Thursday, 6 November 2025

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

ஆந்திரம் பிரிந்து ஒரு மாதம் கடந்து விட்டது.
ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் தெலுங்கு மொழி இன்னும் நமது ராஜ்ய ரேடியோ நிலையத்திலிருந்து ஒழியவில்லை.
காலையில் எழுந்து ரேடியோவை திருகினால் நாம் கேட்கும் மொழி தெலுங்காகத்தான் இருக்கிறது.
தமிழில் பாடகர் பாடினாலும் இன்னார் இன்ன ராகம் இன்ன தாளத்தில் பாடுகிறார் என்பதை தெலுங்கில் தான் சொல்லுகிறார்கள்!
பாடகர்களிலும் பெரும்பாலோர் இன்னமும் தெலுங்கில் பாடுவதை விட்டதாக தெரியவில்லை.
ரேடியோ நிலைய அதிகாரிகள் வெறும் தமிழ் மட்டும் பாடுபவர்களை தரக்குறைவாக நடத்துகிறார்களாம்!
தெலுங்கிலும் பாடாவிட்டால் பாட அனுமதிக்க முடியாது என்று மிரட்டுகிறார்களாம்!
ஆந்திரம் பிரியும் முன்னர்  இந்த நிலையில் இருந்த்தை நாம் ஓரளவு சகித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் ஆந்திரம் பிரிந்த பின்பும் அதே நிலை தான் என்றால் இப்படி ஒரு ரேடியோ நிலையம் அவசியம் தானா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் வேதனையுடன் தலைத் தூக்கி நிற்பது நியாயமே.
ஆந்திரர்களுக்கு விஜயவாடா ரேடியோ நிலையம் தனியாக இருக்கிறது.
செகந்திராபாத் ரேடியோ நிலையமும் முழுக்க ஆந்திர மயமே. அப்படி இருக்க தமிழ் ராஜ்ய ரேடியோ நிலையமும் தெலுங்கு மயமாகத்தான் இருக்க வேண்டுமா?!
விஜயவாடா ரேடியோ நிலையத்தில் தெலுங்கு பாடகர்கள் தமிழ் பாட்டுகளாக பாடிக் கொண்டிருந்தால் ஆந்திரர்கள் சும்மா இருப்பார்களா?!
தமிழர்கள் ஆந்திரர்களைப் போன்று வெறி பிடித்தவர்களாக இருக்க வேண்டாம் ஆனால் தங்கள் தாய்மொழி பற்றை கூடவா விட்டு விட வேண்டும்?!  சென்னை ரேடியோ நிலையத்தில் சினிமா ரிக்கார்டுகள் ஒளிபரப்பும் நேரத்தில் இந்தி ரெக்கார்டு போடுவதைப் போன்று தெலுங்கு ரெக்கார்டுகளையும் போட்டு தொலைத்து விட்டு போகட்டும்!
நாம் அக்கறைப்படவில்லை!
ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கால்வாசிக்கு மேல் தெலுங்கு மயமாக இருப்பதை உணர்ச்சி உள்ள தமிழர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை!
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் இல்லை என்றால் 'தெலுங்கு ஒளிபரப்பு எதிர்ப்பு இயக்கம்' தமிழர்களால் தொடங்கப்பட நேரும்.
இதற்கு அறிகுறியாக இப்பொழுது தமிழ் ராஜ்யத்தில் ரேடியோ பெட்டி வைத்திருப்போர் தங்கள் தங்களின் அதிருப்தியை ரேடியோ நிலைய அதிகாரிகளுக்கும் மத்திய அரசாங்க மந்திரி அகர்வாலுக்கும் நமது ராஜ்ய மந்திரி சபை பிரச்சார இலக்காவிற்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி பாகுபடற்ற முறையில் தமிழர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை நேரிய முறையில் ஆட்சியாளருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்!
தமிழகத்தில் எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் இது பற்றி தீர்மானம் நிறைவேற்றி ஆட்சி பீடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்!
தமிழ் ராஜ்யத்திலேயே தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க முற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
இசைத்தமிழ் தழைக்க, தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழகத் தலைவர்கள் பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறோம்.

