Tuesday 5 October 2021

மதச் செலவு

மதச் செலவு

 மதம் என்றவுடன் அதன் கொள்கையைப் பற்றி அல்லது அதன்பின் இருக்கும் அரசியல் பற்றி பேசுகிறோமே தவிர எப்போதும் சாமானியனின் நிலையில் இருந்து நாம் பேசியது கிடையாது.

இந்துக்கள் தொடர்ந்து பிற மதங்களுக்கு மாறுகிறார்கள் ஆனால் யாருமே ஏன் இந்துவாக மாறுவதில்லை?!

ஏனென்றால் இந்து மதத்தில் செலவு அதிகம்.
அவ்வளவுதான்.

 சாதிக்கொடுமை, பார்ப்பனியம் என்றெல்லாம் திராவிடியா பாணியில் வடக்கு முதல் தெற்கு வரை சுற்றி சுற்றி வரவேண்டாம்.

நான் கூறுவது தமிழக எல்லைக்குள் மட்டுமே!

அதாவது தமிழகத்தில் சாதிக் கொடுமை மிகவும் குறைவு.
அதிலும் ஜமீன்தார் ஆதிக்கம் இருந்த பகுதிகளைத் தவிர்த்து (90% ஜமீன்தார்கள் தெலுங்கு கம்பளத்தார்) பார்த்தால் சாதிய சமத்துவம் நிலவும் அற்புதமான மண் தமிழகம் (தஞ்சை மாவட்ட கிழக்குப் பகுதி விதிவிலக்கு)

 மற்றபடி தீண்டாமை, சாதிக்கொடுமை, ஆணவக்கொலை போன்றவை பெரும்பாலும் தெலுங்கு ஆதிக்க சாதிகள் செய்வதுதான். 
 சில சம்பவங்கள் திராவிடியா அரசியல் விளையாட்டுகளின் விளைவாக கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ளது. 
 அதாவது அரசிற்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும்போது எதாவது ஒரு மோதல் சம்பவத்தை சாதிக் கலவரம் ஆக்கி மடைமாற்றுவது திராவிடியா உத்தி.
சிறந்த உதாரணமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடக்க காலத்திலேயே பள்ளர் - நாடார் மோதல் மூலம் திசைதிருப்பப்பட்டதைக் கூறலாம். 

 (தமிழகத்தின் முதல் பெரிய சாதிக் கலவரம் 1899 இல் கிறித்துவ மதமாற்ற மிசினரிகள் வெள்ளைக்கார அரசின் ஆதரவுடன் நடத்திய மறவர் - நாடார் கலவரம்)

 இங்கே இருக்கின்ற கிறித்துவர் மற்றும் இசுலாமியரின் பொருளாதார நிலையை வைத்துப் பார்த்தாலே தெரியும். அவர்கள் நசுக்கப்பட்ட மக்கள் கிடையாது. 

 கிறித்துவமாவது ஆங்கிலேய ஆதரவுடன் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்று கூறலாம்.
(உதாரணமாக நாடார்கள் கிறித்துவராக மாறினால் வரி குறையும் என்று மதம் மாறியவர்கள். மதவாரி இடவொதுக்கீடு தான் முதலில் வந்தது. அதில் இந்துக்கள் இடத்தை தமிழின பார்ப்பனர் ஆக்கிரமிக்க அதை எதிர்த்து ஜமீன்தார்கள் தொடங்கியதே திராவிடம்)

 தமிழக இசுலாமியரோ முழுக்க முழுக்க மனமுவந்து இசுலாத்தை ஏற்றவர்கள்.

இன்றும் மதமாற்ற குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன என்றாலும் தமிழகத்தில் மதமாற்றம் குறைவுதான்.

 தமிழகத்தின் பொருளாதார ஏற்ற இறக்கத்தை மதமாற்ற புள்ளவிபரத்துடன் பொருத்திப் பார்த்தால் ஒரு பொதுவான வடிவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 இந்தியா முழுவதும் இந்து மதத்தை பிற மதத்துடன் ஒப்பிட்டால் இந்துக்கள் இரண்டு மடங்கு செலவு செய்கிறார்கள் எனலாம்.

அதாவது வடக்கே இந்து என்பவர் தன் மதத்துக்காக செலவிடுவதை விட தமிழக இந்து அதிகம் செலவிடுகிறார்.

இது தென்தமிழகத்தில் இன்னமும் அதிகம்!

 திருநெல்வேலியில் பிறந்த என்னை எடுத்துக்கொள்ளுங்கள்.
 என் தந்தையின் குலதெய்வம், என் தாயின் குலதெய்வம், ஊரில் என் சமூகம் நடத்தும் கோவில், ஊருக்கு பொதுவான அனைத்து சமூக கோவில், இந்த நான்கிற்கும் ஆண்டாண்டு அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொடை விழா வரும் அத்தோடு செலவும் வரும். ஆடு வெட்ட வேண்டும். வரி கொடுக்க வேண்டும். பொங்கல் வைக்கவேண்டும். பூசைப் பொருட்கள், போக்குவரத்து, விடுமுறை என்று நீளும்.
இதில் நேர்த்திக் கடன்கள் தனி.
கும்பாபிசேகம் தனி.
 இதில் வீட்டில் கன்னி வேறு. அதற்கு கடைசி வெள்ளி தோறும் பூசை.
இதுபோக தீபாவளி, பொங்கல், கார்த்திகை, தமிழ்ப் புத்தாண்டு என பெரிய செலவு வரும். பங்குனி உத்திரம், ஆடி அம்மாவசை, ராம நவமி, பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை என்று ஏகப்பட்ட பண்டிகைகள் வரும். 
 இதில் சீசனுக்கு ஒரு சாமி அல்லது சாமி அல்லது சாமியார் வேறு. சாய்பாபா, பங்காரு, ஜக்கி போல.
 புதுப்புது பண்டிகைகள் வேறு. விநாயகர் ஊர்வலம், கிருஷ்ண ஜெயந்தி, ஹோலி, ஓணம் போல.

