Showing posts with label அயோத்தி தாசர். Show all posts
Showing posts with label அயோத்தி தாசர். Show all posts

Friday, 6 December 2024

தமிழ்தேசியத்தில் அம்பேத்கரியம்

தமிழ் தேசியத்தில் அம்பேத்கரியம்

 "அம்பேத்கரியம்" என்பது வேறு! "தலித்தியம்" என்பது வேறு!
 அம்பேத்கரியம் என்பதை ஆள்பவரை எதிர்க்காமல் இணைந்து செயலாற்றி தேவையான சலுகைகளைப் பெறுவது என்றே நான் புரிந்து கொள்கிறேன்!

  அதாவது ஆட்சியாளர்களை நாம் வெல்ல முடியாது என்று தோல்வியை ஒப்புக்கொண்டு நம்மை ஆள்பவர் யார் எவர் அவர் என்ன மாதிரியான ஆட்சி செய்கிறார் என்று கவலைப்படாமல்  அவர்களுக்கு உடந்தையாக இருந்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தேவையான பலன்களை பெற்றுத் தருவது.
 இப்படியான ஆட்களும் தேவையா என்றால் அரசியலில் தேவைதான்!
 ஒரு கொடுங்கோல் ஆட்சியில் குறிப்பிட்ட மக்களுக்காவது குறைந்தபட்ச சலுகைகளாவது கிடைக்கும்!

 அன்று ஆங்கிலேயர் கால்வாசி உலக நிலத்தையும் மூன்றில் ஒரு பங்கு உலக மக்கள் தொகையையும் அடக்கி ஆண்ட காலம்!
 அத்தனை வலிமை உடைய எதிரியை எதிர்க்க முனைந்தவர்கள் பலர்!

 ஆனால் எதிர்க்க முடியாது என்று முடிவு கட்டி அவர்களுக்கு துணை நின்று தன்னை சார்ந்தவர்களை பலனடைய செய்வது என்கிற வழியில் ஒரு குறிப்பிட்ட மக்களையாவது மேலே தூக்கி விட சிலர் முயன்றனர்!

அயோத்திதாச பண்டிதர், சில கிறிஸ்துவ பாதிரிகள், நீதிக் கட்சி, சவர்க்கர், முஸ்லிம் லீக், அம்பேத்கர் போன்றோர் அதிகாரத்திற்கு பணிந்து தம்மைச் சார்ந்த மக்களுக்கு என்ன சலுகைகள் பெற முடியுமோ அதை பெற்றுத் தர முனைந்தனர்.

  இது அன்றைய நிலையில் ஓரளவு நியாயம் என்று கூட சொல்லலாம்!

  இன்று சர்வாதிகாரம் கொண்டு இந்தியாவை ஆள்வோருக்கு அடங்கிய சிறு மாநில அதிகாரத்தை தற்காலிகமாக கையில் வைத்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு பணிந்து துணை நின்று அதன் மூலம் சில சலுகைகளை தம்மைச் சார்ந்தவர்களுக்கு பெற்று கொடுக்கவே சிலர் இருக்கும் பொழுது அன்றைய ஆங்கில பேரரசுக்கு பணிந்து சிலர் நடந்ததை நாம் பெரிய குறையாகக் கூற முடியாது.

 தமிழ்தேசிய பார்வையில் அம்பேத்கரைப் பார்த்தால்,
 அவர் தமிழர்கள் மூத்த குடி என்றார்....
 ஆனால் மொழிவாரி மாநிலங்கள் அமைந்து உரிமைகளைப் பெற தடையாக இருந்தார்... அதேநேரத்தில் தாம் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் 'இந்தியா ஒரு நாடு இல்லை' என்பதையும் 'இந்தியர் என்று எவரும் இல்லை' என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்!

  மொழிவாரி மாநிலங்களுக்கு எல்லைகளையும் சில அதிகாரங்களையும் வேண்டிய அன்றைய இனங்களின் தேசிய எழுச்சிக்கு மதிப்பளித்துள்ளார்!
 
 தலித்தியம் என்று தற்போது பேசப்படும் தாழ்வு மனப்பான்மை மீது கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு கருத்தியலுக்கும் அம்பேத்கருக்கும் சம்மந்தம் இல்லை!

 அம்பேத்கர் எவ்வாறு தமது மராத்திய இனம் பாம்பாய் நகர் மீதும் மராத்திய தனிமாநிலம் வேண்டியும் தேசிய  உரிமைகளை கூறிய போது எதிர்க்காமல் உடன் நின்றாரோ அதேபோல...

