றனர். 

 என்னுடைய கணிப்பு சோழப் பேரரசு விரிவடைந்தபோது நாங்கள் படைத்தலைவர்களாக பாண்டிய நாடு வந்து தங்கி அப்படியே செங்கோட்டை வழியே சேரநாட்டின் மீதும் படையெடுத்து சென்றுள்ளோம் (ஆனால் சங்ககாலத்திலேயே பாண்டியநாடு வரை கோசர் பரவிவிட்டனர். ஊர்த் தலைவர்களாக இருந்தனர். செல்லூரை ஆண்ட கோசர் தலைவர் செல்லிக் கோமான். ஊர்முது கோசர் எனும் குறுக்கை ஊர் கோசர் சபை  திதியனுடன் போர் செய்துள்ளனர். இதுவே நம்மாழ்வார் பிறந்த தூத்துக்குடியில் உள்ள திருக்குறுக்கை. இந்த நம்மாழ்வார் பாடிய திருத்தலம் கன்னியாகுமரியில் உள்ள வாட்டாறு இவ்வூரிலும் சங்ககாலத்தில் எழினியாதன் தலைமையில் கோசர் இருந்தனர்).
 
 சோழர் காலத்தில் சேனைத்தலைவரின் ஒரு பிரிவு வேங்கடத்திற்கு அப்பால் படையெடுப்புக்குச் சென்றுள்ளது. இவர்களே திருவண்ணாமலை சேனைத்தலைவர்.
இன்றும் வடக்கு எல்லையிலும் மேற்கு எல்லையிலும் தெற்கு எல்லையிலும் செங்குந்தர் அதிகம் உள்ளனர் (பாரதிதாசன் - செங்குந்த முதலியார்).
 'சேனையார் வழி கொடுத்த ஈழக்காசுகள்' எனும் இராசராசன் திருவிடைமருதூர் கல்வெட்டு சேனைத்தலைவர் ஈழப் படையெடுப்புக்கும் சென்றிருந்த சான்று ஆகும்.

செட்டியார், முதலியார், மூப்பனார், பிள்ளை என பல பட்டங்கள் கொண்டவர்கள் என்பதால் பல குடிகள் கலந்த கலப்பு என்று அறியலாம். விவசாயம் விற்பனை என்று நகர்ந்த இவர்கள் கொடிக்கால் பிள்ளை, இலைவாணியர் போன்ற பட்டங்களையும் கொண்டுள்ளனர். கி.பி. 1880 களில் இரண்டு கப்பல்கள் வைத்திருந்த தி. சண்முக மூப்பனார் கூட உண்டு. பொட்டல்புதூர் இசுலாமியர் கூட பெரும்பாலும் சேனைத்தலைவர் குடிதான். பீட்டர் அல்போன்ஸ் கூட சேனைத் தலைவர்தான்.

 சேனைத் தலைவர்களின் முதன்மைத் திருத்தலமான திருச்செந்தூர் கோவிலின் வைரவேலை எம்.ஜி.ஆர் உடன் சேர்ந்து திருடி விற்ற ஆர்.எம்.வீரப்பன் கூட சேனைத்தலைவர்தான்.

 நான் இங்கே கூறவருவது எங்களைப் போல எந்த தமிழ்க் குடியை ஆராய்ந்தாலும் அது தன்னாட்சி புரிந்த ஒரு வேளிர் இலிருந்து தொடங்கி சங்ககாலத்தின் ஏதாவது ஒரு குடியைத் தொட்டு பிறகு மூவேந்தர் ஆட்சியில் எதாவது ஒரு தொழில்வழிச் சாதி ஆகி பின்னர் இன்றைய பிறப்பு வழிச் சாதியாகி வெவ்வேறு மதங்களில் கலந்து நிற்கும்.

 பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்துள்ள இந்நேரத்தில் சோழர் - பாண்டியர் பங்காளிச் சண்டை போடவேண்டாம்.
அப்படி சண்டை போட்டாலும் என்னை இழுக்க வேண்டாம்!

Tuesday, 11 July 2017

வடுகரின் அறிவிக்கப்படாத போர்

வடுகரின் அறிவிக்கப்படாத போர்
~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°

வடுகர்களின் பூர்வீகம் தெரியாவிட்டாலும் வேங்கட மலைக்கு அப்பால் ஆண்ட தமிழ் மன்னர்கள் காட்டுமிராண்டிகளான வடுகர்களை கூலிப்படையாக வைத்திருந்தனர் என்பது மட்டும் தெரிகிறது.

