Friday, 17 April 2020

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

  ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.

 அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.

 மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
 தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.

நளிமலை :-

 நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும்  குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
 இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.

 நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
 நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
 தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!

 குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்:  கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.

 சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
 இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.

 --------------

கண்டீரமலை :-

  நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
 புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------

தோட்டிமலை :-

 தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
 அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.

 இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.

 பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------

 குதிரைமலை :-

தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
 குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
  அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.

 பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
 அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.

 நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.

 உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.

 குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
 ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான  பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.

 Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
 அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------

ஏழில்மலை :-

 ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
 இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
 சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
 பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
 பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
 (ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).

 இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
 கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.

[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
 கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
 இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
 இங்கே எருமைகள் மிகுதி.
 கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
 இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
 இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
 கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
 இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
 "நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]

 ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.

 யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.

 ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------

முதுமலை:-

 சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
 மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------

 குடகு மலை:-

 குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.

 குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.

 குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.

 காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.

 குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.

 குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.

 ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
 ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
 ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
 என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

 அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
 அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
 சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

 இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
 இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

 கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

Saturday, 11 April 2020

நிவாரணம் - கேட்டதும் பெற்றதும் ஒரு ஒப்பீடு

நிவாரணம் - கேட்டதும் பெற்றதும் ஒரு ஒப்பீடு

தமிழகம் சராசரியாக ஒரு லட்சங்கோடி நிதியை மத்திய அரசுக்கு கப்பம் கட்டுவதும்
பிறகு பேரிடர் காலங்களில் மத்திய அரசிடம் நிதி கேட்டு குறிப்பிட்ட தொகை கேட்பதும்
அத்தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட மத்திய அரசு தராமல் புறக்கணிப்பதும் வழக்கமாகிவிட்டது.

ஆனால் வரலாற்றிலேயே இப்போதுதான் கேட்டதில் 17% தந்திருக்கிறார்கள்.
இதுவும் தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் கிடைத்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிவாரணம் தேவைப்படும்போது மத்திய அரசிடம் கேட்டதும் கிடைத்ததும் வருமாறு,

2011 தானே புயல் :-

கேட்டது 5249 கோடி
பெற்றது 500 கோடி
(அதாவது 9.5%)

2015 வெள்ளம் :-

கேட்டது 25912 கோடி
பெற்றது 2195 கோடி
(அதாவது 8.47%)

2016 வர்தா புயல் :-

கேட்டது 22573 கோடி
பெற்றது 264 கோடி
(அதாவது 1.16% மட்டுமே!)

2017 வறட்சி :-

கேட்டது 39564 கோடி
பெற்றது 1748 கோடி
(அதாவது 4.4%)

2018 ஒக்கி புயல் :-

கேட்டது 5255 கோடி
பெற்றது 413 கோடி
(அதாவது 7.9%)

2018 கஜா புயல் :-

கேட்டது 15000 கோடி
பெற்றது 1146 கோடி
(அதாவது 7.64%)

2019 வறட்சி :-

கேட்டது 39565 கோடி
பெற்றது 1748 கோடி
(அதாவது 4.4%)

2020 கொரோனா பாதிப்பு :-

கேட்டது 3000 கோடி
பெற்றது 510 கோடி
(அதாவது 17%)

[நன்றி: விகடன்]

ஆனால் தமிழகத்துக்கு வழக்கமாக மத்திய அரசு தரவேண்டிய நிநி ஏறத்தாழ 4500 கோடி ரூபாய் ஓராண்டாக நிலுவையில் உள்ளது.

கஜா புயலுக்கு அறிவித்த நிதியை சாவகாசமாக மூன்று மாதம் கழித்துதான் கொடுத்தார்கள்.

தற்போது அறிவித்த நிதி கைக்கு வருவதற்குள் கொரோனா அதுவே குணமாகிவிடும்.

