Monday, 14 September 2026
தலைக்குடி பகுதி 1
தலைக்குடி
அகவை நாற்பது ஆன அருண் தெருவோரத்தில் அமர்ந்திருந்தான்.
வழக்கறிஞர் போல உடை அணிந்திருந்தான்.
அவன் எதிரே இருந்த அந்த பிரம்மாண்ட வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதுவே அவன் பிறந்த வீடு. அதனால் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தான். அவன் குழந்தையாக யாருடன் எல்லாம் விளையாடினானோ அவர்கள் எல்லாரும் உள்ளே இருந்தனர். ஆனால் இவனை மட்டும் உள்ளே விடவில்லை.
வாசலுக்கு அருகே சில அரசு அதிகாரிகள் மேசை போட்டு உட்கார்ந்து இருந்தனர்.
அவர்கள் எதிரே ஒரு இளைஞன் இவன் போலவே உடையணிந்து அமர்ந்திருந்தான். அவன் எழுந்து உள்ளே சென்றான்.
உள்ளே கேட்ட சில கூச்சல் குழப்பங்களுக்குப் பிறகு அதனுள்ளிருந்து வெளியே வந்தான். அந்த இளைஞன் அவனுடைய உதவியாளன் மற்றும் நண்பனான மாறன்.
இன்று அருணுக்கு துணையாக மாறனைத் தவிர யாரும் இல்லை.
மாறன் சோர்வான முகத்துடன் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு அருணிடம் வந்தான்.
அருணிடம் வந்து ஒரு பத்திரத்தை நீட்டினான்.
அதை படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து போட்டு கொடுத்தான்.
அதை வாங்கிக்கொண்டு போனவன் ஒரு பை நிறைய பணத்துடன் வந்தான்.
"பாகப் பிரிவினை முடிந்தது! இதுதான் உங்களிடம் இருக்கும் கடைசி சொத்து" என்று கூறி அருணிடம் அந்த பையைக் கொடுத்தான்.
அதை வாங்கிக் கொண்டதும் இருவரும் நடக்கத் தொடங்கினர்.
தன் வீட்டை கடைசி முறையாகத் திரும்பிப் பார்த்தான் அருண்.
வாசலில் யாராவது வந்து நின்று தன்னை கடைசியாக பார்ப்பார்கள் என்று நினைத்தான்.
அப்படி யாரும் இல்லை.
'பரவாயில்லை! அவர்கள் மீதும் தவறில்லை!' என்று நினைத்தபடி மனத்தை திடமாக்கிக் கொண்டு தொடர்ந்து நடந்தான்.
மாறனோ கண்கலங்கி விட்டான்.
'இத்தனை உயர்ந்த மனிதனுக்கு இப்படி ஒரு நிலையா?!' என்று மனதுக்குள் புலம்பினான்.
அவனுக்குத் தெரியும் இனிதான் மிகப் பெரிய போராட்டம் தொடங்கப் போகிறது! அருணின் நடையில் தெரிந்த வேகத்தையும் மிடுக்கையும் கவனித்தான்.
'ஒருநாள் இந்த நாடே இவரை வணங்கி நிற்கும்!' என்று மனத்துக்குள் கூறிக்கொண்டான்.
இருவரும் ஒரு வண்டியில் ஏறி சென்றார்கள்.
-------
அந்த பணத்தின் பெரும்பகுதியை நாட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்திருந்த அந்த வேற்றுநாட்டு ஆசாமியிடம் கொடுத்தான் அருண்!
அவன் அதைப் பெற்றுக் கொண்டு ஒரு ஆவணத்தைக் கொடுத்தான்.
ஆர்வத்துடன் உடனே அதைப் படிக்கத் தொடங்கினான்.
அது எளிதாக்கம் செய்யப்பட்ட ஒரு உளவு அறிக்கை!
