சோழப் பாண்டியர்
பாண்டிய நாட்டிலிருந்து சேரநாட்டுக்கு போகும் செங்கோட்டைக் கணவாயில் இருந்து சேனைத்தலைவர் குடியைச் சேர்ந்த நான் எழுதும் பதிவு.
நான் தோற்றத்தால் சேர நாட்டான். பூர்வீகத்தால் சோழ நாட்டான். பிறப்பால் பாண்டிநாட்டான்.
பாவாணர் கூற்றுப்படி சேடைத்தலைவர் சங்ககால கோசர் வழிவந்த தமிழ்க்குடி (இது தெரியாமல் நன்னன் - கோசர் பங்காளிச் சண்டையை வைத்து கோசர் வடுகர் என்று நானே பதிவு இட்டுள்ளேன்).
கோசர் ஆண்ட குறுநிலம் சேர நாட்டின் பகுதியான கொங்குக்கும் சேரநாட்டுக்கு அடுத்த வடக்கு கடற்கரையை ஆண்ட நன்னனுக்கும் துளுநாட்டுக்கும் கொங்கின் வடபகுதியான கொங்காணத்துக்கும் இடையில் இருந்தது. அதாவது தற்போதைய கேரள கர்நாடக எல்லைக் கோட்டின் மத்தியில் என்று சொல்லலாம்.
இவர்கள் குதிரைமலை (Gudremukh - Karnataka) பிட்டங்கொற்றன் மீது போர் தொடுத்துள்ளனர்.
கோசர் சக வேளிர் குடியான ஏழில்குன்றம் (Ezhimala - Kerala) நன்னர்களுடன் பங்காளி சண்டை போட்டு தோற்று பிறகு சூழ்ச்சியால் நன்னனை கொன்றுவிட்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது.
அதன்பிறகு இவர்கள் கொங்கு வந்து சேரர் படையில் சேர்ந்து பிறகு சோழநாட்டு வடக்கு எல்லைக்கு போர்த்தொழில் செய்யச் சென்றுள்ளதாக ஊகிக்கலாம் (திருநெல்வேலி முதல் தஞ்சாவூர் வரை தொடர்ச்சியாக வாழும் சேனைத்தலைவர் அதன் பிறகு திருவண்ணாமலை அருகே மட்டும் காணக் கிடைக்கின்றனர்).
இப்படி தமிழகம் வந்த கோசர் இளங்கோசர் என்றும் இவர்களது மூதாதையர் துளு எல்லையில் வாழ்ந்த செம்மல் கோசர் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.
கொங்கில் இவர்கள் ஏற்கனவே இருந்ததால் பிரச்சனை வரவில்லை. கொங்கு தாண்டி வந்தபோது சோழநாட்டு தமிழகத்து சிற்றரசர்களுடன் பிரச்சனஐ வந்து அவர்களுடன் மோதிக்கொண்டு இருந்தனர்.
அப்போது கிள்ளி வளவன் இவர்களைத் தோற்கடித்தான்.
பிறகு படைத்தலைவராகவும் ஊர்த்தலைவராகவும் சோழ நாட்டிலும் பாண்டிநாட்டிலும் சங்ககாலத்திலேயே பரவிவிட்டனர்.
(சங்ககாலத்தில் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி எனும் சோழன் படையெடுத்தபோது அவனுக்கு பணிந்து தம் ஊரை காப்பாற்றிக்கொண்ட அஃதை எனும் கோசர் தலைவன் உண்டு. இவன் வழியினரே அகதா மறவர் என்பர். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் போரில் வென்ற பிறகு தோற்ற கோசர் படை அவனுக்கு பணிந்து பல வெற்றிகளை ஈட்டித் தந்தது)
பிற்பாடு பல போர்க்குடிகளுடன் கலப்புகள் ஏற்பட்டு கோயர் என்கிற பெயருடன் தமிழகம் முழுக்க பரவினர் எங்கள் முன்னோர்கள்.
கோயம்பேடு, கோயம்புத்தூர், இளங்கோயக்குடி (அம்பாசமுத்திரம்) இப்படிப்பட்ட ஊர்கள் கோயர் உருவாக்கியவை என்பது பாவாணர் சொல்லாய்வு முடிவு.
கோயர் பிற்பாடு பல கலப்பு நடந்து கோளர் என்றாகினர்.
அவர்களே கைக்கோளர் எனும் படைப்பிரிவு ஆகி சோழருக்கு போர்த் தொழில் செய்துகொண்டு இருந்தனர்.
