திருத்தணியைத் தமிழகம் மீட்ட வரலாறு
ஈ.வே.ரா:-
“ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது.
அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.
இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை.
யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்ற வேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை.
தமிழர்களில்தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்?
இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர,
“குமரி முதல்
வேங்கடம் வரை”
என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?”
(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்,
தொகுதி-2, பக்கம் 723, 724)
செங்கல்வராயன் (அப்போதைய சென்னை மேயர்):-
"சென்னையை ஆந்திரத்தின்
தலைநகரமாக்க சென்னையில் வசிக்கும் சிறுபான்மை தெலுங்கர்கள் விதண்டவாதம் பேசினால்,
குடிக்க தண்ணீர் தரமாட்டோம்
பிணத்தை எரிக்க சுடுகாடு தரமாட்டோம்"
முத்துராமலிங்கத்தேவர்:-
தமிழரசு காணவும், தமிழகத்தின் எல்லைகளை மீட்கவும் தமிழை அரசு மொழியாக்கவும் சரியான நேரத்தில் தமிழ் அரசு கழகம் முன் வந்திருக்கிறது.
தமிழ்நாடு - தமிழுக்கும் தமிழ்ப் பண்புக்கும் முரண்பட்ட முறையில் ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்தே அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
அந்த அலைக்கழிவு, முடிவில் ‘தமிழ் மாகாணம்’ என்று கூட சொல்ல இயலாது ‘எஞ்சிய சென்னை’ என்பதன் முறையிலேயே இழிவான முறையில் தமிழ் மாகாணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
சரித்திர சான்றான திருப்பதியையும் இழந்து நிற்கிறது.
இந்நிலையில், சென்னையை ஒட்டி, ஜனத் தொகையிலும் சர்வமுறையிலும் தமிழ்நாட்டிற்குப் பாத்தியப்பட்ட சித்தூரையும், திருத்தணி போன்ற தேவாலயத்தையும் இழந்து
நிற்கிறது.
இதற்கென ஒரு போராட்டம் எழுந்த பின்னரும் காங்கிரஸ் மந்திரிசபை ஆங்கிலேய முறையை பின்பற்றி அடக்குமுறையால் கையாள நினைக்கிறதே தவிர அறிவு வந்ததாக தெரியவில்லை.
எனினும், இந்த வடக்கெல்லைப் போராட்டம் நீடிக்குமானால் இதில் மந்திரிசபை வழக்கம்போல அசட்டுத்தனத்தைக் கையாளுமானால் விபரீத விளைவுகளை எதிர்பார்க்கநேரும்.
அது பல பொட்டி ஸ்ரீராமுலுகளை தமிழ்நாட்டில் தயாரிக்கும் என்று எச்சரித்து தமிழ் எல்லைப் போராட்டத்திற்கு ஆசிகூறுகிறேன்"
(7.6.1956 அன்று கன்னியாகுமரியில் பேசியது)
திருத்தணிகை தமிழகத்தோடு இணைந்த நாள்
1.4.1960
"திருத்தமிழ்க்கு உயர்திசைச்
சிறப்புடைத் திருத்தணிகை"
என்று திருப்புகழ் பாடியவர் அருணகிரிநாதர்.
தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாக விளங்கிய வடவெல்லையான திருப்பதியை இழந்து தமிழர்கள் பரிதவித்து நின்ற போது சற்று ஆறுதலான தீர்ப்பொன்று 1957ஆம் ஆண்டில் எல்லை ஆணையர் எச்.வி. படாஸ்கர் என்பவரால் அளிக்கப்பட்டது.
அது என்னவெனில்,
தமிழ்ப்பகுதிகளாக விளங்கிய திருத்தணி, திருவாலங்காடு, வள்ளி மலை, ஆகியவை தமிழகத்தோடு இணைக்கப்படும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசால ஆந்திரம் கேட்டு தெலுங்கர்கள் 1953ஆம் ஆண்டு தீவிரமாக போரடிய போது சித்தூர் மாவட்டத்தில் ஆறு தமிழ்ப்பகுதிகளை தெலுங்கர்கள் அபகரித்து கொண்டனர்.
அதில் தமிழர்கள் இருகண்களெனப் போற்றும் மாலவன் குன்றமும் (திருப்பதி)
வேலவன் குன்றமும் (திருத்தணி) அடங்கும்.
1946ஆம் ஆண்டிலிருந்து-
"வேங்கடத்தை விட மாட்டோம்,
வேங்கடமே தமிழகத்தின் எல்லை,
தணிகை தமிழருக்கே"
-என்று தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் விடாது முழங்கி வந்தார்.
அப்போது தமிழ்நாட்டில் திராவிடநாடு முழக்கத்தை கவெரா (ராமசாமிநாயக்கன்), அண்ணாத்துரை (அரைத்தேலுங்கர்) போன்றவர்கள் எழுப்பிய காரணத்தாலும்,
காங்கிரசு கட்சியில் தலைவராக விளங்கிய காமராசரின் தமிழின உணர்வற்ற போக்காலும் ம.பொ.சி.யின் குரல் ஒற்றை தனிமனிதரின் குரலாகவே பார்க்கப்பட்டது.
அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழின உணர்வு இந்திய, திராவிடக் கட்சிகளால் மழுங்கடிக்கப்பட்ட காரணத்தால் ஆந்திரர்கள் தமிழர்களின் தலைநகரான சென்னையைக் கூட தயக்கமின்றி உரிமை கொண்டாடி கேட்க முடிந்தது.
