Saturday 10 July 2021

தமிழ்தேசியப் பார்வையில் மேதகு திரைப்படம்

தமிழ்தேசியப் பார்வையில் மேதகு திரைப்படம்

படம் தொடங்கியதுமே இப்படத்தில் காட்டப்படும் அனைத்திற்கும் படக்குழுவினர் பொறுப்பு என்று வருகிறது. இதுவரை நான் பார்த்த திரைப்படங்களில் எல்லாமே கற்பனை என்று டிஸ்க்ளைமர் போட்டு பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்வதையே பார்த்திருக்கிறேன். இது ரொம்ப பெரிய விஷயம்.
படம் டாக்குமென்ட்டரி போல அல்லது வெப்சீரிஸ் போல இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் அப்படி இல்லை. இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் இவ்வளவு தரமான படத்தை எப்படி எடுத்தார் என்று ஆச்சரியமாக உள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அப்படியே நிஜம் போல இருக்கிறார்கள். மாணவராக நடித்துள்ள ஒரே ஒரு துணைநடிகரைத் தவிர அத்தனை பேர் நடிப்பும் அபாரம். டைம் மிஷினில் அந்த காலகட்டத்திற்கே போய் நேரில் அமர்ந்து பார்ப்பது போல இருக்கிறது. உடைகள், பொருட்கள், சூழல் என எல்லாமே கனகச்சிதம். வசனங்கள், கேமரா, இசை, திரைக்கதை எல்லாமே வியந்துபோகும் அளவுக்கு அருமையாக இருக்கிறது.

இனி விமர்சனங்கள்...

* வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் முதல் காட்சியில் இலங்கைத் தீவில் தமிழர் பெரும்பான்மை பகுதிகள் சுட்டிக்காட்டப்படவில்லை.
சிங்களவர் - தமிழர் மக்கட்தொகை மற்றும் சதவீதம் கூறப்படவில்லை.

* மகாவம்சம் புத்த புராணம் அதில் சிங்களவர் பற்றியோ சிங்களம் பற்றியோ எதுவுமில்லை. பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட அதை சிங்களவர் தமதாக்கிக்கொண்டனர் என்பதைக் கூறியிருக்கலாம்.

* மகாவம்சத்தில் சிங்கள இனத்தின் மூதாதை விஜயன் ஒரு வந்தேறி என்பது தெளிவாக உள்ளது அதை சேர்த்திருக்கலாம்.
ஐரோப்பியர் காலம் வரை தீவின் பாதி தமிழர் பெரும்பான்மை என்பதை சுட்டியிருக்கலாம்.

* பிரபாகரன் கருவுற்றபோது அவர்கள் குடும்பம் இருந்த இடம் அனுராதபுரம். எல்லாளன் நினைவிடத்திற்கு மிக அருகில். இதை சுவாரசியத்தைக் கூட்ட பயன்படுத்தியிருக்கலாம். கிபி 1750 வரை அனுராதபுரம் தமிழர் பகுதி. அதை குறிப்பிட்டிருக்கலாம்.

* உயிர்தப்பி வந்த பெண் நடு இரவில் பிரபாகரன் பெற்றோரிடம்  நடந்ததைக் கூறும் காட்சியில் சிறுவனான பிரபாகரன் வரவில்லை. ஆனால் அந்த சம்பவம்தான் பிரபாகரன் அவர்களைப் பாதித்த முதல் நிகழ்வு.

* பிரபாகரன் வீட்டைவிட்டுத் தப்பும் முன் தனது அத்தனை புகைப்படங்களையும் அழித்துவிட்டு போனதை காட்டியிருக்கலாம். இதனால்தான் அவர் நெடுநாள் தலைமறைவாக இருக்க முடிந்தது.
பள்ளிச் சிறுவனாக வெடிமருந்து செய்ய முயன்று விபத்தாகி பிரபாகரனின் காலின் ஒரு பகுதி கருகியதைச் சேர்த்திருக்கலாம்.

* 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறும் பிரபாகரன் 21 வயதில் ஆல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்யும் வரையான வயது முதிர்ச்சி காட்டப்படவில்லை. (ஆனால் பெற்றோருக்கு காட்டப்பட்டுள்ளது)

* ஈழத்தமிழர் ராமேஸ்வரம் சென்று வருவதைக் கூறும் இடத்தில் ஈழத்திற்கும் தமிழகத்திற்குமான குறைவான ஆழமற்ற கடல் தூரம் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.

* தனது கணவரைக் கொலை செய்த புத்த பிக்குக்களை எந்த கட்டாயத்தின் பெயரில் சிறிமாவோ ஏற்றுக்கொண்டு அவர்கள் சொற்படியே நடந்தார் என்பதை விரிவாக காட்டியிருக்கலாம். (பண்டாரநாயக ஒரு கிறித்தவர்) அதன் மூலம் புத்த மத ஆதிக்கத்தை புரியும்படி விளக்கியிருக்கலாம்.

* தமிழாராய்ச்சி மாநாட்டுப் பாடல் மற்றும் சொற்பொழிவுக் காட்சிகளில் கூட்டம் அதிகமாகக் காட்டியிருக்கலாம். அந்த சொற்பொழிவில் தமிழர் வீரம் பற்றி சங்க இலக்கியம் கூறுவதற்குப் பதிலாக சங்ககாலத்தில் இருந்தே ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இருந்த தொடர்பினைக் கூறியிருக்கலாம். சோழர் பாண்டியர் ஆட்சி ஈழம் வரை பரவியிருந்ததை கூறியிருக்கலாம்.