Tuesday, 7 April 2020

இலக்கியத்தில் எருமையூர்


இலக்கியத்தில் எருமையூர்
 
புராணங்களின் படி மகிஷாசுரனை மகிஷாசுரமர்த்தினி வதம் செய்த இடம் என்று கருதப்பட்டு மைசூருக்கு மகிஷாசுரமர்த்தினிபுரம் என்ற பெயர் இருந்ததாகவும் பிறகு சுருங்கி மகிஷபுரம் என்றாகி பிற்பாடு மைசூர் என்றானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இது பொருத்தமான வாதமாகத் தோன்றவில்லை.
உண்மையில் மகிஷாசுரமர்த்தினி பற்றி வட இந்தியாவிலேயே கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றே காணப்படுகிறது.
மைசூர் என்பது உண்மையில் எருமையூர் ஆகும்.
எருமைகள் மிகுந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம்.
கர்நாடகம் இன்று எருமை வளர்ப்பில் பின்தங்கிவிட்டாலும் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் உள்ளது.
நமக்கு சல்லிக்கட்டு போல கன்னடர்க்கு எருது போட்டி (மரபணு ஆய்வின் படி உலகிலேயே பழமையான எருது வகை இந்திய நீர் எருமைகள் தான்).
எருமை என்பதற்குச் சமற்கிருதச் சொல் மகிஷம்.
எருமையூர் என்பது மகிசூர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர்.

  ஆனால் எருமையூர் மையூர் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
மையூர் என்பதே மைசூர் என்று ஆகியிருக்கவேண்டும்.
இதுவே இயல்பான மாற்றமாகப் படுகிறது.
இதற்கு இலக்கியச் சான்றாக வேளிர் குடியைச் சேர்ந்த 'மையூர் கிழான்' என்பவர் சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது (காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு).
மைசூர் நகரின் பெயராலே அம்மாநிலம் முழுவதும் 1980 வரை வழங்கப்பட்டது.
பிறகுதான் கர்நாடகா என்று மாற்றினர்.
எருமையூர் பற்றி இலக்கியங்களில் உள்ள குறிப்புகள்,
வடிகட்டப்பட்ட கள் கிடைக்கும் எருமையூர் எனுமாறு
"நார் அரி நறவின் எருமையூரன்" அகநானூறு (36) கூறுகிறது.
குடநாடு என்பது சேரநாட்டின் வடபகுதி.
இதில் நுண்வேலைப்பாடு நிறைந்த பூண் அணிந்த (கொம்புகளை உடைய) எருமை மாடுகள் நிறைந்திருந்தன என்பதை 'நுண்பூண் எருமை குடநாட்டன்ன' (அகநானூறு 115) எனும் வரிகள் உணர்த்தும்.
சேரநாட்டு வளத்தைக் கூறும் சிறுபாணாற்றுப்படை (41- 46) செங்கழுநீர்ப் பூக்களை எருமைகள் மிகுதியாக மேய்ந்துவிட்டு பலாமர நிழலில் உறங்கின என்று கூறுகிறது.
அதாவது சேரநாட்டிலும் அதையொட்டிய எருமைநாட்டிலும் எருமைகள் அதிகளவு இருந்தன.
ஆனால் அயிரி ஆறு (ஹரங்கி ஆறு) பாயுமிடத்தில் வடுகரின் எருமை நாடு இருந்தது எனுமாறு,
"வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாடு"
என்று அகநானூறு (253) கூறுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள
'வடுகர் பெருமகன் எருமை நன்னாடு' என்பதை
'வடுகப் பெருமான் ஆளும் எருமை நாடு'
என்று பொருள் கொண்டால் 'எருமைநாடு' என்பது வடுகரின் நாடு என்றாகிறது.
இதை கன்னடர் தமது தரப்பு சான்றாக வைக்கக்கூடும்.
ஆனால் 'வடுகனான எருமை என்பான் ஆளும் நாடு'
என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.
ஏனென்றால் இப்பாடல் வரிகள் முதலில் அவனது பண்புகளைக் கூறி அத்தகைய எருமையின் நாட்டில் அயிரியாறு பாய்கிறது என்று அவனைப் பற்றித்தான் கூறுகிறதே தவிர அவனது நாட்டைப் பற்றி கூறவில்லை.

