Wednesday 5 April 2017

ஆளி (யாளி) - தமிழர் பழமைக்குச் சான்று

ஆளி (யாளி) 
- தமிழர் பழமைக்குச் சான்று

யாளியின் படத்தை எளிய ஓவியமாக வரைந்துள்ளேன்.
இதை கோவில் தூண்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
எல்லா கோவில் தூண்களிலும் இருக்கும்.
(தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை)

யானையை விட பெரிய உருவம், சிங்கத்தைப் போன்ற முகமும் உடலும்,
அதோடு துதிக்கையும் தந்தமும் இருக்கும் அதிசய விலங்கு யாளி.
இந்த யாளி யானையைக் கொன்ற குறிப்புகள் இலக்கியங்களில் வருகின்றன.

-----------------
ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்

ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த,
அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் (தந்தம்) பறித்து,
குருத்தினைத் தின்னும் அச்சம் தரும் அச்சுரத்திடத்தே.

_ மதுரை இளங்கெளசிகனார் (அகநானூறு 381: 1-4)
-----------------------

மூரித்தாள் ஆளி யானைத் தலை
நிலம் புரள வேண்டுகோடு
உண்டதே போன்று”

யானையின் தலை நிலத்தில் புரள (அதைக் கீழே தள்ளி) அதன் தந்தத்தைப் பறித்து யாளி உண்ணும்
(சீவகசிந்தாமணி 2554 :1-2)
--------------------

மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே.

யானையை வேட்டையாட எண்ணிய ஆளி யானை கிடைக்கவில்லை என்று எலியை வேட்டையாடக் குறி பார்க்காது.
நான் பாடிய பாடல் இளவெளிமான் செவியில் ஏறிவிட்டது.
பலன் கிடைக்கப்போகிறது என எண்ணியிருந்தேன்.
ஆனால் சோறு சமைத்த பானை நெருப்பைத் தருவது போல் இவன் தருகிறான்.
ஆறு போல் பாய்ந்து வேறு இடத்தில் பரிசில் பெற்றுக்கொள்ளலாம்.

_ பெருஞ்சித்திரனார்
(புறநானூறு 207 : 8)
-----------------------
வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும்

ஆளியானது (யாளி) பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

– நக்கண்ணையார்,
(அகநானூறு 252 : 1-4)
------------------------
இரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட கண்டவேலா

இரத்த சேற்றில் தேர்ப்படை, குதிரைப்படை, யாளிப்படை மூன்றையும் ஒழித்து கடல்சூழ்ந்த சூரமலையை தூளாக்கிய வேலன்

(திருப்புகழ் 477)
----------------
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி

யானையைக் கொன்று அதன் உடுத்திய கயிலை மலை (அதாவது கைலாசமலையின்) யாளி என்று சிவனைக் கூறுகிறது.
(திருப்புகழ் 577)
-----------------
இதே போல யானையையே விழுங்கும் மாசுணம் (அல்லது அசுணமா) என்ற பாம்பு (அல்லது விலங்கு) பற்றியும் குறிப்புகள் உள்ளன.

அனகோன்டா என்ற சொல்லானது 'யானைகொன்றான்' என்ற (ஈழத்)தமிழ்ச் சொல்லை ஆங்கிலேயர் எடுத்துக்கொண்டது.
(ஆனகொன்டான் என்றே உச்சரிப்பர்)
சான்று:
Ophidia Taprobanica or the Snakes of Ceylon, Wall, Frank (1921)

The deriviation of "Anaconda", Ferguson, Donald (1897)

2 comments: