வெட்டி முண்டம்
இது மதுவிலக்கு பற்றிய சிறுகதை!
குடிகார கபோதிகள் கட்டாயம் படிக்கவும்!
இதோ நல்ல வெயில் காலத்தில் திங்கட்கிழமை மதியம் வயிறு முட்ட தின்றுவிட்டு நடு வீட்டில் செங்கல் தரையில் தலையணை வைத்துக்கொண்டு காற்றாடியை முழு வேகத்தில் வைத்துக் கொண்டு இடுப்பில் இருந்த லுங்கிக் கட்டை அவிழ்த்து மார்பு வரை மூடி இணையத்தில் தரவிறக்கம் செய்த புதிய ஒரு திரைப்படத்தை அதை சுவற்றில் மாட்டி இருக்கும் டிவியில் போட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் அடைத்து விட்டு அந்த படத்தைப் பார்த்துக்கொண்டிக்கும் போதே தூங்கி கிடக்கும் இவர்தான் இந்த கதையின் நாயகர்.
இவர் என்றா சொன்னேன் மன்னிக்கவும் இவன்.
இவன் ஒரு வெட்டி முண்டம்.
இவனுடைய அன்றாட வேலை காலையில் 9 மணிக்கு மிக நிதானமாக எழுந்து நிதானமாக காலை கடன்களை முடித்துவிட்டு நல்ல உடைகளை உடுத்திக் கொள்வான். குழந்தைக்கும் இவனுக்கும் அவனது மனைவி எதாவது ஒரு பழத்தை மிக்சியில் நாட்டு சக்கரையுடன் அரைத்து கூழ் போல கொடுப்பாள். அதைக் குடித்துவிட்டு பனிரெண்டாயிரம் ரூபாய் செல்போன் (அதில் 5ஜி இன்டர்நெட்) பணம் நிரம்பி வழியும் பர்ஸ், ஆயிரம் ரூபாய் ப்ளூடூத் நெக் பேன்ட், கர்சீப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு எப்போதுமே முழு டேங்க் பெட்ரோல் இருக்கும் பைக்கை வெளியே இறக்கி குழந்தையை ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு விட செல்வான். சாலை வழியே போகாமல் தெரு வழியே சுற்றி போவான். அப்போது குழந்தையுடன் பேசிக்கொண்டே போவான்.
குழந்தையை பள்ளியில் இறக்கி டாட்டா காட்டிவிட்டு நல்ல தேநீர் கடைக்குப் போய் ஒரு தேநீரை வாங்கி அமர்ந்துகொண்டு நிதானமாக ரொம்ப நிதானமாக குடிப்பான். வாட்சப்பில் பத்து ஸ்டேடஸ் போடுவான். ஒரு பருப்பு வடை அல்லது பஜ்ஜி வாங்கிக்கொள்வான்.
அருகிலிருக்கும் பெட்டிக் கடையில் வேர்க்கடலையோ, பிஸ்கட்டோ வாங்கிக்கொள்வான்! வெயில் காலம் என்றால் குளிர்பானம் ஒன்று வாங்குவான். வீட்டிற்கு வந்து பழைய சோற்றை மோரில் பிசைந்து இரண்டு வகை ஊறுகாய் வைத்து வீட்டில் செய்த வத்தல் மற்றும் வாங்கிவந்த வடையுடன் மிக நிதானமாக டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவான். இப்போது நேரம் பதினோரு மணி ஆயிருக்கும். பிறகு கடையில் போய் அமர்வான்.
இவன் வீட்டிற்கு முன்பக்கமே கடை வைத்திருக்கிறார்கள். இவனுடைய அம்மாவும் மனைவியும் கடையை நடத்தி வந்தார்கள். அந்த கடைக்கு பொருட்கள் வாங்கி வருவது அந்த இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நேரத்தில் கடையில் போய் அமர்வதை தவிர இவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. இதுவும் இவன் மாமனார் புண்ணியம். ஓரளவு வசதியான சமூகத்தில் ஆனால் தின்றுகெட்ட குடும்பத்தில் பிறந்தவன் இவன்!
இவன் இருக்கும் நேரத்தில் வெயில் ஏறியிருக்கும் கடைக்கு ஆட்கள் வருவதும் குறைவாக இருக்கும்!
செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். சமூக வலைகளில் புரட்சிகரமாக எதையாவது எழுதி பத்து லைக் வாங்க முயற்சி செய்வான். அது எப்போதும் நடந்ததில்லை.