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம்
01.11.1953

Wednesday, 5 November 2025

ஊர்திரும்ப சொல்லும் இட்லி கடை

ஊர்திரும்ப சொல்லும் இட்லி கடை

 பலரும் இட்லி கடை படத்தை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
 அதாவது "கையால் மாவரைப்பது அசுத்தம்"
"பிற்போக்காக இருக்கிறது"
 "உண்மையான கிராம வாழ்க்கை இப்படி இல்லை"
 "தனுஷ் சம்பாதித்த பணத்தை என்ன செய்தார்"
 "நித்யா மெனன்  (மேனன் இல்லை) செட்டாகவில்லை" என்றவாறு.

 சரி ஆசியாவிலேயே பெரிய கொள்ளைக்கும்பல் எடுத்த படம்தானே என்று விட்டுவிட்டேன்.

 அண்ணன் சீமான் இந்த படத்தை பார்த்து நல்லபடியான விமர்சனம் கொடுத்திருந்தார். 
 அப்போதும் இது தனுஷ் நாயுடுவின் படம்தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

 அப்போதுதான் இந்த படத்தை திராவிடியாத் தனமாக விமர்சித்து சில பதிவுகள் வந்தன.
அதாவது  "குலக் கல்வி, குலத் தொழிலை ஊக்குவிக்குறது"
"சாதியே இல்லாத கிராமமா?"
"பணக்காரன் சாதி பார்க்காமல் பெண்கொடுக்கிறான்" போன்ற வரிகள்.
 எனக்கு ஒரே ஆச்சரியம் "என்ன இது அடிமை திராவிடியாக்கள் தன் ஆண்டை இன்பாவை எதிர்த்து ஒரு வரி எழுதும் தைரியம் எப்படி வந்தது?" என்று.
 அண்ணனின் பாராட்டும் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் காரணமில்லாமல் பாராட்டியிருக்க மாட்டாரே?!
சரி என்று நேற்று அந்த படத்தை குடும்பத்துடன் பார்த்தேன்.
  இதை வெறும் படமாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான்!
 கிராமத்தில் பிறத்து வளர்ந்த ஒரு சாதாரண பையன் படித்து முடித்து அந்த கிராமத்தையே சொர்க்கமாக நினைக்கும் அவனது தந்தையுடன் முரண்பட்டு  வெளிநாட்டுக்கு போய் ஒரு கார்ப்பரேட் வேலையில் தன் திறமையைக் காட்டி முதலாளிக்கே மருமகனாகும் அளவு முன்னேறுகிறான்.
 ஆனாலும் ஏதோ ஒரு குறையை உணர்கிறான்.
 திருமணம் நெருங்கிய நிலையில் அவனது தந்தை இறந்துவிடுகிறார். கார்ப்பரேட் குடும்பம் கல்யாணத்தை நிறுத்த மறுக்கிறது.
 தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய வருபவன் பல ஆண்டுகள் கழித்து தாயையும் சொந்தங்களையும் பார்க்கிறான்.
 ஒரே மகனாக இருந்தும் பல ஆண்டுகள் தாய் தந்தையை தனியாக தவிக்கவிட்டதை எண்ணி வருந்துகிறான் (இந்த இடத்தில் இவ்வளவு நாள் அவன் சம்பாதித்த பணத்தை என்ன செய்தான் என்று லாஜிக் இடிக்கிறதுதான்).
 கணவன் பிரிந்த துக்கம் தாளாமல் அவன் அம்மாவும் இறந்துவிடுகிறாள் (இதுவும் கூட கொஞ்சம் ஓவர்தான்).
  இந்த நேரத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையையும் தன் தந்தை வாழ்ந்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கிறான்.
 தன் தந்தை கிராமத்தில் நிறைவாக வாழ்ந்து மறைந்துவிட்டதாக உணர்கிறான்.
