Monday, 20 August 2018

வன்னியர் பறையர் இணைந்து வணங்கும் கொடைக்காரியம்மன்

வன்னியர் பறையர் இணைந்து வணங்கும் கொடைக்காரியம்மன்

தர்மபுரி , நாயக்கன்கொட்டாய் இளவரசன் திவ்யா காதல் திருமணத்திற்குப் பிறகு நடந்த கலவரங்கள் சம காலத்தில் தமிழகத்தை அதிரவைத்ததாகும்.

இரு சாதிகளிடையே முரண்பாடுகள் அதிகரித்த பின்னரான சூழலிலும் அங்குள்ள “கொடைகாரியம்மன்” திருவிழா பல இடர்ப்பாடுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் இன்றும் நடந்து வருகிறது.

இன்றும் அத்திருவிழா இணக்கமாக நடந்திடக் காரணமே அக்கோயிலின் தெய்வமான கொடைகாரியம்மன் பறையர்களுக்கும் வன்னியர்களுக்கும் பொதுவான குலசாமி என்பதாலேதான்.

அவ்வூர்களில் இரண்டு சாதிகளிலும் கொடைகாரி, கொடைகாரன் என்ற பெயர்களில் பலர் இருப்பதைக் காணலாம்.

நாய்க்கன்கொட்டாய் கலவரத்தைப் பற்றிய ஆய்வைச் செய்த திரு.ச.சிவலிங்கம் அவர்கள் கொடைகாரியம்மன் திருவிழாவைப் பற்றி பின் வருமாறு எழுதுகின்றார்….

“ஆண்டு தோறும் காணும் பொங்கல் தினத்தன்று கொடைகாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நத்தம் காலனியிலிருந்து கொடைகாரியம்மனை கரகமாக அலங்காரித்து தலையில் சுமந்து செல்வார் பூசாரி (பறையர்).
முதலில் பறையர் சாதியினர் பூசை செய்து வழிபாடு செய்வார்கள்.
பின்னர் வன்னியர் சாதியினர் பூசை செய்து வழிபாடு செய்வார்கள் (அதே பறையர் சாதி பூசாரி மூலமாக).

கொடைகாரியம்மனின் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக ஊர்மக்கள் (பறையர் சமூகம்) சார்பாக ஓர் ஆட்டுக்கிடா முதல் பலியாகக் கொடுக்கப்படும்.

பின்னர் பிரார்த்தனை செய்பவர்கள் பலி கொடுப்பார்கள்.
அதே போல் ஊர்வலம் கோயிலை அடைந்த பிறகும் ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படும்.
அவ்வூரைச் சேர்ந்த வன்னியர் மற்றும் பறையர் மக்கள் அவர்கள் எங்கு குடியேறி வாழ்ந்து வந்தாலும் அத்திருவிழாவிற்கு கூடிவிடுவார்கள்.
அவ்வாறு ஆயிரக்கணக்கான பறையர், வன்னியர் மக்கள் அங்கு கூடுவார்கள்.

அன்று அவ்விரு மக்களின் மனங்களில் எல்லையில்லா ஆனந்தம் கூத்தாடுவதைக் காணலாம்.
காலங்காலமாக மனவுணர்வைக் கிழித்துப் புண்ணாக்கியிருக்கும் சாதியிலிருந்து அந்த நாளில் கொடைகாரியம்மன் விடுதலையளித்துவிடும் அடையாளமாக அந்தத் திருவிழா நிறைவு பெறும்”

நன்றி :- காளிங்கன்

No comments:

Post a Comment