Tuesday 6 December 2022

வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை

வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை

 ஒரு இனம் தமது தாய்நில வளங்களைப் பயன்படுத்தி வாழ்ந்துகொள்வது தமது அடுத்த சந்ததியை ஆளாக்கிவிடுவது வாழ்வியல் முறையாகும். நிலத்தின் வளங்களை மண்ணின் மைந்தர் அல்லாத பிறர் பயன்படுத்துவது முறையில்லை. ஒருவேளை அப்படி பிறர் பயன்படுத்தும்போது அப்பகுதி மக்களுக்கு அதில் வாழ்வாதாரம் தருவதே முறை! ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு நிலப்பகுதியை எடுத்துக்கொண்டு அதன் வளங்களைப் பயன்படுத்தும்போது அதில் அம்மண்ணின் மைந்தருக்கு வேலைவாய்ப்பு தருவதே முறை! அது அரசின் உதவியைப் பெறுமானால் அந்த அரசுக்கு வரி அளிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது ஒப்பந்தம் போன்ற வாழ்வாதாரங்களை அளிப்பதும் தார்மீகக் கடமை ஆகும். ஒரு இனம் தமது வளங்களின் மீது வாழ்வாதார உரிமை கோருவது தவறென்று ஆகாது. ஆங்கிலேயர் காலத்தில் வளச்சுரண்டல் உச்சத்தை அடைந்தபோது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு உருவாக்கியதே காங்கிரஸ். பின்னர் அதுவே இந்திய சுதந்திர குரலாக மாறியது.
 திராவிட இயக்கமும் சரி சிங்கள பேரினவாதமும் சரி ஆங்கிலேயர் காலத்தில் தமிழர்கள் முறையாகப் படித்து தேர்வாகிப் பெற்ற வேலைவாய்ப்பைக் கண்டு எழுந்த பொறாமை உணர்வின் விளைவாகவே தோன்றியது.  முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர். இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது. 1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன. இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று தமிழர்கள் நிறைகின்றனர் (குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்) ஈழத்திலும் அவ்வாறே தமிழர்கள் கல்வி மூலம் உயர்பதவிகளை அடைகின்றனர் (குறிப்பாக யாழ் வெள்ளாளர்கள்). 
 தமிழர்கள் கல்வி மூலம் அடைந்த உயரத்தை பிறர் அரசியல் மூலம் அடைய திட்டமிடுகின்றனர். இவ்வாறே திராவிடமும் சிங்களப் பேரினவாதமும் பிறந்தன. ஆங்கிலேய ஆதரவுடன் திராவிடம் ஆட்சியைப் பிடித்து மறைமுகமாக செயல்பட்டது. ஆனால் சிங்களவர் நேரடியாகவே செயலில் இறங்கினர். 1956 இல் சிங்களம் திணிக்கப்பட்டு தமிழர்கள் வீட்டுக்கு அனுப்பபட்டு எல்லா அரசு வேலைகளிலும் ராணுவத்திலும் காவல்துறையிலும் சிங்களவர் நிறைகின்றனர். 1956 இல் 30% நிர்வாகப் பணிகள்,  50% எழுத்தர் பணிகள், 60% பொறியாளர் மற்றும் மருத்துவர் பணிகள் மற்றும் 40% ராணுவ மற்றும் காவல்துறை பணிகள் தமிழர் வசம் இருந்தன. ஆனால் 1970 இல் 5% நிர்வாகப் பணிகள்,  5% எழுத்தர் பணிகள், 10% பொறியாளர் மற்றும் மருத்துவர் பணிகள் மற்றும் 1% ராணுவ மற்றும் காவல்துறை பணிகள் மட்டுமே தமிழர் வசம் இருந்தன. இந்த வேலைவாய்ப்பு இழப்பே தமிழ் இளைஞர்கள் கொதித்தெழக் காரணம். இதேபோல ஹிந்தியர் ஹிந்தியைத் திணித்தபோது தமிழகம் ஈழத்தடிகள் தலைமையில்  எழுநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொடுத்து பெரும் போராட்டம் நடத்தித் தடுத்ததால் ஈழம் அளவுக்கு நிலை மோசமாகவில்லை. இந்த மொழிப்போரில் இடையில் புகுந்து இடையிலேயே விலகிவிட்ட திராவிடத் தலைவர்கள் இதன் பலனை மறைமுகமாக தமது மக்களுக்கு சாதகமாக மாற்றினர். ஆம்! திராவிடம் இந்த இருமொழிக் கொள்கையை "தமிழ் - ஆங்கிலம்" என்றில்லாமல் "தாய்மொழி - ஆங்கிலம்" என்றாக்கி தம் மக்களைக் காத்தது. 2005 இல் தமிழ் கட்டயாமாக்கப்படும் வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தமிழ் இல்லாமலேயே இயங்கின.  அவற்றின் எண்ணிக்கை.
- தெலுங்கு : 269 + 35
- உருது : 260 + 56
- மலையாளம் : 100 + 50
- கன்னடம் : 61 +1.

