வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்
ஆந்திரம் பிரிந்து ஒரு மாதம் கடந்து விட்டது.
ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் தெலுங்கு மொழி இன்னும் நமது ராஜ்ய ரேடியோ நிலையத்திலிருந்து ஒழியவில்லை.
காலையில் எழுந்து ரேடியோவை திருகினால் நாம் கேட்கும் மொழி தெலுங்காகத்தான் இருக்கிறது.
தமிழில் பாடகர் பாடினாலும் இன்னார் இன்ன ராகம் இன்ன தாளத்தில் பாடுகிறார் என்பதை தெலுங்கில் தான் சொல்லுகிறார்கள்!
பாடகர்களிலும் பெரும்பாலோர் இன்னமும் தெலுங்கில் பாடுவதை விட்டதாக தெரியவில்லை.
ரேடியோ நிலைய அதிகாரிகள் வெறும் தமிழ் மட்டும் பாடுபவர்களை தரக்குறைவாக நடத்துகிறார்களாம்!
தெலுங்கிலும் பாடாவிட்டால் பாட அனுமதிக்க முடியாது என்று மிரட்டுகிறார்களாம்!
ஆந்திரம் பிரியும் முன்னர் இந்த நிலையில் இருந்த்தை நாம் ஓரளவு சகித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் ஆந்திரம் பிரிந்த பின்பும் அதே நிலை தான் என்றால் இப்படி ஒரு ரேடியோ நிலையம் அவசியம் தானா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் வேதனையுடன் தலைத் தூக்கி நிற்பது நியாயமே.
ஆந்திரர்களுக்கு விஜயவாடா ரேடியோ நிலையம் தனியாக இருக்கிறது.
செகந்திராபாத் ரேடியோ நிலையமும் முழுக்க ஆந்திர மயமே. அப்படி இருக்க தமிழ் ராஜ்ய ரேடியோ நிலையமும் தெலுங்கு மயமாகத்தான் இருக்க வேண்டுமா?!
விஜயவாடா ரேடியோ நிலையத்தில் தெலுங்கு பாடகர்கள் தமிழ் பாட்டுகளாக பாடிக் கொண்டிருந்தால் ஆந்திரர்கள் சும்மா இருப்பார்களா?!
தமிழர்கள் ஆந்திரர்களைப் போன்று வெறி பிடித்தவர்களாக இருக்க வேண்டாம் ஆனால் தங்கள் தாய்மொழி பற்றை கூடவா விட்டு விட வேண்டும்?! சென்னை ரேடியோ நிலையத்தில் சினிமா ரிக்கார்டுகள் ஒளிபரப்பும் நேரத்தில் இந்தி ரெக்கார்டு போடுவதைப் போன்று தெலுங்கு ரெக்கார்டுகளையும் போட்டு தொலைத்து விட்டு போகட்டும்!
நாம் அக்கறைப்படவில்லை!
ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கால்வாசிக்கு மேல் தெலுங்கு மயமாக இருப்பதை உணர்ச்சி உள்ள தமிழர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை!
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் இல்லை என்றால் 'தெலுங்கு ஒளிபரப்பு எதிர்ப்பு இயக்கம்' தமிழர்களால் தொடங்கப்பட நேரும்.
இதற்கு அறிகுறியாக இப்பொழுது தமிழ் ராஜ்யத்தில் ரேடியோ பெட்டி வைத்திருப்போர் தங்கள் தங்களின் அதிருப்தியை ரேடியோ நிலைய அதிகாரிகளுக்கும் மத்திய அரசாங்க மந்திரி அகர்வாலுக்கும் நமது ராஜ்ய மந்திரி சபை பிரச்சார இலக்காவிற்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி பாகுபடற்ற முறையில் தமிழர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை நேரிய முறையில் ஆட்சியாளருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்!
தமிழகத்தில் எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் இது பற்றி தீர்மானம் நிறைவேற்றி ஆட்சி பீடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்!
தமிழ் ராஜ்யத்திலேயே தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க முற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
இசைத்தமிழ் தழைக்க, தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழகத் தலைவர்கள் பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறோம்.
கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம்
01.11.1953
No comments:
Post a Comment