எருமை என்பவன் இரவில் தாக்குபவன் என்றும்
மாடுகளை மேய்க்கும் போது கோவலர் எழுப்பும்  ஒலிகளைக் கற்றுக்கொண்டு அதுபோல் ஒலியெழுப்பி காளைகளையும் கன்றுடன் பசுக்களையும் கவர்ந்து சென்று தனது மண்டபம் நிறைய கட்டிவைத்திருப்பவன் என்றும்
வலிமையான தோள்களை உடையவன் என்றும் கூறி
அவனை வடுகர் பெருமகன் என்றும் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட குடியின் தலைவனை அக்குடிப் பெயருடன் 'பெருமகன்' என்று சேர்த்துக் கூறுவது வழக்கம்.
எ.கா: ஆவியர் பெருமகன் (பேகன்)
கள்வர் பெருமகன் (தென்னன்)
குறவர் பெருமகன் (ஏறைக்கோன்)
ஆக 'வடுகரின் தலைவனான எருமை' என்று பொருள்கொள்வதே சரி!
அயிரி ஆறு எனும் ஹரங்கி ஆறு காவிரி உற்பத்தி ஆகி சிறிது தூரம் ஓடியதும் அதில் வந்து கலக்கும் குறுகிய நீளமுள்ள ஆறு ஆகும் (717 கி.மீ).
அயிர் என்பது நுண்ணிய அல்லது மிகச்சிறிய என்ற பொருளைத் தரும்.
எனவே இந்த ஆறுக்கு இது பொருத்தமான பெயரே!
(இவ்வாறு பற்றி அகநானூறு 177 இலும் வருகிறது)
இந்த சிற்றாறு எருமை ஆண்ட நாட்டின் முக்கிய நதி என்று கூறுவதன் மூலம் அவனது நாடு மிகவும் சிறியது என்பதையும் ஊகிக்கலாம்.
என்றால் குடகு வரை சேரர் ஆண்டதும்.
அதற்கு வடக்கே வடுகரின் மொழிபெயர் தேயம் இருந்ததையும் ஊகிக்கலாம்.
அதாவது தற்போதைய கூர்க் மாவட்டம் பாதிவரை சேரநாட்டுடையது.
பிற்பாடு ஹொய்சள அரசர் சாசனத்திலும் எருமை என்னும் பெயரால் மைசூர் குறிக்கப்பட்டுள்ளது
(சான்று: Epigraphia Carnatica., Vol X c. w. 20).
எனவே மகிஷூர் என்பது மைசூரின் பழைய பெயர் இல்லை.
படம்: எருமைநாடு மற்றும் அதனருகில் வடுகர் நாடு