  தமது மகர் சாதி பெயரில் ராணுவ படையணி உருவாக்கி வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்தாரோ அதேபோல....

  தமிழின அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் இன மற்றும் குடிப் பற்று கொண்டு தமிழ் தேசியத்தின் பக்கம் நிற்பது அவசியம்!

 தமிழன் என்று பத்திரிக்கை நடத்தியவரும் தமிழருக்கு தனிநாடு கேட்டு முதலில் குரல் கொடுத்தவரும் அம்பேத்கருக்கும் முன்னோடியான சிந்தனையாளருமான அயோத்தி தாசர் வழியில் சிந்திப்பது முக்கியம்!

  நான் ஏற்கனவே கூறியது போல தமிழ்நாடு தனி நாடு என்று எடுத்துக் கொண்டால் எஸ்.சி எனும் வட்டத்திற்குள் வருவோரின் மக்கட் தொகையானது இந்திய அளவில் எஸ்.சி பட்டியலில் வரும் மக்கள் தொகையை விட அதிக சதவீதம் இருக்கும்.

 இந்திய கட்டமைப்பில் இன, மொழி, கலாச்சார வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து பட்டியல் சாதி மக்களும் ஒன்றிணைந்து தமது உரிமைகளை வென்றெடுப்பது ஏறத்தாழ நடவாத காரியம்!

 ஆனால் தமிழ்தேசியத்தின் பக்கம் நின்று தனிநாடு அடைந்துவிட்டால் அரசையே நடத்தமுடியும்! நாட்டையே ஆட்டிவைக்க  முடியும்!

  ஆக அம்பேத்கர் வழியில் அதற்கும் முந்தைய நம் பாட்டன் அயோத்தி தாசர் வழியில் இன்றைக்கு எஸ்சி பட்டியலில் இருக்கும் அனைத்து தமிழ்க் குடிகளும்  தமிழ்தேசியத்தை தமது முதன்மை இலக்காக முன் வைக்க வேண்டும்.

 "இல்லை நான் அம்பேத்கர் - ஆங்கிலேயர் போன்ற மரியாதையான உறவு  இல்லாவிட்டாலும் அரசுக்கு தலைவணங்கி அறமற்ற ஆட்சிக்கு உடந்தையாக இருந்து சில கொசுறு சலுகைகளைப் பெறுவேன்" என்று நீங்கள் கூறினால் அது வந்தேறிகள் அதிகார வெறிக்கு துணை போய் இனத் துரோகம் செய்வதாகவே பொருள்! 

 மராத்தியரும் குஜராத்தியரும் தம்மின இசுலாமியரை விடுத்து இந்துத்துவ சிந்தனை தழுவிய தேசியவாதம் ஏற்று அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.
 ஈழத்திலும் இசுலாமியரைத் தவிர்த்து தமிழர் தேசியவாதமாக எழுந்தனர்! 

 ஜெர்மானிய இனத்தில் யூத மதத்தினரை விட்டுவிட்டு தேசியவாதம் எழுந்தது! 

 வியட்நாம் தேசிய எழுச்சி பெற்றபோது வடக்கு வியட்நாம் தனித்தே நின்று போராடி அமெரிக்காவை வென்று பிறகு தெற்கு வியட்நாமையும் கைப்பற்றி தேசம் அமைத்தது! 

 அதாவது ஒரு இனத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இல்லாவிட்டாலும் தேசியவாதம் எழ நினைத்தால் எழுந்துவிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்! 

 ஏற்கனவே கூறியது போல நம் முன்னோர்கள் கோரிய இந்தியா வேறு!
இன்று இருக்கும் இந்தியா வேறு!

 அன்றைய நிலையை இன்றைய நிலையுடன் பொருத்தி சிலரின் பிழைப்புவாதத்தை அம்பேத்கரின் சமரசத்துடன் ஒப்பிடுவது சரியாகாது!

 இங்கே நடப்பது ஆங்கிலேய பேரரசின் ஆட்சியும் இல்லை!
 தமிழின பட்டியல் குடிகள் முக்கியமாக அதில் பெரும்பான்மையான பறையர் அன்று நசுங்கிக் கிடந்த மகர் ஜாதியும் இல்லை! 
 
 இது உங்கள் மண்! தேசியத்தில் முன்னணியில் நிற்கவேண்டியது நீங்கள் தான்!

 தமிழ்தேசிய  வழியில் வந்தேறிகளை விரல் சொடுக்கில் வீழத்திவிட்டு  நீங்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்! 

 தாழ்வு மனப்பான்மையைக் கைவிட்டு இனமாக சிந்தியுங்கள்! 