 தன் தந்தை போலவே தானும் வாழ முடிவெடுக்கிறான்.
 அவன் அப்பா நடத்திய இட்லிகடைதான் அவரது அடையாளம் என்றும் அவர் இடத்தில் இருந்து தான் அதை தொடர்ந்து நடத்துவதுதான் அப்பாவின் கடைசி ஆசையாக இருக்கும் என்றும் நினைக்கிறான். 
 இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள வெளிநாடுகளில் பணத்துக்காக மனதுக்கு ஒட்டாத வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு புரியும்.
 பிளைட்டில் வந்து இறங்கி ஓடிப்போய் தெருமுனை டீ கடையில் நம்ம ஊர் டீயும் வடையும் வாங்கி வாயில் வைத்தவுடன் குபுக்கென்று கண்ணீர் கொட்டும்.
 அதேபோல கடை நடத்தும் கிராமத்து அண்ணாச்சிகள் அந்த கடையையே வாழ்க்கையாக வாழ்வதை உடனிருந்து பார்த்தவர்களுக்கும் புரியும்.
  அவர்களுக்கு தொழில் மீது பற்று என்று கூற முடியாது. கடை மீது பற்று. தன் வாழ்விடம் என்ற உணர்வு.
 இதனால்தான் தனுஷ் அந்த கடை பெயரில் கிளைகள் திறக்க ஐடியா கொடுக்கும்போது அதை மறுக்கிறார் ராஜ்கிரண்.
 என் கையால் சமைத்து கொடுத்தால்தான் என் பெயர் போடவேண்டும் இல்லையென்றால் அது என் கடை ஆகாது என்கிறார்.
 நல்ல உணவகங்கள் பல கிளைகள் பரப்பி கார்ப்பரேட் ஆன பிறகு சுவை குறைந்தும் விலை மிகுந்தும் காணப்படுவதை நாம் பார்க்கவில்லையா?! 
 இந்த படம் ஏன் 'ஒஸ்தாத் ஓட்டல்' மலையாள படம் மாதிரி பல கிளை பரப்பி முன்னேறியது போல் காட்டி முடிவடையவில்லை என்ற கேள்விக்கு இதுவே விடை
 (இத்தனைக்கும் தனுஷ் கடை நடத்த தொடங்கி ஆறுமாதம் ஆவதற்குள் படமே முடிந்துவிடும்).
 இது புரியாமல் 'ஒன்று கார்ப்பரேட்டுக்கு அடிமையாக வெளிநாட்டில் இரு அல்லது நீ ஒரு கார்ப்பரேட் ஆகு' என்று கூறவருகிறார்கள் அதிமேதாவிகள்.
 தனுஷ் எடுத்த முடிவு பிற்போக்கு என்கின்றனர்.
 பட்டதிலேயே அதற்கு விடை உள்ளது.
 எது முன்னேற்றம்?! 
கார் பங்களா ஏசி என்று வாழ்வதா அல்லது இயற்கை, சொந்தபந்தம், கால்நடைகள் என்று வாழ்வதா 
எது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
 படத்தில் அப்பாவின் ஆவி வரும் காட்சிகள் கூட மிகையாக இல்லை!
 இறப்பு நடந்த வீட்டில் தனியாக படுத்திருக்கும் ஒருவனுக்கு அப்படியான எண்ணங்கள் வரத்தான் செய்யும்!
 அப்பாவின் மறுபிறப்பாக காட்டப்படும் கன்றுக்குட்டி, தனுஷைக் காப்பாற்ற வருபவர்க்கு இடம் காட்டும் பருந்து என்று பிற உயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
 குலதெய்வ கோவிலில் தனுஷுக்கு வரும் தெளிவு, சண்டைக் காட்சிகளில் ஆவேசமாக அடிக்கும்போது குலதெய்வ பாடல் என்று குலதெய்வ வழிபாட்டையும் முன்னிலைப் படுத்தியுள்ளனர். 
 எந்த விதத்தில் படத்தில் காட்டப்படும் கிராமம் உயிரோட்டமாக இல்லை என்று சொல்கிறார்களோ தெரியவில்லை.
 