(தமிழர்களான) நன்னர்களுக்கு அடங்கி விசுவாசமாக நடந்துவந்த (வடுகர்களான) கோசர்களுக்கு நன்னன் செய்த ஒரு வன்கொடுமையே
வடுகர்கள் தமிழர் மீது பகைகொண்ட தொடக்கப்புள்ளி.

ஆனால் வடுகர்கள் நேரடியாக அல்லாது மறைமுகமாக குறுக்கு வழியில் உறவாடிக் கெடுத்து தலைமுறை தலைமுறையாக தமிழினத்தின் மீது அறிவிக்கப்படாத போர் புரிந்து அதில் முக்கால்வாசி வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அந்த தொடக்கப்புள்ளி ஒரு பெண்கொலை.

நன்னனின் காவல்மரத்தின் (மாமரம்) ஒரு பழம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது.
அதை விபரம் தெரியாத ஒரு வடுகர் பெண் எடுத்து தின்றுவிடுகிறாள்.

இதற்கு மரணதண்டனை அளிக்கிறான் கொடுங்கோலனான நன்னன்.
வடுகர்கள் அவளது எடைக்கு எடை தங்கமும் அதோடு 81 யானைகளும் தருவதாகக் கூறி அவளை விடுதலை செய்யுமாறு கெஞ்சுகின்றனர்.

ஆனாலும் மனமிரங்காத அந்த கொடிய மன்னன் அந்த அப்பாவி பெண்ணைக் கொலை செய்கிறான்.

(புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் _பரணர், குறுந்தொகை 292)

அதன்பிறகு வடுகர்கள் ஒற்றுமையாகி சூழ்ச்சி மூலம் நன்னனை வீழ்த்தி அவனது காவல்மரத்தை வெட்டியெறிந்தனர்.
(நன்னன் நறுமா கொன்று
நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சி
_ குறுந்தொகை 73)

ஆனாலும் வடுகர் நெஞ்சில் இந்த கொலை ஆறாத வடுவாக பல தலைமுறைகள் படிந்திருந்தது.

நன்னர்களை வீழ்த்திய வடுகர்களைத்தான்
நந்தர்களை வீழ்த்திய மோரியர் என்று வரலாறு பதிவுசெய்கிறது

பெரும் வல்லரசாக எழுந்த வடக்கு வடுகரான மோரியர் தென்வடுகர் உதவியுடன்
தமிழர் மீது போர் தொடுத்தனர்.
ஆனால் மூவேந்தரின் கூட்டணிப்படையிடம் படுதோல்வி அடைந்தனர்.

அதன்பிறகு தமிழர்களை சுற்றிவளைத்து தோற்கடிக்க தென்னிலங்கைக்கு படையனுப்பி
புத்தமதத்தைப் பரப்பி அங்கே சிங்களவரோடு கலந்து தமிழர்களுக்கு எதிராக சிங்களவரைத் தூண்டியபடி இருந்தனர்.

வடவடுகர் ஏற்படுத்திய மோரிய பேரரசு வீழ்ந்ததும் தென்வடுகரான களப்பிர காட்டுமிராண்டிகள் தமிழர் மீது படையெடுத்து வென்றனர்.
(இதுவே இருண்டகாலம் என்று கூறப்படுகிறது)
களப்பிரர்க்கு அடங்கி சிற்றரசாக இருந்த பாண்டியர் கடுங்கோன் காலத்தில் கிளர்ச்சி செய்து வடுகர்களை தோற்கடித்து ஒழித்தனர்.

  அதே நேரத்தில் வட இலங்கையில் இருந்து ஆண்ட பாண்டியர் மீது ஆண்டுகளாக பலமுறை போர்தொடுத்து போர்தொடுத்து இறுதியில் தாதுசேனன் என்ற மோரிய குடிவழி மன்னன் குறுக்கு வழியில் பாண்டிய மன்னர் இருவரைக் கொன்றதன் மூலம் தமிழர்களை 700 ஆண்டுகள் கழித்து ஈழத்தில் வீழ்த்தினான்.

ஆனாலும் சோழ அரசின் பேரெழுச்சி அனைவரையும் அடக்கி தமிழர் பேரரசாக எழுந்தது.
வடக்கே வடுகர்களை துவம்சம் செய்தது.
இலங்கையிலும் வடுகர்களை ஒழித்தது.