மூன்று தலைமுறைக்கு முன் ஒரு உளவாளி இந்த நாட்டு மக்களுடன் பழகி இந்த நாடு எப்படி இயங்குகிறது என்று அறிந்து எழுதியிருந்தான். அந்த செயலமைப்பை எப்படி உடைக்க வேண்டும் என்றும் யோசனைகளை வழங்கியிருந்தான். அந்த மிகவும் பாதுகாக்கப்பட்ட ஆவணம் அவன் நினைத்தபடியே இருந்தது. நம்பிக்கையுடன் வெளியே வந்தான் அருண்.
வாசலில் இருந்த மாறன் அதை வாங்கிப் பார்த்தான். "இதற்கா இவ்வளவு பணம்?! இதெல்லாம் தேவைதானா?! இதை வெளியிடுவது நாட்டுக்கு செய்யும் இரண்டகம்!" என்று கொதித்தான். "ஆனால் நாட்டு மக்களுக்கு நன்மை" என்று பதிலளித்துவிட்டு அருண் வண்டிக்குள் சென்று அமர்ந்தான்.
ஓட்டும் இருக்கையில் அமர்ந்த மாறன் "இதை எழுதியவன் திறமையானவன் என்று எனக்குத் தோன்றவில்லை! அது உண்மையென்றால் இதில் கூறியிருப்பது போல செய்து நம் நாட்டையே குதறிப் போட்டிருப்பார்கள்!" என்று வெறுப்பாகக் கூறினான்.
அருண் சிரித்தபடி "தரவுகள் தான் நமக்குத் தேவை! இது மிகவும் பழைய அறிக்கை! இதில் உள்ள செய்திகள் இன்று எந்த அளவு உண்மை என்று ஆய்ந்து வெளியிட வேண்டும்" என்று கூறினான்.
வண்டியைக் கிளப்பினான் மாறன்!
இது எல்லாம் எங்கிருந்து தொடங்கியது என்று யோசித்தான். 'எல்லாவற்றுக்கும் அவள்தான் காரணம்' என்று முகம் தெரியாத அந்த பெண்ணை திட்டிக் கொண்டிருந்தான்.
------------
25 வயது அருண் உயரமான அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் முழுநிலவின் ஒளியில் கலங்கிய கண்களுடன் அந்த பெண்ணின் முன்னாள் நின்றுகொண்டிருந்தான்.
அவன் கையிருந்த பூங்கொத்து கீழே விழுந்தது.
ஆம் இப்போதுதான் அவனது காதல் வெற்றியை இழந்திருந்தது.
அவன் மிகுந்த நம்பிக்கையுடன் இங்கே வந்திருந்தான்.
தனக்கு என்ன குறை?!
மிகப்பெரிய பின்னணி கொண்ட குடும்பம்!பணம்! செல்வாக்கு! அழகு! அறிவு! படிப்பு!
கல்லூரியிலேயே மிகவும் அழகான பெண்கள் காதல் நிரம்பிய கண்களுடன் சுற்றிவந்தனர்.
ஆனால் மதி மட்டும் அவனுக்கு பிடித்த பெண்ணாக இருந்தாள்.
கல்லூரி தோழி! கண்டதும் காதல்! அவளும் நன்றாகத்தான் பழகினாள்! காதலி போலத்தான் நடந்துகொண்டாள்! எப்படியும் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறாள் என்று வந்தவனுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்!
"ஏன் மதி....?! என்னை ஏன் வேண்டாம் என்கிறாய்! நீ இல்லை என்றால் என்னால் கடைசிவரை சிரிக்கவே முடியாதே?!"
"அருண்...! உன்னைப் பிடிக்கும்! நிரம்பவும் பிடிக்கும்! ஆனால் உன் குடும்பம் அதன் பாரம்பரியம் பழக்க வழக்கங்கள் எனக்குப் பிடிக்கவில்லை! உன்னை மட்டும் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை! என்னை மன்னித்து விடு! உனக்காக இறுதிவரை இருப்பேன்! ஆனால் ஒரு தோழியாக மட்டும்!