 வில்லன் பக்கம் பார்த்தால் ஒரு கார்ப்பரேட் குடும்பம் தன் நிறுவன நலனுக்காக வேலை செய்யும் ஒருவனை தன் குடும்பத்தில் ஒருவனாக ஆக்கிக்கொள்ள நினைக்கிறது.
 அவனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கிறது.
 இதனால் அவனது அடிமை மனநிலை மாறிவிடுகிறது.
இதனால் திருமணம் நின்று அவமானத்தை சந்தித்த அந்த பணக்கார குடும்பம் கிராமத்துக்கு வந்து அவனை பழிவாங்க நினைக்கிறது.
 அந்த ஊரிலேயே ஒரு போலீஸ்காரனையும் போட்டியாக ஓட்டல் நடத்தும் ஒரு முதலாளியையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறது.
 இவற்றை தனது தந்தை சம்பாதித்த நல்ல பெயராலும் ஊர்மக்களின் ஆதரவுடனும் எதிர்கொள்கிறான் அவன்.
 இதில் என்ன குறையைக் கண்டீர்கள்?!
 'வாழ்க்கை பிச்சை போட்டவர்களின் காலை வாரிவிட்ட துரோகி' என்று பட்டம் கட்டுகிறார்கள்.
 இதுதான் கார்ப்பரேட் ஆதரவு!
 பெரிய இடத்து மருமகனாக வாழ்வதை விட தன்மானத்துடன் வாழ்வதுதான் முக்கியம்!
 சில புதியபூமர்கள் 'தனுஷ் கடை நடத்தட்டும் அதை ராஜ்கிரண் போலவேதான் நடத்த வேண்டுமா?' என்று கேட்கின்றனர்.
 கிராமத்தில் அந்த ஊர் ஆள் மாதிரி இல்லாமல் கோட்சூட் போட்டுக்கொண்டா திரியமுடியும்?! 
 இவர்கள்தானே ஒரு இசுலாமியத் தாய் செய்யும் அற்புதமான சுவையில் பிரியாணி செய்ய ஒரு பிராமண பெண் தொழுதுவிட்டு பிரியாணி செய்வது போல காட்டிய போது கைதட்டியவர்கள்?!
 கையால் மாவு அரைப்பது என்ன கேவலமா?! 
அதில் என்ன அசுத்தம் என்று புரியவில்லை?!
கொரோனா விற்கு பிறகு இந்த மனநிலை அதிகரித்துவிட்டது.
 சக மனிதன் தொட்டாலே செத்துவிடுவோமோ என்று பயத்துடன் வாழ்கின்றனர்.
 கைக்குத்தல் அரிசி, செக்கு எண்ணெய், கைத்தறி புடவை, நாட்டு சர்க்கரை, பனங்கள் போன்றவை பாதுகாக்கப் பட நாம் நினைப்பது இல்லையா?!
 கையால் மாவரைத்து இட்லி சுட்டால் தனி சுவை இருக்கத்தானே செய்யும்!
 எல்லா ஓட்டல்களும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
 இப்படியும் சில ஓட்டல்கள் இருக்கட்டுமே என்றுதான் சொல்கிறேன்.
 கிராமத்தில் அவர்களுக்குத் தகுந்தது போல ஒரு உணவகம் செயல்படுகிறது.
 இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அந்த அந்த கிராமத்திற்கு ஏற்ற கடைகள், கட்டமைப்பு, வழிபாடு, உடை, கலாச்சாரம் என்று இருப்பதுதானே தன்னிறைவு?!
 திருநெல்வேலி நகரத்தில் மையமாக இருக்கும் நெல்லையப்பர் கோவில் வீதியில் இருக்கிறது இருட்டு கடை.
 பெயர்பலகை கூட இருக்காது. ஒரு குண்டு பல்ப் தவிர விளக்குகூட கிடையாது (அதனால்தான் அந்த பெயர்).
 ஆனால் உலக பிரபலம்!
 அல்வா வாங்க வருபவர்கள் மதியமே பூட்டியிருக்கும் கடை முன் வரிசையில் நிற்கவேண்டும்.
 சாயங்காலம் திறப்பார்கள். கிலோ கிலோவாக கட்டி வைத்திருப்பார்கள்.
 இருட்டும் முன் விற்று தீர்த்துவிட்டு இன்னமும் நிற்கும் கூட்டத்திடம் நாளை வாருங்கள் என்று கூறிவிட்டு மூடிவிடுவார்கள்.
