Saturday 17 August 2024

அத்திக்கடவு அவிநாசி திட்டம் அறிவோம்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் அறிவோம் 

 காமராசர் வகுத்த திட்டம் வேறு!
இன்று நிறைவேறியிருப்பது  வேறு!

  மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் பவானி ஆறு மேட்டுப்பாளையத்திலுள்ள பில்லூர் அணைக்குப் பக்கத்திலிருக்கும் அத்திக்கடவுக்குள் நுழைகிறது. இந்த ஆறு ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையை அடைந்து, பின்னர் 75 கிலோமீட்டர் பயணித்து பவானியருகில் காவிரியில் கலக்கிறது.

 இப்படி கலக்கும் பவானி ஆற்றின் உபரிநீரை (அன்றைய ஒருங்கிணைந்த) கோவை மாவட்ட விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டுமென 1957 இல் காமராஜர் திட்டம் வகுத்தார்.

 அதாவது பவானி ஆற்றின் உபரிநீரை கால்வாய்கள் வெட்டி திசைதிருப்பி, அன்றைய கோவை மாவட்டத்திலுள்ள வறண்ட நீர்நிலைகளில் நிரப்ப வேண்டும் என்பது திட்டம்.

 காமராசருக்குப் பின் கிடப்பில் கிடந்த இத்திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ல் முதல்வராக இருந்த கருணாநிதியால் `அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் மறுசேர்ப்பு மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
 
 பிறகு மீண்டும் 32 ஆண்டுகள் கழித்து கருணாநிதி ஆட்சியில் 2009-ல் நீரியல் வல்லுநர் மோகனகிருஷ்ணன் தலைமையில் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டது. இக்குழு 'வெள்ளப் பெருக்கின்போது 2 டி.எம்.சி அடி நீரை திசைதிருப்ப முடியும்' என்று அறிக்கை கொடுத்தது. 
 "ஆகா அப்படியா அவ்வளவு நல்லது செய்ய நிதி இல்லை" என்று கிடப்பில் போட்டார் கருணாநிதி!

 பிறகு 5 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா 2014-ல் (மனந்திருந்தி மக்கள் பக்கம் ஏறெடுத்துப் பார்த்த கடைசி காலம்) அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் இந்தத் திட்டம் நிறைவேறும் என்று அறிவித்தார்.

 பிறகும் 5 ஆண்டு கிடப்பு!  எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் திட்டம் அடிப்படையே மாற்றப்பட்டு உபரி நீர் கால்வாய்கள் மூலம் திருப்பப் படாமல் பவானி ஆற்றின் கீழுள்ள காளிங்கராயன் அணைக்கட்டுக்கு போய்ச் சேர்ந்த பின் அதிலிருந்து பம்பிங் செய்யப்பட்டு ஏரி, குளங்கள் நிரப்ப அனுப்பப்படும் திட்டம் வகுத்தார்.
 2019 இல் அடிக்கல் நாட்டி 80 சதவீத பணிகளை முடித்தார்.

 மீதி 20% பணிகள் முடிக்கப்பட்டு இந்த திட்டம் ஸ்டாலின் ஆட்சியில் தற்போது  நிறைவேற்றப்பட்டது.

 ஒரு நல்ல திட்டம் 65 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு அடிப்படையே தகர்க்கப் பட்டு நிறைவேறியுள்ளது.
 
 இருந்தாலும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் பாய்ச்ச இத்திட்டம் உதவும் என்பது மகிழ்ச்சி! 

தகவல்களுக்கு நன்றி: விகடன்






 

No comments:

Post a Comment