 இது போக ஜாதகம் என்கிற கொடிய சதி இருக்கிறது. அதில் அறிவியலும் இல்லை ஒரு புண்ணாக்கும் இல்லை. அதன் பொருட்டு பெரிய கோவில்களுக்கு சென்று வருதல். 

 இது போக விருப்பத்தின் பேரில் ஆன்மீக சுற்றுப்பயணம், நன்கொடை, சந்தா, உண்டியல், அர்ச்சகர் தட்டு என எல்லாவற்றும் பெரிய செலவு வரும்.

 திருமணம், ஈமக்கடன், வளைகாப்பு, தாய்மாமன் சீர் என பண்பாடு சார்ந்த நிகழ்வுகள் தனி.

 ஆற்றங்கரையில் கூரையில்லாமல் இருந்த தெய்வங்கள் இன்று டைல்ஸ் பதித்த கோவிலில் இருக்கின்றன. ஆனால் அதை வணங்கும் மக்களோ இன்னமும் அதே நிலையில்.

 திருநெல்வேலி குடும்பப் பெண்கள் ஆளுக்கு ஒரு சாமி வைத்திருப்பார்கள். அதாவது சாமியாடுவார்கள். சிலர் இரண்டு மூன்று கூட தனக்குள் பதுக்கி வைத்திருப்பார்கள்.

 வீட்டு ஆண்கள் குடித்து அழிப்பதை விட இவர்கள் கும்பிட்டு அழிப்பது அதிகம். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

 என்னிடம் கேட்டால் பாலாபிசேகம் கேட்கும் கற்கோவில் தெய்வங்கள் சுரண்டுவதை விட குலதெய்வங்கள் சுரண்டுவது மிக அதிகம்.

 ஐயையோ நம் மரபு அழிந்துவிடும், கொடிவழி சொந்தங்கள் விட்டுப்போகும் என்று பதறும் முன் இதற்காக அழிந்துகொண்டிருக்கும் மக்களை எண்ணிப் பாருங்கள்.
ஒரு அடிமட்ட உழைப்பாளி நரம்பு தெறிக்க உழைத்து கொடுத்த பணத்தை கோவில்கொடை என்கிற பெயரில் சீரியல் செட் போட்டு ஸ்பீக்கர்களை அலறவிட்டு வீண்டிப்பதை எண்ணிப் பாருங்கள். 

மதம் மாறுவது அத்தனை எளிதான முடிவல்ல. உடன்பிறந்த உறவுகள் கூட விட்டுப்போகும். தன் மொத்த அடையாளத்தையும் இழக்கவேண்டும் என்கிற முடிவுக்கு ஒருவன் தள்ளப்பட வலுவான காரணம் வேண்டும்.

 ஏதோ இசுலாமியரும் கிறித்தவரும் மதவெறி பிடித்து ஒற்றுமையான மதமாற்ற உணர்வுடன் இந்துக்களுக்கு எதிராக சதி செய்து மதமாற்றம் நடப்பதாக இந்துத்துவ வெறியர்கள் சித்தரிக்கிறார்கள்.

 இவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்தும் அரேபியாவில் இருந்தும் பெட்டிபெட்டியாக பணம் வருவதாகவும் கதையளக்கிறார்கள்.

 இந்துக்கள் போலவே இசுலாமியரிலும் அந்த பிரிவு இந்த ஜமாத் அந்த கட்சி இந்த இயக்கம் என்று ஏகப்பட்ட பிரிவினைகள்! 

கிறித்துவத்திலும் அந்த சர்ச் இந்த சபை அந்த பாதிரியார் இந்த பிரிவு என்று ஏகப்பட்ட பிரிவினைகள்!

 இவர்களுக்கு தங்களுக்குள் அடித்துக்கொள்ளவே நேரம் போதவில்லை இதிலே இவர்கள் எங்கே இந்துக்களை சதிசெய்து மதம் மாற்ற?

 நான் கூற வருவது என்னவென்றால் மதம் என்பது மக்களைச் சுரண்டவே ஏற்படுத்தப்பட்டது.
 அளவாகச் சுரண்டவில்லை என்றால் மக்கள் மதம் மாறவே செய்வார்கள். பணக்காரர்களைத் தவிர.

ஒரு அடிமட்ட இந்து மதம் மாறியவுடன் அவனது பொருளாதாரம் மேம்படுவது கண்கூடு. அதுவே அவனுக்கு சமூகத்தில் முன்பை விட அதிக மதிப்பைப் பெற உதவுகிறது. மதம் மாறிவிட்டதாலேயே அவனை யாரும் மதிப்பதில்லை. 

 இந்து இந்து என்று கத்துபவர்கள் அடுத்த மதத்தை குறை சொல்வதில்தான் குறியாக இருக்கிறார்கள். தன் மதத்தை எளிமைப் படுத்துவது பற்றி தன் மதத்து மக்களை மேம்படுத்துவது பற்றி சிந்திப்பது கூட கிடையாது. 
 
இந்து மதம் அழிகிறது அதற்கு முதல் காரணம் அதன் குறைகளை சிந்திக்காத இந்த இந்துமதக் காவலர்கள்தான்! 
 

 

No comments:

Post a Comment