Tuesday 13 February 2018

தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்

தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்.

<3<3<3<3<3<3<3<3<3<3<3

காதல் என்றாலே மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் நினைவுக்கு வருகிறது.
ஆனால், இது பெண்கள் காதலுக்காக எதுவும் செய்யவில்லை என்று கூறவும் வழி செய்கிறது.
இதற்கான பதிலடியானது தாஜ்மகாலுக்கு அருகிலேயே ஷாஜகானின் குடும்பத்திலேயே இருக்கிறது .
அதுதான் ஹுமாயூனுக்காக அவரது மனைவி கட்டிய தோட்டக்கல்லறை.

ஷாஜகானுக்கு 9மனைவிகள். அதில் அவருக்கு விருப்பமானவர் மும்தாஜ்.
இவர் 13வது குழந்தையைப் பெறும்போது உதிரப்போக்கு காரணமாக இறந்துவிடுகிறார்.
இது ஷாஜகானை வேதனைகக்குள்ளாக்குகிறது.
உடனே 20,000 தொழிலாளர்களைக்கொண்டு 22ஆண்டுகள் பல்வேறு நாடுகளின் அறிஞர்களையும் பொருட்களையும் கலைகளையும் கொணர்ந்து பெரிய பொருட்செலவில் 1000 யானைகளை வைத்து நினைவிடம் கட்டிமுடிக்கப்பட்டது.

இதே போல் வேறொன்று உருவாகக்கூடாது என்று கட்டியவர்கள் கைகளை வெட்டினார் என்றும், மக்கள் மீது வரி மேல் வரி விதித்து படாதபாடு படுத்தினார் என்றும், மும்தாஜின் தங்கையின் கணவரைக் கொன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
அத்தனையையும் விஞ்சி நிற்கிறது மும்தாஜ் மீதான அவரது காதல்.

ஆனால், 1571ல் அதாவது தாஜ்மகால் கட்டத் தொடங்குவதற்கு 61ஆண்டுகளுக்கு முன்பே ஹுமாயுன் நினைவிடம் கட்டப்பட்டுவிட்டது.

ஹுமாயூன் இறந்து 9ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதைக் கட்டத்தொடங்குகிறார்கள்.
அது ஏன்?

இதற்குப்பின்னால் ஒரு மாவீரனின் பெயர் ஒளிந்திருக்கிறது.
அவன் தான் வடஹிந்தியாவின் நெப்போலியன் என்றழைக்கப்படும் ஹேமு.
(தென்னிந்திய நெப்போலியன், மாமல்லனால் தோற்கடிக்கப்பட்ட புலிகேசி ஆவான்).

ஹேமு ஒரு நடுத்தர ஹிந்து குடும்பத்தில் பிறந்து ஆப்கானிய இசுலாமியரான ஷேர்கான் அரசில்(சுர் பேரரசு) அடிமட்டத்திலிருந்து பல்வேறு பதவிகள் வகித்து பிறகு படையமைச்சராக உயர்கிறான்.
அரசனுக்காக பல்வேறு போர்களில் பலரை தோற்கடித்து மாவீரன் என்று பெயர்பெறுகிறான்.
அரசனை விட செல்வாக்கு பெருகுகிறது.
அரசனின் இறப்புக்குப் பிறகு அரசனாக அரியணை ஏறுகிறான்.
இசுலாமிய ஹிந்து மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் வலிமை பொருந்திய மொகலாயர்களை எதிர்க்கிறான்.

இந்த நேரத்தில் முகலாயப் பேரரசனான ஹுமாயூன் இறந்துவிட வங்காளத்தில் இருந்த ஹேமு தன் படைகளோடு டெல்லிநோக்கி வருகிறான்.

ஹேமு பெயரைக் கேட்டதுமே எல்லாரும் ஓடிவிடுகிறார்கள்.
ஆக்ராவரை முன்னேறிய ஹேமு முகலாயர் தலைநகரான டெல்லியைத் தாக்கி கைப்பற்றுகிறான்.
அங்கே பேரரசனாக முடிசூட்டிக்கொள்கிறான்.

350 ஆண்டுகள் இசுலாமிய ஆட்சிக்குப் பிறகு ஒரு ஹிந்து அரசனாக வந்ததால் ஹிந்து புராணங்களின் வரும் அரசனான விக்ரமாதித்ய என்கிற பெயர் அவனுக்கு அளிக்கப்படுகிறது.

