Sunday 2 June 2024

விவேகானந்தர் நினைவு மண்டபம் rss உடன் திமுக

விவேகானந்தர் நினைவு மண்டபம் rss உடன் திமுக 

விவேகானந்தர் நினைவு மண்டபம்;
ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை நின்ற திமுக!
==================================
விவேகானந்தர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1963ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுப்பிட ஆர்.எஸ்.எஸ். முயன்றது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு மற்றுமொரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏக்நாத் ரானடேவிடம் ஒப்படைக்கப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். கிறிஸ்துவர்களின் எதிர்ப்பையும் , தமிழ்நாடு காங்கிரஸ் முதலமைச்சர் பக்தவத்சலம் , மத்திய அமைச்சர் ஹீமாயூன் கபீர் ஆகியோரின் எதிர்ப்பையும் கடுமையாகச் சந்தித்தது. பின்னர் காங்கிரஸ் மத்திய அமைச்சர் இலால் பகதூர் சாஸ்திரியை ரானடே சந்தித்து, ஆதரவைப் பெற்றுக் கொண்டதோடு 300 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தையும் பெற்று நேருவிடம் ஒப்படைத்தார். விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு நேருவின் ஆசியும் கிடைத்தது. இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு அடங்கியது. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கும்பல் கன்னியாகுமரியில் கால்பதிக்க வாய்ப்பை உருவாக்கித் தந்த பெருமை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசையே சாரும். தமிழ்நாட்டில் ஆரியத்தை பகையாகக் கருதி பேசி வந்த திமுகவும் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது பெரும் ஆச்சரியத்தை தருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏக்நாத் ரானடே அண்ணாவை சந்தித்து ஆதரவு கேட்டதாக சஞ்சீவ் நய்யார் என்பவர் தமது "இசம்கிருதி" இணையப் பக்கத்தில் எழுதியுள்ளார். அது வருமாறு: 
ஸ்ரீ சிஎன் அண்ணாதுரை சுவாமி விவேகானந்தரின் சிறந்த அபிமானி. திரு.நெடுஞ்செழியனின் முயற்சியால் கல்வி அமைச்சர் அண்ணாதுரையை சந்தித்தேன். நாங்கள் சந்தித்தபோது அவர் சுவாமிஜியைப் பாராட்டிவிட்டு, “என்னிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். நான் சொன்னேன், “எங்களிடம் VRM க்காக ( விவேகானந்தர் நினைவு மண்டபம்) தமிழ்நாடு அரசு ஒன்றுபட்டு உள்ளது. எங்களிடம் ஏற்கனவே ஒரு தலைவர் இருக்கிறார். எங்களுக்கு துணைத் தலைவர் வேண்டும். நீங்கள் எங்கள் துணைத் தலைவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 
அவர் ( அண்ணா) கூறியதாவது: 
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அதிக நேரம் டெல்லியில் தான் தங்குவேன். ஸ்ரீ நெடுஞ்செழியனை துணைத் தலைவராக்குங்கள்”. நான் ஒப்புக்கொண்டு, ஸ்ரீ அண்ணாதுரை எங்கள் பொதுக்குழுவில் உறுப்பினராக வேண்டும் என்று பரிந்துரைத்தேன். அவர் ஏற்றுக்கொண்டார். அண்ணாதுரையின் தொடர்பு காரணமாக திமுகவினர் அனைவரும் தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டில்தான் விவேகானந்தர் நினைவு சிலையும், மண்டபமும் திறக்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரி அவர்கள் திறந்து வைத்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். ஆரிய எதிர்ப்பில் அண்ணாவை மிஞ்சிய புலியாக உறுமும் கருணாநிதி கூட பூனையாகத் தான் இருந்துள்ளார். இது குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது வருமாறு:
பதவியேற்பு விழாவுக்கு இன்னும் 15 நாட்கள் இருந்தது. ஸ்ரீ கருணாநிதி இதற்கு முன்பு பாறைக்கு சென்றதில்லை. அவர் சுற்றிச் சென்று எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்தபோது, அவர் தனது சக ஊழியர்கள் சிலரிடம், "எனது சொந்த மாநிலத்தில் உள்ள பாறையில் இவ்வளவு அற்புதமான விஷயம் வந்ததாக யாரும் என்னிடம் சொல்லாதது எப்படி?" என்று கேட்டார். விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவு தந்ததில் நமக்கு வியப்பில்லை. ஆரியத்தை வெட்டி வீழ்த்த புறப்பட்ட திமுக தலைவர் அண்ணாவும், அவருக்குப் பின் வந்த கருணாநிதியும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கு ஆதரவு தந்தது தான் காலக்கொடுமை. எங்கள் ஜென்ம விரோதி, காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எசை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று அன்றே திமுக எதிர்த்து இருந்தால் மோடி இங்கே வந்து தியானம் செய்ய முடியுமா? மிதவாத ஆரியக் கொள்கை பேசும் காங்கிரசோடும், தீவிர ஆரியக் கொள்கை பேசும் பாரதீய ஜனதாவோடும் கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவித்தவர்கள் திமுகவினர் என்பதை வரலாறு நமக்கு இன்றும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. ஆரியமும், திராவிடமும் இன்று மட்டுமல்ல; அன்றும் கூட பிரிக்க முடியாத ஒரு கரு இரட்டையர்கள் என்பதை 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவு மண்டபம் திறப்பு விழா மெய்ப்பித்துள்ளது.
- கதிர் நிலவன்

No comments:

Post a Comment