Wednesday, 2 October 2024

காந்தியை உருவாக்கியது தமிழர்கள்

காந்தியை உருவாக்கிய தமிழர்கள் காந்தியை உருவாக்கிய தமிழர்கள் காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார். இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே. ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே. அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம், தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம், கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன. மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன. ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர். ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர். இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர். அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம். தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம். சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள். மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000. பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000. ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000. ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000. ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000. கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500. அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா. அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர். ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர். அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது. காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர். ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். மக்களுக்காகப் போராடியவர். காந்திக்கு முன்னுதாரணம் இவரே. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை, பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான். தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான். தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான். ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார். வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி. வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார். தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே. மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது. அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம், ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது. ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது. காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர். காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார். 1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார். இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர். துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர். (ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!) 1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார். அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது. ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது. ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர். ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார். இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார். ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின. 1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார். இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார். 1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார். 1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்). இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர். பெரிய போராட்டம் தொடங்கியது. ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர். ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது. சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே. ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான். தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது. இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது. இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி. நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார். அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை. சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார். அப்போது அவருக்கு வயது 16. மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர். கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது. இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர். காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள். 1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர். 1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார். அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்! லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர் கைதாயினர். அதில் 4 பேர் தமிழர்கள். ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர். சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார். தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு. அவர் தம்பி நாயுடு. 8 முறை சிறை சென்றவர். அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது. ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர். இவர் 4 முறை சென்றவர். சொத்துகள் அனைத்தையும் இழந்தவர். செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர். வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி, காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி, மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை, ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர். அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும் நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார். வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை. 1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும் 1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன. மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே. இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும். ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே. 26.05.2017 அன்றைய பதிவு படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்

No comments:

Post a Comment