தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை
16.08.2016 அன்றைய பதிவு
சோழர் வீழ்ந்து பாண்டியராட்சி மீண்டும் மலர்ந்தது, அதன் பிறகு வாரிசுரிமைப் போர்களால் பாண்டியர் வலுகுன்றிய வேளையில் துருக்கியர்களான டெல்லி சுல்தான்கள் தமிழகத்தின் மீது மூன்று முறை படையெடுத்தனர் இதனால் பாண்டிய அரசு மேலும் வலுகுன்றியது.
டெல்லி சுல்தான் ஆட்சி மதுரை வரை பரவியது.
பாண்டியர்கள் தென்தமிழ்நாட்டில் சுருங்கிக் கொண்டனர்.
இந்நிலையில் டெல்லிக்கு கட்டுப்படாமல் மதுரையை கிபி 1335 இல் தனிநாடாக அறிவித்தார் ஜலாலுதின் அஹ்ஸான்கான்.
வடக்கே சித்தூர் முதல் திருச்சிவரை சம்புவரையர்களும் நடுவில் திருச்சி முதல் ராமேஸ்வரம் வரை மதுரை சுல்தான்களும்
ராமேஸ்வரம் முதல் குமரிமுனை வரை தென்காசிப் பாண்டியர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். குழப்பமான இந்த காலத்தில் தெலுங்கர் கன்னடரையும் சேர்த்துக்கொண்டு தமிழகத்தின்மீது படையெடுத்தனர்.
இந்த விஜயநகர படையெடுப்பு மதுரையில் (40 ஆண்டுகளாக) சுல்தான்கள் (இசுலாமியர்) நடத்திய கொடுமைகளை அறிந்து இந்து மதத்தைக் காக்க நடந்ததாக கூறப்படுகிறது.
தெலுங்கு விஜயநகர பேரரசு குமாரகம்பணன் தலைமையில் முதலில் வடக்கே சம்புவரையர்களை கிபி 1362 ம் ஆண்டு வாக்கில் வென்றது.
பிறகு கிபி 1371 ல் மதுரை சுல்தான்களை வென்றது.
பிறகு 1535 வாக்கில் பாண்டியர்களையும் வென்று உச்சநிலையை எய்தியது.
குமாரகம்பனனின் மனைவி எழுதிய 'மதுராவிஜயம்' துருக்கர் ஆட்சி செய்த கொடுமைகளாக கூறுவன,
*கோயில் வழிபாடு நிறுத்தப்பட்டு, நகரத்தில் மிருதங்க ஒலிகள் நின்று நரிகள் ஊளையிட்டவனாம்.
*யாகங்களுக்கும் மந்திரங்களுக்கும் பதிலாக மாமிசம் சுடுவதும் துருக்க குரலொலிகளும் கேட்டனவாம்.
*மதுரைப் புறநகர தென்னந்தோப்புகள் வெட்டப்பட்டு கழுமரங்கள் நடப்பட்டு அதில் மனித மண்டையோடுகள் தோரணமாகக் கட்டப்படடனவாம். *துலுக்கர் வெட்டிக் குவித்த பசுக்களின் குருதியால் தாமிரபரணி சிவந்து ஓடியதாம்.
*வேதமும் நீதியும் மறைந்து தர்மமும் கருணையும் சிறிதுமின்றி போனதாம்.
*அபாக்கியர்களான திராவிடர்களின் நெற்றியில் ஏக்கமே எழுதப்பட்டுள்ளதாம்.
இதையே நாயக்க வம்சாவளி இலக்கியங்களும் கூறுகின்றன.
ஆனால் கங்காதேவியின் இந்த வர்ணனை முழுக்க உண்மையில்லை என்கிறார் ஏ.கிருஷ்ணசாமி (The Tamil country under vijayanagar, p.99) இந்த அளவு கொடுமைகள் அன்று நடந்ததாக வேறு எந்த சான்றும் இல்லை. ஆனாலும் மதசடங்குகளுக்கு இன்னல்கள் இருந்துள்ளன.