எனக்கான ஒருவனை பங்குபோட்டுக் கொண்டு வாழ்வதில் எனக்கு விருப்பம் இல்லை"
சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து உடனடியாக விரைந்து வெளியேறினாள்!
அவன் அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டான்!
அவள் சொன்ன சொற்கள் மெல்ல மெல்ல உடைந்து புரியத் தொடங்கின!
கடைசியாகச் சொன்ன சொற்கள்!
பங்கு போடுவதில் விருப்பம் இல்லை!
என்றால் என்ன பொருள்?!
குடும்பத்தில் என்ன குறை?!
அவனுக்கு புரிந்தது!
அவனுடைய பரம்பரையில் ஆண்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் கொண்டிருந்தனர்.
அவன் தந்தை, அண்ணன்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள். அவனது தாத்தாக்களுக்கு மூன்று மனைவிகள்!
"நானும் அப்படித்தான் செய்வேன் என்று இவள் நினைத்துவிட்டாளே! இவளைத் தவிர இன்னொருத்தியைத் தொடுவது என்றால் அதற்கு இவள்தான் இரண்டாக மாற வேண்டும்!" என்று நினைத்துக்கொண்டான்.
அதன் பிறகு அவளை எங்கும் பார்க்கவில்லை!
அவள் எங்கேயோ போய்விட்டாள்! இவனும் அவளை தேடவில்லை!
அவனுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை!
இதனால் ஏற்பட்ட விரக்தி அதனால் வந்த வெறுப்பு அவனது இயல்பான முன்கோபமும் முரட்டு குணமும் அதிகமாகி பல பிரச்சனைகள் பல எதிரிகள் என்று வாழ்க்கை திசைமாறியது!
ஒரு கட்டத்தில் அவன் தாய் இறந்த போது அவன் வாழ்க்கை ஓரிடத்தில் சட்டென்று நின்றது.
அவனை அவனே உற்றுநோக்கினான்.
அவனுக்குள் ஒரு மாற்றம் வந்தது.
வழக்கறிஞர் படிப்பை மீண்டும் நினைவுகூர்ந்தான். மேலதிக படிப்புகள் படித்து வழக்கறிஞர் ஆனான்.
இப்போது ஊர் வம்பு செய்பவனாக இல்லாமல் எளிய மக்களுக்காக நின்று போராடி ஊர் வம்பை வாங்கிக்கொள்ளும் போராளி ஆனான். மற்றவர்கள் பணம் பெற்று வழக்கு நடத்திக் கொண்டிருக்க இவன் கையிலிருந்து பணம் செலவழித்து வழக்குகளை நடத்தினான். அவனது குடும்பம் அவனைக் கைகழுவியது.
அவனது சொத்துகள் கரைந்தன.
இந்த நிலையில் ஒருநாள் மதியை தூரத்தில் இருந்து பார்த்தான்.
அவள் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள்.
அவளிடம் போய் பேச அவனுக்கு மனமில்லை.
மீண்டும் அவளது நினைவுகள் வந்து வாட்டின.
அவள்தான் சரி! என் மதி சொன்னால் அதில் காரணம் இல்லாமல் இருக்காது! அவன் அறிவு வேலை செய்தது! அவளது கடைசி சொற்கள் மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியது!
பெரிய பலகையில் தன் குடும்பத்தை ஒரு மரம் போல வரைந்தான் அதில் பல்வேறு கிளைகள் தோன்றின! ஏழத்தாழ எல்லாருமே பல மனைவிகள் கொண்டவர்கள்!
இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமா?!
இதையே ஆய்வு செய்யத் தொடங்கினான்.
முடிவு அவன் நினைத்ததை விட அதிர்ச்சியாக இருந்தது.
இவனுடைய உறவினர்கள் அத்தனை பேரையும் தொடர்புபடுத்தி பார்த்தான். எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரத்து உறவினர்களை தேடி சேர்த்து வரைந்தான். அந்த குடும்ப மரம் தோப்பாகி காடு அளவு கிளைகள் பரப்பி மிகப் பெரிய வரைபடம் தயாரானது.
