Monday 16 August 2021

ஆப்கானிஸ்தான் அல்லது பேரரசுகளின் சவக்குழி

ஆப்கானிஸ்தான் - பேரரசுகளின் சவக்குழி 

 தாலிபான் என்றாலே 90% பஷ்தோ மொழிபேசும் பஷ்தூன் (பக்தூன்) இனத்தவர்கள்தான்.
 இவர்களது தாய்நிலம் பாதி பாகிஸ்தானிலும் பாதி ஆப்கானிஸ்தானிலும் பரந்து விரிந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் மத்தியில் அமைந்துள்ள ஹஸாரா மொழிபேசுவோரின் தாய்நிலத்தை சுற்றி வளைத்தவாறு மறுபுறம் வரை கணிசமாக பக்தூன்கள் வாழ்கிறார்கள் (இந்த பகுதிகள்தான் தாலிபான் கட்டுப்பாட்டுப் பகுதிகள், பார்க்க படம்). இந்த ஹஸாரா இனம் செங்கிஸ்கான் படையெடுப்பின்போது குடிவந்த மங்கோலிய வம்சாவளியுடன் கலந்து உருவான கலப்பு மக்கள் என்பர்.

 ஆங்கிலேய பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோதே  மோதி மண்ணைக் கவ்விய இனம்தான் பஷ்தோ. (அதிலும் ஆங்கில அரசின் சீக்கியப் படையணி ஆப்கானிஸ்தானில் சகாராகரி போரில் பெருவீரம் காட்டி இறுதியில் தோற்றது. இவர்களுக்கு ஆங்கிலேய அரசு நிறுவிய நினைவுச் சின்னமான டெல்லி இந்தியா கேட் தான் இன்றும் இந்திய ராணுவ நினைவிடம். ஆம் இந்தியா வீரமரணம் அடைந்த தனது ராணுவத்திற்கு ஒரு நினைவு வளாகத்தைக் கூட இன்றுவரை அமைக்கவில்லை)

 ஆப்கான் ரஷ்ய பேரரசின் ஆக்கிரமிப்பின்போது விடுதலைக்காக போராடியபோது பஷ்தூன் இனத்தின் மாணவர்கள் தங்கள் இனத்துக்காக அமைத்துக்கொண்ட படைதான் தாலிபான் (அதாவது மாணவர்கள்).
 அமெரிக்க பாகிஸ்தான் ஆதரவுடன் ரஷ்யாவையும் மண்ணைக் கவ்வ வைத்தனர் பக்தூன்கள். ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபான்கள் அமெரிக்காவிற்கு பணிந்து போகாததால் மத்தியில் இருக்கும் ஹஜாரா இனத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு தனது பொம்மை அரசை நிறுவி தொடர்ந்து தாலிபான்களுடன் போரிட்டு வந்த்து.
 அமெரிக்காவின் மிக நீண்ட போராக இது விடிந்தது.
இப்போது தோல்வியடைந்து வெளியேற வேண்டிய நிலை.

 ஆக மூன்று பேரரசுகளை மண்ணைக் கவ்வ வைத்த மாவீரர்கள் பக்தூன் மக்கள்!
 முதல் இரண்டு பேரரசுகள் பக்தூன்களுடன் மோதிய பிறகு விரைவிலேயே வீழ்ந்தன.
 அமெரிக்காவும் வீழப்போகிறது போலும்!

 இறுதிவரை இவர்களை ஆதரித்தது பாகிஸ்தானின் எல்லைக்குள் வாழும் பக்தூன் மக்கள். பாகிஸ்தான் முதலில் ஆதரித்து பிறகு விலகிக்கொண்டது என்றாலும் அமெரிக்க அழுத்தத்தையும் மீறி தன்னாட்டு பக்தூன்களுக்குப் பயந்து தாலிபான்களுக்கு மறைமுகமாக உதவி வந்தது. தற்போது அமெரிக்காவுக்கு இணையாக வல்லாதிக்கமாக எழுந்துவரும் சீனாவின் ஆதரவு தாலிபான்களுக்குக் கிடைத்த பிறகு மீண்டும் புத்துணர்வுடன் தாலிபான் போரைத் தொடர்ந்தனர்.

  இன்று அமெரிக்க ஆதரித்தவுடன் ஆட்சி புரிந்துவந்த ஹஸாரா இனத்தை வென்று ஆப்கானிஸ்தான் எனும் பல இனங்கள் வாழும் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர்.

 இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தானில் எங்கும் எதிலும் பக்தூன் ஆதிக்கம்தான் இருக்கப்போகிறது. இனி ஹஸாராக்களின் கதி அதோ கதிதான்.

 நான் எப்போதும் கூறுவது போல அரசியல் என்றாலே இனங்களின் அரசியல்தான்.
மதம் எல்லாம் வெறும் மேற்பூச்சு!

 'ஒரு பின்தங்கிய இனம்கூட தனது தாய்நிலத்தை மீட்க ஆயுதம் தூக்கிவிட்டால் எந்த வல்லரசும் எதிர்நின்று வெல்லமுடியாது' என்பதே தாலிபான்களாகிய பக்தூன்கள் உலகிற்கு உரைக்கும் பாடம்.
அதிலும் 'ஆயுதப் போராட்டம் இந்த நவீன உலகில் சாத்தியமில்லை' என்று பிதற்றிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அது முக்கியமான பாடம். 