Sunday, 5 April 2020

கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு


கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு
இதுவரை வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் பங்கு என்ன?!
யோசித்ததுண்டா?!
இதை நீங்கள் யோசித்தால் ஒன்று தெளிவாகப் புரியும்.
நமது தேவைகளை நிறைவேற்றுவது மாநில அரசாங்கம் மட்டுமே!
மத்திய அரசு எதுவுமே செய்வதில்லை.
அது வரி என்கிற பெயரில் மாநிலங்களைக் கொள்ளையடித்துவிட்டு 'அதைச் செய்' 'இதைச் செய்' என்று கட்டளை போடுவதோடு சரி!
தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என்று வைத்துக்கொள்வோம்.
தோராயமாக (தலைக்கு 3000 ரூபாய் என) ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் 12,000 ரூபாய் மத்திய அரசுக்கு வரி கொடுக்கிறோம்.
இத்தனை பணத்தையும் வாங்கிக்கொண்டு மத்திய அரசு நமக்குத் தருவதென்ன?!
ரயில் போக்குவரத்து, தபால் சேவை, ராணுவ பாதுகாப்பு (?), விமான சேவை (திவாலாகிவிட்டது) , ஒன்றிரண்டு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.
அவ்வளவுதான்! அவ்வளவேதான்!
தமிழகம் கட்டும் வரி ஒரு ரூபாய் என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி 30 பைசா என்ற அளவில் உள்ளது.
வரியை மட்டும் இங்கே கூறியுள்ளேன்.
அதைப்போல இரண்டு மடங்கு நமது வளங்களைச் சுரண்டுகிறது ஹிந்தியா!
எவ்வளவு இக்கட்டான சூழலிலும் நமக்கு மத்திய அரசு உதவுவது கிடையாது!
நாம் கட்டும் வரி 100 ரூபாய் என்றால் பேரிடர் காலங்களில் நாம் 10 ரூபாய் கேட்பதும் மத்திய அரசு 10 பைசா விட்டெறிவதும் வாடிக்கையாகிவிட்டது.
[இதையெல்லாம் புள்ளிவிபரமாக தமிழ்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ளது.]
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் மத்திய அரசு செய்தவற்றைப் பார்ப்போம்.
முன்னெச்சரிக்கை :-
ஜனவரி 31 இல் கொரோனா இந்தியாவிற்கு வந்துவிட்டது.
மோடி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கூடி பேசியது மார்ச் 4 இல்.
இதற்குப் பத்துநாட்கள் கழித்து கொரோனா ஒரு தேசிய அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது.
மார்ச் 16 இல் சார்க் கூட்டமைப்பு நாடுகளுடனான சந்திப்பில் கொரோனா பாதிப்பு விவாதிக்கப்படுகிறது.
மார்ச் 19 இல் பொதுமக்கள் 22ம் தேதி ஊரடங்கைக் கடைபிடிக்க மோடி வேண்டுகோள் விடுக்கிறார்.
மார்ச் 22 இலிருந்து தரையில் ஓடும் சைக்கிள் வரை தடுத்து நிறுத்திய மோடி அரசு மார்ச் 25 இல் தான் (முதல் வேலையாக செய்திருக்கவேண்டிய) விமான சேவை ரத்து என்பதை செயல்படுத்துகிறது.
மருந்து துறை :-
இந்திய மருந்து தயாரிப்பு துறை படுத்து பல ஆண்டுகள் ஆகின்றன.
   1990 களில் தன் சொந்தக் கால்களில் நின்ற இந்திய மருந்து தயாரிப்பு கம்பெனிகள்
இப்போது சீனாவை நம்பி இருக்கின்றன.
சென்ற ஆண்டு சீனாவிலிருந்து இறக்குமதியான மருந்துப் பொருள் மட்டுமே நாட்டின் மொத்த மூலப் பொருள் இறக்குமதியில் 68%  என்கிறது எக்கனாமிக் டைம்ஸ்.
இப்போது சீனாவே படுத்துவிட்டது.
மருந்து எப்படி இருக்கும்?!
மலேரியாவுக்கு பயன்படும் மருந்தை பயன்படுத்தலாம் என்று தெரிந்தவுடன் அதன் ஏற்றுமதிக்குத் தடை விதித்தனர். அது ஒன்றுதான் குறிப்பிடும் அளவான செயல்பாடு.
மருத்துவத் துறை :-
இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவில்தான் மருத்துவ வளர்ச்சி இருக்கிறது.
(இந்தியாவிலேயே தமிழகம்தான் இதில் முதலிடம் 260 பேருக்கு ஒரு டாக்டர்!
இதிலும் நீட் என்ற மண்ணைப் போட்டுவிட்டனர்).
41 பேருக்கு ஒரு மருத்துவர் இருந்த இத்தாலியே கொரோனாவிடம் மண்டியிட்டுவிட்டது என்றால் இந்தியா எவ்வளவு தீவிரமாக செயல்படவேண்டும் என்பதை யூகிக்கவும்.
ஆராய்ச்சித் துறை :-
கிருமிகள் ஆராய்ச்சியில் இதுவரை இந்தியா துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
மற்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தனியாக நிதி ஒதுக்கி தீவிரமாக இயங்கிவருகின்றன.
பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் பலர் தமிழர்களாக இருக்கின்றனர்
அதாவது அறிவாளிகள் அத்தனைபேரும் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியாயிற்று.
உயிரியியல் தொடர்பான பரிசோதனைக் கூடங்கள் நாட்டில் மொத்தமே 40 தான் இருக்கின்றன.
அவைகளும் பல பல்கலைக் கழகங்களில் கல்விக்குத்தான் பயன்படுகின்றன.
அவசரகால உற்பத்தி :-
மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு மற்றும் தற்காப்பு உபகரணங்கள் தயாரிப்பு என்றாவது கவனம் செலுத்தவேண்டும்.
இங்கே மருத்துவர், செவிலியர், காவலர் என எவரிடமும் போதுமான மூச்சு கவசமோ, கையுறைகளோ, கிருமிநாசினி நீர்மங்களோ இல்லை.
(இருக்கின்றவையும் மாநில அரசுகள் கொடுத்தவை)
இது தொடர்பாக மார்ச் 18 இல் ஆபரேசன் செய்யப்படும்போது அணியப்படும் மூச்சுக் கவசங்களைத் தயாரிக்கும் அரசு நிறுவனமான HLL மற்றும் நெசவுத்துறை அதிகாரிகள் கூடிப் பேசினர்.
தயாரிப்பை அதிகரிப்பது பற்றியும் 75 லட்சம் மூச்சு கவசங்கள் உருவாக்கத் தேவை இருப்பது பற்றியும் HLL இரண்டு மாதங்களாக வலியுறுத்தி வந்ததை அந்த சந்திப்பிற்கு பிறகும்கூட நிறைவேற்றவில்லை.
இப்போது வரை HLL க்குத் தேவையான துணி சப்ளை செய்யப்படவில்லை.
பல உள்ளூர் நிறுவனங்கள் உற்பத்திக்கு அனுமதி கேட்டும் இதுவரை தரப்படவில்லை.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் "10 லட்சம் N-95 மூச்சுக் கவசங்கள் கேட்டோம். கிடைத்ததோ வெறும் 50,000 தான்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பண உதவி:-
