அனைத்து வீடுகளையும் இடிப்போம்
மிகப்பெரிய நகைச்சுவை எதுவென்றால்
நேற்று பிறந்த ஒரு மனிதன்,
ஒரு காகிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு 450 கோடி ஆண்டுகள் பழமையான நிலத்தை தனக்கு சொந்தம் என்று கூறுவது.
இந்த உலகத்தில் நாம் வாடகைக்கு சிறிது காலம் வாழத்தான் வந்துள்ளோம்.
இதன் அமைப்பை மாற்றியமைக்கவோ
உரிமை கொண்டாடவோ நமக்கு தகுதி இல்லை.
இந்த உலகமும் அதன் நீரும் நிலமும் மனிதர் அனைவருக்கும் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமாகும்.
மாந்தர் உட்பட விலங்கினத்திற்கான இயற்கையின் விதி என்ன?
நீங்கள் பிறக்கவேண்டும்.
(பெற்றோர் பாதுகாப்பில் வளர்ந்து) உலகத்தில் உயிர் வாழ்வதைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
பிறகு உங்களுக்கான இருப்பிடத்தையும் உணவையும் உங்கள் சொந்த உழைப்பினால் தேடிக்கொள்ளவேண்டும்.
வாழ்க்கைத் துணையைத் தேடி கலவியில் ஈடுபட்டு குழந்தை பெற்று (உங்களுக்குப் பிறகான வெற்றிடத்தை நிரப்பும் வகையில்) உங்கள் குழந்தைகளை வளர்த்தெடுக்கவேண்டும்.
முதுமையாலோ வேட்டையாடப்பட்டோ இறக்கவேண்டும்.
இதுதான் வாழ்க்கை.
நாம் வாழ்வது வாழ்க்கை இல்லை அட்டூழியம்.
நாம் தேவைக்கு அதிகமாகப் பரவி நிலத்தையும் நீரையும் ஆக்கிரமித்து,
ஆடம்பரத்திற்காக உலக வளங்களை தேவையின்றி வரைமுறையில்லாமல் அழித்துக்கொண்டே போகிறோம்.
ஒரு நாளைக்கு நான்கு கால்பந்தாட்ட மைதானம் அளவு காடுகள் அழிக்கப்படுகின்றன.
நிலத்தை வரைமுறையில்லாமல் தோண்டி கனிமங்களை எடுக்கிறோம்.
காற்றை வரைமுறையில்லாமல் மாசுபடுத்துகிறோம்.
இது எல்லாவற்றையும் செய்து பணம் என்ற மாயையை சேர்த்துவைத்துக்கொண்டே போகிறோம்.
இந்த உலகம் மெல்ல... இல்லையில்லை.. வேகமாக.. படுவேகமாக அழிவினை நோக்கி செல்கிறது.
இன்று இந்த உலகையே ஆட்டிப்படைப்பவன் மனிதன்.
மனிதர்களில் மூத்த குடி என்றவகையில் தமிழர்களான நாம் மாந்தர்களை நல்வழிப்படுத்தி உலகினைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கிறோம்.
உலகின் மீதான மனிதர்களின் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்.
முதலில் என்ன விலை கொடுத்தேனும் என்ன பாதகத்தைச் செய்தேனும் தனித் தமிழர்நாடு அமைப்போம்.
தமிழர்நாடு அமைந்தபிறகு,
முதலில் நாம் ஒரு வீட்டை இடித்து அதன் இடிபாடுகளை பயன்படுத்தி மீண்டும் வீடுகட்ட, ஒரு தொழில்நுட்பத்தை கண்டறிய வேண்டும்.
அதன்பிறகு அத்தனை வீடுகளையும் இடிக்கவேண்டும்.
பணம் உள்ளவன் பல ஏக்கர் கொண்ட பிரம்மாண்ட வீடு கட்டி அதில் இரண்டொரு அறைகளில் வாழ்கிறான்.
பணம் இல்லாதவன் வீடுகூட இல்லாமல் நடுத்தெருவில் உறங்குகிறான்.
ஏழ்மையை ஒழிக்க நாம் நிலவுடைமையை பொருளுடைமையை ஒழிக்கவேண்டும்.
மாந்தர் தனி நிலையான சொத்துகள் தனி.
எதுவும் எவருக்கும் உரிமையில்லை.
ஆறு பேர் கொண்ட குடும்பம் வாழும் அளவு சிறிய வீடுகள் ஒரே மாதிரி கட்டப்படவேண்டும்.
தமிழ்ப் பெரியார் நம்மாழ்வார் எனும் இயற்கை மேதை கூறியதைப் போல,
ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும்.
வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும்.
பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும்.
ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்.
குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும்.
பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும்.
ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்.
அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும்.
ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.
வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும்.
இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும்.
ஒரு மா மரம் வைக்க வேண்டும்.
இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்.
( இது போக மாடியிலும் தோட்டம் போடவேண்டும்.
அதாவது வீட்டை விட அதன் சுற்றுப்புறம் பெரிய அளவில் இருக்கும்.
இப்படி செய்தால் வேலைக்கே போகவேண்டாம்)
வீட்டிற்கொரு கிணறும் வேண்டும்.
கிணறு தோண்டமுடியாத இடங்களில் மட்டும் அரசு குழாய் மூலம் தண்ணீரை தரவேண்டும்.
நிலத்தடி நீரை கூடிய மட்டும் பயன்படுத்தவேண்டாம்.
ஒவ்வொரு ஊருக்கும் அருகிலேயே முடிந்த அளவு ஒரு நீர்வரத்து அல்லது நீர்த்தேக்கம் ஏற்படுத்த முயலவேண்டும்.
அதாவது நம் உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளை உரமாக எடுத்துக்கொண்டு உணவாக்கி மரங்கள் நமக்குத் தரும்.
( நாம் நமது கழிவுகளை இயற்கைக்குக் கிடைக்கவிடுவதில்லை.
நாம் ஒரு நாளில் கழிவாக மாற்றும் உணவில் அளவு இயற்கையால் ஆறுமாதங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் ரசாயனங்களைக் கலந்துவிடுகிறோம்.
இதனாலேயே உணவுப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
மரபணு மாற்றம், ரசாயன உரம் என்று கேடான வழிக்கு இட்டுச் செல்கிறது)
விளைநிலத்தின் மேலே இருக்கும் அத்தனை கட்டடங்களும் இடித்து அகற்றப்படும் அது ஒரு ஊராக இருந்தாலும் சரி.
வரப்புகள் வேலிகள் அகற்றப்படும்.
வீடுகள், கடைகள், மற்றும் அலுவலகங்கள் வயல்களின் கீழே சுரங்கம் தோண்டி மிக ஆழத்தில் கட்டப்படவேண்டும்.
மேற்பரப்பில் வேளாண்மை நடக்கவேண்டும்.
அல்லது குழிதோண்டி அதில் நெருக்கமாக ஒட்டிவீடுகட்டி அதன்மேல் தோண்டிய மண்ணை வீடுகள்மேல் நிரப்பி வேளாண்மை செய்யவேண்டும்.
வீட்டின் மேலே இருக்கும் வயலை அக்குடும்பம் பொறுப்பெடுத்து விளைவிக்கவேண்டும்.
இதுபோக வீடுகளில்லாத இடங்களில் நடக்கும் வேளாண்மை, மரம்வளர்த்தல், சாலையோர மரங்கள், கால்நடை வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு ஆகிய நடவடிக்கைகளை அரசு கவனிக்கவேண்டும்.
முடிந்தவரை அங்கே மக்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.
(இந்த குடியேற்றத்திற்கு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களை அழைத்துவந்து பயன்படுத்தலாம்)
ஒவ்வொரு ஊரிலும் சில குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபடவேண்டும்.
விலங்குகளின் பால் அருந்துவது தடை செய்யப்படுகிறது.
(குழந்தைப் பருவத்திற்குப் பிறகு நாம் அருந்தும் பால் செரிக்கமுடியாதது.
அதனால் எந்த பலனும் இல்லை)
முட்டை மற்றும் இறைச்சி அளவாக உண்ணவேண்டும்.
ஆபரணங்கள் அணிவது தடைசெய்யப்படுகிறது.
மண்ணைத் தோண்டுவதை முடிந்த அளவு குறைக்கவேண்டும்.
கதிரவன் ஒளியில் இருந்தோ, காற்றிலிருந்தோ, நீர்தேக்கங்களிலிருந்தோ இயற்கையான முறையில் மின் உற்பத்தி செய்யவைண்டும்.
சமையலுக்கு (சாண)எரிகாற்றை வீட்டிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்தவேண்டும்.
சமைப்பதைக் குறைக்கவேண்டும்.
நமது பழைய முறையான தானிய உணவுகளை கூழ் செய்து குடிக்கும் முறைக்கு மாறவேண்டும்.
வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை உடற்பயிற்சி செய்யும் இயந்திரங்கள் மூலம் தயாரித்து சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
மழைநீரை முழுதும் சேகரிக்கவேண்டும்.
நிலத்தடி நீரை பயன்படுத்துவதை முடிந்த அளவு தடுக்கவேண்டும்.
நீர்நிலைகளின் கரைகளில் பனை மரத்தை வரிசையாக இடைவெளியின்றி நடவேண்டும்.