அதில் இருந்த அத்தனை பேரும் வெவ்வேறு துறைகளில் உச்சத்தில் இருந்தனர். ஏறத்தாழ அனைவருமே பெரும் இடத்தில் இருந்தனர். இவர்களது ஆதிக்கம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருந்தது.
ஏறத்தாழ அனைவருமே இரண்டு அல்லது மூன்று மனைவிகள் கொண்டவர்கள்.
இவர்களுக்கு சாதகமாக ஒரு சட்டத்தையே உருவாக்கியிருந்தனர். அதன்படி இந்த நாட்டில் தந்தை மூன்று மனைவி கொண்டவர் என்றால் மகனும் மூன்று மனைவி வரை திருமணம் செய்யலாம். மற்றபடி ஒரு மனைவிதான்.
இது பற்றிய வரலாற்றை ஆராய நினைத்தான்.
ஆனால் தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
எல்லாமே திட்டமிட்டு அழிக்கப் பட்டிருந்தது.
மூன்று தலைமுறைக்கு முன் நடந்த போரில் இப்படி பல ஆவணங்கள் அழிக்கப்பட்டிருந்தன.
'யார் இவர்கள்? இவர்களின் மூலம் என்ன? இவர்கள் மட்டும் ஏன் இப்படி வேறுபட்டு இருக்கின்றனர். ஒரு இனத்தில் அது போராடி மீட்ட ஒரு நாட்டில் 10% கூட வராத ஒரு கூட்டம் அந்த இனத்தையும் நாட்டையும் ஆதிக்கம் செலுத்துவது சரியா?! இதில் நானும் ஒருவன் என்றால் இதில் எனக்கும் பங்குண்டா?!' அவனுக்கு விடை தெரியாத கேள்விகள் பல தோன்றின.
இவர்களை எப்படி வகைப்படுத்துவது?!
இவர்களுக்கு இருக்கும் ஒற்றுமை இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் கொண்டது மட்டுமல்லாமல் எந்த தொழிலில் இருந்தாலும் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அத்துடன் இவர்கள் பிறரால் மிகுந்த மரியாதையுடன் பார்க்கப் படுகிறார்கள்.
ஆனால் இவர்களோ இந்த நாட்டின் பதவிகள் மற்றும் தொழில்கள் இரண்டையும் தம் கைக்குள் வைத்துள்ளனர்.
இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் என்பதும் வெளியே தெரியாது.
இவர்கள் நாடு முழுவதிலும் பரவியிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட மாகாணம் தவிர பிற இடங்களுக்கு மூன்று தலைமுறைக்கு முன்புதான் குடிவந்துள்ளனர்.
மூன்று தலைமுறைக்கு முன் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை!
வயதில் பெரியவர்களை விசாரித்தால் இவர்களை கிட்டத்தட்ட அரசர்கள் என்றவாறு கூறுகின்றனர். சிலர் தெய்வம் என்றே குறிப்பிடுகின்றனர்.
ஆம்! அதற்கும் காரணம் உண்டு!
இந்த நாட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மதம் இவர்கள் உருவாக்கியதுதான். முன்னோர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது அது.
இன்று நாட்டின் பெரும்பாலோர் அதற்கு மாறிவிட்ட பிறகு இவர்களே அதன் தெய்வங்களாகவும் பூசாரிகளாகவும் மாறிவிட்டனர்.
ஆக அரசியல், பொருளாதாரம், ஆன்மீகம் என எங்கும் இவர்களே இருக்கின்றனர்.
வெளிநாடுகளில் கிடைக்கும் தரவுகள் மேலும் குழப்பம் தருவதாக இருந்தது.
அதாவது அப்போது சாதி என்ற அமைப்பு இருந்துள்ளது. அதைவைத்து ஏற்றத்தாழ்வுகள் இருந்துள்ளன. அதை ஒழிக்க பலர் முயன்றுள்ளனர். ஆனால் இங்கே நடந்த விடுதலைக்கான போர் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டது.
