தெலுங்கு கங்கை அல்லது தெலுங்கு அல்வா
சென்னை தமிழக மக்கட்தொகையில் 10% வாழும் மாவட்டம் ஆகும்.
இதன் குடிநீர் பிரச்சனை தீராத பிரச்சனையாக இன்றுவரை உள்ளது.
அண்டை மாவட்டக்களில் அடாவடியாக உறிஞ்சி அனுப்பி ஓரளவு சமாளித்தாலும் நிரந்தரத் தீர்வு எட்டப்படாமலே உள்ளது.
இதில் ஆந்திரா எப்படி லாபம் பார்க்கிறது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு 1970களில் உச்சத்தை அடைந்தது.
சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1983-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பொதுப் பணித்துறை பொறியாளர்களிடம் புதிய திட்டம் ஒன்றைத் தருமாறு கோரினார்.
இதையடுத்து அப்போது தலைமைப் பொறியாளராக இருந்த சி.ஏ.சீனிவாசன் தலைமையிலான தமிழகப் பொறியாளர் குழு 'சென்னைக் கால்வாய் திட்டம்' எனும் திட்டத்தை உருவாக்கி அரசிடம் கொடுத்தது.
மிகக்குறைந்த செலவில் அதாவது அன்றைய நிலையில் ரூ. 210 கோடி நிதியில் இத்திட்டம் நிறைவேற்றும் வகையில் இருந்தது.
சென்னையைப் பொருத்தவரை பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழாவரம் ஆகிய 4 ஏரிகளிலிருந்துதான் குடிநீர் எடுக்கப்படுகிறது.
சென்னைக் கால்வாய் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் என்ற இடத்திலிருந்து காவிரியில் நீர் எடுக்கப்பட்டு அங்கிருந்து கால்வாய் மூலம் (வினாடிக்கு 1000 கன அடி) முதலில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்படும்.
இந்தத் தண்ணீர் தானாகவே இழுவிசை காரணமாக வரும், எந்தவிதமான பம்பிங் தேவையும் கிடையாது என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சம்.
பள்ளிப்பாளையத்தில் காவிரி ஆற்றங்கரையின் இடது கரையில் கால்வாயின் தலைப் பகுதி அமையும்.
ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக இவை அமைக்கப்பட்ட 4 சிறு மதகுகள் உள்ளன.
மேலும் 3 மதகுகள் (பவானி 1, 2, 3) ஆகியவை கட்டப்பட இருந்தன.
இந்த மதகுகளில் ஒன்றை பயன்படுத்தியே காவிரியிலிருந்து ஆண்டுதோறும் 15 டி.எம்.சி. நீரை எடுத்து சென்னைக் கால்வாய் திட்டத்திற்குத் திருப்பி விட முடியும். புதிதாக எந்தவிதமான மதகுகளும் கட்டத் தேவையில்லை.
ஒரே ஒரு முதன்மை மதகுமட்டுமே கட்டப்பட வேண்டும்.
சிமெண்ட் கரைகளால் ஏறத்தாழ 400 கி.மீ நீளமுள்ள கால்வாய் கட்டப்பட வேண்டும்.
ஆனால், எம்.ஜி.ஆர் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்.
அரசியல் காரணங்களுக்காக இந்திரா காந்தியின் அழுத்தத்தின் காரணமாக தெலுங்கு கங்கை திட்டத்திற்கு சம்மதித்தார்.
அதன் அரசியல் பின்னணியை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
1975-ல் அவசர நிலைப் பிரகடனப்படுத்தி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆட்சியை டிஸ்மிஸ் (31-1-1976) செய்தார் இந்திரா காந்தி.
அதன்பிறகு, சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி அப்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த சென்னை குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக ஆந்திரம் (சென்னாரெட்டி), கர்நாடகம் (தேவராஜ் அர்ஸ்), மகாராஷ்டிரம் (வசந்த்தாதா பட்டீல்) ஆகிய மாநிலங்களின் முதல்வர்களோடு பேசி,
கிருஷ்ணா நீரை சென்னைக்குக் கொண்டு வருவதற்கு சம்மதம் பெற்றிருப்பதாக அறிவித்தார்.
பின்னர், 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி யில் 14 இடங்களை காங்கிரஸ் பெற்றது.
1977 ஜூனில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு நாடுமுழுவதும் இருந்த பலத்த எதிர்ப்பால் அதனுடனான கூட்டணியை எம்ஜிஆர் தொடரவில்லை.
இது, இந்திராவுக்கு ஆத்திரமூட்டியது.
அதிமுக வென்று எம்ஜிஆர் முதல் முறையாக முதல்வரானார்.
அப்போது பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்களவை இடைத் தேர்தலில் இந்திரா காந்தி வென்றது முறைகேடானது என அறிவித்து அவரிடம் இருந்த பதவியையும் பறித்தார்.
அப்போது தஞ்சாவூரில் இடைத்தேர்தல் வந்தது.
இந்திரா காந்தி தஞ்சாவூரில் நிற்க விரும்பினார்.
இதையறிந்த மொரார்ஜி தேசாய் எம்.ஜி.ஆரை டெல்லிக்கு அழைந்து இந்திராவிற்கு ஆதரவளிக்கக்கூடாது என்று மிரட்டினார்.
எம்ஜிஆரும் பயந்து இந்திராவை ஆதரிக்கவில்லை.
இதனால் மேலும் ஆத்திரமடைந்தார் இந்திரா.
1980ல் கருணாநிதி எந்த இந்திரா அவரது ஆட்சியைக் கலைத்து திமுகவை இல்லாத கொடுமையெல்லாம் படுத்தினாரோ அதே இந்திராவுடன் வெட்கமில்லாமல் கூட்டணி அமைத்து அதிமுகவை விட அதிக இடங்களில் வென்றார்.
மத்தியில் இந்திரா ஆட்சியைப் பிடித்ததும் எம்ஜிஆர் அரசை (17.02.1980) கலைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்.
ஆனால் 1980 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணியைத் தோற்கடித்து அதிரடிராக எம்ஜிஆர் மீண்டும் முதல்வரானார் .
ஆனாலும் இந்திராவின் மீதான பயம் போகவில்லை.
எனவே தென்னகத்தில் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக இந்திரா காந்தி வகுத்த திட்டத்தை நிறைவேற்றி அவரிடம் நல்லபெயர் வாங்க திட்டமிட்டார் எம்ஜிஆர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த தனது நண்பரும் அப்போதைய ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரிடம் ஆதரவு கேட்டார்.
என்.டி.ஆர் ஒத்துக்கொண்டார் ஆனால் அவர் போட்ட ஒரே நிபந்தனை திட்டத்திற்கு 'தெலுங்கு கங்கை' என்று பெயர்வைக்கவேண்டும் என்பது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நான்கு தென் மாநில முதல்வர்களின் முன்னிலையில், தமிழகமும் ஆந்திரமும் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
திட்டத்தைத் தொடங்க எம்ஜிஆர் கருணாநிநி போலவே வெட்கமேயில்லாமல் தன் ஆட்சியைக் கலைத்த இந்திராவையே கூட்டிவந்து அடிக்கல் நாட்டினார்.
சீனிவாசன் தலைமையிலான தமிழகப் பொறியாளர்கள் இதைத் தடுக்க முயன்றனர்.
அப்போதைய தலைமைச் செயலாளர் வி.கார்த்திகேயன் மற்றும் நிதித்துறைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோருடன் சென்று முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எவ்வளவோ எடுத்துக்கூறினர். ஆனால் பலனில்லை.
210 கோடியில் உள்மாநிலத்திலேயே முடிந்திருக்கவேண்டிய பிரச்சனை
எம்ஜிஆரின் கோழைத்தனத்தாலும் சுயநலத்தாலும் ஆந்திராவுக்கு பலனாக முடிந்தது.
இந்த திட்டம் தொடங்கிய 1983 முதல்) இதுவரை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு இது வரை ரூ.700 கோடி வரை கொடுத்துள்ளது.
(1983-ல் இருந்து 1996 வரை ரூ.512 கோடி கொடுத்துள்ளோம்.
நாம் இதுவரை கொடுத்ததில் குறைந்தபட்சமாக 1985, 1995-ல் தலா ரூ.5 கோடியும், அதிகபட்சமாக 2013ல் ரூ.100 கோடியும் தமிழகம் கொடுத்துள்ளது)
2017 ஜனவரி 12 அன்று அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் (வரலாற்றில் இல்லாத செயல்பாடாக) நேரில் பொய் சந்திரபாபு நாயுடுவிடம் 12 டி.எம்.சி இல்லாவிட்டாலும் 4 டிஎம்சியாவது திறந்துவிடக் கெஞ்சினார்.
அவரோ 400 கோடி தந்நால் 2.5 டி.எம்.சி தண்ணீர் தருவதாகக் கூறினார்.
ஓ.பி.எஸ்ஸும் சரி என்றார்.
அதன்பிறகு நடந்த ஆட்சிக்குழப்பங்களால் இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது.
சென்னையில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருவதால்,தண்ணீர் திறந்து விடக்கோரி ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு செயலாளருக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது.
இதற்கு ஆந்திர அரசு பதில் கடிதத்தில் (13.07.2017),
"கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தண்ணீர் திறந்து விட முடியாது.
மேலும், பராமரிப்பு கட்டணமாக தாங்கள் தர வேண்டிய ரூ.600 கோடி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும்"
என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கண்டது ஆந்திராவுக்கு கொடுத்தது மட்டுமே
இதுபோக தமிழக அரசு செய்த செலவுகள் தனி.
1983-1996 காலக்கட்டத்தில் ரூ.75 கோடி செலவில் புழல் ஏரியில் 675 மில்லியன் கனஅடி,
செம்பரம்பாக்கம் ஏரியில் 525 மில்லியன் கனஅடி,
பூண்டி ஏரியில் 450 மில்லியன் கனஅடி என கொள்ளளவுகள் அதிகரிக்கப்பட்டன.
(2002 ஆம் ஆண்டு தமிழகம் நிதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது ஆன்மீகத் தலைவரான சத்ய சாய் பாபா , கண்டலேறு முதல் பூண்டி வரையிலான கால்வாயின் கரைகளை பலப்படுத்தி மறுசீரமைக்கும் தனியார் பங்களிப்புக்கானத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அவரால் 200 கோடி செலவளிக்கப்பட்டு கால்வாயும், பல நீர்த்தேக்கங்களும் மறுகட்டமைக்கப்பட்டு, அத்திட்டம் 2004 அம் ஆண்டு நிறைவு பெற்றது)
2012-14 ஆம் ஆண்டுகளில் சோழவரம் ஏரியில் ரூ. 50 லட்சம் செலவில் 100 மில்லியன் கனஅடி கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து ரூ.330 கோடி செலவில் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது.
0.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், ஆண்டுக்கு 1 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நீரைத் தேக்கிவைப்பார்களாம்.
இதுபோக 2007ல் வெளிநாட்டு உதவியுடன் ரூ. 256 கோடி செலவில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
(திறன்= நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு)
இதையெல்லாம் செய்து போதுமான அளவு தண்ணீர் பெற்றோமா என்றால் இல்லை.
திட்டம் நடைமுறைக்கு வந்த 1996முதல் இதுவரை ஒருமுறைகூட ஆந்திரா ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி நீரைத் தந்ததில்லை.
சராசரி பார்த்தால் தமிழகத்திற்கு தரவேண்டியதில் பாதிகூட தந்ததில்லை.
2012-13 ல் 4.7 டிஎம்சி
2013-14 ல் 5.7 டிஎம்சி
2014-15 ல் 5.6 டிஎம்சி
2015-16 ல் 0 டிஎம்சி
2016 முதல் இதுவரை 2.27 டிஎம்சி
என குறைவான தண்ணீரே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
அதாவது 1996 முதல் 2016 வரை ஆந்திரா 5 டிஎம்சி தண்ணீர் சராசரியாகத் தந்ததாகவே வைத்துக்கொண்டாலும் இதுவரை 100 டிஎம்சி தந்ததாக ஆகும்.
அதற்கு அவர்கள் கேட்கும் தொகை (600 கோடி கடனுடன் சேர்த்து) 1300 கோடி ஆகும்.
இது ஒரு லிட்டருக்கு தோராயமாக ரூ.220 ஆகும்.
(இது குறைந்தபட்ச கணக்குதான்)
கிருஷ்ணா நீரைப் பயன்படுத்தி ஆந்திர அரசு தனது பாசனப் பகுதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போதுகூட 3 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கான பணிகள் நடக்கின்றன.
இதுபோக தமிழகத்திற்கு வரும் தண்ணீரை ஆந்திர விவசாயிகள் வழியிலேயே கால்வாயில் இருந்து மோட்டார் மூலம் உறிஞ்சிக் கொள்கின்றனர்.
இது போதாது என்று இந்தாண்டு கிருஷ்ணா நதியை கோதாவரியுடன் இணைத்து சந்திரபாபு நாயுடு மேலும் மூன்று மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்கிறார்.
இதற்கு தமிழகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை.
கோடிகோடியாகக் கொட்டியழுதும் நமக்கான பங்கோ ஆறு மீதான உரிமைக்கான மரியாதையோ கிடைக்கவில்லை
பாலாறு நீர் கனவானது போல விரைவில் தெலுங்கு கங்கையும் காணாமல் போகும்.
No comments:
Post a Comment