ஓசோனைப் பாதுகாக்க வீடுதோறும் துளசி வளர்க்கப்படவேண்டும்.
பாரம்பரிய விதை நெல்வகைகள் மீட்கப்படவேண்டும்.
வீட்டுக்கு தேவையான அனைத்தையும் அரசு வழங்கும்.
வேறு இடத்திற்கு குடிபெயரும்போது மனிதர்கள் மட்டும் மாறவேண்டும்.
வீடும் வீட்டுப்பொருள்களும் அப்படியே இருக்கும்.
வீடுகளுக்கும் வண்டிகளுக்கும் வண்ணம் பூசுவதும் இயற்கையான முறையில் நடைபெறவேண்டும்.
போக்குவரத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் எண்ணெயை எரிக்காமல் கால்நடைகளையோ, உடலுழைப்பையோ அல்லது இயற்கைமுறையில் உற்பத்தி செய்த மின்சாரத்தையோ பயன்படுத்தவேண்டும்.
காடுகளை பாதுகாப்பதுடன் காடுகளில் ஆங்காங்கே இருக்கும் காலி இடங்களிலும் அருகிலுள்ள மரங்களைப் போல வளரவைத்து காடுகளை அடர்த்தி ஆக்கவேண்டும்.
தேயிலைத் தோட்டங்களை முற்றாக ஒழிக்கவேண்டும்.
ஆண்டுமுழுவதும் தண்ணீரைக் குடித்து கேடுவிளைவிக்கும் சர்க்கரையைத் தரும் கரும்பு குறைக்கப்படவேண்டும்.
சீனியையும் தேயிலையையும் தடை செய்யவேண்டும்.
வெல்லம், கருப்பட்டி போன்றவை மட்டுமே இனிப்பிற்காகப் பயன்படவேண்டும்.
அவசியமற்றபோது வேட்டையாடுதலை தடை செய்யவேண்டும்.
சோப்பு, கழுவும் அமிலங்கள், சென்ட், கொசுவிரட்டி, ஊதுபத்தி, போன்றவை வேதியியல் பொருட்களால் தயாரிக்கப்படக்கூடாது.
இயற்கையான பொருட்களால் இவற்றிற்கு மாற்று உருவாக்கப்படவேண்டும்.
சீமைக் கருவேல மரங்கள் அனைத்தையும் வெட்டிவிட்டு மரம் இல்லாத இடங்களே இல்லை எனுமளவு பலவகை மரங்களை நட்டுவளர்க்கவேண்டும்.
காணுமிடமெல்லாம் பழங்களும் பூக்களும் கீரைகளும் பறிக்க ஆளில்லாமல் கொட்டிக்கிடக்கும் அளவு செழிப்பாக மாற்றவேண்டும்.
அதாவது நாட்டையே காடாக (social forest) மாற்றவேண்டும்.
வறண்ட இடங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் எதாவது விளைவிக்க முயற்சிக்கவேண்டும்.
அல்லது அதன் மேலேயே வளமான மண்ணை நிரப்பி வேளாண்மை செய்யவேண்டும்.
அதுவும் முடியாத வறட்சியான இடங்களை கதிரவன் ஒளி சேகரிக்கவும் காற்றாலைகளும் தொழிற்சாலைகளுக்கும் அரசு பயன்படுத்தவேண்டும்.
மனிதன் நெருப்பைப் பயன்படுத்திய காலத்தில் இருந்து இன்றுவரை செலவிட்ட ஆற்றலின் மொத்த அளவு
ஒரு நாளில் கதிரவன் ஒளி மூலம் உலகத்திற்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை விட குறைவுதான்.
மூன்றுமாதமே வெயிலடிக்கும் குளிர்நாடுகள் கூட கதிரவனொளியை மின்சாரத்திற்காகப் பயன்படுத்துகின்றன.
நாம் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு கடலிலும் நிலத்திலும் சூரிய ஒளித்தகடுகள் பதித்து மின்சாரம் எடுக்கவேண்டும்.
சாலைகளிலும், சாலைகளின் மேற்புறத்திலும் கடைகளின், வண்டிகளின் மேற்புறத்திலும் மீன்பிடி படகுகளிலும் இன்னும் வாய்ப்பு கிடைக்கும் அத்தனை இடங்களிலும் தகடு பதித்து சூரிய ஒளியை ஆற்றலுக்கு பயன்படுத்தவேண்டும்.
அதாவது வானத்திலிருந்து பார்த்தால் நம் நாடு முழுக்க அடர்பச்சையாகவும் கதிரவனொளி தகடுகளாகவுமே காணக்கிடைக்கவேண்டும்.