போருக்குப் பிறகு ஒரு சாதியினர் மட்டும் ஒரு குழுவாக இணைந்து இந்த நாட்டை எப்படியோ தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மேலே எதிர்த்தவர்கள் கீழே என்று புதிய சாதிய படிநிலையை உருவாக்கியுள்ளனர்.
அந்த சாதி இங்கேயே இருந்தவர்களா அல்லது வெளியே இருந்து வந்தவர்களா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. அவனது ஆய்வுகள் தொடர்ந்தன.
அந்த தேடலில் ஒரு ஆவணம் பற்றிய தகவல் கிடைத்தது.
அது போர் முடிந்து சில காலம் தாண்டி இங்கே உட்புகுத்த ஒரு வெளிநாட்டு உளவாளி இந்த நாட்டை பற்றி ஆய்ந்து எழுதி அவனது அரசுக்கு அனுப்பிய ஒரு அறிக்கை! அதன் நகல் அவனது பேரனிடம் இருப்பதாக தெரியவந்தது. ஆனால் அதற்கு அவன் கேட்ட விலை மிக அதிகமாக இருந்தது.
-------------------
ஆவணத்தை பிரதி எடுத்துக்கொண்டு உண்மையான ஆவணத்தை பத்திரமாக வைத்துவிட்டு நிதானமாக அதை ஆராயத் தொடங்கினான் அருண்.
அது முழுமையாக இல்லை! இருந்தாலும் இவன் எதிர்பார்த்த தரவுகள் இருந்தன!
அதில் அந்த உளவாளி முன்னுரை போல எழுதியிருப்பதை வைத்துப் பார்த்தால் இவர்கள் இதே இனத்தைச் சேர்ந்தவர்கள்தான்! வெளியில் இருந்து வந்தவர்கள் அல்லர்.
ஒரு பெரிய நாட்டின் அங்கமாக அமைதியாக இருந்த இந்த நாட்டில் பிரிவினையைத் தூண்டி கலவரத்தையும் போரையும் வரவழைத்தது இந்த கூட்டம்தான்!
இன்று அதிகாரத்தில் இருக்கும் இந்த கூட்டம் விடுதலைப் போருக்கு முன் ஒரே சாதியாக இருந்தவர்கள்!
இவர்களே பல இனங்கள் சமத்துவமாக வாழ்ந்த இந்த நாட்டை துண்டாடி போருக்கும் அழிவுக்கும் கொண்டுசென்று அதிகாரத்தைப் பிடித்தவர்கள் என்று கூறிய அந்த ஆவணம்!
அன்று புதிதாக உருவாகியிருந்த இந்த நாட்டில் இவர்கள் எந்த எந்த துறைகளில் எல்லாம் எவ்வளவு ஆதிக்கத்துடன் இருக்கின்றனர் என்று பட்டியல் போட்டிருந்த்து.
இவர்கள் தமக்குள் எப்படி இணைந்துள்ளனர் என்பதையும் அந்த உளவாளி எழுதியிருந்தார்.
இவர்கள் தேசியவாதம் போன்றே இருக்கும் புதிய மதம் ஒன்றை உருவாக்கியிருந்தனர். அதன் தலைமை குருக்களின் குழு ஒன்றிடம் இருக்கிறது. அதேபோல இவர்கள் தேசியவாத அரசியல் கட்சி மற்றும் அரசியல் சாரா இயக்கம் என இரண்டு அமைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
இந்த இரண்டையும் ஒருங்கிணைக்க இரண்டு குடும்பங்கள் இருக்கின்றன!
இந்த இரு குடும்பங்களும் தங்களுக்குள் நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள்!
சொல்லப்போனால் ஒரே குடும்பம் போன்று!
அது இந்த நாட்டின் மன்னர் குடும்பத்தை விட அதிகாரம் படைத்தவர்கள்!