மதுரையில் 1335-1378 காலகட்டத்தில் நடந்த வேற்றின இசுலாமியர் ஆட்சி தமிழக மக்களுக்கு பிடித்ததாக இல்லை.
இது நாயக்கராட்சி தமிழகத்தில் நுழைய வசதியாக அமைந்தது.
நாயக்கராட்சி முழுக்க இசுலாமியர்களுக்கு எதிரானதாக இல்லை.
நாயக்கராட்சியில் இசுலாமியர்களும் பங்குபெற்றிருந்தனர் (ராமைய்யன் அம்மானை பக் 20, 22).
நாயக்கராட்சி தமிழகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்று அக்கால இலக்கியங்களின் மூலம் அறிய இப்பதிவு முயலும்.
நாயக்கர் கால தமிழ் இலக்கியங்கள் எதுவுமே நாயக்க மன்னர்களைப் பாராட்டவில்லை,
சுற்றிவளைத்து, பாராட்டுவது போல அறிவுரைதான் கூறியுள்ளன.
அதாவது மன்னருக்குண்டான தகுதிகளைக் கூறி அவ்வாறு இருப்பவன் சிறந்த மன்னன் என்றுதான் கூறியுள்ளன.
நாயக்க மன்னர்கள் சுகபோகமாக வாழ்ந்தார்களே ஒழிய மக்களுக்கும் அவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருந்திருக்கவில்லை.
மன்னருக்கும் அவரது தளபதியான தளவாய்க்கும் கட்டுப்பட்ட பாளையக்காரர்களே அனைத்தும் செய்தனர்.
இராமைய்யன் அம்மானை பக்கம் 23-26 ல் திருமலை நாயக்கரின் கீழ்
36 தெலுங்கு பாளையக்காரர்களும்,
12 இசுலாமியர்களும்,
24 தமிழ் பாளையக்காரர்கள்
செயல்பட்டதாகவும் கூறுகிறது.
(இந்த 24 தமிழரில் 8 தமிழர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ பாளையக்காரர்கள் மற்றவர்கள் பாளையக்காரர்களாகவோ அல்லது பாளையக்காரர் போல செயல்பட்டவராகவோ இருந்தனர். இசுலாமியரின் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது 12ல் இருவர் தமிழராகத் தெரிகின்றனர்).
தெலுங்கர்களுக்கு அடுத்து பாளையக்காரர்களாக இருந்த தமிழர்களில் தென் தமிழகத்தில் மறவர்களும், கொங்குபகுதியில் கவுண்டர்களும், திருச்சியில் மழவராயர்களும், ராமநாதபுரத்தில் அம்பலக்காரர்களும் இருந்துள்ளனர்.
நாயக்க ஆட்சிமுறை பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான பள்ளர்களே. பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன.
பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் 'கொத்தடிமைகளாக'க் கூட குறிக்கப்பட்டுள்ளனர்.
(திருமலை முருகன் பள்ளு 13:1-6).
விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை. இவர்களுக்கு கிடைத்த பங்கு குடிசுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.
ஆனால் இவை பள்ளர்களின் தேவைக்குப் போதவில்லை என்றும் இவையும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.
இதனால் பள்ளர்கள் மிக வறுமையில் வாடினர்.
(வையாபுரிப்பள்ளு 203-204;
திருமலை முருகன் பள்ளு 158;
மாந்தைப்பள் 89)
தன் கூலிக்கென ஒதுக்கிய நிலம் நாள் முழுவதும் ஒரு பன்றி மூக்கினால் கிளறும் அளவினது என்றும் அதில் தினமும் முழு கதிர் விளைந்தாலும் தனக்குப் பத்தாது என்றும் முக்கூடற் பள்ளுவில் (67) ஒரு பள்ளர் கூறுமாறு வருகிறது.