மேலும் கலப்பு நடந்து பிற்கால சோழர் காலத்தில் எல்லைக்கு சற்று பின்னே நிலைகொண்டு இருக்கும் உள்நாட்டு படையான (special force) செங்குந்தர் என்றாகினர் என்கிறார் பாவாணர்
(இவையெல்லாம் ராகவையங்கார் கோசர் பற்றி எழுதி அவர்கள் வெளியார் என்று கூறியபோது அதை மறுத்து கோசர் தமிழரே என்று பாவாணர் எழுதியவை).
இந்த சிறப்புப் படையின் தலைவர்கள் பிற்பாடு தனிச் சாதியாகி சேனைக்குடையார், சேனைத் தலைவர் என்றாகி இருக்கவேண்டும்.
16 ஆம் நூற்றாண்டில் தமிழர் ஆட்சி வீழ்ந்த பிறகு கைகோளர், செங்குந்தர், சேனைத்தலைவர் ஆகியோர் போர்த்தொழிலை விட்டுவிட்டனர். நெசவுத் தொழிலுக்கு மாறினர் (போத்தீஸ் - சேனைத்தலைவர் நிறுவனம்). பிறகு சேனைத்தலைவர் வெற்றிலை விவசாயம் போன்ற கொடி விவசாயத்திற்கு மாறினர்.
முருகனை முதன்மைத் தெய்வமாகக் கொண்ட இவர்கள் பிற்பாடு முருகன் படைத் தளபதி வீரபாகு வழிவந்தவராக கற்பனைப் புராணங்களை எழுதிக்கொண்டனர்.
சேனைத்தலைவரில் பெரும்பான்மையானோர் செங்கோட்டை முதல் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடம் வரை வாழ்கின்றனர்.
தேனி, தஞ்சாவூர் வரை சிறுசிறு தொகையாக பரவி உள்ளனர் (நீயா நானா கோபிநாத்தை இங்கே குறிப்பிடலாம்). இதற்கு அடுத்து எந்த தொடர்பும் இல்லாமல் திருவண்ணாமலையில் காணக்கிடைக்கின்றனர். செங்குந்தர் அல்லது மறவர் மத்தியில்தான் பெரும்பாலும் சேனைத்தலைவர் வாழ்கின்றனர்.
என்னுடைய கணிப்பு சோழப் பேரரசு விரிவடைந்தபோது நாங்கள் படைத்தலைவர்களாக பாண்டிய நாடு வந்து தங்கி அப்படியே செங்கோட்டை வழியே சேரநாட்டின் மீதும் படையெடுத்து சென்றுள்ளோம் (ஆனால் சங்ககாலத்திலேயே பாண்டிநாடு வரை கோசர் பரவிவிட்டனர். ஊர்த் தலைவர்களாக இருந்தனர். செல்லூரை ஆண்ட கோசர் தலைவர் செல்லிக் கோமான். ஊர்முது கோசர் எனும் குறுக்கை ஊர் கோசர் சபை திதியனுடன் போர் செய்துள்ளனர். இதுவே நம்மாழ்வார் பிறந்த திருக்குறுக்கை. இந்த நம்மாழ்வார் பாடிய திருத்தலம் கன்னியாகுமரியில் உள்ள வாட்டாறு இவ்வூரிலும் சங்ககாலத்தில் எழினியாதன் தலைமையில் கோசர் இருந்தனர்).
சேனைத்தலைவரின் ஒரு பிரிவு வேங்கடத்திற்கு அப்பால் படையெடுப்புக்குச் சென்றுள்ளது. இன்றும் வடக்கு எல்லையிலும் மேற்கு எல்லையிலும் செங்குந்தர் அதிகம் உள்ளனர் (பாரதிதாசன் - செங்குந்த முதலியார்)
செட்டியார், முதலியார், மூப்பனார், பிள்ளை என பல பட்டங்கள் கொண்டவர்கள் என்பதால் பல குடிகள் கலந்த கலப்பு என்று அறியலாம். பொட்டல்புதூர் இசுலாமியர் பெரும்பாலும் சேனைத்தலைவர் குடிதான்.
நான் இங்கே கூறவருவது என்னைப் போல எல்லா குடிகளையும் ஆராய்ந்தால் அது தன்னாட்சி புரிந்த ஒரு வேளிர் இலிருந்து தொடங்கி சங்ககாலத்தின் ஏதாவது ஒரு குடியைத் தொட்டு பிறகு மூவேந்தர் ஆட்சியில் எதாவது ஒரு தொழில்வழிச் சாதி ஆகி பின்னர் இன்றைய பிறப்பு வழிச் சாதியாகி நிற்கும்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்துள்ள இந்நேரத்தில் சோழர் - பாண்டியர் பங்காளிச் சண்டை போடவேண்டாம்.
அப்படி சண்டை போட்டாலும் என்னை இழுக்க வேண்டாம்!