ஆணோ பெண்ணோ வீட்டிற்கு ஒருவர்தான் வேலைக்குப் போகவேண்டும்.
(எல்லா வேலைகளும் அரசு வேலை)
அந்த வேலையும் வீட்டருகே முடிந்தவரை இருக்கவேண்டும்.
அல்லது வேலை கிடைத்த இடத்திற்கு குடும்பம் நகரவேண்டும்.
வீட்டிலிருக்கும் அனைவரும் குழந்தைகளும் முதியவரும் கூட தம்மால் முடிந்த வேலைகளை வீடுகளில் செய்யவேண்டும்.
அதாவது பெரும்பாலோருக்கு வீட்டிலேயே வேலை இருக்கவேண்டும்.
நாட்டின் முக்கியவேலை உணவு உற்பத்தி அதுவும் வீட்டிலிருந்தே நடைபெறவேண்டும்.
குறைந்தது வீட்டுக்குத் தேவையான உணவையேனும் வீடுகள் விளைவித்துக்கொள்ளவேண்டும்.
சிலர் பருத்தியை விளைவித்து அரசிடம் தரவேண்டும்.
சாயம் முக்காத ஆடைகள் அரசு தயாரித்து தரவேண்டும்.
இரும்புக்கு பதிலாக மரக்கட்டைகளைப் பயன்படுத்தி பொருட்கள் செய்யவேண்டும்.
(தீப்பிடிக்காத, இரும்பை விட வலிமையான மரங்கள் உள்ளன)
மரங்களை வெட்டுவது கட்டுக்குள் இருக்கவேண்டும்.
காகித மறுசுழற்சி முடிந்த அளவு பின்பற்றப்படவேண்டும்.
பாலீதின் முற்றிலும் தடைசெய்யப்பட்டு துணிப்பைகள் பயன்படுத்தப்படவேண்டும்.
ஒவ்வொரு ஊரும் தன்னிறைவு பெற்றதாக இருக்கவேண்டும்.
அதாவது மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு, காவல்துறை, நீதிமன்றம், அரசு அலுவலகங்கள், விளையாட்டு என அத்தனை அம்சங்களும் ஒவ்வொரு ஊரிலும் சம தரத்துடன் (அரசால் நிர்வகிக்கப்பட்டு) இருக்கவேண்டும்.
அதற்கான பணியாட்கள் அவ்வூரிலேயே எடுக்கப்படவேண்டும்.
(அல்லது பக்கத்து ஊர்களிலிருந்து எடுக்கலாம்.
அதாவது பணிக்காக ஒருவர் குடும்பத்தை பிரிவது கூடியமட்டும் தவிர்க்கப்படவேண்டும்)
எல்லையோரம் இருக்கும் மக்கள் மூன்றுபிள்ளைகள் பெறலாம்.
எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுடையது.
அவர்கள் ராணுவப் பயிற்சி பெறவேண்டும்.
(நாட்டின் உள்ளே அனைத்து இளைஞர்களுக்கும் ராணுவப்பயிற்சி பெறவேண்டும்.
படையில் விருப்பமுள்ளவர்கள் சேரலாம்)
இராணுவத்திற்கு (குறிப்பாக போர்க்காலத்தில்) வண்ண உடைகள் அணியவும், வண்ணம் பூசுதலும், எண்ணெயை எரிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தவும்,
ஆகிய சலுகைகள் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
குருவிகளைப் பாதிக்காத (ரேடியோ மூலமான) தகவல் தொடர்பு வழங்கப்படவேண்டும்.
தொழிற்சாலைகள் முடிந்த அளவு சுற்றுப்புறத்தைப் பாதிக்காது இருக்கவேண்டும்.
மரங்களின் எண்ணிக்கை நன்கு பெருகியதும் வீடுகட்ட, வண்டிகள் தயாரிக்க, கருவிகள் ஆயுதங்கள் செய்ய முழுக்க முழுக்க மரங்களை பயன்படுத்தலாம்.
தாய்மொழியில் தரப்படும் கல்வியில் அடிப்படை வேளாண்மையும், மருத்துவமும், சமையலும், சுற்றுச்சூழலியலும், அரசியலும் இருக்கவேண்டும்.
மேற்கண்ட மாற்றத்தை ஒரே நேரத்தில் நாடு முழுவதும் செய்யாமல் பகுதி பகுதியாகச் செய்யவேண்டும்.
இது ஒரு சிந்தனைதான்.
நடைமுறையில் பல சிக்கல்கள் வரலாம்.
உலகின் வறுமை ஒழிப்பதும்
இயற்கையைக் காப்பதும் அத்தனை எளிதில்லை.
அதற்காகச் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும்.
No comments:
Post a Comment