பட்பிரந்தத்தில் (82) நீண்ட கால்களையுடைய மாடன் என்பவன் ஒரே அடியால் அளந்துவிடும் அளவில் தனக்கான நிலம் இருந்ததாகவும் ஆனால் அதை உழவும் கலப்பை, மாடுகள், விதை போன்றவை தன்னிடம் இல்லை என்றும் ஒரு பள்ளர் கூறுவதாக வருகிறது.
செட்டியார்களிடம் வாங்கிய கடனுக்காக தனக்கான நெல்லிலிருந்து பள்ளர்கள் அளந்து கொடுத்ததை பட்பிரபந்தம் (139) கூறுகிறது.
மாடுகளை கொடுத்ததை வையாபுரிப் பள்ளு(115:1-3) கூறுகிறது.
பாளையக்காரர்களுக்கு கீழ் இருந்தோர் பண்ணை விசாரிப்பான்கள், இவர்கள்தான் பண்ணை என்ற பெயரில் நிலத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை வேலைவாங்கினர் (இவர்கள் கணக்கர், மணியம், முறையம்பிள்ளை எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்).
இவர்களை திருடன், கைக்கூலி, வம்புக்காரன் என்றெல்லாம் திருமலை முருகன்பள்ளு(112) வெறுப்புடன் கூறுகிறது.
நாயக்க அரசின் வருமானம் நான்கில் ஒரு பங்கு நில விளைச்சல் மூலமே கிடைத்துள்ளது (டி.வி.மகாலிங்கம், Administration and Social life under Vijayanagar, பக்.48-50).
இது நிலவுடைமைக்காரர்கள் மூலம் பள்ளர்களிடமிருந்து சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. நிலவுடைமை அதிகாரிகளான கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோர் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பிராமணராகவோ, ரெட்டிகளாகவோ, நாயுடுகளாகவோ இருந்தனர்.
சிலர் தமிழ்பேசும் மறவர், கள்ளர் வகுப்பினராக இருந்தனர் (Burton Stein, Peasent state an society in medieval south india, p.417).
கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது (கண்.683-699) ஏராளமான செல்வந்தர்களைக் குறிப்பிடுகிறது அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு நாயக்கர்கள்.
சதகநூல்கள் அந்தணர்களையும் வெள்ளாளர்களையும் புகழும் அதேவேளையில் வணிகர்களை வெறுப்புடன் பார்க்கின்றன.
ஏனென்றால் நாயக்கராட்சி வணிகத்தின் மூலம் பொருளீட்டுவதில் மட்டுமே குறியாக இருந்துள்ளது. சங்ககால தமிழ் இலக்கியங்கள் வீரத்தையும் காதலையும் பேசுவது போல நாயக்கர்கால சதகநூல்கள் செல்வம் சேர்ப்பதைப் பற்றியே முக்கியமாகப் பேசுகின்றன (அறப்பளீசுர சதகம்,37; கயிலாசநாத சதகம்,10, தண்டையலார் சதகம்,97,28).
ஆங்கிலேய ஆட்சிதான் நிலவுடைமைச் சமூகத்தை உருவாக்கி அதுவரை இருந்த கிராம கூட்டு உற்பத்தியை சிதைத்து அடிமட்டம் வரை சுரண்டியெடுத்ததாக பலரும் கூறுவர்.
ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சி ஆயங்கார முறை மூலம் அதை முன்பே செய்துள்ளது.
அதாவது மக்களை ஆள்வது நோக்கமில்லை மக்களை முடிந்த அளவு சுரண்டுவதுதான் நோக்கம்.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது போல நாயக்கர் காலத்தில் அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. குளங்கள்தான் பல வெட்டப்பட்டுள்ளன.
அதுவும் பண்ணை விசாரிப்பான்களாலும் பாளையக்காரர்களாலுமே பொறுப்பெடுத்து கட்டப்பட்டுள்ளன.