* தந்தை செல்வா ஒரு மலேசியத் தமிழர் மற்றும் கிறித்தவர் என்பதைக் கூறியிருக்கலாம்.

* வெள்ளை நிற சிறிய எழுத்துக்கள் சரியாக இல்லை. கொஞ்சம் பெரிய அளவில் கருப்பு அவுட்லைன் உடன் சப்டைட்டில் போட்டிருக்கலாம்

* துப்பாக்கி பயிற்சி காட்சிகள் வரவில்லை (சிலம்ப பயிற்சிகள் வருகின்றன)

* தலைமறைவு வாழ்க்கையில் உணவு உட்பட அடிப்படைத் தேவைகள் பெறுவதில் உள்ள சிக்கல்களைக் காட்டியிருக்கலாம்.

* கண்டி நாயக்கர்கள் பற்றி கூறியிருக்கலாம்.

* ஏன் திருப்பி அடிக்கல என்று கேட்கும் காட்சியில் இது பாண்டியரின் குரல் என்று வருகிறது. ஆனால் சிங்களவரை படாதபாடு படுத்தியது சோழர்கள். தமிழ் இளைஞர்கள் புலிகள் என்ற பெயரை தேர்ந்தெடுக்க காரணமும் அதுவே.

* பண்டாரநாயக தந்தை செல்வாவுடன் போட்ட ஒப்பந்தத்தை புத்த பிக்குகள் மற்றும் சிங்கள எதிர்க் கட்சிகள் நடத்திய போராட்டத்தால் வெளிப்படையாகக் கிழித்தெறிந்தவர். ஆனால் கிழித்தெறியும் முன்பே கொல்லப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளது.

* பேருந்தைக் கொளுத்தும் காட்சியில் ஒரு சிறுவனாக தனியாளாக எப்படி இரண்டு பேரை பயமுறுத்தி ஓடச்செய்தார் என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கலாம்.

* பொன் சிவகுமாரன் ஏற்கனவே துரையப்பாவின் காரில் வெடிகுண்டு வைத்தவர். துரையப்பா வரும் முன்னரே வெடித்ததால் அவர் தப்பினார். முதல் ஆயுத ரீதியான தாக்குதல் இதுவே. திருப்பியடித்து முதன்முதலில் கைதானவரும் இவரே. துப்பாக்கி, வெடிகுண்டு, சயனைட் என மூன்றையும் பயன்படுத்தியவர். சிவகுமாரன் பற்றிக் கூறுமிடத்தில் அதை சேர்த்திருக்கலாம்.

* பிரபாகரன் தேநீர் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்.

* துரையப்பா கொலை நடந்த தேதியை அல்லது காலகட்டத்தைக் குறிப்பிட்டிருக்கலாம்.

அதாவது ஈழம் பற்றி எதுவுமே தெரியாத ஒருவருக்குக்கூட புரியும்படி இருக்கவேண்டும் என்பது எனது கருத்து. மற்றபடி இவை அனைத்துமே சின்னச்சின்ன குறைகள்தான். இனிவரும் அத்தியாயங்களில் சரி செய்வார்கள் என்று நம்புகிறேன். இது அத்தனையையும் தாண்டி படத்தின் தரத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கற்பனை கதைகளை மட்டுமல்லாது நிஜ வரலாற்றையும் சுவாரசியமாகக் காட்டமுடியும் என்று நிரூபித்துள்ளனர். எதையும் மிகைப்படுத்திக் காட்டவில்லை என்பதையும் இங்கே கூறவேண்டும்.   படம் முடிந்தபிறகு உதவிய அத்தனை பேரின் பெயர்களும் வருவது இன்னொரு பெரிய விஷயம்.
பல சோதனைகளைச் சந்தித்து தனது தரத்தை நிரூபித்துவிட்ட இயக்குனர் தி.கிட்டு அவர்களுக்கு இனி உலகத் தமிழர்களின் பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ராஜராஜசோழர் தனது "ராஜராஜ" பட்டத்தை சோழ ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கு வழங்கியது போல, இனி இப்பட இயக்குநர் அவர்களை "மேதகு" கிட்டு என்று அழைக்குமாறு அனைவரிடமும் கோரிக்கை வைக்கிறேன்.
அரும்பாடுபட்டு இந்த திரைப்படத்தை கொடையளித்த படக் குழுவினருக்கும் இதை துணிந்து வெளியிட்ட பிளாக் ஷிப் குழுவினருக்கும் தமிழினத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி!

தலைவரின் வரலாற்றில் இது தொடக்கப்புள்ளியே, இதுவே இப்படி என்றால் இனி வரும் அடுத்தடுத்த பகுதிகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் சிலிர்க்கிறது.

இதைப் பார்க்காத, பார்த்துப் பாராட்டாத தமிழர் எவராயிருந்தாலும் அவர் தமிழராய்ப் பிறந்ததற்கே அர்த்தம் இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்.

இதை நான் உண்ர்ச்சிவசப்பட்டு கூறவில்லை. ஏனென்றால் இது வெறும் திரைப்படம் இல்லை. உண்மையை அப்படியே பதிவு செய்யும் வரலாற்று ஆவணம். தரமான ஆவணம்!

28.06.2021

No comments:

Post a Comment