 அவ்வளவுதான்!
அவர்கள் கிளை பரப்பவும் இல்லை! விளம்பரம் செய்யவும் இல்லை! உற்பத்தியை அதிகரிக்கவோ கடையை மேம்படுத்தவோ கூட இல்லை!
 அவர்களின் நோக்கம் தரம் குறையாமல் இருப்பது மட்டுமே! 
 திருநெல்வேலி அல்வா என்று பலரும் உலகம் முழுக்க விற்கிறார்கள் ஆனாலும் அந்த கடை அல்வா போல வராது! இதை இப்போதும் பெரிய பெரிய கார்களில் வந்து வரிசையில் நிற்கும் கூட்டம் சொல்லும்! 
 ஒரு கடை முதலாளி தன் கைகளால் உணவு தயாரித்து லாப நோக்கம் இல்லாமல் வருபவர்களுக்கு தரமான உணவு வழங்கி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கி எந்த பேராசையும் இல்லாமல் பழைய ஓட்டு வீடு மனைவி மாடு என்று திருப்தியுடன் ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ்கிறார்.
 இதில் என்ன தவறு?! 
 'அப்பா தொழிலையே பிள்ளையை செய்யச் சொல்கிறது! இதற்கா குலக் கல்வியை ஒழித்தோம்?'  என்று சில திராவிடியாக்கள் தங்கள் தீராத அரிப்பை இங்கே கொண்டுவந்து தேய்க்கிறார்கள்.
 முதலில் குலக் கல்வி என்று ஒன்று கொண்டுவரப்படவே இல்லை.
ராஜாஜி அன்று ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 'மாணவர்கள் படித்த நேரம் போக மீதி நேரம் தந்தைக்கு உதவியாக இருக்கலாம்' என்று கூறியதை தவறாக அர்த்தமாக்கி அவதூறு பரப்பியது திராவிடம்.
 இந்த படத்திலும் மகன் அவனே விருப்பப்பட்டு தான் கேட்டரிங் படிக்கிறான்.
அப்படியே அவனது அப்பாவின் தொழிலை அவன் செய்தால் என்ன தவறு?!
 அப்பாவின் தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் தான் அது தவறு!
 விருப்பப்பட்டு செய்தால் என்ன தவறு?! 
 இவர்கள் மட்டும் நான்கு தலைமுறையாக படம் எடுக்கலாம். 
 ஆனால் கார்ப்பரேட்டுகளில் மாத சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒருவன் அப்பாவிடம் திரும்பி சென்று தன் காலில் நின்றுவிடக் கூடாது இல்லையா?!
 எல்லா தமிழனும் தன் கிராமத்திலேயே தன்னிறைவு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டால் cheap labour ஐ நம்பி இங்கே இருக்கும் நிறுவனங்கள் திவாலாகிவிடும் இல்லையா?! 
 சில கழிசடைகள் 'நிச்சயம் செய்த பெண்ணை விட்டுவிட்டு அதாவது ஏமாற்றிவிட்டு எடுபிடி வேலைக்கு வந்த பெண்ணை காதலிக்கிறாயே பிறகு வேறொருத்தி வந்தால் இவளை விட்டுவிடுவாயா?' என்று மகா கிரிஞ்ச் தனமாக விமர்சித்துள்ளனர்.
 தாய் தந்தை இல்லாத நிலையில் ஊராரும் ஒட்டாதபோது தனக்கு துணை நிற்கும் ஒரு பெண் மீது காதல் வருமா அல்லது தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒரு பணக்கார பெண் மீது காதல் வருமா?!
 தனுஷ் அந்த பணக்கார பெண்ணை காதலிப்பதாக காட்டவே இல்லை! திருமணத்திற்கு அரைகுறையான சம்மதித்து குழப்பமாக இருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது.