மன்னர்கள் வரி வாங்குவதைத் தவிர எதுவுமே செய்யவில்லை.
மக்களுக்காக எந்த பெரிய திட்டமும் மேல்மட்ட அரசினால் செயல்படுத்தப் படவேயில்லை.
பாளையக்காரர்களே சிறிய அளவிலான பொதுத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்
(சங்கரலிங்க உலா கண்.289-301;
மான்விடுதூது கன்.153-163;
கமலாயச் சிறப்பு 51,101;
குற்றாலக் குறவஞ்சி 93,131;
புலவராற்றுப்படை கண்.315-321;
அரிச்சந்திர புராணம் -நகர்சிறப்பு-2;
கூடற்புராணம் 86).
பொதுத்திட்டங்களுக்கும் மக்களிடமே விளைச்சலில் இருந்து தனியாக வசூலித்துள்ளனர் (முக்கூடற்பள்ளு 139;
மாந்தைப்பள் 88;
வையாபுரிப் பள்ளு 91,199;
பட்பிரபந்தம் 25,139;
சமுத்திரவிலாசம் 2;
கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூது க.957).
இதனால் பள்ளு இலக்கியங்கள் மழையை எதிர்பார்த்து பள்ளர்கள் தவிப்புடன் இருந்ததை பதிவு செய்துள்ளன.
அரசின் பாராமுகத்தால் நலிந்த வேளாண்மை மக்களைப் பஞ்சத்தில் தள்ளியது.
1622 முதல் 1770 வரை பதினான்கு முறை பஞ்சம் ஏற்பட்டு பலர் இறந்தனர்!! பலர் இடம்பெயர்ந்தனர்!
அரசு இவர்களுக்காக எந்த நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
(தமிழக வரலாறு 1565 - 1967, கு.ராஜய்யன்).
அதாவது நாயக்கர் ஆட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே பற்றாக்குறை ஏற்படத் தொடங்கிவிட்டது.
இதை சமாளிக்க நாயக்க மன்னர்கள் எதுவும் செய்யவில்லை.
சத்திரங்கள் பாளையக்காரர்களால் தொடங்கப்பட்டன.
(சங்கரலிங்க உலா -பின்னிணைப்பு)
உழைத்த மக்கள் உணவுக்கு கையேந்தி சத்திரத்தில் நின்றனர்.
அந்த சத்திரங்களிலும் மோசமான உணவே கிடைத்தது.
15ம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரும் இதனைப் பதிவுசெய்துள்ளார்.
'கல்லும் நெல்லும் கலந்த சோறு, வாடிப்போன கத்திரிக்காய், அதில் உப்பில்லை, ஈக்கள் விழுந்து கிடந்தன' என்று அவர் குறிப்பிடுகிறார்.
இன்னொரு சத்திரத்தில் மிகவும் கால தாமதமாக உணவு தயாரிக்கப் பட்டதையும் அவர் பதிவு செய்துள்ளார் (தனிப்பாடல் திரட்டு, ப.34, 67).
பள்ளர்கள் மட்டுமன்றி அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டனர். புலவர், சோதிடர், கொல்லர், ஓவியக்கலைஞர், ஆசிரியர், குயவர், பஞ்சாங்க புரோகிதர் முதலியவர்கள் வறுமைக்குரியவர்கள் என்று தனிப்பாடல் ஒன்று கூறுகிறது (த.தி.க., பக் 244).
வாத்தியார், குரு, கவிவாணர், மறையோர், பண்டிதர், தச்சாண்டி, தட்டான், சவரகன் (அம்பட்டையன்) போன்றவர்களை கடன் கொடுக்கக்கூடாதவர்கள் என்று கயிலாசநாதர் சதகம் (31) கூறுகிறது.