மொகலாயர்கள் மிகவும் சுருங்கி இறுதிப்போருக்கு ஆயத்தமாகிறார்கள்.
இரண்டாம் பானிபட் போர் துவங்குகிறது.

மொகலாயர்களிடம் இருந்தது வெறும் 20,000 வீரர்கள்.
எதிரே நிற்பதோ தொடர்ச்சியாக 22வெற்றிகளைக் கண்டவனும் தன் வாழ்நாளில் ஒரு தோல்வியையும் காணாதவனும் ஹிந்து இசுலாமிய கூட்டாதரவு பெற்ற நாயகனுமான ஹேமு.
ஹேமுவின் படையானது 30,000 வீரர்களையும், 1000யானைகளையும், 51 பீரங்கிகளையும் கொண்டது.

முகல் அரசு இத்தோடு முடிந்தது என்று எல்லாரும் முடிவே கட்டிவிட்டனர்.
இந்த இடத்தில்தான் வரலாறு எதிர்த்திசையில் திரும்புகிறது.

5, நவம்பர்,1556 இல் போர் தொடங்குகிறது.
முகலாயர்கள் தமது திறமையான வில்வீரர்களை பாதுகாப்பாக முன்னேற்றி அழைத்துச் சென்று யானை மேலிருந்து போரை வழிநடத்திவரும் ஹேமுவைக் கொல்லத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், ஹேமுவின் உடல் முழுவதும் கவசம் மூடியிருக்க அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை.
ஆனால், ஒரு மொகலாய வீரன் குறிபார்த்து ஹேமுவின் கண்ணில் அம்பு எய்துவிடுகிறான்.

அவன் விட்ட ஒரு அம்பு போரைத் தலைகீழாக மாற்றிவிடுகிறது.
ஹேமு நினைவிழந்துவிட படைகள் ஒருங்கிணைப்பு இழந்து சிதறுண்டன.
அதன்பிறகு மொகலாயர்கள் கை ஓங்கியது.
முகலாயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர்.
ஹேமுவின் தலையை வெட்டி காபூலிலும் உடலை அவன் முடிசூடிய கோட்டையிலும் தொங்கவிடுகின்றனர்.

அவனுக்கு உதவிய அனைவரையும் துரத்தி துரத்தி படுகொலை செய்து தலையை வெட்டி மண்டையோடுகளால் கோபுரங்கள் அமைத்தனர்.
அதன் பிறகு மொகலாய ஆட்சியானது இன்றைய ஆப்கானிஸ்தான் தொடங்கி பங்களாதேஷ் வரை ஜம்மு தொடங்கி மதுரை வரை பரவுகிறது.

குறுக்கு வழியில் முன்னேறிய, இசுலாமியரை வெறுத்த சிவாஜியைக் கொண்டாடும் வடஹிந்திய ஹிந்து தலைவர்கள் தூயவீரனான ஹேமுவை கண்டுகொள்வதில்லை.
ஹேமுவை இன்று யாருக்குமே தெரியாது.
அவன் தோற்றுவிட்டானல்லவா? அவனது பெயர் வரலாற்றுப் பக்கங்களை மட்டுமே ஆள்கின்றது.

முகலாயர்கள் மீண்டும் தனது அரசை கைப்பற்றியபிறகு முகலாய அரசி பேகா பேகம் தனது காதல் கணவரான ஹுமாயுனுக்கான நினைவிடத்தை  பாரசீகத்திலிருந்து (பெர்சியா) நிபுணர்களை வரவழைத்து  பெரும்பொருட்செலவில் அமைத்து கணவரின் உடலை தோண்டியெடுத்து அதனுள் அடக்கம் செய்கிறார்.

இதுதான் தாஜ்மகாலை அமைக்கும் எண்ணத்தை ஷாஜகானுக்கு ஏற்படுத்தியது.
மகனால் சிறையில் தள்ளப்பட்ட ஷாஜகான் இறந்தபிறகு தாஜ்மகாலில் உள்ள மும்தாஜ் கல்லறைக்கு அருகிலேயே 1666ல் புதைக்கப்பட்டார்.

ஆனால், 1582லேயே தன் கணவருடன் தான் கட்டிய தோட்டக்கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தார் பேகா பேகம்.

பெண்களின் காதல் ஒன்றும் சளைத்தது அல்லவே!

(2 டிசம்பர் 2014 அன்று முகநூலில் இட்டது)

No comments:

Post a Comment