1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி
அச்சத்தை உடைத்து நொறுக்கிய பிரபாகரன் பதாகை!
1991ஆம் ஆண்டு இராசீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
அதனையொட்டி தமிழீழ ஆதரவு இயக்கங்களும், ஈழ ஆதரவாளர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.
அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர் செயலலிதா.
அவர் இராசீவ் படுகொலையைச் சொல்லி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தார்.
அவர் தில்லி மீதான விசுவாசத்தை தமது ஒடுக்குமுறை மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.
அன்றைக்கு எந்தக் கட்சியும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
அப்போது, மருத்துவர் இராமதாசு "ஏழாண்டுகள் என்ன, எழுபதாண்டுகள் ஆனாலும் புலிகளை ஆதரிப்பேன்; என்னை கைது செய்யுங்கள்!" என்று பேசினார்.
இத்தகையப் பேச்சு தமிழீழ ஆதரவாளர்களுக்கு முழு உற்சாகத்தை தந்தது.
1992இல் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தமிழர் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" ஒன்றை சென்னையில் பா.ம.க. நடத்தியது.
அப்போது மதுரையில் பா.ம.க. வில் பொறுப்பு வகித்த அண்ணன் வேலுச்சாமி தலைமையில் நான் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்களோடு தனி வண்டியில் சென்னைக்கு கிளம்பினோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படங்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்து வண்டியில் வைத்திருந்தோம்.
சென்னையை நெருங்கும் வேளையில், பல்வேறு திசைகளிலிருந்து பா.ம.க. மாநாட்டிற்கு வண்டிகள் அணி வகுத்து வந்து கொண்டிருந்தன.
பெரும்பாலான வண்டிகளை நிறுத்தி பிரபாகரன் படத்தை கண்ணாடிகளில் ஒட்டி விட்டோம். வந்திருந்த தோழர்கள் பிரபாகரன் படத்தை சட்டையில் குத்திக் கொண்டனர்.
படத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு சட்டையில் குத்தியும் விட்டனர்.
ஒரு சில தோழர்கள் கைக்குட்டையை நெற்றியில் கட்டி அதன் மீது பிரபாகரன் படத்தை அணிந்திருந்தனர் (படத்தின் இடது புறத்தில் இரண்டாவதாக நான் உள்ளேன்).
தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வி.பி.சிங், இராம் விலாசு பசுவான், உள்ளிட்ட பல்வேறு வட நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாநாட்டுப் பேரணி தொடங்கும் போது , பிரபாகரன் கையில் துப்பாக்கி ஏந்திய முழு உருவ துணிப் பதாகை ஒரு தோழர் மூலம் கையில் கிடைத்தது.
ஒரு தேனீர் கடையில் நாங்கள் நின்று கொண்டிருந்த போது ஊன்றப்பட்ட நிலையில் இரண்டு கம்புகள் காட்சி அளித்தன.
உடனடியாக தோழர்கள் கம்புகளை உருவி, பிரபாகரன் பதாகையை கம்புகளுக்கு நடுவே கட்டி உயரமாகத் தூக்கினர்.
எல்லோரின் கண்களிலும் பிரபாகரன் ஒளிவிட்டார்.
ஊடகத்தினர் மோப்பம் பிடித்து , பிரபாகரனை சுற்றி வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பேரணி முழுவதும் பிரபாகரன் படம் பற்றியே பேச்சு.
பிரபாகரன் வாழ்க! தமிழீழம் வெல்க! என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிரபாகரன் பதாகைப் படமே அனைவரையும் ஈர்த்தது.
மறுநாள் செய்தி ஊடகங்களில், "பயங்கரவாத புலிகள் மாநாடு" என்று தலைப்பு எழுத்துகளில் வெளியிடப்பட்டன.
காங்கிரசு கட்சியினர் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள் பலர் இதனை சாக்காக வைத்து "பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்" என்று கூச்சல் எழுப்பினர்.
இந்தியா டுடே ஏடு "புலிகளின் முதுகில்" என்று தலைப்பிட்டு விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தை வெளிக் காட்டிக் கொண்டது.
புலி வேடம் போட்டு கலை நிகழ்ச்சி நடத்தியவர்களைக் கூட "புலி ஆதரவாளர்கள்" என்று கூச்சலிட்டது.
மாநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததற்காக மருத்துவர் இராம்தாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், தோழர் தியாகு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அன்றைக்கு பிரபாகரன் படத்தை கொண்டு சென்றதன் மூலம் இந்திய- தமிழக அரசுகளின் ஒடுக்குமுறையின் இறுக்கம் களையப்பட்டது உண்மை!
அச்சம் உடைக்கப்பட்டது உண்மை!
அன்று ஒரு படம் ஏந்தினோம்!
இன்று ஆயிரமாயிரம் படங்களை ஏந்தி நடந்திட எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்!
அச்சமூட்டுபவரை அடி பணிய வைப்பதே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிமுறையாகும்!
பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடும் இன்றைய இளைய தலைமுறையினரின் முதல் தாரக மந்திரமாக இது இருக்கட்டும்!
நன்றி: கதிர் நிலவன்
No comments:
Post a Comment