மார்ச் 24 இல் சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு 1500 கோடி அளித்ததோடு சரி.
(பட்டேல் சிலை செலவு 3,000 கோடி என்பதை நினைவில் கொள்க)
பிரதமர் நிவாரண வைப்பு 3000 கோடி,
மாநிலங்களுக்கான நிவாரண வைப்பு 20,000 கோடி,
தேசிய பேரிடர் நிவாரண வைப்பு 25,000 கோடி என எல்லாப் பணத்தையும் மத்திய அரசு வைத்திருக்கிறது.
உள்நாட்டிலும் ல நடிகர்களும் தொழிலதிபர்களும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.
(இந்த திட்டத்திற்கு பெயர் என்ன தெரியுமா?! "PM cares")
இப்படியாக தனியே 6500 கோடி வரை கிடைத்துள்ளது.
ஆனால் இதுவரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை.
கேரள வெள்ளத்தின் போது வெளிநாட்டு வாழ் மலையாளிகளிடம் நன்கொடை வாங்கக்கூடாது என்று கூறிய மத்திய அரசு தற்போது வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் நன்கொடை பெற்றுவருகிறது.
என்றால் கொரோனா ஒரு தேசியப் பேரிடர்தானே?!
என்றால் மாநிலங்களுக்கு மேற்கண்ட நிதியை சிறிதுசிறிதாக ஒதுக்கலாம்தானே?!
ஆனால் மோடி இந்த நிலையிலும் பெருமை பீத்த கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சார்க் நாடுகள் கூட்டாக செயல்பட அழைப்பு விடுத்து அதற்கான கூட்டு நிதிக்கு 75 கோடியை கொடுத்துவிட்டு வந்துள்ளார்.
[படம்: பிரதமர் நிவாரண நிதியில்  வருமானம் மற்றும் செலவு ஒப்பீடு.
இதிலேயே தெரியும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும் லட்சணம்]
ஆள் உதவி :-
இத்தனை பெரிய நாட்டில் போலீஸ் பலம் மிகவும் குறைவு.
இதனால் மக்களைக் கட்டுப்படுத்த காவல்துறை திணறி வருகிறது.
எப்படியும் பாகிஸ்தான் படையெடுக்கப் போவதில்லை ராணுவத்தை அனுப்பாவிட்டாலும் துணைராணுவத்தையாவது அனுப்பியிருக்கலாம்.
மத்திய மருத்துவ நிறுவனங்களில் முக்கிய டாக்டர்கள் கேரளா பாதிக்கப்பட்ட போது அங்கே வந்த உதவியது உண்மைதான்.
ஆனால் அதன் பிறகு எங்குமே மத்திய அரசு சார்பில் வழிநடத்த திறமையான மருத்துவ மேதை ஒருவர் கூட எந்த மாநிலத்திற்கும் அனுப்பப்படவில்லை.
மனவலிமை ஊட்டுதல் :-
அறிவிப்புகளை மோடி அறிவிக்கிறார்.
மக்களிடம் மேல்வலியாமல் எதையாவது செய்யச் சொல்கிறார்.
அவ்வளவுதான்.
இதுவரை நிலை என்ன?
இதை சமாளிக்க என்ன திட்டம் வைத்துள்ளோம்?
பிற நாடுகள் இதற்கு என்ன செய்கின்றன? என அறிவுப் பூர்வமாக எதையும் பேசுவதில்லை.
உணர்வுப் பூர்வமாக பேசுகிறார் அவ்வளவே!
அவர் தன் திருவாயை அசைத்ததைத் தவிர வேறு என்ன செயல்பாட்டைச் செய்தார் என்று கேட்டால் விரல்களை அசைத்து ட்வீட் போட்டதைச் சொல்லலாம்.
மற்றபடி கொரோனா அமைத்துள்ள போர்க்களத்தில் அவர் கால்வைக்கவே இல்லை.
மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி என்றால்
முதலில் லொக்கு லொக்கு என்று இருமிவிட்டு கச்சாமுச்சா என்று பிணாத்தும் ஒரு ரிங்டோனை அனைவருக்கும் வைத்தனர்.
அதனால் யாருக்கு என்ன புரிந்தது என்பது கொரோனாவுக்கே வெளிச்சம்.
மோடியும் எப்போதும் கெக்கரா பெக்கரா என்று இந்தியில்தான்  பிணாத்துகிறார்.
மக்களுக்கு புரியும்படி பேசமுடியாவிட்டால் கீழே சப் டைட்டிலாவது போடலாமே?!
அப்படி என்ன திமிர் என்று நினைக்கத் தோன்றுகிறது.
மக்களுக்கு ஓடோடி உழைப்பது மாநில அரசும் அதில் பங்குவகிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
மத்திய மந்திரிகளில் மோடி தவிர எவரும் வாயை அசைக்கும் வேலையைக் கூட செய்வது இல்லை.
பொருள் உதவி :-
கொரோனா இருக்கிறதா இல்லையா என்று கண்டறியும் பரிசோதனை கிட் வாங்கவோ தயாரிக்கவோ எந்த முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை.
கொரோனா பாதிப்பு சோதனை செய்வதில் இந்தியா மிகவும் பின்னே இருக்கிறது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Mylab எனும் ஒரு நிறுவனம் தயாரித்த பரிசோதனை கிட் மார்ச் 24 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சோதனைக்கு 2000 ரூபாய் செலவாகும் அதுவும் அந்த ஒரே நிறுவனத்தை நம்பியிருக்கும் நிலை.
இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது!
சீனா கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஒரே நாளில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டியது ஆனால் மத்திய அரசு அப்படி எதுவும் செய்யவில்லை.
மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசின் கட்டிடங்களை பயன்படுத்த அளிக்கலாம்.
மத்திய அரசு நடத்தும் நடத்தும் மருத்துவமனைகளில் ஒன்றை இதற்கு தனியாக அர்ப்பணிக்கலாம்.
இப்படி எதையும் செய்யவில்லை.
மலேரியா மருந்து மற்றும் பரிசோதனை கிட் தயாரிப்பை ஊக்கப்படுத்தி வரிகளைத் தளர்த்தி அனைவருக்கும் கிடைக்க எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.
திட்டமிடுதல் :-
வீட்டிலேயே இருங்கள் என்று கூறியதைத் தவிர கொரோனாவைக் கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லாதபோதே நமக்குப் புரிகிறது இதனால் ஏற்படும் பொருளாதார சரிவை ஈடுகட்ட எந்த திட்டமும் இருக்காது என்று.
தொழில்துறை மீண்டுவர எத்தனை நாள் ஆகும் அதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்யவேண்டும் என்று தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நாடுகளைப் பார்த்து நமக்கு ஏற்றதுபோல ஒரு திட்டத்தை தயாரிப்பதும் அவசியம்
.
அனேகமாக மோடியின் அடுத்த திட்டம் "மொட்டைமாடியில் நடனம் ஆடுவதாக" இருக்கலாம்.


