Tuesday, 4 November 2025

சென்னையை காத்த மபொசி பற்றி கா மு ஷெரீப்

சென்னையை காத்த மபொசி பற்றி கா.மு.ஷெரீப்

 'இழைத்தவன் பொண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி' என்பது கிராமிய பழமொழி.
 ஆந்திரர்கள் சென்னையை இந்த பழமொழிக்கு இலக்காக பார்க்கின்றனர்.
 சென்னையை என்ன, திருமலை நாயக்கர் ஆண்ட மதுரையை கூட தனதாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணினர் ஆந்திர வெறியர்கள்.
 அதற்கான திட்டத்தையும் நடத்த அவர்கள் தயங்கவில்லை.
பிரகாசம் முதல்மந்திரியாக வந்ததும் ஆந்திராவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சென்னையில் பவனி வரச் செய்தார்.
 சும்மா அல்ல 'மதராஸ் மனதே!' என்று கூப்பாடுடன்!
 தட்டி கேட்க ஆளில்லை!
 சென்னை நகரில் ஓடும் பஸ்களில் எல்லாம் கூட தெலுங்கிலும் பெயர் போடச் செய்தார்கள்!
 இத்தனையும் கண்டு பாரா கண்கள் படைத்தவர்களாக தமிழக தலைவர்கள் இருந்தபோதுதான் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று குரல் கொடுத்தது தமிழரசு கழகம்! 
வெறிபிடித்த ஆந்திரப்படை பின்வாங்கியது!
 அவர்களை துரத்திச் செல்வது போல பின் தொடர்ந்து சென்ற தமிழரசு கழகத்தினர் சித்தூர் பகுதிகளில் முகாமிட்டு திருப்பதி வரை தமிழர்களுடைய நிலம் என்பதை நிலைநாட்டி திரும்பினர்!
 இதன் பிறகு தார் கமிஷன்,  J.V.P ரிப்போர்ட் ஆகிய தீர்ப்புகளின் மூலம் 'சென்னை தமிழருடைய நகரம்',  'எல்லைப் பகுதிகள் ஆராயப்பட வேண்டியது' என்று முடிவு கட்டப்பட்டது.
 இதை அன்று 'அகில இந்திய காங்கிரஸ்' முதல் 'ஆந்திர காங்கிரஸ்' வரையிலும் நேரு முதல் சஞ்சீவ ரெட்டி வரையிலும் ஒப்புக்கொள்ளாதார் இல்லை!
 ஆனால் முன்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஒப்புக்கொண்டதை மாற்றி 'ஆலோசிக்காமல் அவசரப்பட்டு தமிழர்களுக்கு அதிக சலுகை வழங்கி விட்டோம்! இப்பொழுது ஆலோசித்து சொல்கிறோம்! சென்னையை தமிழர்களுக்கு தர முடியாது!' என்று சஞ்சீவ ரெட்டி கூறுகிறார்.
 இந்த சஞ்சீவி ரெட்டியையும் மிஞ்சிப் போகிறார் பிரகாசம் 'சென்னையில் மட்டுமல்ல திருநெல்வேலி வரையும் கூட ஆந்திரா கேட்டால் அதில் நியாயம் இல்லாமல் இல்லை' என்கிறார்!
 ஆனால் 1947, 48 இல் இருந்தது போல் இன்று தமிழர்கள் அலட்சியமாக இல்லை!
 ஆந்திர படையெடுப்பை முறியடிக்க துணிந்து நிற்கிறார்கள்!
 சண்டித்தனம் பிடிக்கும் சாமியார், சஞ்சீவ ரெட்டி, பிரகாசம் போன்றோரை சென்னை நகரத்தில் அல்ல அவர் வாழும் ஆந்திர பகுதிக்கு சென்று அதட்டி கேட்கும் அளவிற்கு உணர்ச்சி பற்றி நிற்கிறார்கள்!
 1948 இல் நம்மை எதிர்த்த கட்சிகள் எல்லாம் இன்று நாம் சொல்வதை முன்னிறுத்தி தம்மை வளர்க்கப் பார்க்கின்றன.
 தார் கமிஷனிடம் 'தலைநகரம் தமிழனுக்கு போனாள் என்ன ஆந்திரனுக்கு போனால் என்ன இருவரும் திராவிடர்களே' என்று கூறிக் கொண்டிருந்த ஈ.வே.ரா இன்று விடுதலை மூலம் ஆந்திரரின் மண்வெளியை கண்டிக்கின்றார்.
 தமிழரசு கழக கோரிக்கையை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்த பத்திரிகைகள் எல்லாம் சஞ்சீவ ரெட்டியையும் பிரகாசத்தையும் கண்டித்து தலையங்கம் தீட்டுகின்றன.
 சென்னை ராஜ்ய முதல்மந்திரியே தீர்ப்பு கூறுகிறார் 'சென்னை ஆந்திரர்கள் நினைக்கக் கூடாது' என்பதாக!
இத்தனை தமிழரசு கழகத்தாரின் அரிய சாதனை என்றால் அது மிகையாகாது!
 'மொழிவாரி பைத்தியங்கள்' என்று பழித்துக் கூறிய கம்யூனிஸ்ட் சோசியலிஸ்டுகளை மொழிவாரி மாநில பிரிவினையை ஒப்புக்கொள்ள வைத்தது!
 'ஆந்திரமும் தமிழகமும் ஒன்றே தலைநகரச் சண்டை எங்களுக்கில்லை' என்ற தி.க கூட்டத்தினரின் ஏடான விடுதலையை ஆந்திரர்களைக் கண்டித்து எழுதும்படி திருத்தியது!
 'இது என்ன தமிழ் பாகிஸ்தான்?' என்று கேட்ட தேசிய வட்டாரங்களின் மத்தியில் 'தமிழகம் தனி ராஜ்யம்' என்ற எண்ணத்தை வளர்த்து விட்டது!
  இத்தனை பணிகளையும் ஐந்தே ஆண்டுகளில் தமிழரசு கழகத்தினரால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால் ஆந்திரர்கள் யோசிக்க வேண்டும்.
 இனியும் 'சென்னை ஆந்திரர்களுடையது!' என்று கூறினால் தமிழரசு கழகம் அளிக்கும் பதில் "சென்னை என்று நீங்கள் ஜெபித்துக் கொண்டே இருங்கள். சென்னையை நீங்கள் அடைகிறீர்களா?! நாங்கள் பெறுகிறோமா?! என்பதை பிறகு கண்ணால் காணலாம்".
 ஆந்திரர்களே! ஆத்திரப்படாதீர்கள்!
 உங்கள் ஆசைக்கு சாவு மணி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது!
அதன் ஓசையை நீங்கள் 1953 ஜனவரி 24, 25 சென்னையில் நடைபெறவிருக்கும் தமிழரசு கழக இரண்டாவது மாநில மாநாட்டில் கேட்கலாம்!

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம் 
01.11.1952

No comments:

Post a Comment