பகுத்துண்டு பல் உயிர் ஓம்புக
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
நானும் பார்க்கிறேன் சாலைகளில் தவளை, ஓணான், எலி, பாம்பு போன்ற சின்னஞ்சிறு உயிர்கள் நசுங்கி உயிர்விட்ட தடயங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
மழைக்காலங்களில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
இதை பார்க்கும்போது வேதனையாகவும் விருட்டென்று வாகனத்தில் பறக்கும் அவசர மனிதர்கள் மீது அடங்காத ஆத்திரமும் வருகிறது.
நாளை அமையவிருக்கும் நமது தமிழர் நாட்டில் சாலைகள் அமைக்கப்படும்போது சாலைகளின் கீழே சிறு சிறு உயிர்கள் கடந்து செல்ல வழிகள் ஏற்படுத்தியே சாலைகள் போடப்படவேண்டும்.
அவ்வழிகளுக்குள் வெளிச்சமும் மணலும் சின்னஞ்சிறு தாவரங்களும் இருக்கவேண்டும்.
அப்போதுதான் உயிர்கள் அதை இயற்கையான பாதைகள் என்று நினைக்கும்.
அது மட்டுமன்றி சாலையின் கரைகள் உயர்த்திக்கட்டப்படவேண்டும்.
மனிதர்களின் வாகனப் போக்குவரத்து யானைகள் போன்ற பெரிய உயிரினங்களுக்கும் இடைஞ்சலாக உள்ளன.
அத்தகைய பெரிய உயிரினங்கள் சாலையைக் கடக்க ஆங்காங்கே பெரிய பாலங்கள் அமைக்கப்பட்டு அதில் தாவரங்களும் மணலும் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
அந்த பாலங்களை மாந்தர் பயன்படுத்தக்கூடாது.
பூச்சிகள் அடிபடாமலிருக்க சாலை விளக்குகள் நன்கு உயரமாக அமைக்கப்படவேண்டும்.
இவை தவிர சாலையில் குறுக்கே எதாவது ஒரு விலங்கினம் வந்தால் அதை குறிப்பிட்ட தூரம் முன்னரே அறிவிக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்படவும் வேண்டும்.
( பாதுகாப்பான பாதை இருக்கையில் பாதுகாப்பின்றி சாலையைக் கடக்க விலங்குகள் அத்தனை முட்டாள்கள் கிடையாது என்றாலும்)
மேலும் வாகன இயக்கம் முடிந்தவரை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்கவேண்டும்.
நமக்கான நாடு அமையும் வரை,
நீங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு எடுக்குமுன் அதன் கீழேயும் சக்கரங்கள் அடியிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பிறகு எடுங்கள்.
மழைக்காலங்களிலும் குளிர்காலங்களிலும் இதனைக் கட்டாயம் செய்யுங்கள்.
சாலையில் எதிரில் மட்டும் பார்க்காமல் சாலையின் தரைத்தளத்தையும் பார்த்தவாறு ஓட்டுங்கள்.
இந்த உலகத்தைத் தமிழரைத் தவிர வேறு யாராலும் சக மனிதரிடமிருந்து காப்பாற்றமுடியாது.
No comments:
Post a Comment