Saturday 28 September 2024

மூவேந்தர் மற்றும் பாரி மோதல் பற்றி

 மூவேந்தர் மற்றும் பாரி மோதல் பற்றி

 மூவேந்தர் தமக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு தண்ணீரை எல்லையாகக் கொண்ட தமிழகத்தை ஆண்டதை "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு"  என்கிறது தொல்காப்பியம்.
 இது இலங்கை சேர்ந்த, மூன்று பக்கம் கடல் மற்றும் வடக்கே கரும்பெண்ணாறு (கிருஷ்ணா நதி) கொண்ட நிலமாக இருக்கலாம்.

 உலகிலேயே முதலில் மொழியின் பெயரால் இனத்தையும் நாட்டையும் குறித்தவர் தமிழரே! முதன்முதலாக மொழியின் பெயரால் அரசியல் கூட்டணி அமைத்தவரும் தமிழரே! 
 வரலாற்றுப்படி 1900 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது  கிபி ஒன்றாம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டமே மௌரிய பேரரசின் கீழ் வருகிறது. தமிழகம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. 
அப்போது கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி தலைமையில் மூவேந்தர் கூட்டணி இருக்கிறது.
 இதன் பெயர் "தமிழ் கூட்டணி" இதையே '1300 ஆண்டுகள் தொடர்ந்த தமிழர் கூட்டணி (தமிர் சங்காந்த்)' என்று காரவேலன் கல்வெட்டு கூறுகிறது. 
 முழு பலத்துடன் தமிழகத்தைத் தாக்கிய (அன்றைய இந்தியாவான) மௌரியப் பேரரசை தோற்கடித்து தமிழகத்தைக் காக்கிறது இக்கூட்டணிப் படை.
 இதில் மௌரியர் (மோரியர்) சார்பாக முதலில் வந்தது வடுகர் படை. முதல் போர் மோகூர் போர். இதில் மூவேந்தர் சார்பாக கோசர் படை வடுகரை தோற்கடித்து (அகநானூறு 251) மோகூரை மீட்கிறது.
 (அதாவது கோசரை வடுகர் என்பதும் தவறான கருத்து).

 அதாவது anglo saxon, wales, irish, scotish என நான்கு இனத்தார் சேர்ந்து உருவாக்கிய இந்த உலகையே ஆண்ட பிரிட்டிஷ் கூட்டணி போன்றது இது.
 அதன் union jack கொடி போல வில், புலி, மீன் பொறித்த கொடியும் இந்த கூட்டணிக்கு உண்டு.

இந்த மூவேந்தர் கொடியை முத்திரையாக இராஜேந்திர சோழனும் பிறகு சுந்தர பாண்டியனும் பயன்படுத்தி யுள்ளனர்.

 இந்த கூட்டணி தற்போதைய பித்துண்டா அதாவது பாதி ஆந்திரா தாண்டி ஆண்டது.
 இதுவே மாமூலனார் கூறும் 'தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேயம்' ஆகும்.

 அவ்வப்போது தமிழகத்தில் இருந்த சில சிற்றரசர்கள் இந்த கூட்டணிக்கு ஒத்துழைக்க மறுத்து கிளர்ச்சி செய்துள்ளனர். 
 ஒப்பந்தப்படி தமிழ்மண்ணில் உள்ள சிற்றரசர்கள் இந்த கூட்டணிக்கு பணிந்து நடக்காத பட்சத்தில் கூட்டணி அவர்கள் மீது படையெடுத்துள்ளது.

 இதில் பாரி கொஞ்சம் பெரிய சிற்றரசர்.
 கரிகாலன் காலத்திற்கு சற்று பிந்தையவர்.
 இவர் அக்கூட்டணிக்கு பணிந்து பின்னர் ஏதோ காரணத்தினால் கிளர்ச்சி செய்ய முடிவெடுத்து அதனால் மூவேந்தர் கூட்டணிப் படை அவர் மீது படையெடுத்து வெல்கிறது. அவருக்கு ஆண் வாரிசு இல்லாததாலும் அவரது மகள்கள் மூவேந்தரை மணமுடிக்க விரும்பாததாலும் அவரது அரசு நிலைக்கவில்லை.

 பதிற்றுப் பத்து (6.1 பலாஅம் பழுத்த..) இல் பாரி இறப்பிற்கு பின் சேரனைக் காணச் சென்ற கபிலர் அவனையும் பாரியையும் ஒப்பிட்டு ஒரு பாடல் பாடியுள்ளார். இதில் சேரனை அவர் குற்றம் சாட்டவில்லை.
 பாரி மகளிரை மணக்க சிற்றரசர்களான விச்சிக்கோன், இருங்கோவேள் ஆகியோரும் மறுத்துவிட்டனர். 
இது மூவேந்தர் மீதான பயத்தால் அல்ல. 
அது எப்படி என்று பார்ப்போமேயானால்,
 பாரிமகளிரை இறுதியில் மலையன் எனும் குறுநில மன்னன் மணந்துகொண்டான். 
 ஆனால் மலையன் மீது மூவேந்தர் படையெடுக்கவில்லை.
 மாறாக,  பாரி மகளிரை மணக்க மறுத்த விச்சிக்கோ மூவேந்தரோடு மோதியிருக்கிறான் (குறுந்தொகை 328) இருங்கோவேளும் சோழனுடன் மோதி தோற்றான் (பட்டினப்பாலை 282).
 இன்னொரு வியப்பு இந்த பாரி மகளிரை மணந்த மலையமான்கள் வழிவந்த தாய்க்குப் பிறந்தவனே இராசராசன். இதற்கு பத்தாம் நூற்றாண்டு கபிலர் குன்று கல்வெட்டு சான்றும் திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு சான்றும் உள்ளன.

 ஆக மூவேந்தர் பாரி மீது படையெடுத்தது தமிழகத்தை ஒற்றையாட்சியில் வைத்திருக்க வேண்டும் என்கிற அரசியல் நிலைப்பாடு காரணமாகத்தானே அன்றி வேறு தனிப்பட்ட விரோதம் அல்ல. 
 மூவேந்தர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் வெளியிலிருந்து தமிழகத்திற்கு ஆபத்து வந்தால் அப்போது தமிழர்களாக ஒன்றுபட ஏற்படுத்தியதே 'தமிழ்க் கூட்டணி' என்று கருதலாம்.
 இதில் ஆங்காங்கே சிற்றரசர்கள் தனியரசு செலுத்திக் கொண்டிருந்தால் தமிழகத்தின் பாதுகாப்பு பாதிக்கும் என்பதாக அந்த கூட்டணி இத்தகைய படையெடுப்புகளை செய்திருக்கும் என்றும் கூறலாம். 

 வேள்பாரி நாவல் எழுதிய சு.வெங்கடேசன் நாயுடு மீதான விமர்சனப் பதிவின் ஒரு பகுதி... மெருகேற்றபட்டு மீண்டும்.

No comments:

Post a Comment