 அம்பேத்கர் போல ஓரளவு சமரசம் செய்யவேண்டிய அவசியம் கூட உங்களுக்கு இல்லை! 

Friday, 18 July 2014

அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்

அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்

எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

ஈவேரா-வை தமிழ்த் தேசியத் தந்தை என்று சிலர் திரிக்கின்றனர்.

தமிழ்நாடு தமிழருக்கே என்று அவர்தான் முதலில் கூறினாராம்.

ஈவேரா என்பவர் திராவிட நாடு, தனித்தமிழ் நாடு என்று மாற்றி மாற்றி பேசி கடைசிரை குழப்பியவராவார், அவர் எப்படி தமிழ்த்தேசியத்தின் தந்தை ஆவார்?

ஆனால், 1881லேயே தாழ்த்தப்பட்ட மக்களை பஞ்சமர் அல்லது தலித் என்று குறிப்பிடாமல் 'ஆதித் தமிழர்' என்று குறிப்பிட வலியுறுத்தியவர் அயோத்திதாசர்;
1885லிருந்து 'ஜான் ரத்தினம்' என்பவருடைய 'திராவிடப் பாண்டியன்'என்ற இதழில் அயோத்திதாசர் உதவியாசிராக பணிபுரியலானார்;
ஆனால், 1907ல் அவர் தனி இதழ் தொடங்கியபோது அதற்கு திராவிடப் பெயரை வைக்காது 'ஒரு பைசாத் தமிழன்' என்றே பெயர் சூட்டி தமிழிய சிந்தனைகளோடு வெளியிட்டுவந்தார்;
பிறகு 1908ல் அதன் பெயரைத் 'தமிழன்' என்று மாற்றினார்;
தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத, மத, பிராமணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமுக நீதி பிரதிநித்துவம், தாழ்த்தப்பட்டோர் விடுதலை, சுயமரியாதை, இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளுடன் வெளிவந்தது தமிழன் இதழ்.
மலேசியா, சிங்கப்பூர் வரையிலும் கூட அவ்விதழ் பரவியது.
(1942ல் 'தமிழ் ராஜ்ய கட்சி'  என்ற கட்சியைத் தொடங்கி தமிழருக்குத் தனி ராஜ்யம் தேவை என்று முழங்கிய சி.பா.ஆதித்தனாரும் 1942ல்  'தமிழன்' என்ற வார இதழைத் தொடங்கினார்)

மொழியின் மூலம் சாதியை பின்னுக்குத் தள்ளலாம் என்பதை  "ஓர் பாஷையின் பெயரால் சங்கத்தை நிலை நிறுத்துவோமானால் ஆதவரும் ஆதி தமிழரென்பர், வன்னியரும் ஆதி தமிழரென்பர்,
நாடாரும் ஆதி தமிழரென்பர், வேளாளரும் ஆதி தமிழரென்பர்" என்கிறார்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியம், திராவிடம் போன்ற 'தமிழர் மீதான வேற்றின ஏகாதிபத்திய' கருத்துகள் தமிழர் மத்தியில் விதைக்கப்பட்டபோது, முதன்முதலாக 'தமிழ்நாடு தமிழருக்கே' (தமிழ்தேசம் சுதேசிகளுக்கே) என்று கூறியவரும் அயோத்திதாசப் பண்டிதரே ஆவார்.

30-10-1912 அன்று தமிழன் இதழில் 'விடுதலை அளித்தால் இம்மண்ணின் மைந்தரான(சுதேசிகளான) தமிழருக்கே வழங்கவேண்டும்' என்றார். "தமிழ்மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கே சுதந்திரம் வழங்கவேண்டும்" என்கிறார்.
மேலும் "கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும்.
நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர்
குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக்கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்” என
ஆங்கிலேயரிடம் விடுதலை பெறுவதற்கு 35ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
(இதே காலகட்டத்தில் 1922ல் அருணாசலம்'தனி ஈழம்' என்கிற கருத்தியலை உருவாக்குகிறார்)

ஈவேரா பொதுவாழ்க்கைக்கு வரும் முன்னரே 'தமிழர் ஒரு தேசிய இனம்' என்று சிந்தித்த அயோத்தி தாசரே 'தனித் தமிழர் நாடு'  என்ற கருத்தியலின் தந்தை ஆவார்.

நன்றி: http://thamizhanvelu.blogspot.in/2012/07/blog-post_4258.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=568286243286260&id=100003146695085&set=t.100003146695085&source=42&refid=13
http://ta.m.wikipedia.org/wiki/அயோத்தி_தாசர்
https://m.facebook.com/photo.php?fbid=467886293315029&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=48