பர்தா அணிய குரான் கூறவில்லை
குரான் பெண்கள் உடை பற்றி என்ன கூறியுள்ளது என்று பார்ப்போம்.
"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறு கூறுவீராக!
அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்."
- குரான் 33:59,
மேலும் இருபத்து நான்காவது அத்தியாயத்தில்
"இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.
மேலும், தாங்கள் மறைத்துவைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.
மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்."
- குரான் 24:31
அதாவது பெண்கள் (சிறுமிகள் அல்ல) தங்கள் தலையில் தாழ்வான முக்காடு போட்டிருக்க வேண்டும்
(முகத்தை மறைக்கச் சொல்லவில்லை).
பார்வையைத் தாழ்த்தி தலைகுனிந்து நடக்கவேண்டும். மார்பின் மீது துணிபோட்டு மறைத்துக் கொள்ளவேண்டும். உடலின் கவர்ச்சியான பாகங்கள் வெளித்தெரியக் கூடாது. பெண்கள் அதிர்ந்து நடக்கக்கூடாது. வேற்று ஆடவருக்கு உடல் பகுதியைக் காட்டக்கூடாது.
அந்த காலத்து கட்டுப்பெட்டியான சிந்தனைதான் ஆனாலும் முழுக்க மூடிக்கொண்டு கருப்பு பேய் மாதிரி உலவவேண்டும் என்று குரான் கூறவில்லை.
தலைகுனிந்து வெட்கத்துடன் நிலம் அதிராமல் அன்னநடை நடப்பது அக்காலப் பெண்களின் இயல்பு. அவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறி உடலை வெளிக்காட்டாத நாகரீகமான உடை அத்துடன் முக்காடு, துப்பட்டா.
அவ்வளவுதான்.
அவ்வளவேதான்!
முக்காடு அந்நாட்டு வெயிலை கருத்தில்கொண்டு இருக்கலாம். அல்லது நபியின் மனைவிகளுக்கு மட்டுமானதாக இருக்கலாம்.
என்றால் இன்றைய சுடிதார், தாவணி, சேலை போன்ற உடைகள் இசுலாத் விதிப்படி சரிதான்.
இசுலாத்துக்கு குரான் மட்டும்தான் பிரதானம். ஹதீஸ் எனும் அதன் விளக்கவுரைகளோ அல்லது பிற்கால மத நூல்களோ என்ன கூறினாலும் அது குரானுடன் போட்டிபோட முடியாது.
முதலில் இசுலாமியர்கள் இசுலாத்தை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
மதத்தின் பெயரைச் சொல்லி நடக்கப் பழகியவுடன் பெண்பிள்ளைகளை கறுப்புத்துணியால் மூடி காட்டேரி போல ஆக்கி அவர்கள் வாழ்க்கையை இருளில் தள்ளவேண்டாம்.
அனைவரும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கவேண்டும் என்பதுதான் சீருடையின் நோக்கம். அதிலும் வந்து கருப்பு துணி காவித்துண்டு என மதத்தை நுழைப்பது சரியில்லை.
No comments:
Post a Comment