அமைதிப்படையில் தமிழத்து வீரர்கள்
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
இந்தியராணுவம் சம்பந்தமான என் அனுபவத்தில் ஓர் சிறிய ஆறுதலான சம்பவமும் இருக்கத்தான் செய்தது.
இந்திய அமைதிப்படையில் (?) தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஒருவர் இருந்தார்.
என்ன இது தமிழ் பெண்களையும் வீதியில் கைதிகள் போல் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம் அல்லது
இந்தியராணுவத்தின் பெயர் கெடப்போகிறதே என்ற கவலை
எதுவோ ஒன்று அவரை எங்களுக்கு தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று தூண்டியிருக்கலாம்.
ஒருநாள் வழக்கம் போல் வீதியில் மற்றவர்களுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தேன்.
நாங்கள் மட்டுமே பெண்கள்.
இவர் தமிழர் என்று தெரிந்ததும் நான் இவரிடம் கெஞ்சுவது போல் கேட்டேன்.
எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று.
இந்த தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் தலை மீது சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் (சீக்கியரோ?) தலைப்பாகை கட்டிய, சீருடையில் ஏதோ பட்டைகள் உள்ள ஓர் அதிகாரியிடம் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார்.
இவர் பதுங்கிப் பதுங்கிப் பேசுவதும், அவர் கண்கள் சிவக்க, உரத்த குரலில் கடித்துக் குதறுவது போல் பதில் சொல்வதும் எனக்கு ஏனோ ஓர் தர்மசங்கடத்தை இவருக்கு உண்டாகி விட்டோமோ என்று தோன்றியது.
அந்த அதிகாரியின் பேச்சும், அவர் நின்ற தோரணையும் அவ்வளவு பயத்தைக் கொடுத்தது எனக்கு.
ஒருவாறாக திரும்பி வந்தவர் சொன்னார் “சரிம்மா, என்னோட வாங்க உங்களை உங்க வீட்ல விடுறேன்” என்றார்.
நான் ஏதோ பெரிய மேதாவி போல் முந்திக்கொண்டு “உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே போய்க்கறோம்” என்றேன்.
அவர் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு சொன்னார்,
“நீங்கள் தனியே போவதை இவர்கள் பார்த்தால் மறுபடியும் பிடித்து உட்கார்த்தி வைப்பார்கள் அதனால் தான் சொல்கிறேன் என்னோடு வாருங்கள் என்று”.
அவர் சொல்வது சரியென்று தோன்றவே அவரோடு நடந்தோம்.
ஒரு இரண்டு நிமிட நடை என் வீட்டிற்கு.
அப்படி தான் ஓர் நாள் என் மனதில் தோன்றியதை இவரிடம் கேட்டேன்.
“நீங்கள் எப்படி இந்த ராணுவத்தில்….” என்று.
ஏனென்றால் என் கண்களுக்கு அவர் மிக நல்லவராகவே தோன்றினார்.
அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
ஆனால், திரும்பி என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மறுபடியும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.
ஐயோ அந்த முகத்தில் தெரிந்த வலியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.
அந்த முகத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய ஒட்டுமொத்ததமிழ்நாட்டின் வலியைப் பார்த்தேன், உணர்ந்தேன்.
உண்மையில் ஈழத்தில் அமைதிதான் காக்கப்போகிறோம்,
ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறோம் என்று நம்பி வந்திருப்பார் போலும்.
ஆனால் நடந்தது தலைகீழாய் இருக்க,
அந்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
பேச்சை திசை திருப்ப “உங்க பேர் என்ன”? என்றேன்.
நான் இப்படித்தான் சிலசமயம் மனதில் படுவதை படக்கென்று யாரிடமாவது கேட்டுவிடும் பழக்கம் உள்ளவள்.
அவர் பெயர் சொல்லவில்லை.
சரி எந்த ஊர் என்றாவது சொல்லுங்கள் என்றேன்.
தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்றார்.
ஒரு சில சமயங்களில் என் தங்கையையும் கைதியாக்கிய சந்தர்ப்பங்களில் இவர் தான் அவள் சிறுமி என்பதால் என் வீட்டிற்கு முன்னாலுள்ள சிறிய தாயார் வீட்டிற்கு போகச்சொல்லுவார்.
நானும் போகலாமா என்றால், உங்களை போக விடமாட்டார்கள் என்றார்.
சரி, எவ்வளவு தான் அவர் எனக்கு உதவ முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.
அந்த சகோதரர்தான் சில விடயங்களை கற்றுத்தந்தார்.
ராணுவம் வருவது தெரிந்தால் வீட்டிற்குள் இருக்காதீர்கள்.
தெருவில் வந்து நில்லுங்கள்.
வீட்டின் கதவுகளை மூடி வைத்தால் சந்தேகப்படுவார்கள் அதனால் திறந்தே வைத்திருங்கள்,
ராணுவம் ரோந்து வரும் போது முடியுமான வரைக்கும் அதிகாரியின் அருகிலேயே நில்லுங்கள் அப்படி என்றால் அவர்கள் உங்களுடன் தகாத முறையில் நடக்க பயப்படுவார்கள் என்று.
ஆனால், அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை.
அவரை சிறிது காலத்திற்கு பின் நான் ரோந்து வந்த ராணுவத்துடன் பார்க்கவில்லை.
இந்தியராணுவம் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இவரின் நினைவும் மறக்காமல் வரும் எனக்கு.
நன்றிகள் சகோதரரே.
நன்றி: www.vinavu. com/2009/12/04/eelam-rathi-8-ipkf/
_________________________
முதற்கட்டமாக ஈழத்திற்குச் சென்ற ஹிந்தியக் கொலைப்படையில் தமிழகத் தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர்.
அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு முடிந்த அளவு உதவியதால் கோபமடைந்த ஹிந்திய தளபதிகள் தமிழர்களை திருப்பியனுப்பிவிட்டனர்.
No comments:
Post a Comment