தமிழ்க் கங்கர்
கோலார் நகரத்தின் பழைய பெயர் குவலாளபுரம் ஆகும். இது கங்கர்களின் தலைநகரம் ஆகும். இலக்கியத்தில் கங்கன் என்றொரு சிற்றரசன் பெயர் வருகிறது (அகநானூறு 44). ஏழு மன்னர்கள் கூட்டணி அமைத்து சோழன் பெரும்பூட் சென்னியுடன் போரிட்டபோது அந்த கூட்டணியில் கங்கன் இருந்தான். கங்கர்கள் கி.பி.350 முதல் 550 வரை தனியரசு செலுத்தி பின் பல்வேறு பேரரசுகளுக்கு அடங்கி சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர் (இவர்களின் ஒரு பிரிவினர் இன்றைய ஒரிசா மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியையும் ஆட்சி செய்துள்ளனர்). இவர்களின் கடைசி மன்னனும் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே இருந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் (பனிரெண்டாம் நூற்றாண்டு) சேர்ந்த அமராபரணன் சீயகங்கன். பவணந்தி அடிகள் நன்னூல் இயற்றியது இவனது அரசவையில்தான்.
நன்னூல் கூறுவது போல (பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி) இப்புலவர் பிறந்த சனகை என்பது மைசூர் மாவட்டம் திருமுக்கூடல் நரசிபுரம் தாலுகாவிலுள்ள சனாகாதபுரம் என்று சோழர் சரித்திரம் இரண்டாம் பாகத்தில் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். நன்னூல் "குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடல்" என்று தமிழக எல்லைகளைக் குறிக்கிறது.
இதன்படி வடக்கே குடகு மலை முதல் வேங்கடம் வரை தமிழ்நிலம் என்றாகிறது. இதனுள் மைசூரும் பெங்களூரும் அடங்கும். இந்த அமராபரணன் சீயகங்கனின் இயற்பெயர் "திருவேகம்பமுடையான்" என்பதாகும். இவன் மனைவி பெயர் "அரியபிள்ளை". இவனது மகனின் பெயர் "அருங்குன்றைப் பிள்ளையாரான செயகங்கன்". ஒரு மகளும் உண்டு அவள் பெயர் "வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார்" என்பதாகும். கோலார் தமிழர் பகுதியே!
(தனித் தமிழர்நாடு புத்தகம் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது)
No comments:
Post a Comment