Saturday 11 March 2023

தனித் தமிழர்நாட்டில் தலித்தியம்

 தனித் தமிழர்நாட்டில் தலித்தியம்

 தமிழர்நாடு விடுதலை என்றாலே தலித்திய போராளிகள் எதிர்க்கின்றனர்.
 ஏன்? 
தமிழகத்தில் சாதிய வன்கொடுமை நடந்தால் தமிழகம் தாண்டி இந்திய அளவில் தலித்திய ஆதரவு கிடைக்கும் என்கிற நப்பாசையில்!

 ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக வரலாறு இல்லை!

 ஒரு பேச்சுக்கு தமிழர்நாடு தனிநாடாக ஆன பிறகும் சாதிய ரீதியான வன்கொடுமை நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்!
 தமிழர்நாட்டு பட்டியல் சாதியார் எல்லாரும் ஒன்றாகத் திரண்டு தமிழர்நாட்டு அரசின் மீது அழுத்தம் ஏற்படுத்த முடியும்.
 ஆட்சியைக் கலைக்க முடியும்!
பெரும்புரட்சி செய்ய முடியும்!

 ஆனால் இன்றைய நிலை என்ன? 

 தலித் என்கிற வரையறையில் இந்தியா முழுவதும் பல தரப்பட்ட மக்கள் உள்ளனர். அத்தனை பேரையும் ஒரு பொதுவான பிரச்சினையை முன்வைத்து மொழி கடந்து ஓரணியில் திரட்டி மத்திய அரசின் மீது அழுத்தம் செலுத்துவது என்பது ஏறத்தாழ நடவாத காரியம்!

 தமிழகத்தில் எத்தனை சதவீத தலித் வகுப்பினர் உள்ளனரோ அதை விட சற்று குறைவாகவே இந்திய அளவில் தலித் வகுப்பினர் உள்ளனர்.
 இந்திய அளவில் தலித்துகளின் கல்வி மற்றும் பொருளாதாரத்தைப் பார்த்தால் தமிழக அளவில் தலித்துகள் முன்னேறிய நிலையில் உள்ளனர்.

 ஆகவே, தலித் என்கிற கருத்தியலை ஏற்கும் தமிழரும் தமிழர்நாடு விடுதலையை ஆதரிப்பதே தலித்துகளுக்கு அதிக நன்மையைத் தரும்.

 இவ்வாறே ஒவ்வொரு மாநிலங்களும் தனிநாடாகி அந்த அந்த மாநிலத்தின் தலித் மக்கள் ஓரணியில் திரண்டு தமக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வது எளிதாகவும் இருக்கும்.

 நாட்டின் எல்லை சிறியது எனவே ஒரு சிறுபான்மை சாதி போராடினாலே பெரும் அழுத்தம் ஏற்படும்! 

 இங்கே ஒரு சிறுபான்மைச் சாதி பாதிக்கப்பட்டால் அதை தமக்குள் கொண்டுசென்று, தம் மொழியில் பிற தலித்துகளுக்கு கொண்டுபோய் சேர்த்து, பின்னர் மொழிகடந்த பல தலித்துகளுக்கு கொண்டுபோய் சேர்த்து அனைவரையும் ஒன்றுதிரட்டி பெரிய போராட்டம் நடத்தி ஆளும் வர்க்கத்தை அசைத்துப் பார்த்து தமக்கான நியாயத்தைப் பெற்றுக்கொள்வதைப் பற்றி நினைத்தும் பார்க்கமுடியுமா?! 

 மொழிவழி நாடு அமைவது அம்மொழி பேசும் அனைவருக்கும் அதிகாரப் பகிர்வை வழங்குகிறது. 
 ஆட்சியாளர்களுக்கும் குடிமக்களுக்குமான தூரத்தைப் பெருமளவு குறைக்கிறது.
 எனவே தனிநாடு என்று வந்தால் தயங்காமல் ஆதரிப்பது அறிவுடைமை ஆகும்.

 அப்போதும் ஒரு கேள்வி இருக்குமென்றால் அது வேற்று மாநிலத்தில் குடியேறியிருக்கும் பிறமொழியாளரான தலித் என்ன செய்வார் என்பது.

 அவர்கள் மிகச் சிறுதொகையினரே!
 அப்படியானவர்கள் அந்த மாநிலத்தில் தமக்குள் ஒன்றிணைந்து தம் தாய்மண்ணின் தார்மீக ஆதரவுடன் செயல்படலாம்.
 தம் போன்ற வேறு வேற்றுமொழி பேசும் தலித் மக்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளலாம். 

 பி.கு:- இக்கட்டுரையில் தலித் எனும் சொல் எளிமையாகப் புரிந்துகொள்ள பயன்படுத்தப் பட்டுள்ளது.
  தமிழர்நாட்டில் ஒவ்வொரு சாதிக்கும் அச்சாதியின் பெயரிலேயே அச்சாதியின் சதவீதத்திற்கு ஏற்ப இடவொதுக்கீடு வழங்குவது கொள்கையான இருக்கும்.

 

No comments:

Post a Comment