Saturday, 13 April 2024

கோவில் திருவிழாவிற்கு ஊர்வலத்தை விட்டுக்கொடுத்த இசுலாமியர்

கோவில் திருவிழாவிற்கு ஊர்வலத்தை விட்டுக்கொடுத்த இசுலாமியர்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிராமம் கெங்குவார்பட்டி.. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தி பாடல்கள் தினந்தோறும் காலை, மாலை என இருவேளை ஒளிபரப்பப்படும்.
அதேநேரம் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படும் போது கோவிலில் ஒலிக்கும் பக்தி பாடல்களை நிறுத்தி விடுவார்கள்.
 மேலும் திருவிழாவின் கடைசி நாளில் பள்ளிவாசலுக்கு தனியாக பிரசாதம் கோவில் நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கெங்குவார்பட்டி முத்தலாம்மன் கோவில் திருவிழா நேற்று உற்சாகத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.
 வெளியூர்களில் வாழும் கெங்குவார்பட்டி மக்கள் மொத்தமாக சொந்த ஊர் வந்து விழாவினை சிறப்பித்தனர். கிராம மக்கள் பலர் முத்தலாம்மனுக்கு பூச்சட்டி எடு்த்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வெள்ளிக்கிழமையான இன்று திருவிழா நிறைவு பெற்றது.
இதனிடையே முத்தாலம்மன் கோவிலில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. 
நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஒன்று கூடி ஊர்வலமாக மஞ்சளாறு கரையோரத்தில் உள்ள தோப்புக்கு செல்வது வழக்கமாகும்.
ஆனால் நேற்று முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என எண்ணி ஊர்வலம் செல்வதை முஸ்லிம்கள் தவிர்த்தார்கள். 
அவர்கள் தனித்தனியாக பள்ளிவாசல் தோப்புக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். 
பின்பு அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 
இந்த சம்பவத்தை பார்த்த கெங்குவார்பட்டி ஊர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
 மேலும் இ்ந்த சம்பவம் மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துகாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: oneindia இணையம்

No comments:

Post a Comment