தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து
- நேரம் பார்த்து அடிக்கும் அரசு
மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை!
நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன!
---------
செங்கோட்டை திருமங்கலம் நான்கு வழிச்சாலை பணிக்கு புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு கல் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் சாலை வழி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் "பாரத் மாலா பரியோஜனா" மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான 147 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 818.113 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விளைநிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகள் வழியாக அமைக்கப்படும் இந்த நான்கு வழிச்சாலை பணிகளை முதற்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இருந்து செங்கோட்டை வரையிலான 69 கி.மீ. தொலைவிற்கு அரசு துரிதப்படுத்தி உள்ளது.
இந்த திட்டப்பணிகளுக்காக நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை சார்பில் புளியரையில் தொடங்கி தாட்கோ நகர், லாலா குடியிருப்பு வழியாக நாற்றுகள் நடப்பட்ட வயல்களில் குறியீட்டு அளவுகல் நடப்பட்டன.
இன்று (21ம் தேதி) நில எடுப்பு தாசில்தார் தலைமையில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.
செங்கோட்டை திருமங்கலம் இடையேயான நான்கு வழிச்சாலை பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர் பகுதிகளில் நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன.
தகவலறிந்து திரண்ட விவசாயிகள், அளவுகல் நட்ட ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டினர்.
கடந்த 24ம் தேதி சிவகிரி தாலுகாவை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நிலம் கையகப்படுத்தும் பணிக்கான மாவட்ட சிறப்பு அலுவலருக்கு தங்களது ஆட்சேபனையை பதிவு தபாலில் அனுப்பினர்.
அளவு குறியீட்டு கற்களை பிடுங்கி எறிந்து கறுப்புக்கொடிகளை நட்டனர்.
மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் நான்கு வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு குறியீட்டுக் கற்கள் பதிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நன்றி: தினகரன்
No comments:
Post a Comment