 இட்லிகடை சினிமாவாக மட்டும் பார்த்தால் கிராமத்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வெறும் பணத்திற்காக மட்டுமே வாழும் பல லட்சம் தமிழர்களின் ஊர்திரும்பும் மனநிலையைப் பேசுகிறது. 
 அவர்களை தைரியமாக ஊர் திரும்பச் சொல்கிறது.
தாய் மண்ணும் மக்களும் உங்களை சோதித்தாலும் கைவிட மாட்டார்கள் என்ற உண்மைச் சொல்கிறது.
 பணம்தான் வாழ்க்கை அதுதான் முன்னேற்றம் என்று நினைப்பவர்களுக்கு இது புரியாது! 
 நான் இங்கே கேட்க இன்னொரு கேள்வி இருக்கிறது!
 ஏன் ஒருவன் இங்கே தன் கிராமத்தில் இருந்து பணக்காரன் ஆக முடிவதில்லை! 
 அரசாங்கம் என்ன கிழித்துக் கொண்டு இருக்கிறது?!
கிராமத்தில் ஒரு இட்லி கடை நடத்துபவனின் மகனுக்கும் நகரத்தில் பீசா கடை நடத்துபவன் மகனுக்கும் ஒரே கல்வி ஒரே வாய்ப்புகள் ஏன் கிடைப்பதில்லை?! 
 எல்லாரும் கிராமத்தை விட்டு சென்றுவிட்டால் யார்தான் கிராமத்தில் இருப்பது?!
 யார் விவசாயம் பார்ப்பது?! 
கிராமங்கள் காலியாகிவிட்டால் விவசாயத்தை கைவிட்டுவிட்டால் ஒரு நாடு தாக்குப்பிடிக்குமா?! 
"படிங்க! படிச்சு வேலைக்கு போங்க! வசதியான வேலைக்காரனா இருங்க!" என்று ஒவ்வொருவனையும் ஊரிலிருந்து துரத்தி நிரந்தமில்லாத ஒரு கார்ப்பரேட் வேலைக்கு அனுப்புவதிலேயே ஏன் குறியாக இருக்கிறீர்கள்?! 
 ஏன் அவன் படித்து ஒரு முதலாளி ஆக்ககூடாதா?! படித்து அரசியல்வாதி ஆகக்கூடாதா?! படித்து சேவை, கலை, தொண்டு என்று போக்ககூடாதா?! 
"படி! வேலைக்கு போ" "படி! வேலைக்கு போ" என்று படிப்பது வேலைக்கு போகத்தான் என்று ஏன் மூளைச்சலவை செய்யப் படுகிறது?!
'கிராமம் என்றாலே முட்டாள்கள்! அங்கே ஒரே சாதிவெறி!' என்று கட்டமைப்பதன் உள்நோக்கம் என்ன?!
 பிறந்த ஊர்ப்பாசம் என்பது சாதி, மதம், இனம், வர்க்கம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உணர்வு என்பது தெரியாதா?! 
 அல்லது எங்கிருந்தோ வந்து பல தலைமுறை இங்கே வாழ்ந்தும் இந்த மண்ணின் உப்பைத் தின்றும் இதன் மீது பாசம் வராத ஒரு கூட்டத்தின் கூச்சலா?!
 திராவிட கும்பல் எடுத்த படமே ஆனாலும் அது கார்ப்பரேட்டுக்கு எதிராக தற்சார்பு வாழ்க்கைக்கு ஆதரவாக இருந்தால் அதை எதிர்ப்பீர்களா?! 
 உங்களது உண்மையான முதலாளிகள் திராவிடம் நடத்தும் திரைத்துறையா அல்லது திராவிடம் நடத்தும் தொழில்துறையா?! 
 தனுஷ் தன்னுடைய சிந்தனையைப் படமாக்கியதாக நான் கருதவில்லை.
மக்களின் மனநிலைக்கு ஏற்ப ஒரு படத்தை எடுத்துள்ளார்.
 மக்கள் இதை ஆதரிக்க வேண்டும்!
 வேறு வழியும் இல்லை!
இப்படி ஒரு படத்தை ஒரு தமிழன் எடுத்து வெளிவிடுவது என்பது திராவிட ஆதிக்க சூழலில் நடக்காத ஒன்று! 
 அதேபோல திராவிட ஆதிக்கம் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் இனி ஒரு தமிழன் சரவண பவன் அண்ணாச்சி போல வரவே முடியாது! வந்தாலும் அவர் கதிதான்! 
 படங்களிலாவது மக்களின் கனவுகள் நிறைவேறட்டும்! 
 