ஆனால் வெளித்தோற்றத்தில் தெரிவதில்லை! வெளிப்பார்வைக்கு நாட்டின் பெரிய குடும்பங்களில் இதுவும் ஒன்று!
அந்த குடும்பத்தின் பின்னாலும் வெளியுலகுக்கு தெரியாத ஒருவர் இருக்கிறார்!
அவரை கண்டறிந்து அழித்துவிட்டால் இந்த நாட்டின் கட்டமைப்பு உடையும்!
அதாவது இந்த நாடு தனிநாடான பிறகு இந்த நாட்டின் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள், நாட்டின் பெரிய பணக்காரர்கள், இந்த நாட்டின் மன்னர், இந்த நாட்டின் மத குருக்கள் என அனைவருமே 90% ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்!
இந்த நாட்டை இயக்குவது ஒரு நபர், அவருக்கு கீழே இரண்டாக இருக்கும் ஒரு குடும்பம், அதற்கு கட்டுப்பட்ட 10% மக்கட்தொகை ஒரு சிறுபான்மைக் குடி, அதன் கட்டுப்பாட்டில் ஒரு மதமும் ஒரு இயக்கமும், இதன் போக்குக்கு இயங்கும் பிற ஆதிக்க குடிகள் (30% மக்கள்), இதற்கு கட்டுபட்டு நடக்கும் பொதுமக்கள் (50%), அவர்களுக்கும் கட்டுப்பட்ட எதுவுமே புரியாத எளிய மக்கள் (10%) என்று இது கட்டமைக்கப் பட்டுள்ளது.
இங்கே கடைநிலையில் இருக்கும் 10% மக்கள் பெரும்பாலும் வேற்றினத்தவர்!
இத்தனை பேரைத் தாண்டி அந்த நபரை கண்டுபிடிப்பது கடினம்! ஆனால் அந்த குடியை வகைப்படுத்தி விடலாம்!
இந்த நாட்டில் இந்த குடிதான் எல்லாமுமே என்று பொதுமக்களுக்கு தெரியாது!
ஏனென்றால் சாதி என்கிற அடையாளத்தை ஆணங்களில் அழித்துவிட்டனர்! அதே போல அதிகாரத்தில் உச்சத்தில் மட்டும் இவர்கள் இருக்கமாட்டார்கள்!
அதிபர் அல்லது அதிபராக வர வாய்ப்புள்ளவர் இந்த சாதியைச் சேர்ந்தவராக எப்போதும் இருப்பதில்லை! ஆனால் அதிபரை ஆட்டுவிக்கும் துணை அதிபர், எதிர் கட்சி, உளவுத்துறை முக்கியமாக ராணுவ தலைமை அனைத்தும் பெரும்பாலும் இவர்கள்தான்!
வெளிப்படையான அடையாளங்களான நடிகர், விளையாட்டு வீரர் போன்ற பிரபலங்களாக இவர்கள் இருக்கமாட்டார்கள்!
வெளிப்பார்வைக்கு பிற மக்கள் போலவே இருப்பார்கள்!
இன்று இவர்களை பிறரிடமிருந்து பிரித்துகாட்ட எந்த அடையாளமும் இல்லை! ஒரே ஒரு அடையாளத்தைத் தவிர! அதுதான் பலதார மணம்!
இதுவே அந்த உளவாளி அனுப்பிய முழுமையற்ற அறிக்கையின் சாராம்சம்!
இது பற்றி மேலும் ஆராய்ந்து தான் பிறந்த குடியின் ஆதிக்கத்தை பொதுமக்களிடம் அம்பலப்படுத்த அருண் தயாரானான்!
இது பற்றி மாறனிடம் சொன்னான்!
யாருக்கும் தெரியாமல் விரிவாக ஒரு புத்தகம் எழுதப் போவதாகவும் அதன் வெளியீட்டு விழாவை பெரிய மாநாடு போல நடத்தி பல நூறு புத்தகங்களை அச்சிட்டு நாடு முழுவதும் இலவசமாக வழங்கப் போவதாகவும் அவன் சொன்னான்!