வரி தராதவர்களுக்கு போரில் தோற்றவர்களுக்கான தண்டனைகள் கொடுக்கப்பட்டன. சிறைதண்டனையும், உறுப்புகளைச் சிதைப்பதும் நடந்துள்ளன. திருமலை நாயக்கருக்குப் பணியாதவர்களின் முதுகுத் தோலை உரித்ததாகவும், முட்டி எலும்பைத் தட்டி எடுத்ததாகவும் ராமைய்யன் அம்மானை (பக் 53, 5-11) தெரிவிக்கிறது.
கண்களைத் தோண்டியெடுப்பது, காதுகளை அறுப்பது, கொதிக்கும் நெய்யில் கைவிடச்செய்வது, எண்ணெயில் நனைத்த துணியை கையில் சுற்றி தீவைப்பது, தூக்கிலிடுவது, தலையை வெட்டுவது போன்ற நாயக்கர் கால கொடூர தண்டனைகள் அக்காலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த பாதிரியார்கள் எழுதிய கடிதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன (R.Sathyanatha Aiyar, Tamilaham in the 17th century).
அதுவரை இல்லாத வழக்கமாக மனுதர்மத்தை சட்டமாக்கி பின்பற்றவேண்டிய கட்டாயத்தை நாயக்கர்கால இலக்கியங்கள் கூறுகின்றன (திருவிளையாடற் புராணம் மதுரை.561,521;
சேதுபதி விறலிவிடுதூது கண்.291,292;
கூடற்புராணம் 2;
கமலாலய சிறப்பு 854-856,889;
திருவருணைக் கலம்பகம், கண்.65:3;
குமரேச சதகம் 12:5-6;
திரு.முரு.பள்.,103).
நாயக்க மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் 'வருணாசிரம தர்மங்கனுபாலித்த' என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர் (ந.க.மங்களமுருகேசன், இந்திய சமுதாய வரலாறு, ப.311).
பள்ளர், பறையர், புலையர் கீழ்சாதி என்றும் (திரு.முரு.பள்.103),
தீண்டாத சாதியினர் என்றும் (ஐவர் ராசாக்கள் கதை, வரி 888-889; கந்.காத.,கண் 93-96)
கொத்தடிமைகள் என்றும் (பட்.பிர.93; மு.பள்.13:13-16),
இழிகுலத்தினர் என்றும் (கம.சிற.1-2) குறிப்பிடப்படுகின்றனர்.
பள்ளர்கள் அடிமைகளாக விற்கப்பட்டும் உள்ளனர் (கூள.விற.க.364).
1623ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கம்மாளரிடையேயான 5பிரிவுகள் கலக்கக்கூடாது என உத்தரவிட்டதைக் கூறுகிறது.
1705ல் மங்கம்மாள் காலத்தில் சாதி அடையாளங்களைப் பேண மானியங்கள் தரப்பட்டதை ஒரு கல்வெட்டு கூறுகிறது.
இதனை ஐரோப்பிய பாதிரிகளும் குறிப்புகளும் சான்றாக உள்ளன (R.Sathiyanatha Aiyar, 1980, p.193).
அக்காலத்தில் தமிழில் அறிமுகமான சதக நூல்களும் சாதிய முறையை ஊக்குவிப்பதாகவும் (கயிலாச சதகம் 28) சாதிப் படியே தண்டனைகள் வழங்கவேண்டியது அரசின் கடமை என்றும் (அறப்பளீகர சதகம் 11) மனுஸ்மிருதி சிந்தனையைப் பிரதிபலிக்கின்றன.
அதுவரை தோன்றாத சாதிய நூல்கள் தோன்றின. சாதிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக கடைநிலையில் இருந்த பரதவர், பள்ளர், பறையர், சாணார் போன்ற சாதியினரை கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆதரவு காட்டி மதம் மாற்றினர்.
பெர்ணான்டஸ் என்ற பாதிரியாரால் 1592ம் ஆண்டு இயேசு சபை (Jesuits) என்ற முதல் கிறித்து மிஷனரி வீரப்ப நாயக்கன் என்ற மதுரை மன்னனின் அனுமதியுடன் தொடங்கப்பட்டது!