Tuesday, 4 November 2025

சென்னையை காத்த மபொசி பற்றி கா மு ஷெரீப்

சென்னையை காத்த மபொசி பற்றி கா.மு.ஷெரீப்

 'இழைத்தவன் பொண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி' என்பது கிராமிய பழமொழி.
 ஆந்திரர்கள் சென்னையை இந்த பழமொழிக்கு இலக்காக பார்க்கின்றனர்.
 சென்னையை என்ன, திருமலை நாயக்கர் ஆண்ட மதுரையை கூட தனதாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணினர் ஆந்திர வெறியர்கள்.
 அதற்கான திட்டத்தையும் நடத்த அவர்கள் தயங்கவில்லை.
பிரகாசம் முதல்மந்திரியாக வந்ததும் ஆந்திராவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சென்னையில் பவனி வரச் செய்தார்.
 சும்மா அல்ல 'மதராஸ் மனதே!' என்று கூப்பாடுடன்!
 தட்டி கேட்க ஆளில்லை!
 சென்னை நகரில் ஓடும் பஸ்களில் எல்லாம் கூட தெலுங்கிலும் பெயர் போடச் செய்தார்கள்!
 இத்தனையும் கண்டு பாரா கண்கள் படைத்தவர்களாக தமிழக தலைவர்கள் இருந்தபோதுதான் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று குரல் கொடுத்தது தமிழரசு கழகம்! 
வெறிபிடித்த ஆந்திரப்படை பின்வாங்கியது!
 அவர்களை துரத்திச் செல்வது போல பின் தொடர்ந்து சென்ற தமிழரசு கழகத்தினர் சித்தூர் பகுதிகளில் முகாமிட்டு திருப்பதி வரை தமிழர்களுடைய நிலம் என்பதை நிலைநாட்டி திரும்பினர்!
 இதன் பிறகு தார் கமிஷன்,  J.V.P ரிப்போர்ட் ஆகிய தீர்ப்புகளின் மூலம் 'சென்னை தமிழருடைய நகரம்',  'எல்லைப் பகுதிகள் ஆராயப்பட வேண்டியது' என்று முடிவு கட்டப்பட்டது.
 இதை அன்று 'அகில இந்திய காங்கிரஸ்' முதல் 'ஆந்திர காங்கிரஸ்' வரையிலும் நேரு முதல் சஞ்சீவ ரெட்டி வரையிலும் ஒப்புக்கொள்ளாதார் இல்லை!
 ஆனால் முன்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஒப்புக்கொண்டதை மாற்றி 'ஆலோசிக்காமல் அவசரப்பட்டு தமிழர்களுக்கு அதிக சலுகை வழங்கி விட்டோம்! இப்பொழுது ஆலோசித்து சொல்கிறோம்! சென்னையை தமிழர்களுக்கு தர முடியாது!' என்று சஞ்சீவ ரெட்டி கூறுகிறார்.
 இந்த சஞ்சீவி ரெட்டியையும் மிஞ்சிப் போகிறார் பிரகாசம் 'சென்னையில் மட்டுமல்ல திருநெல்வேலி வரையும் கூட ஆந்திரா கேட்டால் அதில் நியாயம் இல்லாமல் இல்லை' என்கிறார்!
 ஆனால் 1947, 48 இல் இருந்தது போல் இன்று தமிழர்கள் அலட்சியமாக இல்லை!
 ஆந்திர படையெடுப்பை முறியடிக்க துணிந்து நிற்கிறார்கள்!
 சண்டித்தனம் பிடிக்கும் சாமியார், சஞ்சீவ ரெட்டி, பிரகாசம் போன்றோரை சென்னை நகரத்தில் அல்ல அவர் வாழும் ஆந்திர பகுதிக்கு சென்று அதட்டி கேட்கும் அளவிற்கு உணர்ச்சி பற்றி நிற்கிறார்கள்!
 1948 இல் நம்மை எதிர்த்த கட்சிகள் எல்லாம் இன்று நாம் சொல்வதை முன்னிறுத்தி தம்மை வளர்க்கப் பார்க்கின்றன.
