குருதியில் நனைந்த குமரி -9
1954 ஆகஸ்ட் 12
அதிகாலை 3மணி
கோதையாறு மணற்கரை
காவல் வாகனம் ஒன்று வந்து நின்றது.
காவலதிகாரி கூறினார்.
"பட்டம் இதை எரிக்கச் சொல்லிவிட்டார்.
இங்கேயே முடித்துவிடலாம்"
அதிலிருந்து உயிரிழந்த 30 உடல்கள் தூக்கிபோடப்பட்டன.
"ஐயா குழி தோண்டினால் விடிந்துவிடும்.
விறகுகளும் இங்கே இல்லை"
"ஆமாம் இவர்களுக்கு மரியாதையான அடக்கம் ரொம்ப அவசியமா?
அருகிலுள்ள தமிழ் குடியிருப்புக்கு சென்று கிடைத்ததை எடுத்துவாருங்கள்"
நான்கைந்து காவலர்கள் அருகிலிருந்த வீடுகளுக்குள் நுழைந்து விறகு துணி காகிதம் என முடிந்ததை அள்ளிக்கொண்டு வந்தனர்.
அதற்குள் மற்றவர்கள் பிணங்களை ஒன்றன்மேல் ஒன்றாக போட்டு குவியல் போல ஆக்கியிருந்தனர்.
அதன் மேல் விறகுகளையும் துணியையும் போட்டு பெட்ரோல் ஊற்றி குப்பையை எரிப்பதுபோல் எரித்தனர்.
--------------------------------
துப்பாக்கிசூடு பற்றி விசாரிக்க பட்டம் அரசு சங்கரன் குழுவை நியமித்தது.
பட்டம் ஒரு தாளில் எழுதிக்கொடுத்தார்
"இதை அறிக்கையாக தயார்படுத்தி வையுங்கள்.
நான் கூறும்போது வெளியிடலாம்.
அதுவரை விசாரணை என்று எதையாவது பதிவு செய்யுங்கள்"
"சரி ஐயா அப்படியே செய்துவிடுகிறேன்"
"கவலை வேண்டாம். தடயங்கள் எதும் இல்லை. நீங்கள் சொல்வதுதான் அறிக்கை.
அரசிதழில் அதை வெளியிடவும் செய்வேன்"
"உத்தரவு ஐயா"
சங்கரன் அந்த தாளைப் பார்த்தார்.
'இறந்தவர் எண்ணிக்கை=4
காயம்பட்டவர் எண்ணிக்கை=8
காவல்துறை தற்காப்புக்காக சுட்டதில் அசம்பாவிதம் நடந்தது.
எனவே காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை'
என்று அதில் போட்டிருந்தது.
---------------------------------------
இருட்டியபிறகு நேசமணி வீட்டின் பின்பக்கமாக ஒரு தொண்டர் வந்தார்.
"ஐயா, ஜீவானந்தத்தை கடுக்கைக்காடு வழியாக வழியனுப்பிவிட்டேன்"
"அப்பாடா பத்திரமாக போய்ச்சேர்ந்தாரா?"
"ஆமாம் ஐயா ஓயாது நடந்ததில் காலில் கொப்புளம் வந்துவிட்டது.
திருநெல்வேலி எல்லைக்கருகே விட்டுவிட்டுத்தான் வந்தேன்"
"கம்யூனிஸ்ட் தலலைமை ஆதரவு தராவிட்டாலும் அக்கட்சியின் எம்.எல்.ஏ ஜீவா தலைமையை மீறி நம்முடன் களத்தில் நின்றாரே அதுவே போதும்.
அவர் பாதுகாப்பு நமது பொறுப்பு.
அதை சரியாக நிறைவேற்றினாய் தம்பி.
தமிழக பத்திரிக்கைக்காரர்களை இனி ஜீவா நம் பக்கம் திருப்புவார்.
உனக்கு நன்றி.
நமது வழக்கறிஞர்களிடம் இந்த கடிதத்தை கொடுத்துவிடு"
"சரி ஐயா"
"கைதாவோர் அனைவரும் வெளிவர பிணை மனு உடனுக்குடன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் கொடுக்கப்படும்"
"சரி ஐயா கொடுத்துவிடுகிறேன்"
"நாளை வந்து என்னைப்பார்"
"வருகிறேன் ஐயா"
எண்ணங்கள் அலைமோத நேசமணி சற்று நிம்மதியடைந்தார்.
------------------------------------------------
1954 ஆகஸ்ட் 14
பைங்குளம்
வேலுவின் குழந்தைக்கு காய்ச்சல் கூடியிருந்தது.
"நான் மருந்து வாங்கி வருகிறேன்" என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிய அவரை தடுத்தாள் அவரது மனைவி.
"வேண்டாம் வெளியே போகாதீர்கள்.
யாரையோ பிடித்து இரவு முழுவதும் கொடுமை செய்தனர் அந்த அலறலை நீங்கள் கேட்கவில்லையா?"
"குழந்தையைக் காப்பாற்றவேண்டுமே,
நான்கு நாட்களாக வெளியே போகவில்லை.
உணவும் தீர்ந்துவிட்டது.
இனி முடியாது எப்படியாவது மருந்து வாங்கி வருகிறேன்.
நீ தைரியமாய் இரு"
தெருவில் இறங்கி நடந்தார்.
பீடி குடித்துக்கொண்டிருந்த ஒரு காவலன் "எடோய்! ஏ பாண்டி!" என்று அழைத்தான்.
வேலு நின்றார்.
அருகில் வந்து "எங்கே போகிறாய்" என்று கேட்டான்.
வேலுவுக்கு அவன் பேசிய மலையாளம் முழுதும் புரியவில்லை.
"புரியவில்லை" என்றார்.
ஆத்திரம் வந்த அவன் துப்பாக்கியின் பின்புறத்தால் நெஞ்சில் இடித்து கீழே தள்ளினான்.
மேலும் அவர் நெஞ்சில் மிதித்தான்.
மக்கள் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர்.
காவலர்கள் போனதும் அவரை தூக்கிக்கொண்டுபோய் அவர் வீட்டில் கிடத்தினார்கள்.
நல்லவேளை இவர் தி.த.நா.க கட்சி தொண்டர் கிடையாது என்று மக்கள் ஆறுதல் பட்டுக்கொண்டனர்.
-------------------------------------------
ஆத்திவிளை காவல்நிலையம்
தி.த.நா.க தொண்டர் சிங்காராயரை இழுத்துவந்தனர்.
மேசையில் கிடத்தி கட்டிவைத்து சொல்லமுடியாத இடங்களில் அடித்து கொடுமைப்படுத்தினர்.
எவ்வளவு அடித்தும் தி.த.நா.க தலைவர்கள் மறைந்திருக்கும் இடத்தை அவர் காட்டிக்கொடுக்க மறுத்தார்.
இதேபோல மற்றவர்களையும் பிடித்து தலைமறைவாயிருந்த தலைவர்களைப் பற்றி தகவலை வெளிக்கொண்டுவந்து ஒவ்வொரு தலைவர்களாகக் கைது செய்தனர்.
----------------------------------
குலசேகரம் பகுதியில் சந்தை கூடியிருந்தது.
கூட்டம்தான் இல்லை.
திடீரென்று அங்கே காவல்படை நுழைந்து வியாபாரிகளை பெண்களை அடித்து உதைத்து விரட்டினர்.
அதிலே கீழே விழுந்த நிறைமாத சூலிக்கு வயிற்றுவலி அதிகமாக மக்கள் ஓடிவந்து உதவ திறந்தவெளி குழந்தைபிறந்தது.
-----------------------------------
வெறியடங்காத அந்தக் கூட்டம் அடித்து உதைத்தது போக ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 1054 பேரைக் கைது செய்து இழுத்துச் சென்றது
(தொடரும்)
-------------------------------------
குருதியில் நனைந்த குமரி -8
https://m.facebook.com/photo.php?fbid=645523828884607&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56
No comments:
Post a Comment