சிறிது நேரம் கழித்து தேநீர் போடச் சொல்லி அதையும் வாங்கி குடிப்பான்.
வெயில் நன்றாக உச்சிக்கு வந்து இறங்கும்போது 3 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடுவான். நல்ல அரிசிச் சோறு, வீட்டில் அரைத்த மசாலாவில் குழம்பு அதில் நிறைய காய்கறிகள், கடலை எண்ணெயில் கூட்டு, ஆம்லேட், கட்டி மோர், வீட்டு வத்தல், இரண்டு சுவையில் குரு ஊறுகாய், சின்ன அப்பளம் இரண்டு என்று அரைமணி நேரம் நிதானமாக சாப்பிடுவான். வடக்கே நல்ல வேலை கிடைத்து அங்கே போய் கைநிறைய சம்பாதித்து பை நிறைய பணத்துடன் அரிசிச் சோற்றுக்கு சிங்கி அடித்த அனுபவம் உள்ளதால் சோற்றின் அருமை அதுவும் வீட்டுச் சமையலின் அருமை அவனுக்குத் தெரியும். "சாப்பாட்டுக்கு செலவு பண்ணலைனா நோய்க்கு செலவு பண்ண வேண்டி இருக்கும்" என்பது இவன் அப்பாவின் வேதவாக்கு.
இவன் அப்பாவை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இவன் ஒட்டுண்ணி என்றால் இவன் அப்பன் ஒரு பொணந்தின்னி. அதாவது தட்டில் ஒரு உயிரினம் செத்துகிடக்காவிட்டால் அவனுக்கு தொண்டையில் கடப்பாரை வைத்து இடித்தாலும் சோறு இறங்காது.
எதுவும் இல்லையென்றாலும் பத்துரூபாய் பாக்கெட் கருவாடை வாங்கி தோசைக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பொறித்து கொடுக்கவேண்டும் அல்லது ஐந்து ரூபாய் முட்டையையாவது ஆப்பாயில் போட்டு வைக்கவேண்டும். தட்டு சுத்த சைவமாக இருந்தால் அவனுக்கு அவனுடைய நாயைப் போலவே கோபம் வந்துவிடும். உடனே அந்த நாயைப்போலவே தட்டை தள்ளிவிட்டு நடுவீதியில் நின்று கத்துவான். குடிகாரனாக இருந்தாலும் கட்டிய மனைவி அவனை சகித்துக் கொண்டாள். காரணம் அவன் அப்பன் கடைசி வரை வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்ததில்லை. இல்லையென்றால் என்றோ பாயாசத்தைப் போட்டிருப்பபாள். சரி! அவனது அப்பன் தின்று கெட்ட கதையை பிறகு பேசுவோம்! இப்போது கதையை விட்ட இடத்திற்கு வருவோம்!
நம் வெட்டி முண்டம் சாப்பிட்டுவிட்டு குழந்தையை அழைத்துவர போவான். மீண்டும் தெருவழியே சுற்றிக்கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டே வரும் வழியில் பேக்கரியில் நிறுத்தி சாக்லேட்டோ அல்லது சிறிய விளையாட்டு பொருட்களோ வாங்கிக்கொடுப்பான்.
அப்படியே அவனும் தேநீர் குடிப்பான் அல்லது குளிர்பானம் குடிப்பான்.
வீட்டிற்கு வந்ததும் கை கால் கழுவி லுங்கியை மாற்றிக்கொண்டு மெத்தையில் பல தலையணைகளை அடுக்கி ஒரு டேபிள் பேன், ஒரு சீலிங் பேன், ஒரு கூலர் என்று காற்றோட்டமாக குழந்தையுடன் ஆனந்தமாக தூங்குவான்.
அல்லது குழந்தைகளுக்கான படங்களை இணையத்தில் எடுத்து டிவியில் ஓடவிட்டு குழந்தை பார்க்க அவன் அருகிலேயே படுத்து தூங்கிவிடுவான்.
மாலை 6 மணிக்கு தேநீர் போட்டுவிட்டு அவன் மனைவி எழுப்புவாள். எழுந்து கை,கால், முகத்தைக் கழுவிக்கொண்டு சூடான தேநீருக்குள் முறுக்கை உடைத்துப் போட்டு ஸ்பூனால் எடுத்து தின்றுகொண்டே மூவரும் குடிப்பார்கள். முறுக்கு தீர்ந்துவிட்டால் பிஸ்கெட் அல்லது குக்கரில் சூடான பாப்கான் செய்துகொள்வார்கள்.