அதற்கு அவன் "இதனால் எந்த விளைவும் ஏற்படாது! ஏனென்றால் நாடு நல்ல நிலையில் இருக்கிறது! மக்கள் அடிப்படைத் தேவைகளும் உரிமைகளும் பெற்றுள்ளனர்! தேவையற்ற சிறிய பிரச்சனைகளை பெரிய பிரச்சனை போல பேசிக்கொண்டு இருக்கின்றனர்!
'அலுவலகங்களில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு பிறந்த நாள் கொண்டாடலாமா வேண்டாமா ?!' என்பதுதான் இப்போது பெரிய பேசுபொருளாக இருக்கிறது!
நேற்று கூட அதற்காக போராட்டம் நடந்ததே?!"
"சரிதான் மாறன்! என்ன இருந்தாலும் ஒரு சிறிய கூட்டம் ஒரு இனத்தையே ஆதிக்கம் செய்வதை எப்படி ஏற்பது?!"
"மக்களுக்கு தேவை வசதியான வாழ்க்கைதான்! ஆள்வது யார் எவர் என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியமில்லை!"
"எனக்கு என்னமோ இது ஒரு புரட்சியையே கொண்டுவரும் என்று தோன்றுகிறது" என்றான் அருண்!
ஆனால் ஒரு உள்நாட்டு யுத்தமே நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை!
--------
அதிபர் ரகசிய அறையில் நுழைந்தார்! அங்கே ஏற்கனவே இருந்த உளவு அதிகாரிகள் சலசலப்பை நிறுத்திவிட்டு அமைதியானார்கள்!
அதிபர் முன் ஒரு கோப்பு வைக்கப்பட்டது!
அதில் அண்டை நாட்டினர் இங்கே ஒரு புரட்சியைத் தூண்ட திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு ஒரு முக்கியமான நபரை பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வந்திருந்தன.
நாட்டில் ஊடுறுவிய ஒருவனை பிடிக்க முயன்றபோது அவன் எதிர்பாராத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவன் ஒரு முக்கிய ஆவணத்தை யாரோ ஒருவருக்கு கொடுத்ததாகவும் அதிபரிடம் கூறப்பட்டது.
ஆனால் யாரை சந்தித்து என்ன பேசினான் என்று கண்டறிய முடியவில்லை என்றும் கூறினர்.
அதிபர் மக்களிடம் ஏதாவது கோபம் தென்படுகிறதா என்று கேட்டார்!
நாட்டில் இருக்கும் வேற்றின வம்சாவளிகள் மட்டும் சற்று அதிருப்தியுடன் இருப்பதாகவும் அதேபோல நாட்டின் கடைக்குடி என்று பொதுவாக அழைக்கப்படும் ஏழை எளிய மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் ஆனால் கிளர்ச்சி செய்யும் வகையில் அதிருப்தி கொண்டவர்கள் யாருமில்லை என்றும் கூறினர்.
அதிபர் அந்த அண்டைநாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகப் படுத்த கட்டளையிட்டார்.
அப்போது தலைமை உளவு அதிகாரி 'சென்ற ஆண்டு நம் நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை அணைகளில் தடுத்து வைத்துக்கொண்டனர், பாதியளவு தண்ணீரே வந்தது, இந்த முறை அவர்கள் அணை நிரம்பக் கூடாது, ஏற்கனவே ஒருமுறை செய்தது போல குண்டு போட்டு அணையை உடைத்துவிடலாமா?! அல்லது மழையைத் தடுத்துவிடலாமா?!" என்று கேட்டார்.
"மழைமேகங்களை நம் நாட்டிலேயே தடுத்து மழைபொழிய வையுங்கள்! அதுவும் பாதியளவு மேகங்களை விடுங்கள்! அவை அங்கே சென்று மலைகளில் மோதி மழை பொழிந்து நதிநீராக மாறுவது பாதியளவு நடக்கட்டும்!
