வெறியாடும் முருகனுக்கு கிடாய் விருந்து
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ
[சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பரப்பி,
ஆட்டுக் கிடாயை அறுத்து,
கோழிக் கொடியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி]
ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
[ஊர்தோறும் கொண்டாடப்படும் பெருமையுடைய விழாவிலும்,
அன்புடைய பக்தர்கள் வழிபட்டு போற்றும் பொருத்தமான இடத்திலும்]
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
[வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் 'வெறியாடு' களத்திலும், காட்டிலும், சோலையிலும், அழகான (தீவு போன்ற) ஆற்றிடைக்குறையிலும்,
ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும்]
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
[நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும், மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியிலும், புதுமலர்களை உடைய கடம்பு மரத்தினடியிலும், ஊரின் நடுவில் உள்ள மரத்தினடியிலும், அம்பலத்திலும், கந்து நடப்பட்டுள்ள இடத்திலும்]
மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுஉரைத்து
[சிறப்பான முதன்மை பொருந்திய கோழிக் கொடியைப் பொருத்தமாக நிறுத்தி,
நெய்யுடன் வெண்மையான சிறு கடுகினைக் கலந்து அப்பி,
(முருகனின் பெயரை) மென்மையாக உரைத்து]
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇ
செந்நூல் யாத்து வெண்பொறி சிதறி
[இரு கைகளையும் கூப்பி வணங்கி,
வளம் பொருந்திய செழுமையான மலர்களைத் தூவி,
வெவ்வேறு நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து,
கையில் சிவப்பு நூல் (காப்பு நூலாக) கட்டப்பெற்று,
வெண்மையான பொரியைத் தூவி]
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ
[வலிமை வாய்ந்த ஆட்டு கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியை பலி அமுதாக பல இடங்களில் வைந்து]
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி
[சிறு பசுமஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில் தூவித் தெளித்து,
செவ்வரளி மலரால் ஆகிய மாலையை சீராக நறுக்கி கோயிலைச் சுற்றித் தொங்கவிட்டு]
நளிமலைச் சிலம்பில் நல்நகர் வர்த்திதம்
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க
[செறிவான மலைப் பக்கங்களிலுள்ள ஊர் வாசிகள் அனைவரும் (முருகனை) வாழ்த்திப் பாடுகின்றனர்,
மணப் புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்,
குறிஞ்சிப் பண்ணில் இயற்றப்பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்,
மலை மீதிருந்து விழும் அருவியின் ஓசைக்கேற்ப இசைக் கருவிகளை ஒலிக்கின்றனர்]
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினைப் பரப்பி குறமகள்
முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க
முருகுஆற்றுப்படுத்த உருகெழு வியல்நகர்
[பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத் தூவுகின்றனர்,
காண்பவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் இரத்தத்தோடு கலந்த தினை அரிசியைப் பரப்பி வைத்துள்ளனர்,
முருகனுக்கு விருப்பமான இசைக் கருவிகளைக் குறமகள் இயக்குகிறாள்,
மாறுபட்ட உள்ளம் உடையவர்களும் அஞ்சுமாறு அந்த சூழ்நிலை அமைகிறது,
இவ்வாறு இருந்தது அந்த அகன்ற ஊர்]
- திருமுருகாற்றுப்படை (218 - 244)
நன்றி: kaumaram .com
No comments:
Post a Comment