 தார் கமிஷனிடம் 'தலைநகரம் தமிழனுக்கு போனாள் என்ன ஆந்திரனுக்கு போனால் என்ன இருவரும் திராவிடர்களே' என்று கூறிக் கொண்டிருந்த ஈ.வே.ரா இன்று விடுதலை மூலம் ஆந்திரரின் மண்வெளியை கண்டிக்கின்றார்.
 தமிழரசு கழக கோரிக்கையை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்த பத்திரிகைகள் எல்லாம் சஞ்சீவ ரெட்டியையும் பிரகாசத்தையும் கண்டித்து தலையங்கம் தீட்டுகின்றன.
 சென்னை ராஜ்ய முதல்மந்திரியே தீர்ப்பு கூறுகிறார் 'சென்னை ஆந்திரர்கள் நினைக்கக் கூடாது' என்பதாக!
இத்தனை தமிழரசு கழகத்தாரின் அரிய சாதனை என்றால் அது மிகையாகாது!
 'மொழிவாரி பைத்தியங்கள்' என்று பழித்துக் கூறிய கம்யூனிஸ்ட் சோசியலிஸ்டுகளை மொழிவாரி மாநில பிரிவினையை ஒப்புக்கொள்ள வைத்தது!
 'ஆந்திரமும் தமிழகமும் ஒன்றே தலைநகரச் சண்டை எங்களுக்கில்லை' என்ற தி.க கூட்டத்தினரின் ஏடான விடுதலையை ஆந்திரர்களைக் கண்டித்து எழுதும்படி திருத்தியது!
 'இது என்ன தமிழ் பாகிஸ்தான்?' என்று கேட்ட தேசிய வட்டாரங்களின் மத்தியில் 'தமிழகம் தனி ராஜ்யம்' என்ற எண்ணத்தை வளர்த்து விட்டது!
  இத்தனை பணிகளையும் ஐந்தே ஆண்டுகளில் தமிழரசு கழகத்தினரால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால் ஆந்திரர்கள் யோசிக்க வேண்டும்.
 இனியும் 'சென்னை ஆந்திரர்களுடையது!' என்று கூறினால் தமிழரசு கழகம் அளிக்கும் பதில் "சென்னை என்று நீங்கள் ஜெபித்துக் கொண்டே இருங்கள். சென்னையை நீங்கள் அடைகிறீர்களா?! நாங்கள் பெறுகிறோமா?! என்பதை பிறகு கண்ணால் காணலாம்".
 ஆந்திரர்களே! ஆத்திரப்படாதீர்கள்!
 உங்கள் ஆசைக்கு சாவு மணி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது!
அதன் ஓசையை நீங்கள் 1953 ஜனவரி 24, 25 சென்னையில் நடைபெறவிருக்கும் தமிழரசு கழக இரண்டாவது மாநில மாநாட்டில் கேட்கலாம்!

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம் 
01.11.1952

Sunday, 2 November 2025

ஆகமத்தை விட தமிழ் உயர்ந்தது என்ற தமிழ்த் தாத்தா

ஆகமத்தை விட தமிழ் உயர்ந்தது என்ற தமிழ்த் தாத்தா

 உ.வே.சாமிநாத ஐயர் தம் சுயசரிதையில் 
“குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று ஒருவர் கூற...
"இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்!" கோபமாக கூறியுள்ளார்.

 மேலும் "பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!
 வரகுண பாண்டியர் ஏடுகள் அக்கினி பகவானுக்கு உணவாயிற்றென்ற செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளத்தில் அமைதி இல்லாமல் போயிற்று. ‘இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா!’ என்றெல்லாம் மனம் நொந்தேன்." என்றும் எழுதியுள்ளார்.