Saturday, 4 April 2020

தொடரும் வன ஆக்கிரமிப்பு

தொடரும் வன ஆக்கிரமிப்பு

மலையாளிகள் தமிழகத்து காடுகளை தினமும் ஒரு ஏக்கர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தேனி மாவட்ட கம்பமெட்டு பகுதி இதற்கு நல்ல உதாரணம்.
தமிழக வனத்துறை, காவல்துறை, கலெக்டர், அமைச்சர் என அத்தனை பேர் வந்து பார்த்தும் எதுவுமே செய்யமுடியவில்லை.

கேரளா வன ஆக்கிரமிப்பு 1990 களில் மிகத் தீவிரமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் குமுளியில் துவங்கி ஒன்னாம் மைல், இரண்டாம் மைல், ஆசாரிபள்ளம், கம்பமெட்டு, துாக்குபாலம், குதிரைபாஞ்சான், ராமக்கல்மெட்டு, போடிமெட்டு வரை வனப்பகுதிகள் நீள்கிறது.

குமுளி முதல் போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதி 700 எக்டர் வரை  ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பூகோள அமைப்பில் கேரள மாநில பகுதியில் குடியிருப்புக்களாகவும், தமிழகத்தில் வனப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
இதனால் அரச ஆதரவுடன் மிக எளிதாக தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்து காபி, ஏலக்காய், மிளகு, வாழை சாகுபடி செய்வது, குடியிருப்பு, சிறு தொழில், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, சொகுசு மாளிகைகள் என மலையாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

1994 ஆசாரிபள்ளம் பகுதியில் மிகப் பெரிய ஆப்பரேஷன் நடத்தி, 150 எக்டேர் வனப்பகுதியை தமிழக வனத்துறை மீட்டது.
ஆனால் எஞ்சிய பகுதிகளை மீட்கமுடியவில்லை.