இராசராசனை எதிர்த்து தோல்வியடைந்த வடுகன் அம்மன்னனின் பிறந்தநாளில் விடுதலை அடைந்து அரசவையில் பாட்டுப்பாடி சோழ இளவரசியை பரிசாகப்பெற்று அவள் மூலம் பெற்ற மகனை (அநாபய சாளுக்கியன் அல்லது குலோத்துங்க சோழனை) சூழ்ச்சி மூலம் சோழ அரியணையில் அமர்த்தினான்.
கலப்பினமாயினர் சோழர்.
இலங்கையை சிங்களவர் மீண்டும் பிடித்தனர்.
பாண்டியநாடு தவிர தமிழ்மண் முழுதும் வடுகரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

அப்போது பாண்டிய பேரரசு மீண்டும் எழுந்தது.
வடுக படைத்தளபதியுடன் வந்த சேரனை முறியடித்து
அரைவடுகரான சோழரை அடக்கி
வடமேற்கு தமிழகத்தில் நுழைந்திருந்த வடுக ஒய்சளரை விரட்டியடித்து
பல்லவ வம்சாவழி காடவரையும் தெலுங்கு சோழரையும் ஒழித்து
ஈழத்தையும் மீட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
முழுமையாக தமிழ்மண் ஒற்றையாட்சியில் மீண்டும் வந்தது.

ஆனால் வாரிசுரிமைப் போர்களால் பாண்டிய அரசு வலுகுன்றியது.
இதைப் பயன்படுத்தி வடக்கே ஆண்ட துருக்கிய மங்கோலிய சுல்தான்கள் தமிழகத்தில் பாதியை வென்றனர்.
அவர்களுக்குள்ளேயே உட்கலகம் நடந்தபோது வடுகர்கள் மீண்டும் தமிழகத்தில் விஜயநகரப் பேரரசாக நுழைந்தனர்.
துருக்கியரை வென்று பாண்டியரை அடக்கி தமிழகத்தை மீண்டும் கைப்பற்றினர்.
கண்டி சிங்களவருக்கு பெண்கொடுத்து அவர்களை மேலும் கலப்பினமாக்கி மீண்டும் தமிழருக்கு எதிராகத் தூண்டினர்.
(அதாவது மோரியர் காலத்தில் செய்ததை அப்படியே மீண்டும் செய்தனர்)

ஆங்கிலேயர் இங்கே நுழைந்ததும் அவர்களுக்கு அடிபணிந்து சிற்றரசாகத் தொடர்ந்த வடுக நாயக்கர்கள் அவர்கள் அகன்றதும் அவர்கள் உருவாக்கித்தந்த திராவிடம் எனும் பெயரால் மீண்டும் தமிழகத்தை ஆளத்தொடங்கினர்.
ஈழத்தில் சிங்கள பௌத்தம் எனும் பெயரால் தமிழர்களை ஒழிக்கத் தொடங்கினர்.

1958 ல் ஈழத்தில் வன்முறை தொடங்கியது.
1956 ல் தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் விழுங்கப்பட்டன.

2009 ல் இனப்படுகொலை நடந்து இலங்கை முழுதும் விழுங்கப்பட்டுவிட்டது.
2015 ல் இங்கே மண்ணோடு சேர்த்து தமிழினத்தை அழிக்க அணுவுலை மீத்தேன் ஹைட்ரோகார்பன் என நாசகாரத் திட்டங்கள் வடுகரால் தலைமேல் சுமந்து அழைத்து வரப்பட்டு தமிழ்மண் மீது  சுமத்தப்பட்டுள்ளன.

முதலில் சோழன் இளஞ்சேட்சென்னி தமிழர் கூட்டணி அமைத்து மோரியரை விரட்டினான்

அடுத்து கடுங்கோன் பாண்டியன் களப்பிரரை விரட்டியடித்தான்
(அதன்பிறகு சோழர் எழுந்தனர்)

அடுத்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ் நிலத்தை மீட்டான்

தற்போது மீண்டும் வடுகம் ஹிந்தியரின் உதவியோடு தமிழர் மண்ணை சுற்றிவளைத்துள்ளது. விரைவில் வீழ்த்தவுள்ளது

இப்போது அதை முறியடிக்கப்போகும் தமிழர் தலைவன் யார்?