Sunday, 4 September 2022

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு 

நமக்கு எல்லா வசதிகளையும் செய்வது மாநில அரசு. மாநில அரசை விட அதிகம் வரி வாங்கும் மத்திய அரசு நமக்கு செய்வது ரயில், தபால், ராணுவ பாதுகாப்பு போன்றவை மட்டுமே!
 மத்திய அரசு எப்படி தமிழகத்தைச் சுரண்டி கொழுக்கிறது என்பதை பலமுறை சான்றுகளுடன் பார்த்துள்ளோம்.
 தற்போது மத்திய அரசால் நமக்கு ஓரளவு பலனளிக்கும் ரயில்வே பற்றி பார்ப்போம்.
 கேரளாவுடன் ஒப்பிட்டால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது. 
 இத்தனைக்கும் இவ்விரு மாநிலங்களும் ஒரே (தென்னக ரயில்வே) மண்டலத்தில் உள்ளன.
 அதாவது மாநில எல்லைகள் வேறு ரயில்வே எல்லைகள் வேறு (காண்க: படம்)
 இதில் தென்னக ரயில்வே மண்டலத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் திட்டங்களும் கேரளாவுக்கு பலனளிக்கும் வகையில் செலவு செய்யப்படுகின்றன.
 
 
இது பற்றி 02.09.2022 இல் தினகரன் வெளியிட்ட செய்தி வருமாறு,

கேரளாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!
ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு: 
கிடப்பில் கிடக்கும் நீண்ட கால கோரிக்கைகள்

நாகர்கோவில்:
 கேரளாவில் ரயில்வே துறை சம்பந்தமான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி, துவங்கி வைத்துள்ளார். மேலும் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.

 இதில் முக்கியமாக 750 கோடியில் 27 கி.மீ தூரம் உருவாக்கப்பட்ட குருப்பந்தாரா - கோட்டயம் - சிங்கவனம் புதிய ரயில் பாதை இரு வழி பாதை திட்டம் 
மற்றும் 76 கோடியில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இது தவிர எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள இருப்பு பாதை தடத்தில் எர்ணாகுளம் - கோட்டயம்- காயங்குளம் மார்க்கத்தில் புதிய மெமு ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது. 

கொல்லம் - புனலூர் மார்க்கத்தில் இயங்கி வந்த இரு ரயில்கள் மெமு ரயில் ஆக மாற்றம் செய்யும் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.

 கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டத்தில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள மதுரை கோட்டம் நிர்வகித்து வருகிறது. 

கோட்டம் எதுவாக இருந்தாலும் கேரள மாநிலம் அதிகளவில் புதிய ரயில்களை பெறுகிறது. 

ஆனால் தமிழகம் அந்தளவுக்கான ரயில்வே திட்டங்களை பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. 

தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்களும் அதை நிரூபிக்கும் வகையில் இருப்பதாக ரயில் பயணிகள் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


அப்படியே தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டம் வந்தாலும் கூட, கேரள பயணிகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும் விதத்தில் தான் இயக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

 திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருவனந்தபுரம் - திருநெல்வேலி மெமு ரயில் சேவை இன்னும் கனவாகவே உள்ளது. 


இந்த பகுதி மின்மயமாக்கல் 2014-ம் ஆண்டு நிறைவு பெற்று இதுவரை ரயில்வே துறையால் மெமு இயக்கப்படவில்லை.


நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் இயங்கும் பழைய ரயில்கள் மாற்றம் செய்து விட்டு மெமு ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

 இதே போல் சென்னை முதல் மதுரை வரை இருவழி பாதை பணிகள் முடிந்து 5 வருடங்கள் ஆகி விட்டது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இரு வழியாக மாற்றும் பணிகள் 80 சதமானம் முடிவு பெற்றுவிட்டன. ஆனாலும் இந்த பாதையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதும் இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.


சென்னையிலிருந்து செல்லும் ரயில்களான 
தாம்பரம் - ஐதராபாத் சார்மினார், 
சென்னை- புதுடெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ், 
சென்னை - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 
போன்ற ரயில்களை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

 தமிழ்நாட்டில் சமீபத்தில் திண்டுக்கல் - பொள்ளாச்சி, திருவாரூர் - காரைக்குடி, மதுரை - தேனி ஆகிய பகுதிகள் அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதில் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் ரயில் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக ரயில் வசதி இல்லாத தேனி மாவட்ட மக்களுக்கு கூட தேனி - சென்னை புதிய ரயில் சேவையை தொடங்க வில்லை. 

இவ்வாறு செய்வதை பார்க்கும் போது ரயில்வே துறையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை நன்கு அறிய முடிகின்றது என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி கூறினார். 

கடந்த இருபது வருடங்களாக ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டில் தமிழகத்தை போல் எதிர்கட்சி எம்.பிக்கள் அதிகம் உள்ள கேரளா ஜொலித்தது.
பாரதிய ஜனதா ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது. 

ஆனால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின் தங்கி காணப்படுகிறது. 

இந்த நிலையை மாற்ற தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment