கடவுள் என்றால் முனிவர்
கடவுள் என்னும் சொல் இப்பொழுது பரம்பொருளைக் குறிக்கிறது.
ஆனால் பண்டைக்காலத்தில் இச்சொல் முற்றந்துறந்த முனிவர்க்கும் வழங்கப்பட்டது.
"தென்னவற் பெரிய துன்னருந் துப்பிற்
றொன்முது கடவுள் பின்னர் மேய
வரைதாழ் அருவிப் பொறுப்பிற் பொருந"
என வரும் 'மதுரைக்காஞ்சி' அடிகளிலுள்ள 'கடவுள்' என்னும் சொல்லுக்கு 'முனிவன் ஆகிய அகத்தியன்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார்; இத்துடன் அமையாது, கலித்தொகை யில் உள்ள கடவுள் பாட்டைச் சுட்டிக் காட்டி "இருடிகளையும் கடவுள் என்று கூறியவாற்றானும் காண்க" என்று விளக்கம் தந்துள்ளார்.
இவர் சுட்டியுள்ள கலித்தொகைப் பாடலில் தலைவன் தலைவியை நோக்கி,
"உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங்
கடவுளர் கட்டங்கினேன்"
என்று கூறுகின்றான்.
இங்கு கடவுளர் என்ற சொல் முனிவரைக் குறித்தல் காண்க.
இளங்கோ அடிகளும் முனிவர்களைக் கடவுளர் என்று கூறியுள்ளார்.
"ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளி கடவுளர்க் கெல்லாம்"
- சிலப்பதிகாரம், நாடுகாண்காதை
இங்ஙனம் கடவுளர் என்ற சொல் சிந்தாமணி, சூளாமணி, கம்ப ராமாயணம், முதலிய நூல்களில் முனிவர் என்ற பொருளில் ஆளப்படுகிறது.
நூல்: தமிழ் இனம்
ஆசிரியர்: முனைவர். மா.இராசமாணிக்கனார்
பக்கம்: 36, 37
No comments:
Post a Comment