பிறகு வண்டியை எடுத்துக்கொண்டு இவனது நண்பனின் மெடிக்கல் கடைக்கு போவான். இவன் ஒரு வெட்டி முண்டம் என்றால் இவனது நண்பன் ஒரு வீணாப்போன தெண்டம். இருவரும் அங்கே அமர்ந்து இந்த உலகத்தை எப்படி திருத்துவது என்று விவாதிப்பார்கள். அப்படியே அங்கே அருகில் ஒரு கடை இருக்கிறது. இங்கே வாழைத்தண்டு சூப், முருங்கை கீரை சூப், உளுந்தங்கஞ்சி, பருத்திப்பால், சுண்டல், களி என்று இயற்கையாக எதையாவது உள்ளே தள்ளிக்கொண்டே பேசுவார்கள். நீள்வட்டத்தின் இரு மையங்கள் போன்ற இவர்களைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருந்தது.
அவர்கள் ஒன்றிணைந்து தள்ளுவண்டியில் சூடாக தோலுடன் வேர்க்கடலை வாங்கி தின்பார்கள். இப்போது அங்கே உலக பிரச்சனைகளுக்கு நூறு சதவீதம் சரியான தீர்வுகள் காணப்படும்.
கொஞ்சம் இருட்டிய பிறகு தேநீர் கடை சென்று சூடான பக்கோடா தின்றுகொண்டு தேநீர் குடிப்பார்கள். இது எல்லாவற்றுக்கும் இவன்தான் செலவு செய்வான். பிறகு ஏடிஎம் இல் பணம் எடுத்துக்கொண்டு பெரிய கடைகளில் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிகொண்டு பண்ணையில் பால் வாங்கிக்கொண்டு தின்ன இரண்டொரு பழங்கள் வாங்கிக்கொண்டு 8மணி வாக்கில் வீட்டுக்கு வருவான்.
குழம்பை சுட வைத்து தோசை சுட்டு சட்னியும் வைத்து சாப்பிடுவான். அப்படியே ஒரு ஆப்பாயிலும் உள்ளே தள்ளுவான். பிறகு டிவியைப் போட்டுக்கொண்டு விளம்பர இடைவெளிகளில் செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான்.
பத்து மணிக்கு மேல் வண்டியை உள்ளே எடுத்துவிட்டு கதவைப் பூட்டுவான். அனைவரும் படுக்கையில் படுப்பார்கள். மனைவியும் குழத்தையும் தூங்குவார்கள் இவன் படுத்துக்கொண்டே செல்லை நோண்டிக்கொண்டு இருப்பான். பனிரெண்டு மணிக்கு மேல் பாலை குடித்துவிட்டு பழம் சாப்பிடுவான். பிறகு மெல்ல தூங்கிவிடுவான். தூக்கம் வராவிட்டால் மனைவியை எழுப்புவான். அவள் வெளியே எங்கேயாவது கூட்டிப்போ என்பதைத் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை.
இப்படியாக சுகபோகமாக வாழ்ந்துவந்த அவனது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் வந்தது. அவனது பெண் குழந்தை ஆளாகிவிட்டது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள். மாமனாரும் மச்சான்களும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தார்கள். அவன் மீது அனைவரும் கொஞ்சம் மரியாதை வைத்திருப்பது அவனுக்கு அப்போது தெரிந்தது.
ஒப்புக்கு சப்பாணியாக சுற்றிக்கொண்டு இருந்தான். பெரிய திருப்பம் என்று நினைத்தது சிறிய திருப்பம் ஆகிவிட்டதால் அவன் பழையபடி வெட்டி முண்டமாகவே வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தான். அன்று இரவு அவனது மாமியாரும் மனைவியும் பேசிக்கொண்டனர். அவனது மாமியார் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டார். தன் கணவனைக் குறைகூறியதும் பொறுக்க முடியாத அவன் மனைவி "என் புருசன் குடிப்பதில்லை! ஒழுங்கா இருக்காரு! இதுக்கு மேல என்ன வேணும்?!" என்று சினந்தாள்.
ஆக இதுதான் அந்த மதுவிலக்கு சிறுகதை!
No comments:
Post a Comment