மாநில வேலைவாய்ப்பில் தமிழுக்கு மதிப்பெண்கள் அதிகம் தரப்பட்டு இருந்ததால் தமிழர்கள் அதை அடைவது எளிதாக இருந்தது. ஆனால் தமிழகத்தினுள் மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டே வந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு  தமிழுக்கு மதிப்பெண்ணை குறைத்தனர். பின் தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கு எந்த மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்றாக்கினர்.
 இதைவிட ஒருபடி மேலே போய் 1.9.2016 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்டத்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது எத்தனை பெரிய அநீதி?! 
 இதன் மோசமான விளைவுகளை தற்போது தமிழக இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
சில எடுத்துக்காட்டுகள் வருமாறு,

* தென்னக ரயில்வேயில் 196 SM காலியிடங்கள் நிரப்பப்பட்டபோது 2 மலையாளிகள், 194 பீகாரிகள், 0 தமிழர்கள்
(செய்தி 26.02.2017)

* மதுரையில் நடந்த தபால்துறை போஸ்ட்மேன் பணியிட நிரப்பலுக்கான தேர்வில் 300 காலியிடங்களுக்கு 50% வரை அரியானா மாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் போக மகாராஷ்ட்ர மாணவர்களும் பெருமளவில் தேர்வாகியுள்ளனர்.  தமிழர்கள் 25%கூட தேர்வாகவில்லை
(செய்தி 17.03.2017)

* சென்னை மண்டலத்திற்கு தேர்வான "வருமான வரித்துறை அதிகாரிகள்" 92 பேரில் 5 பேர் மட்டுமே தமிழர்கள். அதேபோல சென்னை மண்டலத்திற்கு தேர்வான "உதவி வருமான வரித்துறை அதிகாரிகள்" 233 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்
(செய்தி 29.10.2018)

* தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேர்வான 300 பேரில் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள்
(செய்தி 31.05.2019)

* மதுரை ரயில்வே பணியிடங்கள் 572 இல் 10 பேர் மட்டுமே தமிழர்
(செய்தி 18.09.2019)

* தென்னக ரயில்வே (தமிழகம் மற்றும் கேரள ரயில்வே சேர்ந்தது தென்னக ரயில்வே) பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள் (செய்தி 16.06.2020)

 இந்த நிலையை ஒப்பிட கர்நாடகம் வைத்திருந்த மொழிக்கொள்கையைப் பார்ப்போம். 1982 இல் கர்நாடகம் முழுவதும்  கன்னடம் திணிக்கப்பட்டு அதை எதிர்த்துப் போராடிய 4 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 பேர் வரை காணாமல் போயினர். தமிழ்ப் பகுதிகளுக்கு அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கர்நாடகத்தில் கன்னடருக்கே முன்னுரிமை என்று எழுத்தப்படாத சட்டம் 1986 இல் சட்டமாகவே ஆனது. சரோஜினி மகிஷி கமிஷன் பரிந்துரைகள் படி 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இதில் முக்கியமானவை வருமாறு,
1. 100% இடஒதுக்கீடு கர்நாடக மாநில அரசு பணிகளில் கன்னடர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
2. 100% இடஒதுக்கீடு மத்திய அரசு பணிகளில் "C", "D" எனும் ப்ளூ காலர் பணிகள் கன்னட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
3. மத்திய அரசின் "B" கிரேட் பணிகளில் 80% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும்.
4. மத்திய அரசின் "A" கிரேட் பணிகளில் 65% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும்.
5. 100% தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை. அப்படி கன்னடர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை எனும் நிலையில் பிறருக்கு வழங்கலாம்.
 இதில் கன்னடவர் என்பதற்கான வரையறையும் தரப்பட்டுள்ளது. அதாவது,
 பதினைந்து ஆண்டுகளுக்கு குறையாமல் கர்நாடகத்தில் இருந்திருக்க வேண்டும். கன்னடம் பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் (அதிலும் கன்னட மீடியத்தில் படித்திருந்தால் முன்னுரிமை) இந்த வரையறையில் வருபவர் கன்னடர். இந்த அடிப்படையில் செயல்பட்டதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். 
 கர்நாடக கல்வித் துறையின் ஆவணங்களின்படி 1978-79 கல்வி ஆண்டில் கர்நாடகாவில் இருந்த 267 தமிழ்வழி தொடக்கப்பள்ளிகளில் 76,309 மாணவர்கள் படித்துள்ளனர். 100 -க்கும் அதிகமான உயர்நிலை பள்ளிகளில் 13,455 மாணவர்கள் படித்துள்ளனர்.  இந்த மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியை போதிக்க 1706 தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்.
2015-16 கல்வி ஆண்டில் மொத்தம் 8.35 லட்சம் மாணவர்கள் கர்நாடகாவில் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். இதில் 832 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுதியுள்ளனர் (அதாவது 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் 5% கூட இல்லை).

தப்பித் தவறி பிறருக்கு வேலை கிடைத்தால் கன்னடர் பெரும் எதிர்ப்பைத் தெரிவிப்பர். உதாரணமாக 1999 இல் மத்திய அரசு நிறுவனமான ஏ.ஓ.ஜி இல் கன்னடர் பெரும் போராட்டம் செய்து முறைப்படி தேர்வாகி வேலைபெற்ற 28 தமிழர்களை வெளியேற்றினர். 

 தமிழகத்தினுள் மாநில, மத்திய மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தமிழக மாநிலத்தாருக்கே கிடைக்கவேண்டும் என்று மாநில உரிமைகளை மீட்கும் நோக்கத்துடன் இயங்கும் பெ.மணியரசன் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார். 

 அரசாங்க வேலைவாய்ப்பு சரியாகப் பங்கிடப்படாதபோது அங்கே கலகம் வெடிக்கும் என்பது கண்கூடு! 

No comments:

Post a Comment