சேதுபதி மன்னனான சடைக்கத்தேவனை வெல்வதற்கு உதவியதற்காக ராமேசுவரம் தீவு பறங்கியருக்கு அளிக்கப்பட்டது (ராமைய்யன் அம்மானை 8:22-23).
பிராமணர்களை வானளவு புகழ்ந்து எழுதுகின்றன நாயக்கர்கால சதக நூல்கள் (அறப்பளீசுர சதகம், 55; குமரேச சதகம்,2; கயி.சத.3).
1604ல் தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட்-டி-நொபிலி வருணமுறை அரசு ஆதரவும் செல்வாக்கும் பெற்றிருந்ததாகக் பதிவுசெய்துள்ளார்.
அவர் மதுரையில் பத்தாயிரம் பிராமண மாணவர்கள் கல்வி பயின்றதாகவும், பிராமணர் தவிர யாருக்கும் உயர்கல்வி பெற உரிமை இல்லை என்றும் கூறுகிறார் (History of nayakas of madura, p.194, ஆர்.சத்தியநாதய்யர்).
ஆனால் பிராமணரல்லாதாருக்கு வெள்ளாளர் ஆதரவில் நடந்த சைவமடங்கள் கல்வி புகட்டின (Social history of tamils under vijayanagar, M.Sivanantham, p.63-64).ஆனாலும் அடித்தட்டு மக்கள் பரவலாகக் கல்வி பெற முடியாமல் இருந்தது.
கல்வியில் வடமொழி புகுந்தது (மாந்.பள்.21) சமஸ்கிருதமும் தெலுங்கும் தமது பொற்காலத்தை நாயக்கர் காலத்தில் அடைந்தன. இவ்விரு மொழிகளிலும் கலை மற்றும் இலக்கியம் வளர நாயக்கர்கள் பாடுபட்டனர் ( இதனை கு.ராஜய்யன் விரிவாக எழுதியுள்ளார்).
வடமொழிக்கும் தமிழுக்கும் சங்கங்கள் இருந்ததாக கூடற்புராணமும்(154), திருக்குற்றால மகவந்தாதியும்(10) கூறுகின்றன.
ஆரியம், கன்னடம், வடுகு (தெலுங்கு), தமிழு என நான்கு சங்கங்கள் இருந்ததாக கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது (கண்.188-189) கூறுகிறது.
அக்காலப் புலவர் தமிழும் தெலுங்கும் அறிந்துவைத்திருந்ததாக சேதுபதி பணவிடுதூது (க.135) கூறுகிறது.
தமிழ் மொழி வறுமைக்காலத்தில் இருந்தது.
நாயக்க மன்னர்கள் தமிழை வெறுத்தனர் (மான்விடுதூது இணைப்பு; சுப்பிரதீபக் கவிராயர்,த.தி.,பக்.197)
நாயக்கர்காலத்தில் எங்கும் தெலுங்கே கொடிகட்டிப் பறந்தது (படிக்காசு புலவர், த.தி., பக்.12).
சிற்றிலக்கியங்கள் மட்டுமே தமிழைக் காப்பாற்றி வந்தன.
திருக்காளத்தி நாதருலா, திருக்கழுக்குன்ற உலா, திருமலையாண்டவர் குறவஞ்சி, கமலாலய அம்மன் பள்ளு ஆகிய நாயக்கர் கால சிற்றிலக்கியங்கள் நாயக்கரைப் புகழாது சோழரையும் பாண்டியரையும் புகழ்கின்றன.
நாயக்கர்களின் வைணவ மதத்திற்கு எதிராக சைவத்தைப் போற்றுகின்றன.
சதக நூல்கள் மனுதர்மத்தை அடியொற்றி பெண்களை இழிவாக சித்தரிக்கின்றன (அற.சத.35; தண்டலையார் சதகம், 85,86; குமரேச சதகம், 51).
