Tuesday 18 June 2019

திருமூலர் பார்வையில் பார்ப்பனர்

திருமூலர் பார்வையில் பார்ப்பனர்

சித்தர்கள் பார்ப்பனர்களை எதிர்த்ததாக கூறும் பலர் காட்டும் முக்கிய சான்று திருமூலர் பாடிய ஒரு பாடல். அது வருமாறு,

"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."

இதன் பொருள் தம் பெயரால் மட்டுமே (அதாவது பெயருக்கு பார்ப்பனர் மற்றபடி ஒழுக்கமில்லாதவர்) பார்ப்பானராக இருப்பவர் இறைவனை அர்ச்சனை செய்தால் நாட்டுக்கும், அரசனுக்கும் வேதனைகளும், வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை நந்தி என்பவர் கூறியதாக உரைக்கிறார்.

இந்த நந்தி யார்?
இவர் நிச்சயம் திருமூலரின் மதிப்பிற்குரிய குருவாகத்தான் இருக்கவேண்டும்.
இவர் இறைவனுடன் கலந்த அறவாழி 'அந்தணன்' என்றே திருமூலர் கூறுகிறார்.

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."

பூசை செய்வோர் பற்றிய திருமூலரின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே"

சத்தியம், ஞானம், இறையுணர்வு, பக்தி, இறைவிசுவாசம் போன்றவை இல்லாமல் தன்னைத்தாமே பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் திருமூலர்.

என்றால் தகுதியுள்ள பிராமணரிடம் உண்மை, அறிவு, இறையச்சம் ஆகியன இருக்கும் என்று அவர்களை உயர்வாகத்தானே கூறியுள்ளார்?!

(மாலைத்தென்றல் Subash Kumar அவர்களது பதிவின் தழுவல்)

2 comments:

  1. இது திருமந்திரத்தின் எத்தனையாவது பாடல்

    ReplyDelete
    Replies
    1. 2-ம் தந்திரத்தில், திருக்கோயில் இழிவு என்ற தலைப்பில் 519-வது பாடல்..!

      Delete