நல்ல வேளையாக சென்னை மீட்புப் போரிலும் தலையிட்டு "தலையைக் கொடுத்தேனும் தலை நகரை காப்பேன்"
என்று ம.பொ.சி. முழக்கமிட்டார்.
அந்த முழக்கத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது.
சென்னையை அரசியல் தளமாகக் கொண்டு இயங்கிய தமிழகக் கட்சிகள் எல்லாம் வேறு வழியின்றி சென்னை மீட்புக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டன.
முதல்வர் இராசாசி துணையோடு சென்னை தமிழர் வசமானது.
ஆனால், சென்னையை மீட்க ஒத்துழைத்த பேராய, பொதுவுடைமை, திராவிட இயக்கக் கட்சிகளெல்லாம் வட வேங்கட மீட்புக் கிளர்ச்சிக்கு ம.பொ.சி. அழைத்த போது ஒதுங்கியே நின்று வேடிக்கை பார்த்தன.
இதில் ம.பொ.சி. போற்றி வந்த இராசாசியும் உள்ளடக்கம்.
ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டக்குழுவை உருவாக்கி சித்தூர், புத்தூர்,திருத்தணி ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பும், தொடர் வண்டி முன்பும் மறியல் போராட்டங்களை நடத்தி வந்தார்.
இராசாசி ஆட்சியில் நீதிமன்றம் இவருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தது.
அவர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக 3.7.1953இல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகள் குறித்து ஆராய எல்லை ஆணையம் அமைக்க நேரு ஒப்புக் கொண்டார்.
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நேரு ஒப்புக் கொண்டபடி எல்லை ஆணையம் அமைக்க வில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சூலை 3ஆம் நாள் வடக்கெல்லை பாதுகாப்பு குழு சார்பாக எல்லை ஆணைய நாள் கொண்டாடப் பட்டது.
நேரு அரசாங்கம் இதையெல்லாம் பொருட்படுத்த மறுத்தது.
இதற்கிடையில், 1.11.1954இல் தமிழில் கூட்ட நடவடிக்கைகளை நடத்தியதாகக் கூறி தமிழர்களால் ஆளப்பட்டு வந்த திருத்தணிகை பஞ்சாயத்து சபையை ஆந்திர அரசு கலைத்தது.
தில்லி அரசும், ஆந்திர அரசும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு தமிழர் மீது வஞ்சனை காட்டி வருவதைக் கண்டித்து ம.பொ.சி. தலைமையில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு மீண்டும் கூடியது.
அது மீண்டும் வடக்கெல்லைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டப் போரை தொடங்கப் போவதாக அறிவித்தது.
போராட்டத் தளபதியாக விநாயகம் அறிவிக்கப்பட்டார்.
15.10.1956இல் தமிழகமெங்கும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதுபோல் தொடர்வண்டி சங்கிலியை இழுத்து தொடர்வண்டி நிறுத்தப் போராட்டம் நடத்தியதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பி.கோவிந்தசாமி என்பவர் இராஜ மந்திரி சிறையிலும்,
மாணிக்கம் என்பவர் பழனி சிறையிலும் மாண்டனர்.
போராட்டத்தைக் கண்டு அச்சமுற்ற தமிழக காங்கிரசு அரசும்,
ஆந்திர அரசும் தங்களுக்குள் ஒப்புக்கு பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.
இதனையே காரணமாக காட்டி எல்லை ஆணையம் அமைக்க முடியாது என்று நேரு அரசு கைவிரித்தது.
பேச்சு வார்த்தை நாடகம் தோல்வியுற்ற நிலையில் 1956ஆம் ஆண்டு திசம்பர் மாதம் படாஸ்கர் என்பவர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.
1957ஆம் ஆண்டு வெளிவந்த படாஸ்கர் ஆணையத் தீர்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டு திருத்தணிகையை தமிழகத்தோடு இணைப்பதற்கு நேரு அரசு வழக்கபம்போல் காலம் கடத்தியது.
நாடாளுமன்றத்தில் சட்டம் ஆக்குவதற்கு திருத்தணிகை தெலுங்கு உறுப்பினர்கள் பல முட்டுக்கட்டைகளை போட்டு வந்தனர்.
அன்றைய சபாநாயகர் அனந்த சயனம் அய்யங்கார், வட நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியோர் மூலம் திருத்தணி இணைப்பு மசோதாவை தடுக்க முற்பட்டனர்.
1959ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட இணைப்பு மசோதா நவம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதைக் கண்டித்து திருத்தணிகை பஞ்சாயத்து சபை கண்டன தீர்மானம் நிறைவேற்றியது.
ம.பொ.சி. தில்லிஅரசை வன்மையாகக் கண்டித்து கடிதம் எழுதினார்.
அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 1.4.1960இல் நடைபெற்றது.
அப்போது எவ்வித திருத்தமும் இன்றி திருத்தணி இணைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டது.
வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவணய்யா, என்.ஏ.ரசீது மற்றும் சிறை சென்ற ஈகியர்களை நினைவு கூறுவோம்!
நன்றி: Kathi Nilavan
நன்றி: சந்தோஷ் கதிர்வேலன்
நன்றி: Velmurugan Ramalingam
நன்றி: பெருமாள் தேவன்
உண்மையை சொல்கிறேன். மனம் பதைக்கிறது!
ReplyDelete