வறுமை காரணமாக மனைவியை விற்று வாழ்க்கை நடத்திய சிலரை கயிலாசநாதர் சதகமும் (13), குமரேச சதகமும்(32) கூறுகின்றன.
நாயக்க அரசர்கள் அழகான பெண்கள் கண்ணில்பட்டால் அவளை தன் அரண்மனைக்கு கூட்டிச்செல்வதும் நடைமுறையாக இருந்துள்ளது (T.V.Mahalingam, South Indian Polity, p.63).
நாயக்கர் காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் அதிகம் இருந்தது. சேதுபதி மன்னன் சடைக்கதேவனுடன் அவனது மனைவி உடன்கட்டை ஏறினாள்.
ராமநாதபுர சேதுபதியோடு 47 பெண்கள் உடன்கட்டை ஏறினர்.
திருமலை நாயக்கனோடு 200 பெண்கள் உடன்கட்டை ஏறினர்.
பண்ணைவிசாரிப்பான்கள் வேளாண்மை பெண்களை திட்டுவதும், அடிப்பதும், காமப்பசிக்கு இரையாக்குவதும் நடந்துள்ளது (மா.பள்.51; பட.பிர.105,106; திரு.முரு.பள். 152).
பரத்தைத் தொழில் பெருகியது. பரம்பரையாக தனது மகளை வைத்து தொழில் செய்யும் தாசி குலம் தோன்றியது. தாசியின் தாய் சாராயம், மருந்து வாங்கவும் தூது செல்லவும் சில பெண்களை வைத்துக்கொண்டு (மூவரையன் விறலிவிடுதூது க.271; கூள.விற.,கண்.230-240), தன் மகளை வைத்து தொழில் செய்ததை (கும.சத.75; கூள.காத.கண்.318-319) அறியமுடிகிறது.
விறலிவிடுதூதுக்கள் பரத்தைமையால் சீரழிந்தவர்களின் நிலையைப் பதிவுசெய்யவே எழுந்தன.
மக்கள் அனைவரும் குடிக்கு அடிமையாகவும் ஒழுக்கம் தவறியும் காணப்பட்டனர்.
மக்களிடையே மூடநம்பிக்கைகள் அதிகம் நிலவின. சகுனம், செய்வினை, வசியம் பற்றி பல குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
சிற்றூர்களில் உள்ள தெய்வங்களின் தலபுராணம் வடமொழித் தொடர்பு டையவையாக மாற்றியமைக்கப் பட்டன.
இதை ஆராய்ந்த எஸ்.அனவரத விநாயகம்பிள்ளை தமிழ்த் தலபுராணங்கள் வடமொழியை மூலமாகக்கொண்டன அல்லவென்று மறுக்கிறார் (மச்சபுராணம் முன்னுரை பக்:8.9)
தகவல்களுக்கு நன்றி:
அ.ராமசாமி எழுதிய 'நாயக்கர்காலம் இலக்கியமும் வரலாறும்'
சுருங்கக்கூறின்,
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கர்கள் மக்களை சுரண்டுவதிலேயே குறியாக இருந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை இல்லாததாலும் பொதுத்துத் திட்டங்கள் செயல்படுத்தாமல் இருந்ததாலும் மக்களை பஞ்சத்தில் தள்ளியுள்ளனர்.
மனுதர்மத்தின்படி வர்ணாசிரமத்தை நடைமுறைப்படுத்தி சாதியைச் சட்டமாக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட பிரிவினர் கொழுக்கவும் குறிப்பிட்ட பிரிவினர் நலிவடைவதற்கும் காரணமாக இருந்துள்ளனர்.
சமுதாயத்தில் பெண்கள் நிலை தாழ்ந்துபோகவும் ஒழுக்கம் குலைந்துபோகவும் காரணமாக இருந்துள்ளனர்.
No comments:
Post a Comment