மூவேந்தர் ஒரே பாடலில் (பார்ப்பனர் வறிய நிலை)
பாடல்: புறநானூறு 367
பாடப்பட்டோர்:
சேரமான் மாவண்கோ,
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,
பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி
ஆகிய மூவேந்தர்கள்.
பாடியவர்: ஔவையார்.
உரை: தேவலோகத்தைப் போன்ற பகுதிகளையுடைய நாடு, அந்த நாட்டு வேந்தனுடையதாக இருந்தாலும்,
அவ்வேந்தன் இறக்கும்பொழுது அது அவனுடன் செல்வதில்லை.
அது அவனுக்குப் பின்னர் வரும் தொடர்பில்லாத வலியோர்க்குப் போய்ச் சேரும்.
பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்தும்,
நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும், நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்தியும்,
மகிழ்ச்சியோடும், சிறப்பாகவும்,
இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்தும்,
இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழ்க.
நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர,
நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை.
வீடுபேறு ஒன்றையே விரும்பிப்,
புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே!
நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.
வானத்தில் விளங்கும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன் பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்குவன ஆகுக.
இதைக் கூறுவது புறநானூறு 367 வது பாடல்,
அது கீழ்வருமாறு
நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும், தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
யான்அறி அளவையோ இதுவே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநும் நாளே!
இப்பாடல் மூவேந்தரும் ஒன்றாக வீற்றிருந்தபோது ஔவை பாடிய பாடல் ஆகும்.
இதிலே கவனிக்கவேண்டிய ஒன்று பார்ப்பனர்களுக்கு பூவும் நகைகளும் கொடுத்த தமிழ் அரசர்கள் பார்ப்பன அடிமைகள் என திராவிட கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஆனால் முழுப் பாடலைப் பார்க்கும்போது
ஏற்ற பார்ப்பனர் அதாவது தகுதி உள்ள பார்ப்பனருக்கு நகையும் பூவும் கலந்து கொடுத்த மூவேந்தர்,
நாடி வந்த வறியவர்களுக்கும் அரியவகை நகைகளைக் கொடுத்துள்ளனர்.
அதாவது பார்ப்பனரும் இரவலரும் ஏறத்தாழ ஒரே நிலையில்தான் இருந்துள்ளனர்.
படம்: அரசேந்திரச் சோழன் (ராஜேந்திர சோழன்) வெளியிட்ட நாணயத்தில் மூவேந்தர் சின்னம்
08.11.2016 அன்று முகநூல் பதிவாக இட்டது