தாலிபான்கள் மீது மதவெறி, ஆணாதிக்கம், இனவெறி, பயங்கரவாதம் என்று எத்தனையோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தனது ராணுவமான தாலிபான்களை உறுதியாக ஆதரித்து இந்த மாபெரும் வெற்றியை ஈட்டிய பஷ்தோ இனத்தாருக்கு பாராட்டுகள்!

 பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உடைந்து இருபுறமும் வாழும் பஷ்தோ மக்கள் தமக்கான நாட்டை நிறுவ வாழ்த்துகள்!



 
 

 

Wednesday 11 August 2021

மாற்றி யோசித்து ஒரு ஒப்பீடு

மாற்றி யோசித்து ஒரு ஒப்பீடு

 ஒரு தமிழர் பொழுதுபோகாமல் இருக்கிறார்.
 அவர் சென்னையிலிருந்து கிளம்பி இருசக்கர வாகனத்திலேயே ஆந்திர பிரதேசத்தில் நுழைந்து அப்படியே வடக்கு நோக்கி ஆந்திராவின் மறு எல்லை வரை ஓராண்டு கால சுற்றுலா செல்ல திட்டமிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

 அதற்குத் துணையாக ஆந்திரா வாழ் தமிழரான தனது நண்பருடன் விசாகப்பட்டினம் வரை சுற்றுப்பயணத்தைத் திட்டமிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

 தமிழக எல்லை தாண்டி ஆந்திராவில் நுழைந்ததும் தமிழர்களே அரசியல்வாதிகளாகவும் நடிகர்களாகவும் பெரும் செல்வந்தர்களாகவும்  இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

 ஆந்திர முதலமைச்சர் அவரது தாத்தா காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிழைக்க வந்த குடும்பத்தின் ஒரு தமிழ் வம்சாவளி என்றும் அவரது அமைச்சரவையில் நான்கில் ஒருவர் தமிழர் என்றும் வைத்துக்கொள்வோம்.


 ஆந்திரத் தமிழர்கள் நாம் பேசும் தமிழை விட சிறிது தூய தமிழில் பேசுவதாக வைத்துக்கொள்வோம்.

 அந்த தமிழர் இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநில நகர பெருஞ்சாலைகள் வழியே போய் ஆங்காங்கே தங்கி அருகிலிருக்கும் கிராமங்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

 ஆந்திர நகரங்களில் பெரிய பெரிய வீடுகள் மாளிகைகள் கட்டிடங்கள் போன்றவையும் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நகைக் கடைகள் போன்றவையும் தமிழர்களுக்கு சொந்தமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

 நகரங்களில் தமிழர்கள் சொந்த வீடு வைத்திருக்க மண்ணின் மைந்தர்களான தெலுங்கர்கள் வாடகைக்கு இருக்கிறார்கள் எனவும் வைத்துக் கொள்வோம்.

 ஆந்திர கிராமங்களில் பெரிய பெரிய நிலக்கிழார்கள், முக்கிய நபர்கள், பெரும்புள்ளிகள் தமிழர்களே என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

 ஆந்திரா முழுவதும் தமிழர்களுக்கான சங்கங்கள் இயக்கங்கள் போன்றவை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

 பழங்கால ஆந்திர அரசர்கள் கட்டிய பிரசித்தி பெற்ற கோவில்கள் தமிழர்களால் நிர்வகிக்கப்படுவதாகவும்  ஆந்திர மக்களும் தமிழில் பாடி பஜனை செய்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 

 அரசு அதிகாரிகள், போலீஸ், அரசிடம் கான்ட்ராக்ட் எடுப்பவர்கள், தாதாக்கள், எந்தவொரு சங்கத்திலும் தலைவர் என ஆந்திராவில் எங்கே பார்த்தாலும் தமிழர்கள் அதிகாரம் பெற்று விளங்குவதாகவும் தெலுங்கர்கள் அவர்களை அண்டி நிற்கும் நிலையில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

 எந்த தெலுங்கனும் ஒரு தமிழனை எதிர்த்து எதையுமே செய்யமுடியாது  என்கிற நிலை இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம்.

  தமிழ்நாட்டுத் தமிழர்களை விட ஆந்திரத் தமிழர்கள் செழிப்பாகவும் வசதியாகவும் வாழ்கிறார்கள் அதுவும் ஆந்திராவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குடியேறி வாழ்கிகிறார்கள் என்றும்
 ஒரு சில பகுதிகளில் பூர்வகுடித் தெலுங்கரைவிட பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்றும் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு கணிசமான சிறுபான்மையாக இருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

 இப்படி பனிரெண்டு மாதங்களாக வடக்கு நோக்கி சென்று விசாகப்பட்டினத்தை அவர் அடைகிகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

 அப்படி விசாகப்பட்டினத்தை அடைந்தாலும் அங்கேயும் 70 ஆண்டுக்கும் மேலாக விசாகப்பட்டின ஊரக நகரப் பகுதிகளில் கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ வரை அனைவருமே தமிழர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

  இவர் போகும் இடங்களிலெல்லாம் தமிழர்கள் அவரை வரவேற்று இனப் பாசத்துடன் தமிழில் பேசி கலந்துரையாடி மகிழ்ச்சியுடன் உபசரித்து வழினுப்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

 அப்போது அந்த தெலுங்கர் எவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும் அடைவார்.

 அதே அளவு மகிழ்ச்சியை நெல்லூரில் இருந்து கிளம்பும் ஒரு தெலுங்கர் தூத்துக்குடிக்கு சுற்றுப்பயணம் வந்தால் நிச்சயம் அடைவார்.