கம்பமெட்டு பகுதியில் 2014 இல் மீண்டும் முழுமூச்சுடன் இறங்கிய மலையாளிகள் சிறிது சிறிதாக 500 மீட்டர் வரை ஆக்கிரமித்தனர்.

எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

2017 இல் இவர்கள் மெயின்ரோட்டில் ஒரு கன்டெயினர் வைத்து செக் போஸ்ட் அமைத்தபோது பாரஸ்டர் ராஜூ என்பவர் தட்டிக்கேட்க அவரை அடித்து கீழே தள்ளினர் மலையாள அதிகாரிகள்.
அவர் காவல்துறையை அழைத்துவர போக்குவரத்து பாதிக்கப்பட பிரச்சனை பெரிதானது.

தாசில்தார் வந்து பேசிப்பார்த்தபோதும் சர்வே எடுக்க விடாமல் மலையாளிகள் பிரச்சனை செய்தனர்.

பிறகு கலெக்டர் வந்து பேசியும் அவர்கள் வழிக்கு வராததால் அமைச்சர் உதயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது எடுத்த சர்வேயில் அந்தப்பக்கத்து கேரள காவல்நிலையமே தமிழக எல்லைக்குள் வருவது தெரிந்தது.

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என்று சொன்னார்.

கூட்டு சர்வே தேதி அறிவித்தார்கள்.

மலையாள நாளிதழ்கள் தமிழக அரசு இப்பகுதியில் கேரள மின்சாரத்தைத் திருடுவதாக செய்திகளை வெளியிட்டன.

பல பெரிய நிலப்பரப்புடன் அரியவகை மரங்கள், விலங்குகள், ஒரு அருவி என மலையாளிகள் விழுங்கியிருப்பது மிக அதிகம்.

இடையில் தென்னிந்தியா பார்வார்டு பிளாக் சார்பில் 50 பேர் சென்று எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்

பிறகு நடப்பட்ட 14 கற்களையும் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.
[தினகரன் 23.06.2017
தலைப்பு: கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்]

1750 ஏக்கர் (700 ஹெக்டேர்) தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்தபடி அமர்ந்திருக்கும் மலையாளிகள் இன்றுவரை ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

இப்பிரச்சனையில் தினமலர் (தேனி மாவட்ட பதிப்பு) தொடர்ச்சியாக கவனம் செலுத்தி  வெளியிட்ட செய்தித் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள ஆக்கிரமிப்புகளை
அகற்றாத தமிழக வனத்துறை
[செப் 09, 2019]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக வனப்பகுதிகள் மீட்பது எப்போது:முயற்சி கூட எடுக்காமல் வேடிக்கை பார்க்குது வனத்துறை
[செப் 20,2018]

தமிழக வனப்பகுதி
ஆக்கிரமிப்பு படிப்படியாக
அகற்ற திட்டம்
[மே 06, 2018]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக
வனப்பகுதிகள் மீட்கப்படுவது எப்போது? அதிரடியாக களம்
இறங்குமா வனத்துறை
[பிப் 02, 2018]

தமிழகம் மின்சாரம்
திருடுகிறதாம்! அவதூறு
பரப்புகிறது கேரளா
[ஆக் 07, 2017]

கம்பமெட்டில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர்
ஆய்வு : வன எல்லை
நிர்ணயத்திற்கு கூட்டு சர்வே
செய்ய நடவடிக்கை
[ஆக் 05, 2017]

கம்பமெட்டில் சர்வே கற்களை
ஊன்றி போராட்டம் :
தென்னிந்திய பார்வர்டு பிளாக்
கட்சியினர் கைது
[ஜூலை 04, 2017]

தமிழக சர்வே கற்கள் அகற்றம்:
கேரள ஆக்கிரமிப்பு கும்பல்
அடாவடி
[ஜூன் 22, 2017]

தமிழக -- கேரள வன எல்லை
நிர்ணயம் ஜூன் 7ல் கூட்டு சர்வே
[ஜூன் 04, 2017]

வனப்பகுதியில்
கண்காணிப்பு கோபுரம்
அமைப்பது குறித்து இடத்தேர்வில் அதிகாரிகள் தீவிரம்
[மார் 25, 2017]