மலைகளிலும் அதற்கு அடுத்துள்ள காடுகளிலும் நீர் சேரட்டும்! ஆனால் அவர்களது அணைகளுக்கு குடிநீர் மட்டுமே வந்து சேர வேண்டும்! இந்த ஆண்டு மழையளவை கணக்கிட்டு மேகங்களை கணக்கிட்டு அவர்களுக்கு பாதி மழையைத் தடுத்துவிடுங்கள்!" என்று கூறிவிட்டு அதிபர் வெளியே வந்தார்.
அவரைப் பார்க்க தலைமை குரு வந்திருப்பதாக உதவியாளர் வந்து சொன்னார்.
அதிபர் தமது மாளிகையில் மற்றொரு ரகசிய அறைக்குப் போனார்! அங்கே தலைமை குரு தவிர பிற சீடர்கள் வெளியே சென்றனர்!
அதிபர் குருவை வணங்கினார்!
"என்ன தலைவரே! புரட்சிக்குத் தயாரா?" என்று குரு கேட்க அதிபர் அதிர்ந்துவிட்டார்!
"உங்களுக்கு எப்படி.."
"எனக்கு என் நலம்விரும்பிகள் சொன்னார்கள்!"
"நிழல் தலைவர் செய்தி அனுப்பினார் என்று சொல்லுங்கள் குருவே! புரட்சி ஏற்படும் அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! அதை செய்ய நினைத்தவர் களையும் அதில் கவனம் செலுத்த முடியாதபடி நெருக்கடிகளை ஏற்படுத்திவிட்டேன்!"
"தலைவரே! மக்கள் வசதியாக சில காலம் வாழ்ந்தாலே ஒருவித சலிப்பு ஏற்படும்! அதுவே புரட்சி நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறி! ஆனால் நீங்கள் நினைப்பது போல பிரச்சனை வெளியே இருந்து வரப்போவதில்லை! ஏற்கனவே இங்கே விதை போடப்பட்டு விட்டது!"
"குருவே தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையும் செய்கிறேன்! எனக்கு நாடு நன்றாக இருந்தால் போதும்!"
"இனி அதைத் தடுக்க முடியாது! நாட்டுக்குள் மோதல் வரத்தான் போகிறது! அது இருதரப்பு 'மேடை முழுக்க மோதலாக' இருக்கலாம்! அல்லது நாடே இரண்டாக பிளந்து பெரும்போர் நடக்கலாம். ஏனென்றால் நாம் மூடிமறைத்த பெரும் ரகசியம் ஒன்று வெளிவரப் போகிறது"
அதிபர் கவலை கொண்டார் " இப்போது என்ன செய்யலாம்?!"
"இதை செய்யப்போகிறவன் யாரென்று தெரியவில்லை! ஆனால் அவன் வெளிச்சத்துக்கு வந்த பிறகு உடனடியாக செயலில் இறங்க வேண்டும்! அவனை நாம் அடையாளம் கண்டு சரிசெய்வதற்குள் அவன் புகழடைந்து விட்டால் ஒன்றும் செய்யமுடியாது!
அதாவது அவனது தொடக்கம் பெரியதாக இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்!
அவன் வெளிப்பட்ட பிறகு என்னிடம் கொண்டுவந்து சேருங்கள்!
மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்!
என்னால் ஊகிக்க முடிவது ஒன்றுதான்!
அவன் தலைக்குடியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும்"
"தலைக்குடியில் பிறந்த ஒருவன் நாட்டுக்கு எதிராக சிந்திக்க வாய்ப்பே இல்லையே?!"
"ஆம்! ஆனால் அவன் பார்வையில் அவன் செய்யப்போவது தான் நாட்டுக்கு நன்மை!"
"நிழல் தலைவர்தான் இந்த நாட்டைக் காக்க வேண்டும்!"
தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment