Tuesday 8 August 2017

புதியதொரு தமிழர் மதம், பழமையில் இருந்து.

புதியதொரு தமிழர் மதம், பழமையில் இருந்து.

பாவாணர் எழுதிய 'தமிழர் மதம்' எனும் நூலின் முதல் பகுதி

சமயம் என்பதன் வேர்ச்சொல் சமைதல்.
அதாவது முதிர்ச்சி அடைதல், பருவமடைதல், பக்குவமடைதல்.

கடவுள் என்பதன் வேர்ச்சொல் கடத்தல். அதாவது அனைத்தையும் கடந்து நிற்பது.

மதம் என்பதன் வேர்ச்சொல் மதித்தல். மரியாதை செலுத்துதல்.

தெய்வம் என்பதன் வேர்ச்சொல் தீ.
அழிவை ஏற்படுத்துவது. கட்டுப்படுத்தினால் நன்மை விளைவிக்கும்.

நாகரிகமற்று மாந்தர் வாழ்ந்த நிலையில் கொல்லும் தன்மையுடைய எல்லாவற்றையும் உயிர் அச்சம் காரணமாக தெய்வமென கருதி அதற்கு படையலிட்டு வணங்கத் தொடங்கினர்.
இதுவே மதம் உருவாகும் தொடக்கமாகும்.
பிறகு தமக்கு நன்மை செய்வனவற்றை நன்றியுணர்வினால் வணங்கத் தொடங்கினர் (கதிரவன், திங்கள், மரங்கள், ஆறு).

தனது மக்களைக் காக்க  உயிர் துறந்த மறவர்களையும் பாராட்டும் விதமாக வழிபடத் தொடங்கினர் (நடுகல்)
பிறகு தம்மை பாதுகாத்து வழிநடத்திய தலைவனை வணங்கத் தொடங்கினர் (இந்திரன்).

கொள்ளைநோய், பஞ்சம், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற புரிந்துகொள்ள முடியாத அழிவுகளுக்கு கண்ணுக்குப் புலப்படாத தெய்வத்தை வணங்கத் தொடங்கினர்.

முதலில் குறிஞ்சியில் மட்டும் வாழ்ந்த மாந்தர் பிற திணைகளுக்கும் பரவினர்.
பிறகு திணைக்கு ஒரு தெய்வம் தோன்றியது. (மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை)

அதாவது பாவாணர் கூற்றுப்படி,
உயிர் அச்சம் காரணமாக கொல்லும் தன்மை உடையவற்றையும்
தான் உயிர்வாழ உதவுவற்றையும்
வணங்குவது படையல் செய்வது மூலம் தன்னை தற்காத்துக் கொள்தல் சிறுதெய்வ வணக்கமாகவும்

நன்றி உணர்வால் திணைத் தலைவர்கள் இறந்த பிறகும் அவர்களை மறவாமல் நினைவு கூறுதல் பெருந்தேவ மதமாகவும் உருவாயின

  புரிந்துகொள்ள முடியாத அழிவுகளையும் அற்புதங்களையும் நிகழ்த்தும் கண்ணுக்கு புலப்படாத ஆற்றல் ஏற்படுத்தும் பேரழிவின் மீதான அச்ச உணர்வால் தன் தனிப்பட்ட வாழ்க்கையை சீரமைத்து ஒழுக்கமாக வாழ்வது கடவுள் சமயமாகவும்

அதாவது தற்காப்பை அடிப்படையாகக் கொண்ட (1)சிறுதெய்வ வணக்கம்

(தலைமைக்கு) கீழ்படிதலை அடிப்படையாகக் கொண்ட (2)பெருந்தேவ மதம்

(கண்ணுக்கு புலப்படாததால் ஏற்பட்ட) புரியாமையை அடிப்படையாகக் கொண்ட (3)கடவுள் சமயம் என மூன்றுவகை வழிபாடுகளும் குமரிக்கண்ட காலத்திலேயே அனைத்து தமிழர்களாலும் கடைபிடிக்கப்பட்டன என்று பாவாணர் கூறுகிறார்.

இதில் பெருந்தேவ மதமான திணைத் தலைவர் வழிபாட்டில் இரண்டு நன்கு வளர்ச்சியடைந்து சைவமாகவும் வைணவமாகவும் சம காலத்தில் உருவானதாக பாவாணர் கூறுகிறார்.
மாயோன் திருமாலாகவும் சேயோன் சிவனாகவும் ஆகி இரண்டு மதங்கள் உருவாயின. (2:1 மற்றும் 2:2)
(இதில் வைணவமே சைவத்தை விட தமிழுக்கு நெருக்கமானது என்கிறார் பாவாணர்)

இந்த நூலில் மேற்கொண்டு மதங்களின் வளர்ச்சி மற்றும் திரிபு பற்றி விரிவாகக் கூறுகிறார்.
அதனால் முதல் பகுதியில் உள்ள பழமையான வழிபாட்டு முறைகள் பற்றிய முக்கியமான கருத்துகளை மட்டும் மேலே தெரிவித்துள்ளேன் .
இதிலிருந்து எனக்கு தோன்றுவதை இங்கே எழுதுகிறேன்.

(1) சிறுதெய்வ வணக்கம்
இது தனி மதம் கிடையாது. வணக்கம் மட்டுமே.
இது பேய், ஆவி, அணங்கு(மோகினி), பூதம் போன்ற மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
உயிரைக் காக்கும் இயற்கை அம்சங்களை வணங்குவதும் உண்டு.
(இதுவே பழமையான வழிபாட்டு முறை, நாகரிகம் வளராத காலகட்டம்)

(2) பெருந்தேவ மதம்
தலைமை தாங்கிய ஒருவர் இறந்த பின்னும் அவரை நினைவு கூர்ந்து அவர் காட்டிய வழியில் நடப்பது.
பத்தினி வழிபாடும் இதில் உள்ளது.
(இரண்டாவது வழிபாட்டு முறை திணைவழி நாகரிக காலகட்டம்)

(3) கடவுட் சமயம்
கண்ணுக்குத் தெரியாத ஒன்று தம்மை கண்கானிப்பதாகவும் உலகை இயக்குவதாகவும் நினைப்பது அதனால் தமது வாழ்க்கை முறையில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது.
(மூன்றாவது வழிபாட்டு முறை, நாகரிகம் நன்கு வளர்ந்துவிட்ட காலகட்டம், இன்றைய மதங்கள் பெரும்பாலும் இந்த சிந்தனையைத் தழுவியவையே.
தற்போது நாகரீகமும் அறிவியலும் பல மடங்கு வளர்ந்துள்ள நிலையில் அதற்குத் தகுந்த ஒரு சமயம் இன்னும் உருவாகவில்லை.
அதை நாம் உருவாக்கவேண்டும்.)

தமிழர்கள் இம்மூன்றையும் கடைபிடித்து இன்றும்கூட வருகின்றனர்,
ஆனால் ஒன்றோடு ஒன்றைக் குழப்பி.

முதல் வழிபாடான சிறுதெய்வ வணக்கம் பல பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் முக்கியமாக இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது
முதலாவது அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது (1:1)
இரண்டாவது நன்றியை அடிப்படையாகக் கொண்டது (1:2)

(1:1) பாம்பை வணங்குவது, தீயை வணங்குவது, ஆவி வரவழைத்து படையலிடுவது சிறுதெய்வ வணக்கம்.
அதாவது சிறுதெய்வ வணக்கத்தின் அச்சத்தின் மீதான அம்சம்.
குலதெய்வ வழிபாடும் இதிலிருந்து பிரிந்ததே.
(நடுகல் வழிபாடு குலதெய்வ வழிபாட்டுடன் குழப்பப்படுகிறது.
நடுகல் வழிபாடு இறந்தவரை அழைப்பதில்லை நினைவுகூர்தல் மட்டுமே)
ஆவிகளை கடவுளாக நினைப்பது அல்லது திணைத்தலைவராக உருவகப்படுத்துவதும் தவறு.

(1:2) ஆறு, மரம், கதிரவன் என உயிரைக் காக்கும் இயற்கை அம்சங்களை வணங்குவதும் இதிலிருந்தே வந்தது.
நடுகல் வழிபாடும் இதிலிருந்தே வந்தது.
காவல்மரம் ஒன்றை அரசன் பாதுகாத்தலும் இதிலிருந்து வந்ததே.
சிறுதெய்வ வணக்கத்தின் இந்த நன்றியுணர்வு அம்சம்தான் உண்மையில் பகுத்தறிவின் படி அமைந்துள்ளது.
அதாவது மரத்தை வணங்குவது, மாட்டை வணங்குவது, கதிரவனை வணங்குவது, நிலவை வணங்குவது போன்றவை.
(இதையே நாம் தனி மதமாக உருவாக்கவேண்டும்)

(2) கோவிலுக்குப் போவது சைவ படையல் படைப்பது பெருந்தேவ மதம் (அல்லது பெருந்தெய்வ வழிபாடு)
அந்த பெருந்தெய்வத்தை கடவுளாக நினைத்து இதுவே கடவுள் சமயம் என்று குழப்பப்படுகிறது.
திணைத் தலைவரான பெருந்தெய்வத்தை கடவுளாக நினைப்பதும் தவறு.
ஏனெனில் கடவுளுக்கு உருவம் கிடையாது.
திணைத் தலைவர் ஒரு கடந்த கால நினைவு மட்டுமே.
அவர் ஒரு வழிகாட்டி முன்மாதிரி அவ்வளவுதான்.
நிகழ்காலத்தில் அவர் ஆவியாக வருவதோ நிகழ்வுகளை வகுப்பதோ கிடையாது.

(3) தமிழரின் உண்மையான சமயம் கண்ணுக்குத் தெரியாத உருவமற்ற கடவுளை மனத்தில் வைத்து வணங்குவதே.
அது தம்மை கண்காணிப்பதாக நினைத்துக்கொண்டு ஒழுக்கமாக வாழ்வதே.

மேற்கண்ட மூன்று மதங்களும் ஒன்றுடன் ஒன்று குழம்பி இன்று எதுவுமே சரியாகக் கடைபிடிக்கப் படவில்லை.

அறிவியல் நன்கு வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றுக்கும் மேலே இருந்து ஒரு சக்தி நம்மை ஆட்டிவைப்பது இல்லை என்பது தெரிந்துவிட்டது.
பேரழிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதும்
உயிரினங்கள் எப்படி தோன்றி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டன.

ஆக நமது ஆதிகால வணக்கத்தில் அச்ச உணர்வினால் நாம் செய்த வழிபாடுகளை (பாம்பு வணக்கம், ஆவி வணக்கம், நெருப்பு வணக்கம்) தவிர்த்துவிட்டு
நன்றியுணர்வினால் நாம் செய்த வழிபாடுகளை (மரம், ஆறு, மலை, நடுகல் வணக்கம்) பின்பற்றி புதியதொரு மதத்தை உருவாக்க வேண்டும்.
அதாவது 1:1 ஐ விட்டுவிட்டு 1:2 ஐ பின்பற்றவேண்டும்.

நமக்கு உயிரளிக்கும் ஐம்பூதங்களையும் வணங்கவேண்டும்.

வணங்குதல் என்றால் வணக்கம் தெரிவித்தல் அதாவது மரியாதை செலுத்துதல்.
ஐம்பூதங்களை அதாவது இயற்கையை எப்படி மதிக்கலாம்?
அதை பாதுகாப்பதன் மூலம் அதற்கான மரியாதையைச் செலுதுதலாம்.

மக்களுக்காக வீரமரணம் அடைந்தோரை நடுகல் நட்டு வழிபடவேண்டும்.
வழிபடுதல் என்றால் அவர் காட்டிய வழி நடத்தல்.

மற்றபடி எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புகிற கடவுள் சமயமும் ஒரு மூடநம்பிக்கையே.
இறந்தவர் திரும்புவார் என்று நம்புதலும் மூடநம்பிக்கையே.
(இவ்விரண்டையும் தவிர்க்கும் வழிபாட்டினை நம்பா மதம் என்கிறார் பாவாணர்)
நாம் நம்பா மதத்திற்கு மாறி இத்தகைய மூடநம்பிக்கைகளைக் கைவிடுதல் வேண்டும்.
இறை அல்லது ஆவி மீது பக்தி செலுத்துவதன் மூலமும் காணிக்கை கொடுப்பதன் மூலமும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் நமக்கு சாதகமாக மாற்றலாம் என்ற எண்ணத்தையும் பேராசையையும் அடியோடு கைவிட வேண்டும்.

சுருங்கக்கூறின்,
கடவுள் வழிபாட்டிற்கு செய்யப்படும் அத்தனை செயல்களும் இயற்கையைக் காக்க செய்யப்படவேண்டும்

குலதெய்வ வழிபாடு என்று செய்யப்படுபவை நடுகல் நடப்பட்ட மாவீரருக்கு செய்யப்படவேண்டும்.

தம்மை கண்கானிக்க மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பி
அதன் மீதான அச்சத்தில் ஒழுக்கமாக வாழ்வதை விட தமது மனசாட்சி படி ஒழுக்கமாக வாழ்தல் வேண்டும்.

மேலும் அறிய,

தேடுக: தமிழருக்கு (மட்டும்) உரித்தான மதம் வேட்டொலி

தேடுக: பொங்கலும் இறைமறுப்பும் வேட்டொலி 

No comments:

Post a Comment