மாவட்ட வன அலுவலர்
டிரான்ஸ்பர் ஆக்கிரமிப்பு
அகற்றுவதில் தொய்வு
[மார் 10, 2017]

தமிழக வனப்பகுதி மீட்கப்படுமா -
மாவட்ட அதிகாரிகள் பாராமுகம்
[பிப் 27, 2017]

கம்பமெட்டில் செக்போஸ்ட்:அடம்
பிடிக்கும் கேரளா : தமிழக
அதிகாரிகள் ஏமாற்றம்
[பிப் 24, 2017]

தமிழக வனப்பகுதிகளில்
ஆக்கிரமிப்பு... தொடர்கிறது:
வன எல்லை நிர்ணயம் அவசியம்
[பிப் 25, 2016]

கம்பம் மெட்டு அருகே கேரள
காற்றாலைக்கு தமிழக
வனப்பகுதியை ஆக்கிரமித்து
ரோடு
[ஜூன் 23, 2014]

தமிழ் எழுத்துக்களில் மலையாளம் (1789)

தமிழ் எழுத்துக்களில் மலையாளம் (1789)

1789 இல் திப்பு சுல்தான் கொச்சி டச்சுப்படைக்கு எழுதிய கடிதம் மற்றும் அதற்கு டச்சு தரப்பில் அனுப்பப்பட்ட மறுமொழி இங்கே தரப்பட்டுள்ளது.
  இதில் மலையாளம் தமிழ் எழுத்துக்களில் எழுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
சான்று: The dutch in malabar (page 110)
 அதாவது 9 ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் வட்டெழுத்து முறையுடன் சமஸ்கிருத உச்சரிப்புக்கான கிரந்த எழுத்துக்கள் கலந்து எழுதி மலையாள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
 (இந்த கிரந்த எழுத்துகள் தமிழ் வடிவம் தழுவியவை, சமஸ்கிருதம் எழுதவே இந்த கிரந்த முறை அதிகம் பயன்பட்டது)
 இப்படி கேரளா முழுவதும் பல்வேறு எழுத்துமுறைகள் தோன்றின.
 1500 களில் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவர் மலையாள எழுத்துக்களை ஒழுங்காக்கி தொகுத்து தற்போதைய மலையாள எழுத்துருவைத் தோற்றுவித்தார்.
 ஆனால் 1800 கள் வரை புழக்கதில் கிரந்தம் கலந்த தமிழ் எழுத்துக்களே இருந்தன.
 1772 இல் மலையாளம் அச்சில் ஏறியது.
 1842 இல் முதல் முழுமையான மலையாள புத்தகம் வெளிவந்தது.
 1872 இல் மலையாள அகராதி வெளிவந்தது.
 இறுதியாக கேரளத்தின் வடபகுதியான மலபார் 1950 களில் தமிழ் எழுத்துருக்களை கைவிட்டது.
1971 இல் தான் மலையாள எழுத்துக்கள் குறைக்கப்பட்டு எளிதாக்கப்பட்டு தற்போதைய வடிவத்தை அடைந்தது. 
நன்றி: Gabriel Raja

கிபி 1647 இல் பள்ளருக்காக மறவர் அளித்த கொடை

கிபி 1647 இல் பள்ளர் சமூகத்திற்காக மறவர்கள் அளித்த கொடை
கிபி1647ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூர் பள்ளர் சமூக மக்களுக்கு குடிதண்ணீர் குளம் இல்லாமல் இருந்த போது,
உலகப்பன் சேர்வைக்காரர் ஆணையின் பேரில் செவலூரில் உள்ள
நாயகத்தா தேவன்
உத்திங்க தேவன்
பசுப்ப தேவன்
சிலம்பத் தேவன்
ஆகியோரின் நடவு நிலத்தில் செவலூர் பள்ளர் சமூகத்தவர்கள் ஈரானி வெட்டிக் கொள்ள கொடையளிக்கிறார்கள்.
பள்ளர் சமூகத்தின் குடிதண்ணீர் தேவைக்காக தங்களது நடவு நிலத்தையே விட்டுக் கொடுத்த மறவர் பெருங்குடிகளை, பள்ளர் சமூகம் மறந்தாலும்...! வரலாறு மறக்காது, மறைக்கவும் செய்யாது...!
வரலாறு இப்படி இருக்க....
இன்று இருவரையும், இரு துருவங்களாக ஆக்கியது யார்...?
சிந்தியுங்கள், செயல்படுங்கள்...!
(நன்றி: தமிழக தொல்லியல் துறை)
பதிவர்: சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு